blank'/> muhilneel: கட்டுரை
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, August 29, 2019

தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுக் கலன்கள்

இயற்கை நமக்களிக்கும் செல்வங்கள் அளப்பரியது. நமக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாதது.அதே போல், நாம் வாழும் இந்த பூமிக்கும் இயற்கை பொருட்களால் கேடு ஏற்படாது. இதை மறந்து, நாம் செயற்கையை நாடி செல்கையில் நமக்கும் பெரும் கேடு வந்து சேர்வதோடு, இயற்கைக்கும் பெரும் கேடு விளைகிறது.

சில காலத்திற்கு முன் வரை , சமைக்கவும், சமைத்த உணவை பரிமாறவும் இயற்கை பொருட்களையே பயன்படுத்தி வந்தோம். காலமாற்றம், நாகரீகம், நேர சிக்கனம் என்று துரித சமையல் முறைகள், பயன்படுத்த இலகுவான பாத்திரங்கள்(Non-stick, Plastic, Tupperware) என்று, எப்போது செயற்கையுடன் நாம் கைகோர்க்க ஆரம்பித்தோமோ, அப்போது ஆரம்பித்தது பிரச்சனைகள். பலவகையான நோய்கள், உடல் உபாதைகள் என்று சிரமப் படுகிறோம்.

இவற்றிற்கு தீர்வு தான் என்ன? முடிந்த வரை இயற்கையான பொருட்கள் அல்லது, இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காத பொருட்களை பயன்படுத்துவதே ஆகும். இதனால், நமக்கும் நன்மை, பூமித் தாயும் குளிர்வாள்.


நாம் அனைவருக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். சுற்றுலாவுக்கு செல்கையில், அல்லது ஏதேனும் கோயிலுக்கோ பயணம் மேற்கொள்கையில், வாழை இலையில் உணவினை கட்டி, செய்தித் தாளில் சுற்றி, உணவுப் பொட்டலம் எடுத்துச் சென்றிருப்போம். உணவினை நாமும் உண்டு, நம்மை நாடி வரும் காக்கை, குருவி, நாய் போன்ற ஜீவராசிகளுக்கும் கொடுத்து சாப்பிட்டு முடித்ததும், இலைகளை குப்பைத்தொட்டியில் போட செல்கையில், அங்கே தயாராய் காத்திருக்கும், ஆடுகளும் மாடுகளும். ஆக, ஒருவருக்கு என்று எடுத்துச் சென்ற உணவில், எத்தைனை ஜீவராசிகள் பசியாறி இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இதே, நெகிழி பயன்படுத்தியிருந்தால் ?

இது மட்டுமல்ல, வாழையிலையில் உணவுனை சூடாக வைத்துக் கட்டுகையில், அந்த சூட்டில் இலையும் சற்றே சூடாக, அதன் மணம் நாம் கட்டும் உணவில் கலந்து போக, சற்று நேரம் கழித்து சாப்பிடுகையில், அந்த உணவின் சுவையும் மணமும்....அதை அனுபவத்தால் தான் உணர முடியும்.

வாழை இலை மட்டுமல்ல, வாழை நார்களைக் கொண்டும், தட்டுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வருகிறது.



இப்படி உணவு பொட்டலம் கட்ட, பலரும் அறிந்த வாழையிலை தவிர, இன்னும் சில இலைகள் பயன்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை குறித்து காணலாம்.

பனை ஓலை -பனை ஓலையினாலான விளையாட்டு பொருட்களை நாம் அனைவரும் நிச்சயம் சிறு வயதில் விளையாடி மகிழ்ந்திருப்போம். அந்த இலைகளில் நுங்கு, பதநீர் குடித்த அனுபவம் இருக்கிறதா? பனை குறுத்து ஓலையை அழகாக மடித்து, அதில், நுங்கு மற்றும் பதநீரினை, வியாபாரி வைத்து தரும் அழகே தனி.



இது மட்டுமல்ல, பழங்காலங்களில், இனிப்புகள், காரங்களை எல்லாம் வாங்குகையில், அவற்றை பனை ஓலைகளினாலான கொட்டான்களில் தான் போட்டு தருவார்கள். நெகிழி பயன்பாட்டினால், வெகுவாக குறைந்து இருந்த பனையோலை கொட்டான்கள், இப்போது நெகிழி தடையால் மீண்டும் பயன்பாட்டில் வர ஆரம்பித்து இருப்பது, வரவேற்கத்தக்க மாற்றம்.



தையல் இலைகள் - இலைகளை ஒன்றாக விரும்பும் வடிவத்தில் அடுக்கி, ஈர்க்குச்சியால் இணைத்து பயன்படுத்தும் இலைகளே தையல் இலைகள். இம்முறையில், வேங்கை இலைகள், தாமரை இலைகள்,மாவிலைகள்,ஆலமர இலைகள் , பூவரச இலைகள்,மந்தார இலைகள் தைத்து உணவு உண்ண பயன்படுத்தப்பட்டன.




நாம் கோயில்களில் பெறும் தெய்வப் பிரசாதங்கள், தையல் இலை முறையில் தயாரிக்கப்பட்ட தொன்னைகளிலேயே பெறுகிறோம்.


பாக்கு மட்டை -  உணவு பரிமாற பாக்கு மட்டைகள், தற்போது நெகிழிக்கு மாற்றாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மரத்திலிருந்து உதிரும் பாக்கு மட்டைகள், குறிப்பிட்ட காலம் நீரில் ஊற வைக்கப்பட்டு, பின்னர், நவீன இயந்திரத்தின் உதவியுடன், வெப்பமாக்கி, வேண்டிய வடிவில் அச்சுகளின் உதவியுடன், அழகிய வடிவம் பெறுகின்றன.

இம்முறையில், உணவுத் தட்டுகள், கிண்ணங்கள், தேநீர் கோப்பைகள், குவளைகள், தேக்கரண்டிகள், முள் கரண்டிகளும் தயாரிக்கப்படுகிறது.

தென்னை

தென்னை ஓலைகளில் இருந்து கீற்றுகளை பிரித்தெடுத்து, அவற்றை கூடைகளாக பின்னுகின்றனர். இந்த கூடைகள், பழங்கள், காய்கறிகள், பூக்களை வைப்பதற்கு பயன்படுத்தப் படுகிறடுது. வாழை இலைகளில் உனவு வேக வைக்கப் படுவது போலவே, தென்னங்கீற்றுகளை குடுவை போல் பின்னி, அதில் உணவினை வைத்து வேக வைக்கின்றனர்.

தேங்காய் சிரட்டைகளும் கூட சமையலுக்கு பயன்படுத்தப் படுகிறது.சிரட்டைகளில் உணவு வேகவைக்கப்படுகிறது. புட்டு, இடியாப்பம்,இட்லி போன்ற ஆவியில் வேக வைக்கப்படும் உணவுகள் செய்ய சிரட்டைகள் பயன்படுத்தப் படுகின்றன.

 தானிய உமி

தானியங்களின் உமி நாம் அனைவரும் அறிந்ததே. அந்த உமியினை  பயன்படுத்தி, அவை இயற்கைக்கு தீங்கு விளைவிக்கா வண்ணம் உணவு கலன்கள் தயாரிக்கப்படுகிறது.


செயற்கைக்கு மாற்றாக இயற்கையை தேடுவோம். இயற்கையை பயன்படுத்துவோம். ஆரக்கியமாய், நலமுடன் வாழ்வோம்.

நன்றி,
கீழை இளையவன் வலைப்பக்கம்
விகடன்.காம்
விக்கிபீடியா
ஸ்பைஸ் இந்தியா ஆன்லைன்


குறிப்பு:

பிரதிலிபி தளம் நடத்திய, நம்ம சமையல் போட்டிக்காக எழுதப்பட்டது.

தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுக் கலன்கள்

Friday, March 23, 2018

பொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்

ப்ரதிலிபி நடத்திய ஆளப்போறான் தமிழன் போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை

 பொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்

தை திங்களில் கொண்டாடப்படும் தமிழர் பண்டிகை பொங்கல். பொங்கல் திருநாளுக்கு முதல் நாள், மார்கழி மாதத்தின் இறுதி நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப் படுகிறது. போகி அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து, வாசலில் பசுவின் சாணம் தெளித்து, மாக்கோலம் வரைந்து, பின்னர் காப்பு கட்டப்படுகிறது.

காப்பு கட்டுதல் என்பது சில மூலிகை தாவரங்களின் இலைகள், பூக்கள் இவற்றை கட்டாக கட்டி, வாசல், வீட்டின் பிற பகுதிகளில் வைப்பதே காப்பு கட்டுதல் ஆகும். வேம்பு இலைகள் (வேப்பிலை), பூளைப்பூ, ஆவாரம் பூ, மாவிலை   , தும்பை என்று காப்பு கட்ட  பயன்படுத்தப்படும் மூலிகைகளில் பல மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கின்றன. காரணம் இல்லாமல், மரபும், பழக்க வழக்கங்களும் தோன்றி விடவில்லை.

மூலிகைக் கட்டான இந்த பொங்கல் காப்பின் பலன்கள் பல. இவை காற்றில் உள்ள பிராண வாயுவான ஆக்சிஜனை அதிகப்படுத்தி, காற்றினை சுத்தம் செய்யும் தன்மையன. அது மட்டுமல்லாது, வீட்டிற்குள் விசப் பூச்சிகளின் வரவையும் தடுக்கும்.

வேம்பு:



அறிவியல் பெயர்  Azadirachta indica
பொதுப்  பெயர்        Neem

காப்பு கட்ட பயன்படுத்தப்படும் வேம்பு ஓர் மிகச் சிறந்த கிருமி நாசினி. அது மட்டுமல்லாது, நீரிழிவு, தோல் நோய்கள், அம்மை, வயிற்றுப் புழுக்களை அழித்தல், பற்கள் ஈறுகளை பாதுகாக்க என்று பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி " என்ற பழமொழியை அறியாதவரும் உண்டோ ?

பூளைப்பூ :


அறிவியல் பெயர்  Aerva lanata 
பொதுப்  பெயர்        Mountain knotgrass

வெண்மை நிறத்தில் பூத்திருக்கும் மலர்களை கொண்ட இத்தாவரம், சிறுபீளை என்றும், தேங்காய்ப் பூ கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலர்கள் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறுநீர் கட்டிகளை கரைக்கும் தன்மையை பெற்றவை.

 கோவை மாநகரின் ஒரு பகுதியான பீளமேடு, இம்மலர்களின் பெயர் கொண்டே வழங்கப் படுகிறது. பூளைப்பூக்கள்  நிறைந்திருந்தமையால், பூளைமேடு என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில் அது மருவி பீளமேடு என்று தற்பொழுது வழங்கப்படுகிறது.

ஆவாரம்பூ :


அறிவியல் பெயர்  Senna auriculata
பொதுப்  பெயர்        Matura tea tree

மார்கழி, தை மாதங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் இம்மலர்கள், பொங்கல் பூ என்றும் வழங்கப் படுகின்றன. "ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்பது பழமொழி. இத்தாவரத்தின் பூ, காய், இலை, பட்டை, வேர் என அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது.

உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சி அளிக்கக் கூடியது. நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

கோவை நகரில், ஆவாரம் மலர்களின் பெயராலும் ஒரு பகுதி வழங்கப் படுகிறது. அது, ஆவாரம்பாளையம். பீளமேட்டிற்கு (பூளைமேடு) அருகில் உள்ளது.

மாவிலை :


அறிவியல் பெயர்  Mangifera indica
பொதுப்  பெயர்        Mango

அனைத்து பண்டிகை மற்றும் விசேடங்களிலும், முக்கிய இடம் பிடிப்பது, மாவிலைகளும், மாவிலை தோரணமும். மாவிலை ஓர் சிறந்த கிருமி நாசினி. இதற்கு பல்வகையானச் மருத்துவ குணாதிசயங்களும் உண்டு. மாம்பூ, மாம்பழம் , மாங்காய்,  மாம்பிஞ்சு என்று அனைத்தும் நம் அன்றாட உணவுப் பழக்கத்தில் இடம் பிடித்துள்ளன. "மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என்பது பழமொழி.

தும்பை :



அறிவியல் பெயர்  Leucas aspera
பொதுப்  பெயர்        Common Leucas,Thumba

வெண் நிறத்தில் மலர்ந்திருக்கும் தும்பை மலர்களும் பொங்கல் காப்பில் இடம் பிடித்திருக்கும். இம்மலர்களும் மருத்துவ குணம் நிறைந்தவையே. இளைப்பு, தலைவலி, நீர்வேட்கை , சளி, இருமல், குறட்டை    போன்ற வியாதிகளை குணமாக்கும் தன்மை பெற்றவை இம்மலர்கள்.


இயற்கையோடு இயைந்த வாழ்வாகவே விளங்கியது தமிழர் வாழ்வு. இயற்கையை இறையாக போற்றி பாதுகாத்து நலமுடன் வாழும் தன்மை தற்போது குறைந்து வந்தாலும், நம் முன்னோர்கள் ஏற்படுத்திய சம்பிரதாயங்கள் ஓரளவேனும் இன்றளவும் கடைபிடிக்கப் படுகிறது. காரணம் அறியாமல் செய்வதை விட, ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னிருக்கும் காரணம் அறிந்து செய்தால், நமக்கும் நம் சந்ததிகளுக்கும் அவை பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

இயற்கையை போற்றுவோம். இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.


படங்களுக்கு நன்றி, Wikimedia Commons, Boldsky.com

https://commons.wikimedia.org/wiki/File:Leucas_aspera_flowers.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Neem_(Azadirachta_indica)_in_Hyderabad_W_IMG_6976.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Aerva_lanata_in_Bhongir_AP_W_I2_IMG_3064.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Mango_tree_leaves.jpg
https://tamil.boldsky.com/health/herbs/2017/medicinal-properties-flowers-methods-using-them/articlecontent-pf86115-014746.html









Thursday, January 11, 2018

நினைவுப்பாதை - வாழ்த்து அட்டைகள்

வாழ்த்து அட்டைகள்



கைபேசி, கணினி, இணையம் என்று இன்று உலகமே நம் கைக்குள் அடங்கி விட்டிருக்கிறது. நம் நட்பு, சுற்றத்துடன் நினைத்த மாத்திரத்தில் நம்மால் தகவல் தொடர்பு செய்து கொள்ள முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு விரைவாக ஒன்றை பெறுகிறோமோ, அதை விட வெகு விரைவாகவே அவற்றை மறந்தும் போகிறோம். இவற்றுள் நாம் பிறரிடமிருந்து பெறும் வாழ்த்துகளும் அடங்கும்.

மின்னஞ்சல்(e-mail), குறுஞ்செய்தி(SMS), முகநூல்(Facebook), கட்செவி(Whatsapp) என்று நமக்கு இன்று அன்பை பரிமாற ஆயிரம் வழிகள். இணையம் மட்டும் துணையிருந்தால் போதும். இந்த அன்புப் பரிமாற்றம் சில காலம் நம் நினைவில் நிற்கும். ஆனால், அன்பின் வார்த்தைகளை காலகாலத்திற்கும் நம்மால் பொக்கிஷமென பாதுகாத்து வைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகையில், அதற்கான பதில் முடியுமென சொல்வது சந்தேகமே.

