blank'/> muhilneel: இணையவழி சேவைகள்
Showing posts with label இணையவழி சேவைகள். Show all posts
Showing posts with label இணையவழி சேவைகள். Show all posts

Tuesday, October 11, 2016

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - Free Tamil ebooks

ஒவ்வொரு படைப்பாளருக்கும் இருக்கும் பேராவல், தமது படைப்புகள், பிறரால் அறியப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். சில வருடங்களுக்கு முன்பு வரை, கவிஞர்கள், கட்டுரையாளர்கள், கதாசிரியர்கள், இவர்களின் படைப்புகளை நாம் அச்சு நூல்களாக, அதாவது புத்தகங்களாக வாசித்து மகிழ்ந்தோம். தற்போது, கணினி அறிவியலில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம், உலகையே நம் கைக்குள் கொண்டு வந்து விட்டது.

என்னதான் நாம் வலைப்பூக்களிலும், வலைதளங்களிலும் நமது படைப்புகளை வெளியிட்டு, வாசகர்கள், சக வலை நண்பர்களின் கருத்துக்களையும், பாராட்டுதல்கள், விவாதங்கள் என்று நம் படைப்பிற்கென்று ஓர் அங்கீகாரம் கிடைத்தாலும், நமது எழுத்துக்கள், அழகாக வடிவமைக்கப்பட்டு, புத்தகமாக நமக்கு கிடைக்கையில் நமது உள்ளந்தனில் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவென்பதேது ? நாளொரு புதிய கண்டுபிடிப்புகளுடன் வளர்ந்து வரும் கணினி அறிவியலின் துணையுடன், பல பிரபல்யமான எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமின்றி, மிகவும் பழமையான நூல்கள் பலவும் நமக்கு இன்று மின்னூலாக கிடைக்கிறது.

மதுரைத் திட்டத்தின் வாயிலாக, பல காப்பியங்கள், இலக்கண இலக்கிய நூல்கள் பலவும் மின்னூலாக நமக்கு கிடைக்கின்றன. தற்கால எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றையும், பல புதிய எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் தான் இலவச தமிழ் மின்னூல்கள் திட்டம் (Free Tamil eBooks). இத்திட்டம், ஒவ்வொரு எழுத்தாளனின் நூலாசிரியர் கனவினை நிஜமாக்குகிறது. எழுத்துக்களின் மீது ஆர்வம் கொண்ட வாசகர்களும், தமது விருப்பமான எழுத்தாளரின் எழுத்துக்களை இலவசமாக வாசிக்க நல்லதோர் வாய்ப்பும் கிட்டுகிறது.

இந்தச் சேவையை பயன்படுத்தி பல புதிய நூல்கள் வாசிக்க விருப்பமா ? அல்லது, பொக்கிஷமென பாதுகாக்கும் படைப்புகளுக்கு நூல் வடிவம் கொடுக்க பேராவலா ? இவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய  வலைத்தளம் freetamilebooks.com.

இப்போது பல எழுத்தாளர்கள், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், என்று பலரால் நூல்கள் எழுதப்படுகிறன.இது தவிர, வலைப்பூக்கள், வலைதளங்களில் எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகம்.  இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு, அரசியல், மருத்துவம், உணவு என்று பல துறை சார்ந்து பலரும் தமிழ் மொழியில் எழுதுகின்றனர். இங்கனம், இணையத்தில் எழுதும் ஆசிரியரது படைப்புகளை தொகுத்து மின்னூலாக வெளியிடுகிறார்கள்.

 இத்தளத்தில் வெளியிடப்படும் மின்னூல்கள் Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படுகிறது. இந்த உரிமத்துடன் வெளியிடுவதால் என்ன பயன் எனில், ஒரு படைப்பாளரின் படைப்பை, படிக்கும் அனைத்து வாசகர்களும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் உரிமை உள்ளதால், பலரால் பகிரப்பட்டு, நமது எழுத்துக்கள் பல வாசகர்களை சென்றடையும். அப்படி ஒவ்வொரு முறை பகிரப்படும் போதும், நமது எழுத்துக்கள் நமது பெயருடனேயே பகிரப்படும். நமது பெயரும், படைப்பும் உலக அளவு வாசகர்களிடையே பரிச்சயமாகும்.

இத்தளத்தில் கிடைக்கும் நூல்கள் யுனிகோட் எழுத்துருக்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. பல வகையான கருவிகளில், பல வகையான செயலிகளில் மின்னூல்களை பயன்படுத்த வசதியாக மின்னூல்கள்  தயாரிக்கப்படுகிறது. இத்தளத்தில் கிடைக்கும் மின்னூல் வடிவங்கள் epub, pdf, mobi & azw3.




இலவச மின்னூல்கள் தளத்திற்கான உரையாடல் களம்  (Google Groups) - FreeTamilEbooksForum
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum 

 இவர்களது முகநூல் பக்கம்
Free Tamil Ebooks 
https://www.facebook.com/FreeTamilEbooks

Monday, May 9, 2016

இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்

சில வருடங்களுக்கு முன் வரை ஒலிப்பதிவு பெட்டியின்(tape recorder) உதவியுடன் ஒலிகளையும், குரல்களையும் பதிவு செய்து கேட்டு மகிழ்ந்தோம். சமீப காலமாக கைபேசிகளிலும் (cellular phones) கூட இந்த குரல் பதிவு வசதி கிடைக்கிறது. அந்த ஒலிக் கோப்புகளை கணினிகளில் பதிவிறக்கி சேமித்து பயன்படுத்தலாம். இப்போது, கணினியுடன் இணைய இணைப்பும், கணினியிடன் இணைக்கப்பட்ட மின்சார ஒலிபெருக்கி அல்லது ஒலிவாங்கி (microphone) இருந்தால், நம் கணினியில் ஒலிப்பதிவு செய்து ஒலிக் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். இத்தகைய சேவைகளை வழங்கும் இணையதளங்கள் மற்றும் மென்பொருட்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

1) Audacity :

 இந்த வசதி நமக்கு தனி மென்பொருள் வாயிலாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை நமது கணினியில் தரவிறக்கி, குரல் பதிவு, ஒலிப்பதிவு செய்து அவற்றை தனிக் கோப்புகளாக கணினிகளில் சேமித்து பயன்படுத்தலாம். பிறருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். அத்தகைய ஓர் மென்பொருள் தான் ஆடேசிட்டி (Audacity). இந்த மென் பொருளை நமது கணினியில் தரவிறக்கி (Download), நிறுவி (Install) பயன்படுத்தலாம்.

