blank'/> muhilneel: சிறுவர் கதைகள்
Showing posts with label சிறுவர் கதைகள். Show all posts
Showing posts with label சிறுவர் கதைகள். Show all posts

Friday, March 14, 2014

புறாவும் வேடனும்



ஒரு நாள் மிகவும் தாகமாக இருந்த எறும்பு ஒன்று, அருகில் இருந்த ஆற்றில் நீரருந்த சென்றது. தாகம் தீர நீரருந்திய எறும்பு, கரையில் ஏற முயன்ற போது, தவறிப்  போய் ஆற்றில் விழுந்து விட்டது. நீரோட்டம் வேகமாக இருந்ததால், ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப் பட்டது அந்த எறும்பு.

நீரில் தத்தளித்த எறும்பு  உதவிக்காக துடித்து அலறியது. அப்போது அங்கு ஆற்றின் கரையில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த புறா ஒன்று, அபயம் தேடும் எறும்பின் குரலைக் கேட்டது. உடனே விர்ரென்று எறும்பின் அருகில் பறந்து வந்தது. 

"என்னைக் காப்பாற்றேன் ! என்னைக் காப்பாற்றேன்! " என்று புறாவைப் பார்த்து பயத்தில் அலறியது எறும்பு.

சற்று நேரம் யோசித்த புறா, மீண்டும் மரத்தை நோக்கி வேகமாக பறந்தது. மரத்தின் கிளையில் இருந்த இலைகள்  ஒவ்வொன்றாக பறித்து, நீரில் எறும்பு இருந்த இடத்திற்கு அருகில் போட்டது. மெல்ல தட்டுத் தடுமாறி, ஒருவாறு ஒரு இலையை பற்றிக் கொண்ட எறும்பு, அதன் மீது ஏறிக் கொண்டது. இலை மெல்ல நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப அப்படியே மிதந்து, கரைக்கு அருகில் ஒதுங்கியது. 

மெல்ல கரையில் ஏறிக் கொண்டு, தனக்கு உதவிய புறவினைக் கண்டு " எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி " என்றது. அதன் பின், புறாவும் எறும்பும் அவரவர் வழியில் சென்றனர்.

சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் காட்டில்  வேட்டையாட வந்த வேடனொருவனின் கண்ணில் புறா பட்டது. புறாவை நோக்கி அம்பெய்ய குறி பார்த்துக் கொண்டிருந்தான் அவ்வேடன். வேடனை கவனியாது வேறு திசை நோக்கித் திரும்பியிருந்தது புறா. வேடனையும் புறாவையும் கண்ட எறும்பு, வேக வேகமாக வேடனை நோக்கி ஊர்ந்தது. சென்ற வேகத்தில், வேடனது காலில் கடித்து விட்டது.

வலியால் துடித்த வேடன், சட்டென்று அசைய, அவனது குறி தவறிப்போய் மரத்தில் குத்திட்டு நின்றது. மரத்தின் அதிர்வினால் சுதாரித்துக் கொண்ட புறா, வேகமாகப் பறந்து விட்டது. எறும்புக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டது.

நீதி: தன்னைப் போல் பிறரையும் நேசி.

படத்திற்கு நன்றி: http://tx.english-ch.com/

Monday, February 24, 2014

அதிலென்ன சந்தேகம் ?



உறையூர் கிராமத்தில் பொன்னன் என்றொருவன் வசித்து வந்தான். அவன் மற்றவர்களை ஏமாற்றியே தனது ஜீவனத்தை நடத்தி வந்தான். அந்த கிராமத்தில் அவனது குணம் அறிந்த எவரும் அவனுக்கு  உதவுவதற்கு முன்வரவில்லை. அவனது மூளை குறுக்கு வழியில் சிந்திக்க ஆரம்பித்தது. எந்த கஷ்டமும் இல்லாமல்  பணம் சம்பாதிக்க வழி உண்டா என்று சிந்திக்க ஆரம்பித்தான். அவனது குறுக்கு புத்தி மூளையில் ஒரு யோசனை உதித்தது.

வாரக் கடைசியில் கூடும் சந்தைக்குச் சென்றவன், சந்தையிலிருந்து ஒரு பச்சைக் கிளியை வாங்கி வந்தான். கிளிக்கு "அதிலென்ன சந்தேகம் ? " என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டும் பேசக் கற்றுக் கொடுத்தான். ஒரு சில நாட்களில், கிளியும் அவ்வார்த்தையை நன்கு கற்றுக் கொண்டது. அவன் என்ன கேட்டாலும் கிளி அந்த ஒற்றை வாக்கியத்தை மட்டுமே சொல்லும்.