கால ஓட்டத்தில் நம் நினைவை விட்டு அகல்வது ஒருபுறம் இருக்கட்டும். மின்னியல் வாயிலாக நாம் சேமிக்கும் அனைத்தும், ஒரு கட்டத்தில் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறது. தரவுகளை சேமிக்க நமது உபகரணங்களில் (devices) போதிய கொள்ளடக்கம் (memory) இல்லாது போகலாம். அவ்வாறான சமயங்களில், இடப்பற்றாக்குறை காரணமாக நாமே நாம் ஆசையாக படித்ததை, சேமித்ததை அழித்துவிடும் நிலைக்கு நிர்பந்திக்கப் படலாம். இது இன்றைய நிலை.

சில காலத்திற்கு முன், அதாவது, ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன், தகவல் பரிமாற்றம் என்பது அஞ்சல் முறையில் இருந்தது. அஞ்சல் உறைகள் (Envelopes), தபால் தலைகள் (Stamps), வாழ்த்து அட்டைகள் (Greetings), தந்தி முறை (Telegram), உள்நாட்டு அஞ்சல் தாட்கள் (Inland Letter) என்று இவற்றுள் ஏதேனும் ஒன்றிற்காக தபால் நிலையம் சென்ற அனுபவம் நம் அனைவருக்கும் இருக்கும். இவை அனைத்தும் இன்றும் இருக்கிறது. ஆனால், முன்போல் இல்லை. இது நிச்சயமாக நமக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. முன்னைவிட வெகு விரைவாக, வெகு எளிதாக தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது. ஆனால், அஞ்சல் வழியில் கிடைத்த மகிழ்வும், பேரானந்தமும் மின்னஞ்சல் வழியில் சற்றே சுவாரஸ்யம் குறைந்து தான் போய் இருக்கிறது. இங்கு மின்னஞ்சல் என்று குறிப்பிட விரும்புவது, குறுஞ்செய்தி தொடங்கி, மின் வாழ்த்து அட்டைகள், இன்றைய கட்செவி என்றழைக்கப்படும் Whatsapp வரை அனைத்திற்கும் பொருந்தும்.

சில வருடங்களுக்கு முன் வரை, புத்தாண்டு , பொங்கல் வாழ்த்து அட்டைகள் வெகு பிரபல்யம். பொங்கலின் போது களை கட்டும் பூளைப்பூ, ஆவாரம் பூ, கரும்பு, மஞ்சள் இவற்றின் விற்பனையோடு, வாழ்த்து அட்டைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெறும். சூரியன், விவசாயி, பசுக்கள், காளைகள், வயல் வெளி, நெற்கதிர்கள், பொங்கல் பானை , கரும்பு என்று பல வண்ணங்களில், அழகான எண்ணங்களோடு அச்சடிக்கப் பட்டிருக்கும் அட்டைகள் கடைகளில் அலங்காரமாய் வீற்றிருக்கும். இவை மட்டுமல்லாது, வண்ண மலர்கள், நடிக, நடிகையர் படங்கள் போட்ட அட்டைகள் என்று பல வகையான அட்டைகள் விற்பனைக்கு வரும்.

பொங்கலுக்கு இரண்டு வாரத்திற்கு முன் வாழ்த்து அட்டைகளை வாங்கி, அதில் "அன்புள்ள " என்று தொடங்கி, உறவுகளை எல்லாம் குறிப்பிட்டு, "இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று எழுதி, பொங்கல் பானையுடன், கரும்பும் வரைந்து , "அன்புடன்" என வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களின் பெயர்களை குறிப்பிட்டு, உறையிலிட்டு, அஞ்சல் தலை ஒட்டி, தபால் பெட்டியில் சேர்த்து விட்டு, நமக்கான பொங்கல் வாழ்த்து அட்டைகளுக்காக, நாளும் பள்ளி முடிந்து வந்து வீட்டில் தபால் ஏதேனும் வந்திருக்கிறதா என்று பார்ப்பதிலும், தபால் காரரை பார்த்ததும், வாழ்த்து அட்டைகள் ஏதேனும் வந்திருக்கிறதா என்று கேட்டு மகிழ்வதிலும் ஆரம்பமாகிறது, பண்டிகையின் குதூகலம்.

நமக்கு மிகவும் பிடித்த நெருக்கமான உறவுகள், அது பெரியம்மாவோ, தாத்தா பாட்டியோ, சித்தியோ, அத்தையோ, மாமாவோ, பெரியப்பா, சிற்றப்பா, அண்ணன், தங்கை, மதினி, மச்சான் யாராக இருப்பினும், அவர்களின் கையெழுத்து இட்டு வரும் வாழ்த்து அட்டைகளுக்கு என்றென்றும் தனி மதிப்பு. கால ஓட்டத்தில், வாழ்த்து அட்டைகள் உருக்குலைந்து போனாலும், அதை பொக்கிஷமென காக்கப் பட்டிருக்கும். இன்றளவும், அவை பலரது மனதிற்கு இன்பமளித்து, குதூகலம் அளிக்கலாம்.

காலங்கள் மாற மாற, உலகம் நம் கைக்குள் என்று பெருமிதம் கொள்கிறோம், நாம் உறவுகளை விட்டு வெகுதூரம் ஓடுகிறோமா, அல்லது உறவுகள் நம்மை விட்டு விலகி ஓடுகின்றனவா என்பதை அறியாமலேயே.




பிரதிலிபி  நடத்திய  'நினைவுப்பாதை'  போட்டிக்காக எழுதப்பட்டது.

Tuesday, October 11, 2016

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - Free Tamil ebooks

ஒவ்வொரு படைப்பாளருக்கும் இருக்கும் பேராவல், தமது படைப்புகள், பிறரால் அறியப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். சில வருடங்களுக்கு முன்பு வரை, கவிஞர்கள், கட்டுரையாளர்கள், கதாசிரியர்கள், இவர்களின் படைப்புகளை நாம் அச்சு நூல்களாக, அதாவது புத்தகங்களாக வாசித்து மகிழ்ந்தோம். தற்போது, கணினி அறிவியலில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம், உலகையே நம் கைக்குள் கொண்டு வந்து விட்டது.

என்னதான் நாம் வலைப்பூக்களிலும், வலைதளங்களிலும் நமது படைப்புகளை வெளியிட்டு, வாசகர்கள், சக வலை நண்பர்களின் கருத்துக்களையும், பாராட்டுதல்கள், விவாதங்கள் என்று நம் படைப்பிற்கென்று ஓர் அங்கீகாரம் கிடைத்தாலும், நமது எழுத்துக்கள், அழகாக வடிவமைக்கப்பட்டு, புத்தகமாக நமக்கு கிடைக்கையில் நமது உள்ளந்தனில் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவென்பதேது ? நாளொரு புதிய கண்டுபிடிப்புகளுடன் வளர்ந்து வரும் கணினி அறிவியலின் துணையுடன், பல பிரபல்யமான எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமின்றி, மிகவும் பழமையான நூல்கள் பலவும் நமக்கு இன்று மின்னூலாக கிடைக்கிறது.

மதுரைத் திட்டத்தின் வாயிலாக, பல காப்பியங்கள், இலக்கண இலக்கிய நூல்கள் பலவும் மின்னூலாக நமக்கு கிடைக்கின்றன. தற்கால எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றையும், பல புதிய எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் தான் இலவச தமிழ் மின்னூல்கள் திட்டம் (Free Tamil eBooks). இத்திட்டம், ஒவ்வொரு எழுத்தாளனின் நூலாசிரியர் கனவினை நிஜமாக்குகிறது. எழுத்துக்களின் மீது ஆர்வம் கொண்ட வாசகர்களும், தமது விருப்பமான எழுத்தாளரின் எழுத்துக்களை இலவசமாக வாசிக்க நல்லதோர் வாய்ப்பும் கிட்டுகிறது.