இம்மென்பொருளை கீழ்காணும் இணையதளத்தில் இருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்.


இனி, மென்பொருட்களை கணினிக்கு தரவிறக்கம் செய்யாது, இணையத்திலேயே ஒலிப்பதிவு செய்து, கோப்புகளாகவே நமக்கு கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கும் இணையதளங்கள் குறித்து காணலாம்.

2) Sound cloud :

           இணையத்தில் ஒலிக்கோப்புகளை தரவேற்றம் செய்து, அந்த கோப்புகளை எந்த தளங்களில் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிக்கிறது இந்த sound cloud இணையதளம். இசை மற்றும் ஒலிக் கோப்புகளை ஃபேஸ் புக் (facebook), ட்விட்டர் (twitter), டம்ப்ளர் (tumblr) மற்றும் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.

இந்த மென்பொருள் பலவகையான ஒலிக்கோப்பு வடிவங்களை பயன்படுத்த வழிவகை செய்கிறது. இந்த இணையதளத்தில் AIFF, WAVE (WAV), FLAC, OGG,ALAC, MP2, MP3, AAC, AMR, WMA ஒலிக் கோப்பு வடிவங்களை பயன்படுத்தலாம். தரவேற்றம் செய்யப்படும் ஒலிக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 5GB ஆக இருக்கலாம்.

ஒலிக்கோப்புகளை தரவேற்றம் செய்து பிறருடன் பகிர்ந்து கொள்ள தனி பயனர் கணக்கு தொடங்குதல் அவசியம்.

இந்த மென்பொருளை கீழ்காணும் இணையதள முகவரியில் பயன்படுத்தலாம்.

https://soundcloud.com/

3) Audio expert: 

                          ஆடியோ எக்ஸ்பர்ட் என்ற இந்த இலவச இணைய மென்பொருளின் உதவியுடன்    ஒலிக் கோப்புகளை (Audio files) உருவாக்கலாம், ஏற்கனவே இருக்கும் ஒலிக்கோப்புகளில் மாற்றங்கள், திருத்தங்கள் (Edit) செய்யலாம். கோப்புகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு (file convert / format convert ) மாற்றலாம். இரு வேறு ஒலிக் கோப்புகளை ஒன்றாக இணைக்கலாம். குரல் பதிவு செய்து, கோப்புகளாக சேமித்துக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.

100  Mb அளவு வரை இருக்கும் கோப்புகளை ஒரு ஒலி வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு மாற்றலாம். இணையதளங்களில் இருக்கும் ஒலிக் கோப்புகளையும் நமக்குத் தேவையான ஒலி வடிவ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, நமக்குத் தேவையான ஒலிக் கோப்பு இருக்கும் வலைப்பக்கத்தின் சரியான முகவரியைக் கொடுத்தாலே போதுமானது.

வலைப்பக்க முகவரிகள் கொடுக்கையில், http (hyper text transfer protocol), https (http secure), ftp (file transfer protocol) என்று துவங்கும் வலைப்பக்க முகவரிகளை வழங்குதல் அவசியம்.

இம்மென்பொருளினை பயன்படுத்தி கீழ்க்கண்ட  ஒலிக் கோப்பு வகைகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் வடிவிற்கு மாற்ற இயலும்.

AAC - Advanced Audio Coding
AMR - Adaptive Multi  Rate (Audio Compression format)
AU - Audio file format by Sun Micro systems
FLAC - Free Lossless Audio Codec
M4A - Mpeg 4 Audio
WMA - Windows Media Audio
MKA - Matroska file extension for audio files only.

இம்மென்பொருளை கீழ்கண்ட இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்த ஓர் பயனர் கணக்கு மட்டும் துவங்கினால் போதுமானது.

http://audioexpert.com/ 

4)  Audio Pal :

               ஒலிப்பதிவிற்கான மற்றுமோர் இலவச இணையதளம் தான் இந்த Audio Pal.  இந்த மென்பொருளின் உதவியுடன்  ஒலிப்பதிவு செய்து, பயன்படுத்தலாம். மேலும், 25 ற்கும் மேலான மொழிகளில் எழுத்து வடிவத்திலிருந்து  ஒலி வடிவத்திற்கு (Text to Speech) மாற்ற இயலும். தொலைபேசியின் உதவியுடன் குரல் அல்லது ஒலிப்பதிவு செய்யலாம்.


கணினியில் சேமித்து வைத்திருக்கும் ஒலிக்கோப்புகளையும் தரவேற்றம் செய்து கொள்ளலாம்.


மேற்கூறிய நான்கு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒலிப்பதிவு செய்த பின், அந்த கோப்புகள், எங்ஙனம் பதிவாகி உள்ளன என்றும் அறிந்து கொள்ளலாம். ஒலிப்பதிவு செய்த கோப்புகளை, நமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மின்னஞ்சலில் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை கீழ்க்கண்ட இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

http://www.audiopal.com/editor.html

5) Vocaroo :

                இணையத்தில் இலவசமாக ஒலிப்பதிவு செய்ய உதவும் வலைதளம் Vocaroo.com.


         வலைதளத்தை திறந்ததுமே, மேற்காட்டியுள்ளதைப் போன்று தான் பக்கம் திறக்கிறது. இதில் காணப்படும், " Click to Record" என்கிற பொத்தானை சொடுக்கியதும், குரல் பதிவு அல்லது ஒலிப்பதிவு ஆரம்பமாகிறது. இந்த தளத்தினூடாக ஒலிப்பதிவு செய்ய ஒலிவாங்கி (microphone) தேவை. ஒலிவாங்கியின் உதவியுடன், குரல்பதிவு செய்து முடித்ததும், பதிவு செய்ததை மீண்டும் கேட்கலாம். நமக்கு தேவையெனில் அதனை ஒலிக்கோப்பாக நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.

இந்த சேவை வழங்கும் இணையதளம்

http://vocaroo.com/

வல்லமை மின்னிதழ் நடத்திய பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரை போட்டிக்காக எழுதப்பட்டு பரிசு பெற்ற கட்டுரை.
http://www.vallamai.com/?p=61965

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்

நாளும் நமது கணிப்பொறியில் பல வகையான ஆவணங்களை ( Documents ) உருவாக்கி பயன்படுத்துகிறோம். Microsoft Office ன் பல்வேறு மென்பொருட்களான MS Word, MS Excel, MS Powerpoint, இவையனைத்து மென்பொருட்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அதே போல் பல வகையான படக் கோப்புகள், jpeg, gif, bmp மற்றும் zip கோப்புகள், pdf கோப்புகளை உருவாக்கி பயன்படுத்துகிறோம். மற்றவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறோம்.