சந்தை கூடும் ஒரு நாளுக்கு முன்னதாக சந்தை மைதானத்திற்குச் சென்ற பொன்னன், சந்தையின் ஒரு சில இடங்களில், பூமிக்கடியில் சில தங்க நாணயங்களையும், வெள்ளி நாணயங்களையும் புதைத்து வைத்தான். தான் நாணயங்களை புதைத்து வைத்த இடங்களில், அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் சில குறியீடுகளையும் இட்டு வைத்தான்.

அடுத்த நாள், சந்தை கூடியதும், தனது கிளியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, 

" அதிசயக் கிளி ! அதிசயக் கிளி ! " 

"மண்ணுக்குள் மறைந்திருக்கும் புதையல் பற்றிய விபரங்கள் அறிந்த அற்புதக் கிளி . வாருங்கள் ! வாருங்கள் ! " 

என்று கூவ ஆரம்பித்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் பொன்னனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது.

"இந்த பச்சைக்  கிளி எப்படியப்பா மண்ணுக்குள் இருக்கும் புதையல் பற்றி சொல்லும் ? " என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க,

"இங்கு எங்கேனும் புதையல் இருக்கிறதா பார்க்கலாம் வாருங்கள் " என்றபடி கூட்டத்தை தன பின் அழைத்துச் சென்றான் பொன்னன்.

தான் ஏற்கனவே நாணயங்கள் புதைத்து வைத்த இடத்திற்குச் சென்றவன் , கிளியைப் பார்த்து, 

"என் அருமை பச்சைக் கிளியே ! இங்கு புதையல் இருக்கிறதா ? " என்றான்.

உடனே கிளியும் சட்டென்று " அதிலென்ன சந்தேகம் ! " என்று தன்  கீச்சுக் குரலில் சொன்னது.

உடனே அவ்விடத்தை தோண்டிப் பார்க்க, அவ்விடத்தில் பொன்னன் ஏற்கனவே புதைத்து வைத்த தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் இருந்தன.

"ஆஹா ! அற்புதக் கிளி ! அதிசயக் கிளி ! " என்று கூட்டம் ஆர்ப்பரித்தது.

" என்ன விலை ? " என்று கூட்டத்தில் ஒருவர் விசாரிக்க,

"ஐயாயிரம் பொன் ! " என்றான் பொன்னன்.

விலையைக் கேட்டதும் கூட்டம் பின்வாங்கியது. அப்போது கூட்டத்தை பிளந்து கொண்டு ஒருவன் வந்தான். அவன் தான் தனவந்தன்  செங்கையன். 

"விலை என்னப்பா சொன்ன ? " என்று கேட்டான் செங்கையன்.

மீண்டும்  "ஐயாயிரம் பொன் ! " என்றான் பொன்னன்.

உடனே, மறு பேச்சு ஏதுமில்லாமல் செங்கையன்  ஐயாயிரம் பொன் கொடுத்து கிளியை வாங்கிக் கொண்டான்.

செங்கையன்  ஓர் பெரும் தனவந்தன். எச்சில் கையால் கூட ஈ  ஓட்டாதவன். எவருக்கும் எவ்வித உதவியும் செய்ய  மாட்டான். கிடைக்கும் பணத்தை எல்லாம் கஜானாவில் பூட்டி வைத்து, அதனை அவனே இராப்பகலென கண்விழித்து காவல் காத்து வந்தான்.மென்மேலும் பணம் சேர்க்க மட்டுமே விரும்பியவன், அவன் கையில் இருந்து ஒரு பைசா செலவழிப்பதைக் கூட விரும்ப மாட்டான்.

கிளியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் , முதல் வேலையாக தன்  வீட்டின் கதவுகளை அடைத்தான்.கிளியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் ஒரு மூலைக்குச் சென்றான்.

" இங்கே புதையல் இருக்கிறதா ? " என்றான்.

உடனே கிளியும் தனக்குத் தெரிந்த " அதிலென்ன சந்தேகம் ? " என்ற வார்த்தையை சொன்னது.

அவ்விடத்தை தோண்டியவன், அங்கே புதையல் இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றான். ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு, வேறு இடத்தைக் காண்பித்து அவ்விடத்தில் புதையல் உள்ளதா என்றான்.