இந்தச் சேவையை பயன்படுத்தி பல புதிய நூல்கள் வாசிக்க விருப்பமா ? அல்லது, பொக்கிஷமென பாதுகாக்கும் படைப்புகளுக்கு நூல் வடிவம் கொடுக்க பேராவலா ? இவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய  வலைத்தளம் freetamilebooks.com.

இப்போது பல எழுத்தாளர்கள், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், என்று பலரால் நூல்கள் எழுதப்படுகிறன.இது தவிர, வலைப்பூக்கள், வலைதளங்களில் எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகம்.  இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு, அரசியல், மருத்துவம், உணவு என்று பல துறை சார்ந்து பலரும் தமிழ் மொழியில் எழுதுகின்றனர். இங்கனம், இணையத்தில் எழுதும் ஆசிரியரது படைப்புகளை தொகுத்து மின்னூலாக வெளியிடுகிறார்கள்.

 இத்தளத்தில் வெளியிடப்படும் மின்னூல்கள் Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படுகிறது. இந்த உரிமத்துடன் வெளியிடுவதால் என்ன பயன் எனில், ஒரு படைப்பாளரின் படைப்பை, படிக்கும் அனைத்து வாசகர்களும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் உரிமை உள்ளதால், பலரால் பகிரப்பட்டு, நமது எழுத்துக்கள் பல வாசகர்களை சென்றடையும். அப்படி ஒவ்வொரு முறை பகிரப்படும் போதும், நமது எழுத்துக்கள் நமது பெயருடனேயே பகிரப்படும். நமது பெயரும், படைப்பும் உலக அளவு வாசகர்களிடையே பரிச்சயமாகும்.

இத்தளத்தில் கிடைக்கும் நூல்கள் யுனிகோட் எழுத்துருக்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. பல வகையான கருவிகளில், பல வகையான செயலிகளில் மின்னூல்களை பயன்படுத்த வசதியாக மின்னூல்கள்  தயாரிக்கப்படுகிறது. இத்தளத்தில் கிடைக்கும் மின்னூல் வடிவங்கள் epub, pdf, mobi & azw3.




இலவச மின்னூல்கள் தளத்திற்கான உரையாடல் களம்  (Google Groups) - FreeTamilEbooksForum
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum 

 இவர்களது முகநூல் பக்கம்
Free Tamil Ebooks 
https://www.facebook.com/FreeTamilEbooks

Monday, May 9, 2016

இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்

சில வருடங்களுக்கு முன் வரை ஒலிப்பதிவு பெட்டியின்(tape recorder) உதவியுடன் ஒலிகளையும், குரல்களையும் பதிவு செய்து கேட்டு மகிழ்ந்தோம். சமீப காலமாக கைபேசிகளிலும் (cellular phones) கூட இந்த குரல் பதிவு வசதி கிடைக்கிறது. அந்த ஒலிக் கோப்புகளை கணினிகளில் பதிவிறக்கி சேமித்து பயன்படுத்தலாம். இப்போது, கணினியுடன் இணைய இணைப்பும், கணினியிடன் இணைக்கப்பட்ட மின்சார ஒலிபெருக்கி அல்லது ஒலிவாங்கி (microphone) இருந்தால், நம் கணினியில் ஒலிப்பதிவு செய்து ஒலிக் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். இத்தகைய சேவைகளை வழங்கும் இணையதளங்கள் மற்றும் மென்பொருட்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

1) Audacity :

 இந்த வசதி நமக்கு தனி மென்பொருள் வாயிலாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை நமது கணினியில் தரவிறக்கி, குரல் பதிவு, ஒலிப்பதிவு செய்து அவற்றை தனிக் கோப்புகளாக கணினிகளில் சேமித்து பயன்படுத்தலாம். பிறருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். அத்தகைய ஓர் மென்பொருள் தான் ஆடேசிட்டி (Audacity). இந்த மென் பொருளை நமது கணினியில் தரவிறக்கி (Download), நிறுவி (Install) பயன்படுத்தலாம்.

இம்மென்பொருளை கீழ்காணும் இணையதளத்தில் இருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்.


இனி, மென்பொருட்களை கணினிக்கு தரவிறக்கம் செய்யாது, இணையத்திலேயே ஒலிப்பதிவு செய்து, கோப்புகளாகவே நமக்கு கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கும் இணையதளங்கள் குறித்து காணலாம்.

2) Sound cloud :

           இணையத்தில் ஒலிக்கோப்புகளை தரவேற்றம் செய்து, அந்த கோப்புகளை எந்த தளங்களில் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிக்கிறது இந்த sound cloud இணையதளம். இசை மற்றும் ஒலிக் கோப்புகளை ஃபேஸ் புக் (facebook), ட்விட்டர் (twitter), டம்ப்ளர் (tumblr) மற்றும் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.

இந்த மென்பொருள் பலவகையான ஒலிக்கோப்பு வடிவங்களை பயன்படுத்த வழிவகை செய்கிறது. இந்த இணையதளத்தில் AIFF, WAVE (WAV), FLAC, OGG,ALAC, MP2, MP3, AAC, AMR, WMA ஒலிக் கோப்பு வடிவங்களை பயன்படுத்தலாம். தரவேற்றம் செய்யப்படும் ஒலிக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 5GB ஆக இருக்கலாம்.

ஒலிக்கோப்புகளை தரவேற்றம் செய்து பிறருடன் பகிர்ந்து கொள்ள தனி பயனர் கணக்கு தொடங்குதல் அவசியம்.

இந்த மென்பொருளை கீழ்காணும் இணையதள முகவரியில் பயன்படுத்தலாம்.

https://soundcloud.com/

3) Audio expert: 

                          ஆடியோ எக்ஸ்பர்ட் என்ற இந்த இலவச இணைய மென்பொருளின் உதவியுடன்    ஒலிக் கோப்புகளை (Audio files) உருவாக்கலாம், ஏற்கனவே இருக்கும் ஒலிக்கோப்புகளில் மாற்றங்கள், திருத்தங்கள் (Edit) செய்யலாம். கோப்புகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு (file convert / format convert ) மாற்றலாம். இரு வேறு ஒலிக் கோப்புகளை ஒன்றாக இணைக்கலாம். குரல் பதிவு செய்து, கோப்புகளாக சேமித்துக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.

100  Mb அளவு வரை இருக்கும் கோப்புகளை ஒரு ஒலி வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு மாற்றலாம். இணையதளங்களில் இருக்கும் ஒலிக் கோப்புகளையும் நமக்குத் தேவையான ஒலி வடிவ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, நமக்குத் தேவையான ஒலிக் கோப்பு இருக்கும் வலைப்பக்கத்தின் சரியான முகவரியைக் கொடுத்தாலே போதுமானது.

வலைப்பக்க முகவரிகள் கொடுக்கையில், http (hyper text transfer protocol), https (http secure), ftp (file transfer protocol) என்று துவங்கும் வலைப்பக்க முகவரிகளை வழங்குதல் அவசியம்.

இம்மென்பொருளினை பயன்படுத்தி கீழ்க்கண்ட  ஒலிக் கோப்பு வகைகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் வடிவிற்கு மாற்ற இயலும்.

AAC - Advanced Audio Coding
AMR - Adaptive Multi  Rate (Audio Compression format)
AU - Audio file format by Sun Micro systems
FLAC - Free Lossless Audio Codec
M4A - Mpeg 4 Audio
WMA - Windows Media Audio
MKA - Matroska file extension for audio files only.