நாம் உருவாக்கும் ஆவணங்களை கணினியில் சேமித்து வைக்கிறோம். Compact Disc, Pen drive, Hard disc போன்ற external storage device களிலும் சேமித்துப் பயன்படுத்தலாம். அப்படி சேமிக்கையில், அந்த உபகரணங்களை கையில் எடுத்துச் செல்வோம். அங்கனம் எடுத்துக் செல்லக் கூட தேவையில்லாது, இணையத்திலேயே சேமித்துக் கொள்ளும் வசதியும் இன்று உள்ளது. இணைய வசதி இருந்தால், எங்கு எப்போது வேண்டுமானாலும் நமது கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நமது மின்னஞ்சலிலேயே நமது கோப்புகளை இணைத்து, பிறருக்கு அனுப்பவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். ஆனால், மின்னஞ்சல் சேவை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாம் மின்னஞ்சலுடன் தரவேற்றும் கோப்புகளுக்கான அளவை நிர்ணயம் செய்துள்ளன. அவை நிர்ணயத்துள்ள அளவுக்கு மேலாக இருக்கும் கோப்புகளை அனுப்புவதென்பது இயலாது. இதற்காக வடிவமைக்கப்படவை தான், இந்த இணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்.

மின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் வழங்கும் அதிகபட்ச  மின்னஞ்சல் அளவு வரம்பு ( Maximum Email Size Limit ) கீழ்வருமாறு:

மின்னஞ்சல் சேவை
இணைப்பின் அளவு
ஜிமெயில் (Gmail)
25 MB / email
அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் (Outlook and Hot mail)
10  MB / attachment அல்லது 300 GB ஸ்கை டிரைவ் வாயிலாக
யாஹூ மெயில் (Yahoo Mail)
25 MB / email
ஏஓஎல் (AOL)
25 MB / email
ஸோஹோ மெயில் (Zoho Mail)
12 MB / email & 10 MB / file
ரீடிஃப் மெயில் (Rediff Mail)
10 MB / email

மேற்குறிப்பிட்டிருக்கும் கோப்புகளின் அளவுக்கு மேல் மின்னஞ்சலில் இணைப்புகளாக கோப்புகளை அனுப்ப இயலாது. அது போன்ற சூழ்நிலைகளில், இணையத்தில் இருக்கும் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கு உதவும் இணைய தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்தகைய சேவைகளை இலவசமாக இணையவழி வழங்கும் இணையதளங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

கூகுள் டாக்ஸ் வியூவர் (Google Docs Viewer)


கூகுள் வழங்கும் சேவை இந்த கூகுள் டாக்ஸ் வியூவர். மைக்ரோசாப்ட் வோர்ட், நோட்பேட்  போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி நமது ஆவணங்களை கோப்புகளாக சேமித்து வைப்போம். அத்தகைய கோப்புகளை நாம் தனி மென்பொருள் ஏதுமின்றி இணையத்திலேயே உருவாக்கி, சேமித்து, திருத்தங்கள் மேற்கொள்வது என அனைத்து வகையான வேலைகளையும் இணையத்திலேயே செய்து,  கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.

word processors (சொல் செயலிகள்) வழங்கும் பல்வேறு சேவைகளும் இந்த இணையவழி சேவையின் வாயிலாக கிட்டுகிறது. எடுத்துக்காட்டாக, கோப்புகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் ( Editing ),  மெருகூட்டுதல் (styling), சேமித்தல் (save)  என தனி மென்பொருட்களில் செய்யும் அனைத்து செயல்களையும் இதிலும் மேற்கொள்ளலாம் .

ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள், இணையதள இணைப்புகள் கொடுக்கும் வசதி, படங்களை நமது கணினியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளும் வசதி, ஓவியம் வரையும் வசதி, அட்டவணைகள் உருவாக்கிக் கொள்ளும் வசதி என ஒரு தனி மென்பொருளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த இணையவழி சேவையின் மூலம் கிடைக்கப் பெறலாம்.

கூகுள் வழங்கும் இந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.

docs.google.com

நமது மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியே நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.

 ஸ்ரைப்டு (Scribd)

Scribd ன் உதவியுடன் நம்மால் நமது கோப்புகளை இணையத்தில் வெளியிட அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கோப்புகளை பிறர் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கவும் செய்யலாம். நமது கோப்புகளை சேமிப்பதற்கென தனி கணக்கு உருவாக்கி அதில் நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம். நாம் அங்ஙனம் சேமிக்கும் கோப்புகளுக்கான இணைய பக்க முகவரியின் உதவியுடன், அந்த கோப்புகளை இணையத்திலேயே வாசிக்க, தரவிறக்க என்று பல வசதிகளும் கிடைக்கின்றன.

இவை மட்டுமின்றி, கட்டுரைகள், கடிதங்கள், புத்தகங்கள், செய்தித் தாள்கள், பத்திரிகைகள், கவிதைகள், வியாபரத்திற்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், சட்ட ரீதியான ஆவணங்கள், சொற்பொழிவுகள், விளக்கக் காட்சிகள், சுற்றுலா வழிகாட்டிகள் என்று இணையத்தில் கிடைக்கும் பலவகையான ஆவணங்களையும் இந்த இணையவழிச் சேவையின் மூலம் சேமித்து பயன்படுத்தலாம், பிறருக்கு பயன்படுத்த,  பகிர்ந்து உதவலாம்.

நாம் சேமித்து வைத்துள்ள கோப்புகளை, நமது இணைய பக்கங்களிலும், இந்த Scribd ன் உதவியுடன் வெளியிட்டுக் கொள்ளலாம்.

இந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.


ஸ்லைடு ஷேர் ( Slide Share ) 

    நாம் அறிந்த தகவல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவாக்கப் பட்டது தான் இந்த slide share. ஆவணங்கள்(documents), காணொளிகள் (videos), விளக்கக் காட்சிகள் (presentations),இணையவழி கருத்தரங்கங்கள் (webinars),விளக்கக் காட்சிகள் (infographics ), PDF கோப்புகள், புகைப்பட தொகுப்பு என்று பலவகையான கோப்புகள், பல்வேறு வடிவங்களில் தரவேற்றவும், பலருடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.