கிளி  வழக்கம் போல் "அதிலென்ன சந்தேகம் ? " என்றே சொன்னது. இப்படியே வீட்டின் பல இடங்களை தோண்டிப் பார்த்து ஒன்றும் கிடைக்கவில்லை. வீடே முழுதும் இடிக்கப் பட்டு விட்டது. எங்கும் புதையல் கிடைக்கவில்லை.

அப்போது தான் செங்கையனுக்கு கிளி இவ்விரு வார்த்தைகளை மட்டும் தான் கற்றுக் கொண்டுள்ளதோ என்று சந்தேகம் வந்தது.

ஆத்திரத்துடன் செங்கையன்  கிளியைப் பார்த்து, " கிளியே ! என் வாயில் மண்ணை அள்ளிப் போடவா நீ வந்து சேர்ந்தாய் ? " என்றான்.

உடனே கிளி சற்றும் யோசிக்காமல் " அதிலென்ன சந்தேகம் ? " என்றது.

தலையில் கைவைத்தவாறு  கீழே விழுந்தான் செங்கையன்.

Thursday, February 6, 2014

சிங்கமும் மரங்கொத்தியும்



ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள், ஒரு பெரிய எருதை வேட்டையாடிய சிங்கம், அதன் உடலை கிழித்து, மாமிசத்தை உண்டது. அப்போது, எதிர்பாராத விதமாக, எருதின் கூரிய  எலும்பொன்று, சிங்கத்தின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.  சிங்கத்தால் அந்த எலும்பை எடுக்க இயலவில்லை. இது, சிங்கத்துக்கு மிகுதியான வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

வலியால்  துடித்த சிங்கத்துக்கு, ஒரு மரங்கொத்தி உதவ வந்தது. ஆனாலும், மரங்கொத்திக்கு சிங்கத்தைக் கண்டு பயமாகத் தான் இருந்தது. எனவே, அது சிங்கத்திடம், 

" நீ எனக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் கண்டிப்பாக உதவுகிறேன்" என்று  கூறியது.

சிங்கமும் சரி என்று உறுதியளித்தது. மரங்கொத்தியின் முன்  தன்  வாயைத் திறந்தபடி  அமர்ந்தது. மரங்கொத்தி சிங்கத்தின் வாயினுள் சென்று, அதன் தொண்டையில் சிக்கியிருந்த எலும்புத் துண்டினை, தனது நீண்ட கூரிய  அலகினால்  மெல்ல வெளியே எடுத்தது. 

சிங்கமும் மரங்கொத்திக்கு நன்றி சொல்லி, தான் கூறியபடி எவ்வித துன்பமும் விளைவிக்காமல் அதை போக  அனுமதித்தது.


சில நாட்களுக்குப் பின், சிங்கம் மற்றோர் மிருகத்தை வேட்டையாடியது. உணவு ஏதும் கிடைக்காமல், தேடியலைந்த மரங்கொத்தி, சிங்கத்தைக் கண்டது.

" மிகவும் பசியாக இருக்கிறது சிங்கமே. எனக்கு நீங்கள் வேட்டையாடிய உணவில் சிறு பங்கொன்று தந்து உதவுவீர்களா? " என்றது மரங்கொத்தி.


"உதவியா ! உனக்கு நான் உதவ வேண்டுமா ?  எதற்கு உதவ வேண்டும் ? ஏற்கனவே நான் உனக்கு மிகப் பெரிய உதவி செய்துள்ளேன் " என்று கர்ஜித்தது சிங்கம்.

ஒன்றும் விளங்காமல் சிங்கத்தைப் பார்த்தது மரங்கொத்தி. 

"என்ன சொல்கிறாய் சிங்கமே ? நீ எனக்கு உதவி செய்துள்ளாயா ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே ? " என்றது.

" நீ என் தொண்டையில் சிக்கியிருந்த எலும்புத் துண்டை எடுத்ததும், உன்னைத் தின்று விடாது,  போக அனுமதித்தேனே , அதுவே நான் உனக்கு செய்த மிகப் பெரிய உதவி அல்லவா ! இதற்கு மேல் நீ என்னிடம் எப்படி உதவி எதிர்பார்க்கலாம் ? தப்பித்து ஓடிப் போய் விடு. இல்லையேல் உன்னை கொன்று தின்று விடுவேன் " என்று மிரட்டியது.