இம்மென்பொருளை கீழ்கண்ட இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்த ஓர் பயனர் கணக்கு மட்டும் துவங்கினால் போதுமானது.

http://audioexpert.com/ 

4)  Audio Pal :

               ஒலிப்பதிவிற்கான மற்றுமோர் இலவச இணையதளம் தான் இந்த Audio Pal.  இந்த மென்பொருளின் உதவியுடன்  ஒலிப்பதிவு செய்து, பயன்படுத்தலாம். மேலும், 25 ற்கும் மேலான மொழிகளில் எழுத்து வடிவத்திலிருந்து  ஒலி வடிவத்திற்கு (Text to Speech) மாற்ற இயலும். தொலைபேசியின் உதவியுடன் குரல் அல்லது ஒலிப்பதிவு செய்யலாம்.


கணினியில் சேமித்து வைத்திருக்கும் ஒலிக்கோப்புகளையும் தரவேற்றம் செய்து கொள்ளலாம்.


மேற்கூறிய நான்கு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒலிப்பதிவு செய்த பின், அந்த கோப்புகள், எங்ஙனம் பதிவாகி உள்ளன என்றும் அறிந்து கொள்ளலாம். ஒலிப்பதிவு செய்த கோப்புகளை, நமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மின்னஞ்சலில் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை கீழ்க்கண்ட இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

http://www.audiopal.com/editor.html

5) Vocaroo :

                இணையத்தில் இலவசமாக ஒலிப்பதிவு செய்ய உதவும் வலைதளம் Vocaroo.com.


         வலைதளத்தை திறந்ததுமே, மேற்காட்டியுள்ளதைப் போன்று தான் பக்கம் திறக்கிறது. இதில் காணப்படும், " Click to Record" என்கிற பொத்தானை சொடுக்கியதும், குரல் பதிவு அல்லது ஒலிப்பதிவு ஆரம்பமாகிறது. இந்த தளத்தினூடாக ஒலிப்பதிவு செய்ய ஒலிவாங்கி (microphone) தேவை. ஒலிவாங்கியின் உதவியுடன், குரல்பதிவு செய்து முடித்ததும், பதிவு செய்ததை மீண்டும் கேட்கலாம். நமக்கு தேவையெனில் அதனை ஒலிக்கோப்பாக நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.

இந்த சேவை வழங்கும் இணையதளம்

http://vocaroo.com/

வல்லமை மின்னிதழ் நடத்திய பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரை போட்டிக்காக எழுதப்பட்டு பரிசு பெற்ற கட்டுரை.
http://www.vallamai.com/?p=61965

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்

நாளும் நமது கணிப்பொறியில் பல வகையான ஆவணங்களை ( Documents ) உருவாக்கி பயன்படுத்துகிறோம். Microsoft Office ன் பல்வேறு மென்பொருட்களான MS Word, MS Excel, MS Powerpoint, இவையனைத்து மென்பொருட்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அதே போல் பல வகையான படக் கோப்புகள், jpeg, gif, bmp மற்றும் zip கோப்புகள், pdf கோப்புகளை உருவாக்கி பயன்படுத்துகிறோம். மற்றவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறோம்.

நாம் உருவாக்கும் ஆவணங்களை கணினியில் சேமித்து வைக்கிறோம். Compact Disc, Pen drive, Hard disc போன்ற external storage device களிலும் சேமித்துப் பயன்படுத்தலாம். அப்படி சேமிக்கையில், அந்த உபகரணங்களை கையில் எடுத்துச் செல்வோம். அங்கனம் எடுத்துக் செல்லக் கூட தேவையில்லாது, இணையத்திலேயே சேமித்துக் கொள்ளும் வசதியும் இன்று உள்ளது. இணைய வசதி இருந்தால், எங்கு எப்போது வேண்டுமானாலும் நமது கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நமது மின்னஞ்சலிலேயே நமது கோப்புகளை இணைத்து, பிறருக்கு அனுப்பவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். ஆனால், மின்னஞ்சல் சேவை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் நாம் மின்னஞ்சலுடன் தரவேற்றும் கோப்புகளுக்கான அளவை நிர்ணயம் செய்துள்ளன. அவை நிர்ணயத்துள்ள அளவுக்கு மேலாக இருக்கும் கோப்புகளை அனுப்புவதென்பது இயலாது. இதற்காக வடிவமைக்கப்படவை தான், இந்த இணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான தளங்கள்.

மின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் வழங்கும் அதிகபட்ச  மின்னஞ்சல் அளவு வரம்பு ( Maximum Email Size Limit ) கீழ்வருமாறு:

மின்னஞ்சல் சேவை
இணைப்பின் அளவு
ஜிமெயில் (Gmail)
25 MB / email
அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் (Outlook and Hot mail)
10  MB / attachment அல்லது 300 GB ஸ்கை டிரைவ் வாயிலாக
யாஹூ மெயில் (Yahoo Mail)
25 MB / email
ஏஓஎல் (AOL)
25 MB / email
ஸோஹோ மெயில் (Zoho Mail)
12 MB / email & 10 MB / file
ரீடிஃப் மெயில் (Rediff Mail)
10 MB / email

மேற்குறிப்பிட்டிருக்கும் கோப்புகளின் அளவுக்கு மேல் மின்னஞ்சலில் இணைப்புகளாக கோப்புகளை அனுப்ப இயலாது. அது போன்ற சூழ்நிலைகளில், இணையத்தில் இருக்கும் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கு உதவும் இணைய தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்தகைய சேவைகளை இலவசமாக இணையவழி வழங்கும் இணையதளங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

கூகுள் டாக்ஸ் வியூவர் (Google Docs Viewer)


கூகுள் வழங்கும் சேவை இந்த கூகுள் டாக்ஸ் வியூவர். மைக்ரோசாப்ட் வோர்ட், நோட்பேட்  போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி நமது ஆவணங்களை கோப்புகளாக சேமித்து வைப்போம். அத்தகைய கோப்புகளை நாம் தனி மென்பொருள் ஏதுமின்றி இணையத்திலேயே உருவாக்கி, சேமித்து, திருத்தங்கள் மேற்கொள்வது என அனைத்து வகையான வேலைகளையும் இணையத்திலேயே செய்து,  கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.

word processors (சொல் செயலிகள்) வழங்கும் பல்வேறு சேவைகளும் இந்த இணையவழி சேவையின் வாயிலாக கிட்டுகிறது. எடுத்துக்காட்டாக, கோப்புகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் ( Editing ),  மெருகூட்டுதல் (styling), சேமித்தல் (save)  என தனி மென்பொருட்களில் செய்யும் அனைத்து செயல்களையும் இதிலும் மேற்கொள்ளலாம் .

ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துருக்கள், இணையதள இணைப்புகள் கொடுக்கும் வசதி, படங்களை நமது கணினியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளும் வசதி, ஓவியம் வரையும் வசதி, அட்டவணைகள் உருவாக்கிக் கொள்ளும் வசதி என ஒரு தனி மென்பொருளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்த இணையவழி சேவையின் மூலம் கிடைக்கப் பெறலாம்.

கூகுள் வழங்கும் இந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.

docs.google.com

நமது மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியே நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம்.

 ஸ்ரைப்டு (Scribd)

Scribd ன் உதவியுடன் நம்மால் நமது கோப்புகளை இணையத்தில் வெளியிட அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கோப்புகளை பிறர் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கவும் செய்யலாம். நமது கோப்புகளை சேமிப்பதற்கென தனி கணக்கு உருவாக்கி அதில் நமது கோப்புகளை சேமித்துக் கொள்ளலாம். நாம் அங்ஙனம் சேமிக்கும் கோப்புகளுக்கான இணைய பக்க முகவரியின் உதவியுடன், அந்த கோப்புகளை இணையத்திலேயே வாசிக்க, தரவிறக்க என்று பல வசதிகளும் கிடைக்கின்றன.