இதில் பதினைந்து மில்லியனுக்கும் மேலான பலவகையான கோப்புகள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்பம், கல்வி, வணிகம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், பயணக் கட்டுரைகள் என்று பல வகையான தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

நாம் இங்கு தரவேற்றம் செய்யும் கோப்புகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். வலைபூக்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடலாம், இணைப்பு வழங்கலாம்.

இந்த சேவையை வழங்கும் வலைப்பக்கம்

 www.slideshare.net

ஸ்கை ட்ரைவ் (sky drive) / ஒன் ட்ரைவ் (one drive):

              மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வழங்கும் இணையவழி ஆவண சேமிப்பு வசதி தான் இந்த ஸ்கை ட்ரைவ். ஸ்கை ட்ரைவ் தற்போது ஒன் ட்ரைவ் என்று அழைக்கப் படுகிறது.

 புகைப்படங்கள், காணொளிகள் , பலவகையான கோப்புகளை நாளும் பயன்படுத்துவோம், நமக்கு  நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அங்ஙனம் பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒன் ட்ரைவ் நமக்கு உதவுகிறது.

ஒன் ட்ரைவ் தற்போது மைக்ரொ சாஃப்ட் வழங்கும் MS - Office மென்பொருட்களுடன் வருகிறது. இணையத்தில் பயன்படுத்த கிடைக்கும் இந்த மென்பொருட்களில் MS Word, MS Excel, MS Powerpoint, MS One Note ஆகியன அடங்கும்.

பயனர் ஒவ்வொருவருக்கும் ஒரு டெராபைட் (Terabyte) அளவுள்ள தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது ஒன் ட்ரைவ்.

இதில் தரவேற்றும் கோப்புகளை பிறருடன் பொதுவில் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சிலருடன் மட்டும் பகிர விரும்பினால், அவ்வாறும் செய்யலாம். பகிரும் கோப்புகளில், யார் மாற்றங்கள் செய்யலாம் என்பதையும் நாமே தீர்மானித்து, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்றம் செய்யும் உரிமையையும் வழங்கலாம்.

இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

 onedrive.live.com


இஸ்ஸூ ( Issuu.com) :
 
           இணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான மற்றுமோர் தளம் இஸ்ஸூ. இங்கு சேமிக்கும் ஆவணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள இயலும். நமது வலைப்பக்கங்களில், புத்தகம் போலவே வாசிப்பதற்கு ஏதுவாக வெளியிட முடியும்.

பல துறை சார்ந்த தகவல்கள், கலை, கல்வி, தொழில் நுட்பம், திரைப்படம், பயணம், சுற்றுலா என பல துறை பற்றிய தகவல்களும் இங்கு கிடைக்கின்றன. நாமும் இதில் ஓர் கணக்கினை துவங்கி இணைந்து கொண்டால், நமக்கு தெரிந்த தகவல்களையும் உலகில் உள்ள பலருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இந்த சேவையை வழங்கும் இணையதளம்

issuu.com
                 





மொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகராதிகள்

இணையத்தில் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ விதமான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. நாம் தேடும் தகவல்கள், நாம் அறியாத வேறு மொழியில் இருந்தாலும், அதை இணையத்திலேயே மொழிபெயர்த்து அறிந்து கொள்ள இயலும். ஒரு வலைப்பக்கத்தை முழுமையாக, ஓர் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம். நமக்கு தேவையான குறிப்பிட்ட சொற்களை மட்டும் மொழிபெயர்த்து, அவற்றின் பொருளை அறிந்துகொள்ள விரும்பினால், அவ்வாறு ஒரு சொல்லை மட்டும் மொழிபெயர்க்கலாம். இதற்கு இணையத்தில் மொழிபெயர்ப்பு தளங்கள், ஒரு மொழியில் இருந்து மற்றோர் மொழிக்கு மொழிமாற்றம் செய்து, அதற்குண்டான பொருளையும் வழங்கும் மின்னகராதிகள் பலவும் இணையத்தில் கிடைக்கின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு தளங்கள், மின்னகராதிகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

1) கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவை (Google Translation)


கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவையை பயன்படுத்தி ஆவணங்கள், வலைப்பக்கங்கள், சொற்கள், சொற்றொடர்கள், படக் கோப்புகளில் இருக்கும் சொற்கள், பத்திகள், நமது கையெழுத்து கொண்டே சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை, நமது குரல்வழி சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை என்று பல வழிகளில் நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை வசதியை பயன்படுத்தலாம்.

கணினிகளில் இணைய வசதியினை பயன்படுத்தி, நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் கருவிகளில் பயன்படுத்த என்று கூகுள் மொழிபெயர்ப்பிற்கென்று தனி பயன்பாடு (apps) உண்டு.

கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் தனிச் சொற்கள், சிறிய சொற்றொடர்கள் போன்றவற்றிற்கு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கும். அதே சமயம், பெரிய பத்திகள், அல்லது ஓர் முழு வலைப்பக்கமோ, ஓர் ஆவணத்தையோ முழுமையாக மொழிபெயர்க்க வேண்டுமெனில், மிகத் துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை.

இன்னபிற மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் இணையதளங்கள் பலவும் சொற்களை மட்டுமே மொழிபெயர்க்கும் வசதியை தரும் வேளையில் கூகுள் வழங்கும் வலைப்பக்க மொழிபெயர்ப்பு முயற்சி வரவேற்கத் தக்கது.

தற்சமயம் கூகுள் வழங்கும் இந்த மொழிபெயர்ப்பு சேவை வசதி தொண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு கிடைக்கிறது. இதில், நமது இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி,உருது, பெங்காலி, கன்னடம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி ஆகியவையும் அடங்கும்.  இது, இம்மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், அல்லது, ஆங்கிலத்திலிருந்து இம்மொழிகளுக்கு மொழிபெயர்த்தல்,  மற்றும் இம்மொழிகளிடையே மொழிபெயர்த்தலும் அடங்கும்.

