blank'/> muhilneel: பத்மநாபசுவாமி கோயில் - மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி

Thursday, November 10, 2011

பத்மநாபசுவாமி கோயில் - மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி


Padmanabha Temple - A Swiss bank of Indian Emperors - Tamil Economics Articles
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய்.
சில நாட்களுக்கு முன்பு மறைந்த சாயிபாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில், அவருடைய பிரத்யேக அறையான யஜூர் வேத மந்திர் திறக்கப்பட்டபோது மக்கள் அடைந்த அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது. பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள், கிலோ கிலோவாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கின. ஆனால் அந்த அதிர்ச்சியை ஒன்றுமில்லாமல் மறக்கடிக்கச் செய்துள்ளது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். மிகப்பழமையான திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் தற்போது புதிய வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் மீடியாக்களின் கவனம் இப்போது இந்தக் கோயிலின் மீதே குவிந்துள்ளது. வைணவர்கள் போற்றும் நூற்றியெட்டு திவ்விய தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலின் பாதாள அறைகளில் தற்போது அள்ள அள்ளத் தங்கமும், வைரமும் கொட்டுகின்றன. இது போன்ற புதையல் அதிசயங்களை இதுவரை "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" போன்ற திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த நம் மக்கள் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.
அனந்தன் எனும் பாம்பின் மீது திருமால் பள்ளி கொண்டிருப்பதாலேயே திருவனந்தபுரம் எனும் பெயர் பெற்ற இந்த தலத்தில் பழம்பெரும் சேரர் குலத்தைச் சேர்ந்த சேரமான் பெருமான் எனும் மன்னன்தான் இந்தக் கோயிலை முதன்முதலாக எழுப்பியதாக வரலாறு சொல்கிறது. அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துகளையும் நிர்வாகத்தையும் "எட்டு வீட்டில் பிள்ளைமார்" எனும் உயர் சாதியைச் சேர்ந்த அதிகாரம் மிக்க ஜமீன்தார்கள்தான் தங்கள் கைகளில் வைத்துள்ளனர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னரான ராஜா மார்த்தாண்ட வர்மா, இந்தப் பிள்ளைமார்களின் வம்சத்தைப் போர் மூலம் தோற்கடித்து தன்னுடைய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். அத்துடன் கோயிலையும் புதுப்பித்தார். கடைசியில் மார்த்தாண்ட வர்மா தன்னுடைய அரச பதவியை பத்மநாபசுவாமியிடம்(?) ஒப்படைத்து இறைப்பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் அரச பரம்பரையின் வசமே இருந்து வந்துள்ளன.
இக்கோயிலின் கணக்கில்லாத சொத்துகளை இஸ்லாமியர் உள்ளிட்ட அன்னியப் படையெடுப்பாளரிடமிருந்து காப்பாற்றுவதற்காக கோயிலில் ஆறு பாதாள அறைகளை உண்டாக்கி அவற்றில் இச்செல்வங்களை வைத்துப் பராமரித்துள்ளனர். குறிப்பாக திப்பு சுல்தானிடமிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அரச பரம்பரையினர் கூறுகின்றனர். கோயிலின் மூலவரான அனந்த பத்மநாபரின் சிலையே முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஒவ்வொன்றும் (பூணுல் உட்பட) தங்கத்தால் ஆனவையே. காட்டுச் சர்க்கரை யோகம் எனும் வெளிப்பூச்சை சிலையின் மீது பூசி இஸ்லாமியரின் பார்வையிலிருந்து அது மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோயிலுக்குச் சொந்தமான இன்னும் ஏராளமான செல்வங்கள் கோயில் வளாகத்தில் உள்ள ஆறு பாதாள அறைகளில் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கும் மேலாகத் திறக்கப்படாமல் இருந்து வந்த அந்தப் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவற்றில் இருப்பவற்றை உலகறியச் செய்ய வேண்டுமென்று டி.பி.சுந்தரராஜன் எனும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த வழக்கை எதிர்த்து மனு செய்தனர். ஆனால் அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் அந்த அறைகளை ஒரு குழு அமைத்துத் திறக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஜூன் 27ம் தேதி தன்னுடைய ஆய்வைத் தொடங்கியது.
இந்தக் குழுவினரின் நடவடிக்கைப்படி கோயிலின் பாதாள அறைகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு அவற்றிலிருந்த விலை மதிப்பில்லாத சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இந்தக் கணக்கு விபரங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளிக்கின்றன. தங்கத்தாலான பெருமாள் சிலை, பெரும் மதிப்புள்ள வைர, வைடூரிய நகைகள், கிலோ கணக்கில் தூய தங்கத்தாலான நகைகள், தங்க நாணயங்கள் என ஒரு பெரும் புதையலே சிக்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இதுவரை திறக்கப்பட்டுள்ள ஐந்து அறைகளில் கிடைத்துள்ள செல்வங்களின் மதிப்பு மட்டும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. கோயிலைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக உள்ள ஆறாவது அறை இன்னும் திறக்கப்படவில்லை. இந்த அறை திறக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அறையைத் திறப்பது ஆகமவிதிகளுக்கு