இவை மட்டுமின்றி, கட்டுரைகள், கடிதங்கள், புத்தகங்கள், செய்தித் தாள்கள், பத்திரிகைகள், கவிதைகள், வியாபரத்திற்கு பயன்படுத்தப்படும் படிவங்கள், சட்ட ரீதியான ஆவணங்கள், சொற்பொழிவுகள், விளக்கக் காட்சிகள், சுற்றுலா வழிகாட்டிகள் என்று இணையத்தில் கிடைக்கும் பலவகையான ஆவணங்களையும் இந்த இணையவழிச் சேவையின் மூலம் சேமித்து பயன்படுத்தலாம், பிறருக்கு பயன்படுத்த,  பகிர்ந்து உதவலாம்.

நாம் சேமித்து வைத்துள்ள கோப்புகளை, நமது இணைய பக்கங்களிலும், இந்த Scribd ன் உதவியுடன் வெளியிட்டுக் கொள்ளலாம்.

இந்த சேவையை கீழ்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.


ஸ்லைடு ஷேர் ( Slide Share ) 

    நாம் அறிந்த தகவல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவாக்கப் பட்டது தான் இந்த slide share. ஆவணங்கள்(documents), காணொளிகள் (videos), விளக்கக் காட்சிகள் (presentations),இணையவழி கருத்தரங்கங்கள் (webinars),விளக்கக் காட்சிகள் (infographics ), PDF கோப்புகள், புகைப்பட தொகுப்பு என்று பலவகையான கோப்புகள், பல்வேறு வடிவங்களில் தரவேற்றவும், பலருடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.

இதில் பதினைந்து மில்லியனுக்கும் மேலான பலவகையான கோப்புகள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளன. அவற்றில் தொழில்நுட்பம், கல்வி, வணிகம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், பயணக் கட்டுரைகள் என்று பல வகையான தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

நாம் இங்கு தரவேற்றம் செய்யும் கோப்புகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். வலைபூக்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடலாம், இணைப்பு வழங்கலாம்.

இந்த சேவையை வழங்கும் வலைப்பக்கம்

 www.slideshare.net

ஸ்கை ட்ரைவ் (sky drive) / ஒன் ட்ரைவ் (one drive):

              மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வழங்கும் இணையவழி ஆவண சேமிப்பு வசதி தான் இந்த ஸ்கை ட்ரைவ். ஸ்கை ட்ரைவ் தற்போது ஒன் ட்ரைவ் என்று அழைக்கப் படுகிறது.

 புகைப்படங்கள், காணொளிகள் , பலவகையான கோப்புகளை நாளும் பயன்படுத்துவோம், நமக்கு  நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அங்ஙனம் பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒன் ட்ரைவ் நமக்கு உதவுகிறது.

ஒன் ட்ரைவ் தற்போது மைக்ரொ சாஃப்ட் வழங்கும் MS - Office மென்பொருட்களுடன் வருகிறது. இணையத்தில் பயன்படுத்த கிடைக்கும் இந்த மென்பொருட்களில் MS Word, MS Excel, MS Powerpoint, MS One Note ஆகியன அடங்கும்.

பயனர் ஒவ்வொருவருக்கும் ஒரு டெராபைட் (Terabyte) அளவுள்ள தகவல்களை சேமிக்கும் வசதியை வழங்குகிறது ஒன் ட்ரைவ்.

இதில் தரவேற்றும் கோப்புகளை பிறருடன் பொதுவில் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சிலருடன் மட்டும் பகிர விரும்பினால், அவ்வாறும் செய்யலாம். பகிரும் கோப்புகளில், யார் மாற்றங்கள் செய்யலாம் என்பதையும் நாமே தீர்மானித்து, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்றம் செய்யும் உரிமையையும் வழங்கலாம்.

இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

 onedrive.live.com


இஸ்ஸூ ( Issuu.com) :
 
           இணையவழி ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தலுக்கான மற்றுமோர் தளம் இஸ்ஸூ. இங்கு சேமிக்கும் ஆவணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள இயலும். நமது வலைப்பக்கங்களில், புத்தகம் போலவே வாசிப்பதற்கு ஏதுவாக வெளியிட முடியும்.

பல துறை சார்ந்த தகவல்கள், கலை, கல்வி, தொழில் நுட்பம், திரைப்படம், பயணம், சுற்றுலா என பல துறை பற்றிய தகவல்களும் இங்கு கிடைக்கின்றன. நாமும் இதில் ஓர் கணக்கினை துவங்கி இணைந்து கொண்டால், நமக்கு தெரிந்த தகவல்களையும் உலகில் உள்ள பலருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இந்த சேவையை வழங்கும் இணையதளம்

issuu.com
                 





மொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகராதிகள்

இணையத்தில் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ விதமான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. நாம் தேடும் தகவல்கள், நாம் அறியாத வேறு மொழியில் இருந்தாலும், அதை இணையத்திலேயே மொழிபெயர்த்து அறிந்து கொள்ள இயலும். ஒரு வலைப்பக்கத்தை முழுமையாக, ஓர் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம். நமக்கு தேவையான குறிப்பிட்ட சொற்களை மட்டும் மொழிபெயர்த்து, அவற்றின் பொருளை அறிந்துகொள்ள விரும்பினால், அவ்வாறு ஒரு சொல்லை மட்டும் மொழிபெயர்க்கலாம். இதற்கு இணையத்தில் மொழிபெயர்ப்பு தளங்கள், ஒரு மொழியில் இருந்து மற்றோர் மொழிக்கு மொழிமாற்றம் செய்து, அதற்குண்டான பொருளையும் வழங்கும் மின்னகராதிகள் பலவும் இணையத்தில் கிடைக்கின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு தளங்கள், மின்னகராதிகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

1) கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவை (Google Translation)


கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவையை பயன்படுத்தி ஆவணங்கள், வலைப்பக்கங்கள், சொற்கள், சொற்றொடர்கள், படக் கோப்புகளில் இருக்கும் சொற்கள், பத்திகள், நமது கையெழுத்து கொண்டே சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை, நமது குரல்வழி சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை என்று பல வழிகளில் நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை வசதியை பயன்படுத்தலாம்.

கணினிகளில் இணைய வசதியினை பயன்படுத்தி, நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் கருவிகளில் பயன்படுத்த என்று கூகுள் மொழிபெயர்ப்பிற்கென்று தனி பயன்பாடு (apps) உண்டு.

கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் தனிச் சொற்கள், சிறிய சொற்றொடர்கள் போன்றவற்றிற்கு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கும். அதே சமயம், பெரிய பத்திகள், அல்லது ஓர் முழு வலைப்பக்கமோ, ஓர் ஆவணத்தையோ முழுமையாக மொழிபெயர்க்க வேண்டுமெனில், மிகத் துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை.

இன்னபிற மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் இணையதளங்கள் பலவும் சொற்களை மட்டுமே மொழிபெயர்க்கும் வசதியை தரும் வேளையில் கூகுள் வழங்கும் வலைப்பக்க மொழிபெயர்ப்பு முயற்சி வரவேற்கத் தக்கது.

தற்சமயம் கூகுள் வழங்கும் இந்த மொழிபெயர்ப்பு சேவை வசதி தொண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு கிடைக்கிறது. இதில், நமது இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி,உருது, பெங்காலி, கன்னடம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி ஆகியவையும் அடங்கும்.  இது, இம்மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், அல்லது, ஆங்கிலத்திலிருந்து இம்மொழிகளுக்கு மொழிபெயர்த்தல்,  மற்றும் இம்மொழிகளிடையே மொழிபெயர்த்தலும் அடங்கும்.