கூகுளின் மொழிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணையதளத்தில் பெறலாம்.

https://translate.google.com/

கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு சேவை (Google Transliteration)

இவ்வசதி மொழிபெயர்ப்பு செய்ய பயன்படாது. ஆனால், நாம் உள்ளிடும் சொற்களின் ஒலிக்கு ஏற்ப, நமக்கு வேண்டிய மொழியில் ஒலிபெயர்த்து கொடுக்கும். எடுத்துக்காட்டாக, நாம் தமிழில் "அம்மா" என்ற சொல்லை தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால், அது தமிழில் அம்மா என்று நமக்கு ஒலிபெயர்த்து கொடுக்கும். இவ்வசதி, கூகுள் வழங்கும் Google Transliteration சேவையின் மூலம் கிடைக்கிறது. இவ்வசதி தனி வலைப்பக்கத்திலும் கிடைக்கும். அது தவிர கூகுளின் இன்னபிற சேவைகளான கூகுள் மின்னஞ்சல் (Gmail), கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை (Blogger) ஆகியவற்றிலும் இந்த ஒலிபெயர்ப்பு சேவை கிடைக்கிறது.

கூகுளின் ஒலிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம்.

 http://www.google.com/inputtools/try/

 2) ஷப்த்கோஷ் :



ஷப்த்கோஷ் இணையதளத்தில் தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி கிடைக்கிறது.

கீழ்க்காணும் இணைய பக்கத்தில் இதனை பயன்படுத்தலாம்.

http://shabdkosh.com

இத்தளத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்த்து தரும் வசதி இருக்கிறது. நாம் மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அச்சொல்லினை உச்சரிக்கும் விதம், சொல்லின் மொழிபெயர்ப்பு, அச்சொல்லின் இன்னபிற வடிவங்கள் (ஒருமை/பன்மை(Singular/Plural), வினை வடிவங்கள் (Tense Forms), சொற்பொருள் விளக்கம் (Definitions & Meanings) ) போன்ற தகவல்களையும் நமக்கு வழங்குகின்றது.


ஆண்ட்ராய்ட் (Android), ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), விண்டோஸ் தொலைபேசி (Windows Phone) ஆகிய கருவிகளுக்கு (devices)  ஷப்த்கோஷ் தனி பயன்பாடாக (apps) கிடைக்கிறது.

3) Tamil cube வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி



தமிழ் க்யூப் வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கவும் உதவுகிறது. இந்த தளத்தில் பலதுறை சார்ந்த கலைச்சொற்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

இந்த அகராதியை  கீழ்க்காணும் இணையதளத்தில்
பயன்படுத்தலாம்.
 dictionary.tamilcube.com/

மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அந்த சொல்லிற்கான பொருள் அகராதியில் இருப்பின் பொருள் தருவதுடன், அச்சொல்லுக்கு தொடர்புடைய சொற்கள் மற்றும் இணையான சொற்களை வழங்கி, பொருளும் வழங்குகிறது.

இந்த தளத்தில், மொழிபெயர்ப்பு சேவை கிடைப்பதுடன், இணையத்தில் இருக்கும் இன்ன பிற மொழிபெயர்ப்பு தளங்கள், இணைய அகராதிகளுக்கு இணைப்புகள் கிடைக்கின்றன.

4) kapruka.com வழங்கும் சிங்கள மற்றும் தமிழ் அகராதி


    கப்ருகா (kapruka) இணையதளம் வழங்கும் இணையவழி அகராதி. ஆங்கிலத்தில் சொற்களை உள்ளிட்டால், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பொருள் வழங்குகிறது. இது தவிர, அச்சொல்லின் ஒலிப்பு முறை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படுகிறது.

நமக்கு தேவையான சொற்கள் இந்த அகராதியில் காணக் கிடைக்கவில்லையெனில், நாம் நமக்குத் தேவையான சொற்கள் குறித்து  வேண்டுகோள் வைத்தால், அந்தச் சொல்லிற்கான மொழிபெயர்ப்பு அகராதியில் சேர்க்கப்படும்.

கீழ்க்காணும் இணைய பக்கத்தில், இந்த அகராதியை பயன்படுத்தலாம்.

http://www.kapruka.com/dictionary/EnglishToSinhala.jsp

5) tamildict.com  வழங்கும் தமிழ் - ஆங்கிலம் - ஜெர்மானிய அகராதி



           tamildict.com இணையதளம் வழங்கும் இணையவழி அகராதியில், கிட்டத்தட்ட 45 வகை பிரிவுகளில் சொற்கள் வகை பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த அகராதியை பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரும், புதிதாக அகராதியில் சொற்களை சேர்க்கலாம். ஏற்கனவே  இருக்கும்  மொழிபெயர்ப்பினை மேம்படுத்த விரும்பினால், அங்ஙனமும் செய்யலாம். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம்.

இது தவிர, எண்களை உள்ளிட்டால், அந்த எண்களை தமிழில் உச்சரிப்பது எப்படி என்ற விபரமும் கிடைக்கிறது. 999999999 (தொன்னூற்றியொன்பது கோடியே தொன்னூற்றியொன்பது இலட்சத்து தொன்னூற்றியொன்பது ஆயிரத்து தொளாயிரத்திதொன்னூற்றியொன்பது) வரையிலான எண்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை தருகிறது.

இந்த அகராதியை கீழ்க்காணும் இனையதளத்தில் பயன்படுத்தலாம்.

http://www.tamildict.com/english.php

 6) தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆங்கில - தமிழ் அகராதிகள் :




தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில், பல்வேறு அகராதிகளுக்கான இணைப்புகள்  கிடைக்கின்றன. அவற்றுள், தமிழ் - ஆங்கில அகராதிகளும் அடங்கும்.

அவை ,

பால்ஸ் அகராதி
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி

இன்னபிற அகராதிகளின் விபரம் குறித்து அறிய, கீழ்க்கணும் இணையதளத்தில் காணலாம்.

http://www.tamilvu.org/library/dicIndex.htm



        
குறிப்பு:

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், அவற்றின் இணையபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

Wednesday, May 27, 2015

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய நூலகங்கள்



 நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள்.

இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள்  நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும்   நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

இணைய ஆவணகம்( Internet Archive : Digital Library )


Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். இந்நூலகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், திரைப்படங்கள், மென்பொருட்கள், பத்திரிகைகள், பாடல்கள்,லிப்ரி வாக்ஸ் ( LibriVox)  ஒலி நூல்களின் தொகுப்பு, நுண் படங்கள் ( Micro film)என அனைத்தும் கிடைக்கின்றன.

 இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள்,நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.

இந்நூலகத்தை கீழ்காணும் சுட்டியில்  பயன்படுத்தலாம். 


 இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை பல வடிவங்களில் ( format ) பெறலாம். Pdf, zip file, torrent, epub  என பல வடிவங்களில் தரவிறக்கம் செய்யும் வசதியும் கிடைக்கிறது.



திறந்த நூலகம் ( Open Library )

Open Library
Open Library  என்றழைக்கப்படும் திறந்த நூலகம் பல பொது தளங்கள் மற்றும் இப்போது அச்சில் இல்லாத பல பழைய நூல்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.

திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது.  யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.


இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம்.புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம். 

திறந்த நூலகம் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்களை தருகிறது. இந்நூலகத்தில் இருக்கும் நூல்கள் பயனர்களின் தேவைக்கேற்ப பல கோப்பு வடிவங்களில் ( file formats ) கிடைக்கிறது.

PDF, Plain text, ePub, DjVu, Kindle, DAISY ஆகிய கோப்பு வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. இதில் DAISY என்பது Digital Accessible Information SYstem என்பதைக் குறிக்கின்றது. எண்ணிம ஒலி  நூல்கள், வார மற்றும் மாத பத்திரிகைகள் இவற்றை வாசிக்க இம் மென்பொருள் பயன்படுகிறது. DAISY அச்சுப் பிரதிகளுக்கு மாற்றாக கிடைக்கும் ஒலிக் கோப்புகள் ஆகும். இது பார்வையற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

இந்நூலகத்தினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பயன்படுத்தலாம்.

 Http://openlibrary.org/

சென்னை  நூலகம்  


இந்நூலகம் திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம் ஆகும். இந்நூலகம் வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் ( Gowtham Web Services ) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். இந்நூலகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கிடைக்கின்றன. உறுப்பினர்களாக இணைவோருக்கு இந்நூலகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை pdf கோப்புகளாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை  20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இந்நூலகத்தில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை கீழ்காணும் வலைப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

 http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

இந்நூலகத்தின் இணையதள முகவரி

 http://www.chennailibrary.com

நூலகம் திட்டம்  (noolaham.org) :

நூலகம் திட்டம் ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ கூட்டுழைப்பாகும்.

இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் எவர் வேன்டுமானாலும், எந்த நூலை வேண்டுமானாலும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக,  மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும்.

இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன.

இந்நூலகத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

http://www.noolaham.org

மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு  திட்டம் ( Project Madurai ):

உலகளாவிய தமிழர்கள் இணையத்தின் வாயிலாக ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி, உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்கும் சேவை முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ஆகும். 

இத்திட்டத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களது பங்களிப்பை வழங்கலாம். 
தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து தரவேற்றலாம். புதிதாக தரவேற்றப்பட்டுள்ள நூல்களை ஒப்பச்சு ( Proof Read ) செய்தும் நம் பங்களிப்பை இந்நூலகத்துக்கு வழங்கலாம்.
 
இத்திட்டத்தின் வாயிலாக பல இலக்கண இலக்கிய நூல்களையும் நாம் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Project Madurai






இத்திட்டத்தினை  கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

http://www.projectmadurai.org/index.en.html

இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

http://www.projectmadurai.org/pmworks.html 

புத்தகங்களை  pdf   கோப்புகளாகவும், Unicode, TSCII  எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.



தமிழ் இணைய கல்விக்கழகம் ( Tamil Virtual University) :



தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன.

 சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.

இந்நூலகத்தில் பால்ஸ் அகராதி (Pal's dictionary ), ஆங்கிலம் தமிழ் அகராதி,சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி என்று பல அகராதிகள் கிடைக்கின்றன.

நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்று பல சேவைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.

இணைய கல்விக் கழகத்தின் நூலகத்தினை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.




செய்யுட் பாடல்கள், பாடல்களுக்கான உரைகள் என அனைத்தும் தெளிவாக, பயனாளர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.


திறந்த வாசிப்பகம் ( Open Reading Room):



 தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக இணையத்தில் செயல்படும் நூலகம் திறந்த வாசிப்பகம் ஆகும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் பயனாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. நாளும் புதிதாக நூல்கள் பலவும் தரவேற்றம் செய்யப் படுகிறது.

இத்திட்டம் சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. இரமேஷ் சக்ரபாணி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 திறந்த வாசிப்பகத்தினை கீழ்காணும் இணைய பக்கத்தில் காணலாம்.



பிரித்தானிய தமிழ் நூற்சேகரம்:



பிரித்தானிய தமிழ் நூற்சேகரம் என்கிற இத்திட்டம் பிரித்தானிய நூலகங்களும், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்சமயம் பத்து நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.இத்திட்டம் இந்திய மின் நூலகம் (Digital Library of India), மதுரை திட்டம் (Project Madurai), Million books project,TADILNET ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவில்  பல தமிழ் ஆவணங்கள், அரிய பழைய தமிழ் நூல்களும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவினை கீழ்க்காணும் இணைய முகவரியில்  பார்த்து பயன் பெறலாம்.


தமிழ் மரபு நூலகத்தின் வலைப்பூவினை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.


தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகம் :


   தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகத்தில் தமிழகம் வலையின் மின் வெளியீடுகளாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நூல்கள், பெரியாரின் நூல்கள், மார்க்ஸிச நூல்கள், பல எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்களும் கிடைக்கின்றன.

இணையத்தில் இயங்கும் இன்ன பிற தமிழ் எண்ணிம நூலகங்களுக்கான இணைப்புகளும், நூல் விற்பனைத் தளங்கள் மற்றும் நூல் தரவு தளங்களுக்கான இணைப்புகளும் கிடைக்கிறது.

தமிழகம் வலை வழங்கும் நூலகத்திற்கான இணைப்பு இதோ



 இலவச தமிழ் மின்னூல்கள் :



மின் புத்தகங்களை படிக்க இன்று பல வகையான கருவிகள் கிடைக்கின்றன. அமேசான் (Amazon), பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble), புக்கீன் (Bookeen), எக்டாகோ (Ectaco), கோபோ (Kobo), பாக்கெட் புக் (Pocket Book) போன்ற நிறுவனங்கள் வழங்கும் இக்கருவிகளில் பயன்படுத்த ஏதுவாக மின் புத்தகங்களை வடிவமைத்து வழங்கும் தளம் தான் FTE ( Free Tamil Ebooks).

 பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து சேமிக்க பல திட்டங்கள் செயல்படுகின்றன. புதிதாக தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்களை  மின்னூலாக்கம் செய்து அந்நூல்களை Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படும் போது, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கான உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றது. அதே வேளையில், அப்புத்தகங்களை எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இதன் மூலம் புதிதாக வெளியாகும் தமிழ் புத்தகங்களை நாம் எளிதாக பெறலாம்.

இலவச தமிழ் மின்னூல்களை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.



கூகுள் புத்தகங்கள் : 

கூகுள் நிறுவனம் வழங்கும் சேவை கூகுள் புக்ஸ் ஆகும். இத்தளத்தில் தமிழ் புத்தகங்களும் கிடைக்கின்றன.  இச்சேவையை கீழ்காணும் தளத்தில் பெறலாம்.

http://books.google.com/

 கூகுள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால், கீழ்காணும் கூகுள் ப்ளே பக்கத்தில் சென்று தரவிறக்கி, நமது மின்னஞ்சல் சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

https://play.google.com/books
 

குறிப்பு :

இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள படங்கள் அனைத்தும் இங்கு குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.


இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.
http://www.vallamai.com/?p=56279















   

Wednesday, March 25, 2015

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - வரைபடங்கள்



 இணையம் - இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தினை நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்து விடுகிறது.  நமது அன்றாட வாழ்வில், பலவகையான தேவைகளுக்காக நாம் இணையத்தினை பயன்படுத்துகிறோம். நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல நிறுவனங்கள் செயல் படுகின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கினறன, சில நிறுவனங்கள் இலவச சேவையாக செய்கின்றன.

இக்கட்டுரையில்,  இலவச வரைபட ( Maps ) உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் குறித்து காணலாம்.

முதல் நிறுவனம், நாம் அனைவரும் அறிந்த கூகுள் (Google). இவர்கள் வழங்கும் வரைபட சேவை கூகுள் மேப்ஸ் (Google Maps). 

கூகுள் மேப்ஸ் இணைய தளத்தின் முகவரி : maps.google.com

கூகுள் வரைபடத்தின் உதவியுடன் நாம் ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு செல்வதற்கான வழித்தடங்கள், அவ்விரு இடங்களுக்கும் இடையே உள்ள தூரம், செல்ல ஆகும் காலம் போன்றவற்றை கணக்கிடலாம். 

நடந்து செல்ல விரும்புவோருக்கு வழித்தட உதவி, செல்ல ஆகும் கால நேரம், அதேபோல், வாகனங்களில் செல்வதானல் ஆகும் கால நேரம் போன்றவற்றை கணித்து தருகிறது. 

அவ்வழித்தடங்களில் செயல்படும் போக்குவரத்து சேவைகள், நாம் கிளம்பும் இடத்திற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்திற்கு பேருந்து வரும் நேரம், அது செல்லும் வழித்தடம், வழித்தடத்தில் இருக்கும் ஏனைய நிறுத்தங்கள், ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் செல்ல ஆகும் கால அளவு போன்ற விபரங்களையும் கணித்து தருகிறது. 

எடுத்துக்காட்டாக, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து, வடபழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தட விபரங்கள் கூகுள் வரைபடங்களின் உதவியுடன் கீழ்க்கண்டவாறு:


இந்த வரைபடத்தில், இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழித்தட விபரங்கள், போக்குவரத்து நேரமும் நீல நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் வழித்தடத்திற்கானவை. அதற்குக் கீழே இருக்கும் மற்றோர் வழித்தடம் குறித்த விபரங்கள் அறிய விரும்பினால், அதன் மீது  சுட்டியினை வைத்தால், அதன் விபரங்கள் காண்பிக்கப்படும். காரில் செல்ல ஆகும் நேரம் 24 நிமிடங்கள் , கடக்கும் தூரம் 10.1 கி. மீ. பேருந்தில் செல்ல ஆகும் நேரம் 58 நிமிடங்கள், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஓர் பேருந்து வசதி உண்டு  போன்ற விபரங்களை நமக்கு இந்த வரைபடம் அளிக்கின்றது. 

இது  வாகனங்களில் செல்வதானல் உதவும் வழித்தடம்.


இது  பேருந்தில் செல்வதானால் உதவும் வழித்தடம்.



இந்தப் படம்  இரயில் நிலையத்திலிருந்து வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல  பேருந்து ஏற வேண்டிய நிறுத்தம், பேருந்து அந்த குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு வரும் நேரம், பேருந்து எண்கள் மற்றும் அவை செல்லும் இடங்களின் விபரம், இடையில் இருக்கும் நிறுத்தங்களின் எண்ணிக்கை, செல்ல ஆகும் கால நேரம், இறங்கும் இடம், இறங்கிய இடத்திலிருந்து நடக்க வேண்டிய தூரம், நடக்க ஆகும் நேரம் போன்ற விபரங்களையும் வழங்குகிறது.

மேலும், நாம் தேடும் வழித்தடத்தில்  மின் இரயில் ( Electric Trains ) திட்டம் இருப்பின், அது குறித்த விபரங்களையும் வழங்குகிறது.


கூகுள் வரைபடங்கள் உதவியுடன் கிடைக்கும் இன்ன பிற சேவைகள் :

குரல் மூலம் வழி நடத்தும்  கூகுள் வரைபடங்கள் ( Google Voice Navigation )

                      கூகுள் வரைபடங்கள், குரல் மூலம் வழிகாட்டும் வசதியை நமக்கு அளிக்கின்றன. தற்சமயம், இந்த வசதி ஆன்ட்ராய்ட்( Android ) இயக்க அமைப்பில் ( Operating System ) கிடைக்கிறது. இவற்றை, ஆன்ட்ராய்ட் தொலைபேசிகள் ( Android Phones ) மற்றும் ஆன்ட்ராய்ட் வரைவு லக்கமாக்கிகள் ( Android tablets ) ஆகியவற்றில் பயன் படுத்தலாம்.

 தற்சமயம் இந்த வசதி  அகமதாபாத், பெங்களூரு,  போபால், சண்டிகர், சென்னை, கோயமுத்தூர், டில்லி, ஐதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, மைசூர், நாக்பூர், பூனா, சூரத், திருவனந்தபுரம், வதோதரா, விசாகப்பட்டினம்  ஆகிய இந்திய நகரங்களுக்கு கிடைக்கிறது. இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.