"நன்றி உணர்வே சிறிதும் இல்லாத உனக்கு நான் உதவி செய்தது , என் குற்றமே . நான் வருகிறேன்." என்று கூறியபடி பறந்து சென்றது மரங்கொத்தி.

நீதி: ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.
                                                    
                                                     குறள் 110.


Sunday, January 26, 2014

ஆத்திரம் விளைவித்த இழப்பு.




ஒரு கிராமத்தில் தையற்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவரது கடை இருந்த வீதியின் வழியே அன்றாடம் அந்த கிராமத்தின் கோயில் யானை செல்வது வழக்கம். அப்போது, பலரும் யானைக்கு பலவகையான உணவு பண்டங்கள் கொடுப்பது வழக்கம். பண்டங்களை பெற்றுக் கொண்டு மக்களுக்கு யானை ஆசிர்வாதம் வழங்கும்.


தையற்காரர் அன்றாடம் யானைக்கு வாழைப்பழம் வழங்குவார். இது பலகாலமாக தொடர்ந்து வந்த பழக்கம் ஆதலால்,  யானை நாள் தவறாமல் வாழைப்பழம் பெறுவதற்காக தையற்காரரின் கடை முன்  வந்து  நிற்கும்.


ஒருநாள்,  வழக்கம் போல் யானை கடையின் முன் வந்து நின்றது. அது பண்டிகை காலம் ஆதலால், தையற்காரர்  மிகவும் மும்முரமாக தனது வேலையில்  ஈடுபட்டிருந்தார். யானைக்கு பழம் எடுத்து வைக்க மறந்து விட்டிருந்தார். யானையோ அங்கேயே நின்று கொண்டிருந்தது.  " போ ! போ ! " என்று துரத்தினார் தையற்காரர். யானையோ செல்வதாய் தெரியவில்லை. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களோ, யானையைக் கண்டு பயந்தனர்.  கடைக்கு வராது  திரும்பிச் சென்றனர்.


தன் வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு ஆத்திரம் கொண்ட தையற்காரர், தன் கையில் வைத்து தைத்துக் கொண்டிருந்த ஊசியால் , யானையின் தும்பிக்கையில்  குத்தி விட்டார்.  வலி  பொறுக்க முடியாது யானை பிளிறியது. அதன் கண்களில் நீர் வழிந்தோடியது. அமைதியாக அவ்விடத்தை விட்டு சென்று விட்டது.


நேராக கோயில் குளக்கரைக்கு சென்ற யானை, நீரருந்தி தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டது. ஆனாலும், அதற்கு வலியும் ஆத்திரமும் குறையவில்லை. தன்  தும்பிக்கையால், நீரை நன்கு கலக்கி, சேறும் சகதியுமாக  தனது தும்பிக்கையில் நிரப்பிக் கொண்டது. ஆத்திரத்துடன்,  வீதியில் ஓடி வந்தது. யானை ஓடி  வருவதைக் கண்ட மக்கள் நாலாபுறமும் சிதறி  ஓடினர். ஓடி வந்த யானை தையற்காரரின் கடை முன் வந்து, வேகமாய் தனது துதிக்கையில் இருந்த சேற்றுத்  தண்ணீரை, கடையிலிருந்த புத்தம் புது துணிமணிகளின் மீது இறைத்தது.


புது துணிகள் அனைத்தும் பாழாகிப் போனதால், தையற்காரர் மீண்டும் வேறு புது துணிகளை வாங்கி, தைக்க கொடுத்தவர்கட்கு மீண்டும் தைத்துக் கொடுக்க வேண்டியிற்று.

ஆத்திரம், ஒரு மனிதனின் நற்பண்புகளையும், நல்லியல்புகளையும் ஒரு நொடியில் கெடுத்து விடும். 

வினை விதைத்தவன், வினை அறுப்பான்.

படத்திற்கு நன்றி,
http://www.internetpk.com

Friday, January 24, 2014

சமயோசிதத்தால் உயிர் தப்பிய குரங்கு

crocodile-and-monkey-story


அந்தக்   காட்டின்  நடுப் பகுதியில்  பெரிய ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையில் ஒர் பெரிய நாவல் மரம். அம்மரத்தில்,  குரங்கு ஒன்று வசித்து வந்தது. நாவற் பழங்களை உண்டு அக்குரங்கு வாழ்ந்து வந்தது.   ஆற்றில் முதலைகள் இருந்தன. ஓர் நாள் ஆற்றின் கரையோரம் வந்த முதலை, மரத்திலிருந்த குரங்கைக் கண்டது.