கூகுளின் மொழிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணையதளத்தில் பெறலாம்.

https://translate.google.com/

கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு சேவை (Google Transliteration)

இவ்வசதி மொழிபெயர்ப்பு செய்ய பயன்படாது. ஆனால், நாம் உள்ளிடும் சொற்களின் ஒலிக்கு ஏற்ப, நமக்கு வேண்டிய மொழியில் ஒலிபெயர்த்து கொடுக்கும். எடுத்துக்காட்டாக, நாம் தமிழில் "அம்மா" என்ற சொல்லை தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால், அது தமிழில் அம்மா என்று நமக்கு ஒலிபெயர்த்து கொடுக்கும். இவ்வசதி, கூகுள் வழங்கும் Google Transliteration சேவையின் மூலம் கிடைக்கிறது. இவ்வசதி தனி வலைப்பக்கத்திலும் கிடைக்கும். அது தவிர கூகுளின் இன்னபிற சேவைகளான கூகுள் மின்னஞ்சல் (Gmail), கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை (Blogger) ஆகியவற்றிலும் இந்த ஒலிபெயர்ப்பு சேவை கிடைக்கிறது.

கூகுளின் ஒலிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம்.

 http://www.google.com/inputtools/try/

 2) ஷப்த்கோஷ் :



ஷப்த்கோஷ் இணையதளத்தில் தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி கிடைக்கிறது.

கீழ்க்காணும் இணைய பக்கத்தில் இதனை பயன்படுத்தலாம்.

http://shabdkosh.com

இத்தளத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்த்து தரும் வசதி இருக்கிறது. நாம் மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அச்சொல்லினை உச்சரிக்கும் விதம், சொல்லின் மொழிபெயர்ப்பு, அச்சொல்லின் இன்னபிற வடிவங்கள் (ஒருமை/பன்மை(Singular/Plural), வினை வடிவங்கள் (Tense Forms), சொற்பொருள் விளக்கம் (Definitions & Meanings) ) போன்ற தகவல்களையும் நமக்கு வழங்குகின்றது.


ஆண்ட்ராய்ட் (Android), ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), விண்டோஸ் தொலைபேசி (Windows Phone) ஆகிய கருவிகளுக்கு (devices)  ஷப்த்கோஷ் தனி பயன்பாடாக (apps) கிடைக்கிறது.

3) Tamil cube வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி



தமிழ் க்யூப் வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கவும் உதவுகிறது. இந்த தளத்தில் பலதுறை சார்ந்த கலைச்சொற்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

இந்த அகராதியை  கீழ்க்காணும் இணையதளத்தில்
பயன்படுத்தலாம்.
 dictionary.tamilcube.com/

மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அந்த சொல்லிற்கான பொருள் அகராதியில் இருப்பின் பொருள் தருவதுடன், அச்சொல்லுக்கு தொடர்புடைய சொற்கள் மற்றும் இணையான சொற்களை வழங்கி, பொருளும் வழங்குகிறது.

இந்த தளத்தில், மொழிபெயர்ப்பு சேவை கிடைப்பதுடன், இணையத்தில் இருக்கும் இன்ன பிற மொழிபெயர்ப்பு தளங்கள், இணைய அகராதிகளுக்கு இணைப்புகள் கிடைக்கின்றன.

4) kapruka.com வழங்கும் சிங்கள மற்றும் தமிழ் அகராதி


    கப்ருகா (kapruka) இணையதளம் வழங்கும் இணையவழி அகராதி. ஆங்கிலத்தில் சொற்களை உள்ளிட்டால், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பொருள் வழங்குகிறது. இது தவிர, அச்சொல்லின் ஒலிப்பு முறை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படுகிறது.

நமக்கு தேவையான சொற்கள் இந்த அகராதியில் காணக் கிடைக்கவில்லையெனில், நாம் நமக்குத் தேவையான சொற்கள் குறித்து  வேண்டுகோள் வைத்தால், அந்தச் சொல்லிற்கான மொழிபெயர்ப்பு அகராதியில் சேர்க்கப்படும்.

கீழ்க்காணும் இணைய பக்கத்தில், இந்த அகராதியை பயன்படுத்தலாம்.

http://www.kapruka.com/dictionary/EnglishToSinhala.jsp

5) tamildict.com  வழங்கும் தமிழ் - ஆங்கிலம் - ஜெர்மானிய அகராதி



           tamildict.com இணையதளம் வழங்கும் இணையவழி அகராதியில், கிட்டத்தட்ட 45 வகை பிரிவுகளில் சொற்கள் வகை பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த அகராதியை பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரும், புதிதாக அகராதியில் சொற்களை சேர்க்கலாம். ஏற்கனவே  இருக்கும்  மொழிபெயர்ப்பினை மேம்படுத்த விரும்பினால், அங்ஙனமும் செய்யலாம். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம்.

இது தவிர, எண்களை உள்ளிட்டால், அந்த எண்களை தமிழில் உச்சரிப்பது எப்படி என்ற விபரமும் கிடைக்கிறது. 999999999 (தொன்னூற்றியொன்பது கோடியே தொன்னூற்றியொன்பது இலட்சத்து தொன்னூற்றியொன்பது ஆயிரத்து தொளாயிரத்திதொன்னூற்றியொன்பது) வரையிலான எண்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை தருகிறது.

இந்த அகராதியை கீழ்க்காணும் இனையதளத்தில் பயன்படுத்தலாம்.

http://www.tamildict.com/english.php

 6) தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆங்கில - தமிழ் அகராதிகள் :




தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில், பல்வேறு அகராதிகளுக்கான இணைப்புகள்  கிடைக்கின்றன. அவற்றுள், தமிழ் - ஆங்கில அகராதிகளும் அடங்கும்.

அவை ,

பால்ஸ் அகராதி
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி

இன்னபிற அகராதிகளின் விபரம் குறித்து அறிய, கீழ்க்கணும் இணையதளத்தில் காணலாம்.

http://www.tamilvu.org/library/dicIndex.htm



        
குறிப்பு:

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், அவற்றின் இணையபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

Saturday, May 7, 2016

பெண்கள் முன்னேற்றம் - சரியான பாதையில் பயணிக்கிறோமா ? சமூக நோக்கில் பெண் முன்னேற்றம்.

பெண்கள் முன்னேற்றம் என்று எதை நாம் எண்ணுகிறோம் ? கல்வி, வேலைவாய்ப்பு, கருத்துச் சுதந்திரம், இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு. சரி, இவற்றுள் எதை எதை எல்லாம் பெண்கள் அடைந்திருக்கிறார்கள் ? அடைந்திருக்கிறார்கள் எனில், உண்மையாக அடைந்திருக்கிறார்களா, அல்லது, அடைந்து விட்டது போலொரு மாயை தான் நிலவுகிறதா ?

இன்றைய பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, செயல்திறன் என பலவற்றிலும் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை எனுமளவுக்கு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மிளிர்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட துறை என்று மட்டுமல்லாமல், பலதரப்பட்ட துறைகளிலும் ஆர்வம் கொள்கிறார்கள். அவர்கள் காட்டும் ஆர்வமும், எடுத்துக் கொள்ளும் முயற்சியும், பயிற்சியும் அவர்களை மிளிரச் செய்கிறது.


இன்றைய பெண்கள் அனைவருமே, ஏதோ ஒரு வகையில் தனித் திறமை வாய்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். அடுப்பூத மட்டுமே அறிந்திருக்க வேண்டியவர்கள் பெண்கள் என்னும் காலம் மலையேறினாலும், இன்னும் பல மனிதர்களின் மனங்களில், பெண்ணானவளின் இருப்பிடம், பொழுது போக்கிடம், அனைத்துமே அடுப்படி தான் அல்லது அவளது நான்கு சுவற்றுக்குள் தான் என்ற எண்ணம் ஊறிப் போய் இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால்,   பல பெண்கள் குடும்பம், பணி என்று இரண்டு வண்டிகளை  இழுக்கிறார்கள். குடும்பச் சூழல், பொருளாதார தேவைகள், உயர்ந்து வரும் விலைவாசி என்று பலவகையான காரணங்களால்  பெண்களும் உத்தியோகம் பார்ப்பதென்பது அவசியமாகிறது. குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை ஈடுகட்ட உத்தியோகம் பார்க்கும் பெண்ணிற்கு, சிற்சில உதவிகள், வீட்டுப் பணிகளில் ஒத்தாசை செய்வது பிழையில்லையே ?
சமையல், துணி துவைத்தல், குழந்தை பராமரிப்பு எல்லாம் பெண்ணுக்கு மட்டுமே உரிய வேலைகள் என்று எழுதப்படாத சட்டம் ஏதுமில்லையே ? இவற்றை ஆண்களும் அறிந்து கொள்வதில் பிழையேதுமில்லையே ?