கூகுள் எர்த் ( Google Earth) மற்றும் கூகுள்   வீதி  வரைபடங்கள் ( Google Street View maps )

    கூகுள் வீதி வரைபடங்கள் உலகின் தெருக்களை ,  அவற்றின் அமைப்புகளை அப்படியே காட்டும். நாம் புதிதாக ஓர் இடத்திற்கு / நாட்டிற்கு செல்ல இருக்கிறோம் எனில், அங்கு நாம் செல்லும் இடம் / தெரு / இடத்தின் முகவரி தெரியுமேயானால், வீதி வரைபடங்களின் உதவியுடன், நாம் செல்லவிருக்கும் இடம் நேரில் பார்க்க எப்படி இருக்கிறது, அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்ற அடிப்படை தேவைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.


                                    எடுத்துகாட்டாக, அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் என்ற இடத்தில் இருக்கும் அருள்மிகு வெங்கடேஸ்வரர் கோயிலின் தோற்றம் கூகுள் வரைபடத்தின் தெருப் பார்வையில் மேற்கண்டவாறு தெரிகிறது.    

                              
         இந்த வரைபடத்தில் கீழே வரைபடத்தின் வலது பக்க ஓரத்தில் சிறியதாக மஞ்சள் நிறத்தில் மனித உருவம் போன்ற குறியீடு உள்ளது. அதன் பெயர் பெக்மேன் (peg man). அக்குறியீட்டினை எடுத்து வந்து வரைபடத்தில் நீல நிற பாதையில் விட்டால், அந்த பாதை உண்மையில்  எப்படி இருக்கிறதோ அப்படியே  நமக்கு காட்டும். அதுவே கூகுளின் தெருப்பார்வை ஆகும்.


   இது அக்கோயிலின் வெளிப்புறத் தோற்றத்தின் புகைப்படம்.


நன்றி, இப்புகைப்படம் yelp.com ல் இருந்து எடுக்கப்பட்டது.



http://www.tamilcc.com/2015/03/gateway-of-india-googlestreetview.html




 கூகுள் உள்ளரங்க வரைபடங்கள் ( Google Indoor Maps )

                          முக்கிய கட்டிடங்களின் உள்ளரங்க வரைபடங்கள் ( Floor Plans ) நமக்கு கூகுள் உள்ளரங்க வரைபடங்களின் உதவியுடன் கிடைக்கிறது. தற்சமயம் இந்தியாவில் இவ்வசதி சில குறிப்பிட்ட வணிக வளாகங்கள் (Malls) , அருங்காட்சியகங்கள் (Museums), விமான நிலையங்கள் (Airports)  ஆகியவற்றிற்கு கிடைக்கிறது. இது குறித்த விபரங்கள் நமக்கு கீழ்காணும் இணைய பக்கத்தில் கிடைக்கிறது.

https://support.google.com/gmm/answer/1685827?hl=en


ரெயில் ராடார் ( Rail Radar)

                            இந்தியன் இரயில்வே நிறுவனத்தார், கூகுள் வரைபடங்களின் உதவியுடன் உருவாக்கிய தகவல் தளம் ரெயில் ராடார். நாம் ஓர் குறிப்பிட்ட இரயில் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு இரயில் கிளம்பிய இடம், கிளம்பிய நேரம், அடுத்து வரவிருக்கும் இரயில் நிலையம், இரயில் செல்லும் வழியில் இருக்கும் ஏனைய இரயில் நிலையங்கள், அந்நிலையங்களுக்கு செல்லும் நேரம்,  அங்கிருந்து கிளம்பும் நேரம் போன்ற விபரங்களை வழங்குகிறது.

             இந்த வசதி கூகுள் வரைபடங்களின் உதவியுடன் வழங்கப் பட்டு வந்தது. வரைபடத்தில் இரயில் செல்லும் பாதை, தற்சமயம் இரயில் இருக்கும் இடம், சரியான நேரத்தில் இலக்கை சென்றடையுமா அல்லது காலதாமதங்கள் இருக்கக் கூடுமா போன்ற விபரங்களையும் வழங்கியது. ஆனால், தற்சமயம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

வரைபடம் இல்லாது, இரயில்  குறித்த விபரங்கள் மட்டும் தற்சமயம் கிடைக்கிறது.

இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

 http://enquiry.indianrail.gov.in/ntes/ 

 கூகுள் மேப் மேக்கர்

 இந்த சேவையை பயன்படுத்தி, நாமே வரைபடத்தில் புதிதாக விபரங்களை சேர்க்கவோ, ஏற்கனவே இருக்கும் விபரங்களை மாற்றி அமைக்கவோ முடியும்.
ஒரு பகுதியில் கிடைக்கும் சேவைகள், எடுத்துக்காட்டடாக, உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள்,பள்ளிகள், மருத்துவமனைகள்/மருத்துவர்கள் குறித்த விபரம், சாலைகள்,ஒரு குறிப்பிட்ட பாதைக்கான பேருந்து அல்லது இரயில் சேவைகள்,
நகரின் முக்கியமான கட்டிடங்கள், வங்கிகள்,வங்கிகளின் தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் இருக்கும் இடங்கள் போன்ற விபரங்களை பயனாளர்கள் உள்ளீடு செய்யலாம்.அந்த விபரங்களை கூகுள் நிறுவனம் சரி பார்த்து ,பின்னர் அவ்விபரங்களை வரைபடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.


www.google.com/mapmaker


மேற்குறிப்பிட்ட அனைத்து சேவைகளும் கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படும்  கூகுள் வரைபடங்கள் மூலம் கிடைக்கப் பெறலாம்.

இனி, இலவச வரைபட  சேவைகள் வழங்கும் இன்னபிற நிறுவனங்கள் / வலைதளங்கள் குறித்து காணலாம்.

1. மேப் க்வெஸ்ட் ( Map Quest )  www.mapquest.com
2.  யாகூ மேப்ஸ் ( Yahoo Maps )  https://maps.yahoo.com/
3.  பிங் ( Bing ) ( MSN நிறுவனம் வழங்கும் சேவை) http://www.bing.com/maps/ 
4. மேப் மை இந்தியா மேப்ஸ் ( MapmyIndia Maps) http://maps.mapmyindia.com/
         இதில் வழித்தட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
5. ஹியர் (Here ) (Nokia நிறுவனம் வழங்கும் சேவை) https://www.here.com


இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியாகியுள்ளது.

http://www.vallamai.com/?p=55739