"என்ன குரங்காரே, நலமா ? "

" நல்ல சுகம் முதலையாரே. இந்தாருங்கள் கொஞ்சம் நாவல் பழங்களை சாப்பிடுங்களேன்."

நாவல் பழங்களை உண்ட முதலை, " மிகவும் ருசியாக உள்ளதே. தினமும் எனக்கு தகுகிறீரா குரங்காரே ? " என்றது.

" அதனால் என்ன ? தினமும் தருகிறேன்." என்றது. 

இப்படியே நாட்கள் சென்றன. குரங்கிற்கு, ஆற்றிற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள ஆசை. ஆனால் எப்படி செல்வதென்பது அதற்கு தெரியவில்லை.

தினமும் நாவல் பழங்களை வாங்கிச் செல்லும் முதலை, தன் மனைவிக்கும் கொடுத்து வந்தது. ஓர் நாள், அப்  பெண் முதலை, 

" நாவல் பழங்கள் இவ்வளவு ருசியாக உள்ளதே. இதையே அன்றாடம் உண்ணும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் ? " என்று நாவில் நீரூற கூறியது.

தன் மனைவியின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசனையில் ஆழ்ந்தது முதலை. மெல்ல நீந்தியபடி கரைக்கு வந்தது.

கரையிலிருந்த குரங்கைக் கண்டதும், " இதை எப்படியாவது தந்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமே ! " என்றெண்ணியது.

அப்போது குரங்கு, " எனக்கு ஓர் ஆசை. அது நிறைவேற உதவுவீர்களா முதலையாரே " என்றது.

"என்ன வேண்டும் கேளுங்கள் குரங்காரே " என்றது முதலை.

"எனக்கு நதிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். எனக்கோ தண்ணீரில் நீந்த தெரியாது. தண்ணீரில் மூழ்கி விடுவேனோ என பயமாக இருக்கிறது. நீங்கள் என்னை உங்கள் முதுகிலேற்றிச் செல்வீர்களா ? " என்றது.

"ஆஹா ! நம் எண்ணம் இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறும் என்றெண்ணவே இல்லையே " என்று மனதிற்குள் மகிழ்ந்த முதலை,

"கண்டிப்பாக அழைத்துச் செல்கிறேன். என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் " என்றது.

மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்த குரங்கு, வரப்போகும் ஆபத்தை உணராது வேடிக்கை பார்த்தபடியே சென்றது.

சற்று தூரம் சென்றதும், முதலை, " குரங்காரே ! என் மனைவி தாங்களளித்த நாவல் பழங்களை சாப்பிட்டு விட்டு, பழங்களே இவ்வளவு சுவையாக இருந்தால், இதை உண்ணும் குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும். குரங்கின் ஈரலை சாப்பிட ஆசையாக உள்ளது  என்று ஆவலுடன் கேட்டாள்.  தங்களிடம் சொன்னால் வரமாட்டீர்களென தெரியும். எப்படி வர வைப்பதென்று எண்ணிக் கொண்டிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள்" என்று சொன்னது.

இதைக் கேட்டதும், அதிர்ச்சி அடைந்த குரங்கு, ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, 

" அப்படியா, மிக்க மகிழ்ச்சி. ஆனால், இதை தாங்கள் கரையிலிருக்கும் போதே சொல்லியிருக்கலாமே. இப்போது தான் என் ஈரலைக் கழற்றி மரத்தில் காயப்போட்டேன். சொல்லியிருந்தால், வரும்போதே எடுத்து வந்திருப்பேன்.என்னைக் கரையில் கொண்டு போய் இறக்கி விடுங்கள். நான் மரத்திலேறி எடுத்து வந்து விடுகிறேன் " என்று தந்திரமாக கூறியது.

இதை உண்மை என நம்பிய முதலை, குரங்கை கரையில் கொண்டு விட்டது. கரையை அடைந்ததும் சடாரென மரத்தில் தாவியேறிய குரங்கு, " அட முட்டாள் முதலையே ! ஈரலை கழற்றி வைக்க முடியுமா ? கழற்றினால், என்னால் தான் உயிரோடு இருக்க முடியுமா ?  உன்னை நம்பிய என்னை ஏமாற்றி  நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாயே. போய் வா." என்று சொல்லிவிட்டு மரத்தில் தாவி மறைந்தது.

ஆராயாத நட்பு ஆபத்தில் விட்டு விடும்.

படத்திற்கு நன்றி,
http://bforball.com