முரணானது என்று கூறி அதைத் தடுக்கும் முயற்சியில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்படுவதை எதிர்த்து மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்பட்டால் அங்கு புதைந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு மேலும் சில புதிய அதிர்ச்சிகளை அளிக்க வாய்ப்புள்ளது. ஆறு அறைகளில் கடைசி இரண்டு அறைகள் கடந்த 136 ஆண்டுகளாகத் திறக்கப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலின் குளத்திலும் பெரும் புதையல் மறைந்திருக்கலாம் என்று கேரளாவைச் சேர்ந்த வரலாற்றறிஞர் பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார். இக்கோயிலில் மொத்தம் ஒன்பது ரகசிய அறைகள் இருப்பதாகவும், தற்போது தெரியவந்துள்ள ஆறு அறைகள் தவிர, மேலும் மூன்று அறைகள் குளத்துக்குள் கிணறு வடிவில் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அந்தக் காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா ஆற்றிலிருந்து சாலகிராம் எனும் ஆயிரக்கணக்கான புனிதகற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, அவற்றைக் கொண்டு பத்மநாபசுவாமி அனந்த சயனத்தில் இருப்பது போன்ற போன்ற மூலவர் சிலை செய்யப்பட்டது. பின்னர் எஞ்சியிருந்த கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள கிணறுகளில் போடப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு பெரும் அதிர்ச்சிக்கு நாடு ஆளாக வேண்டியிருக்கும்.
திருவனந்தபுரம் கோயிலைப் போன்றே திருவரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் பெரும் புதையல் இருக்கலாம் என்று திருச்சியைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமாச்சாரியார் தெரிவித்துள்ளார். திருவரங்கக் கோயிலின் சொத்துகள், பிரெஞ்சு காரர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கோயிலில் உள்ள கருடன் சன்னதிக்கு பின்புறம் ரகசியமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் போன்றவற்றிலும் இது போன்ற பெரும் புதையல் அன்னியர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் கிளம்பிவிட்டன. இந்தியாவின் பணக்கார சாமியான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் இது போன்ற பெரும் புதையல் மறைந்திருக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.
திருவனந்தபுரம் கோயிலில் தற்போது கிடைத்துள்ள சொத்துக்களுக்குப் போட்டியும் கிளம்பிவிட்டது. திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நகைகளும் இதில் அடங்கியிருப்பதாக அந்தக் கோயில் நிர்வாகம் கூறிவருகிறது.
அன்னியப் படையெடுப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மறைத்து வைத்துக் காப்பாற்றியதற்காக மன்னர் பரம்பரையினரைப் பாராட்டும் விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால் இவ்வளவு செல்வம் கோயிலுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி யாரும் வாய்திறக்க மறுக்கிறார்கள். இதெல்லாம் அந்த மன்னர் பரம்பரை உழைத்துச் சேர்த்த செல்வங்களாவோ அல்லது மக்கள் பக்தியுடன் கோயிலுக்கு அளித்த நன்கொடைகளாகவோ இருக்க வாய்ப்பில்லை. வரலாற்றின் வெளிச்சத்துக்கு வராத மன்னராட்சிக் காலத்தில் மக்களின் உழைப்பைச் சுரண்டி ஆளும் வர்க்கம் சேர்த்த செல்வங்களாகத்தான் இவை இருக்க முடியும். பத்மநாப சுவாமியை அலங்கரித்த ஒவ்வொரு ஆபரணத்துக்கும் பின்னால் எத்தனை ஏழை மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது. இந்தியாவில் மக்களின் உழைப்பைச் சுரண்டி முறைகேடாகச் சேர்த்த பணம் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்படுவதைப் போல அந்தக் காலத்தில் சேர்க்கப்பட்ட செல்வங்கள் கோயில்களில் குவிக்கப்பட்டுள்ளன.
மக்களாட்சிக் காலத்தில் சுவிஸ் வங்கிகளில் சேர்ந்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும் எனும் கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே போல் மன்னராட்சிக் காலத்தில் கோயில்களில் சேர்க்கப்பட்டுள்ள இது போன்ற "கருப்புச் செல்வங்களை"யும் கைப்பற்றி மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்.
கோயில்கள், ஆசிரமங்கள் போன்ற மத நிறுவனங்களின் சொத்துக்கள் வரைமுறைக்குட்படுத்தப்பட வேண்டும். தற்போது சிக்கியுள்ள செல்வங்களையும் இனி சிக்கப் போகும் சொத்துக்களையும் அரசின் கருவூலத்துக்குப் போய்ச் சேரும் வகையில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கணக்கில் வராத கருப்பு பணம் கோயில்களிலும் ஆசிரமங்களிலும் நகைகளாகக் குவிவது இன்னும் பெருகும்.
ஒரு பவுன் தங்கம் வாங்க முடியாமல் கல்யாணக் கனவுகளைத் தள்ளிவைத்துக் காத்திருக்கும் ஏராளமான பேரிளம் பெண்களைக் கொண்ட நாட்டில் பத்மநாபசுவாமி சிலைக்கு இத்தனை அலங்காரம் தேவையா? இந்த செல்வங்கள் முழுவதும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கூறி வருகிறது. ஒரு கோயிலுக்கு எதற்கு இத்தனை சொத்துக்கள்? தங்க நகைகளுடன் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருவேன் என்று அடம்பிடிக்கும் எந்தக் கடவுளும் கருணையுள்ளவராக இருக்க முடியாது.


Source : www.tamilkoodal.com

No comments:

Post a Comment