ஒருகாலத்தில் பொக்கிஷங்களாய் எண்ணி, பாதுகாக்கப்பட்ட பெண்கள், பின்னர் அடிமைகளாய் சித்தரிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல, பல போராட்டங்களுக்குப் பின் கல்வி, வேலை வாய்ப்பு என்று முன்னேறி வந்தனர்...வருகின்றனர். இவ்வேளையில், மீண்டும் பெண்களை, பொத்திப் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப் படுகிறார்கள். இதனால், பழங்கால நிலை, குறைந்த கல்வி, இளவயது திருமணம் போன்றவை மீண்டும் சமூகத்தில் பழக்கத்திற்கு வருகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன ?

ஆணோ, பெண்ணோ, அவர்தம் கண்ணியத்தை காத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் வரை, அவர்தம் சுதந்திரத்திற்கு எவ்வித பங்கமும் வரப்போவதில்லை.  மது அருந்துதல், புகை பிடித்தல் தான் பெண் சுதந்திரமும் முன்னேற்றம் ஆகுமா ? மதுவும் புகையும் எவராயினும் உடல் நலத்திற்கு கேடே ! இதை உணராமல், அவர்கள் செய்கிறார்கள், நாமும் செய்தால் தவறா என்று கேள்வி எழுப்புவது அறியாமையின் உச்சமே.

ஆடை என்பது எதற்காக அணிகிறோம் ? நம் மானத்தை காப்பது ஆடை. ஆடை என்பது நமக்கு மதிப்பளிப்பதாய் இருக்க வேண்டும்.  அதை விடுத்து, நம்மை ஒரு காட்சிப் பொருளாய் ஆக்கி விடக் கூடாது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடக்க வேண்டும். பெண் சுதந்திரம், முன்னேற்றம்  என்ற போர்வையில், நாகரிகம் என்று அரைகுறை ஆபாச ஆடைகளினால் நிகழும் கேடுகள் எத்தனையோ . நம் வசதிக்காகவும், சவுகரியத்திற்காகவும் அணியப்படும் ஆடைகள், நம் மானம் காப்பவையாகவும் இருக்க வேண்டும். மானம் பறிபோன பின், ஆத்திரமும் கோபமும் கொண்டு போராடுவதில் பயன் என்ன ?

எதிர்வரும் சந்ததியர், பெண்களை கண்ணியமாகவும், மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று விரும்பினால், இன்று முதல், இந்நொடி முதல், நம்மிலிருந்து, நம் குடும்பத்திலிருந்து தொடங்குவோம். பெண்களின் கருத்துக்கு மதிப்பளிப்போம். மதிப்பளிப்பது, இரண்டாம் பட்சமாக கூட இருக்கட்டும், முதலில் அவர்கள் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்தேனும் கேட்போம்.



பெண் முன்னேற்றமும், பெண் சுதந்திரமும் நிச்சயம் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.


குறிப்பு:

ப்ரதிலிபி நடத்திய  யாதுமாகி நின்றாள்    மகளிர் தின சிறப்பு போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை.

Friday, November 27, 2015

தனி மனிதனாகக் காமராசர்




1903 ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி குமாரசாமி - சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் காமராசர். இவருக்கு குலதெய்வத்தின்  பெயரான காமாட்சி என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயார் சிவகாமி அம்மையார் இவரை ராஜா என்று அன்புடன் அழைத்து வந்தார். காமாட்சி என்ற பெயரும் ராஜா என்கிற பெயரும் சேர்ந்து காமராஜ் என்ற பெயர் உருவானது. இவருக்கு ஓர் தங்கை உண்டு. அவரது பெயர் நாகம்மா.விருதுநகரில் வியாபாரியாக இருந்த குமாரசாமி அவர்கள், காமராசர் ஆறாம் வகுப்பு படிக்கையில் இயற்கை எய்தினார். அத்துடன், காமராசர் அவர்களின் கல்வியும் முடிவுக்கு வந்துவிட்டது.அதன் பின் வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனால், நாட்டு விடுதலை போராட்டத்தில் கொண்ட ஈடுபாட்டினால், உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, பின் காங்கிரசில் இணைந்து முழு நேர தேசத் தொண்டர் ஆனார்.

1954 ம் ஆண்டு முதல்வரானார் காமராசர். அவர் வகித்த முதலமைச்சர் பதவி  அவரது வாழ்க்கை நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை. காமராசர் தனது தாயார் சிவகாமி அம்மையாருக்கு மாதம் 120 ரூபாய் வழங்கி வந்தார். முதலமைச்சரின் இல்லம் என்பதால், அவரது இல்லத்திற்கு பலரும் வந்து செல்வர். அவர்களை உபசரிக்க 120 ரூபாய் போதவில்லை என்று சிவகாமி அம்மையார் 30 ரூபாய் கூடுதலாக கேட்க, வருபவர்களை எல்லாம் உபசரிக்க வேண்டாமெனவும், மேலும் தாயாரின் கையில் பணம் சற்று அதிகமாக இருந்தால், அவர் கோயில் குளம் என்று கிளம்பி விடுவார்கள் என்றும், தனியாக செல்வது அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்றும் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அவர் நினைத்திருந்தால், தன்னையோ, தன்  தாயாரையோ  காண்பதற்கு வீட்டிற்கு வருபவர்களை வெகு விமர்சையாக உபசரித்திருக்க முடியும். தனது அதிகாரத்தினை பயன்படுத்தி, வயதான தனது தாயாருடன் துணைக்கு ஒருவரை நியமித்து, அவரை தனது தாயாருக்கு கோயில் குளங்களை சுற்றிக் காண்பிக்க ஏற்பாடு செய்திருக்க முடியும். அல்லது, தானே தனது தாயாருடன் அரசு செலவிலேயே கோயில்களுக்கு சென்று வந்திருக்கலாம். ஆனால், அப்படி எல்லாம் செய்யாது, தனது சொந்த வாழ்விற்காக, தேவைகளுக்காக  தான் வகித்த பதவியை பயன்படுத்தாத கறை  படியா கரங்களுக்கு சொந்தக்காரர் காமராசர் அவர்கள்.

காமராசரது தாயார், வீட்டில் கழிவறை அமைக்க, வீட்டிற்கு அருகில் ரூபாய் மூவாயிரத்திற்கு வரும் இடமொன்றை வாங்க வேண்டுமென காமராசரின் நண்பர் முருக தனுஷ்கோடி அவர்களிடம் கேட்டார். இச்செய்தியை காமராசரிடம் அவர் சொன்னதும், அதற்கு காமராசர் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" என்று கோபமாக பேசி அனுப்பினார்.

அவர் சம்பாதித்த பணத்தைக் கூட, தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ மட்டும் வைத்துக் கொள்ளாது, மக்களின் நலனுக்காகவே செலவழித்தார். 

ஒரு சமயம் சிவகாமி அம்மையாருக்கு உடல் நிலை சரியில்லாது இருந்த தாயாரைக் காண விருதுநகர் வந்த காமராசர் அவர்கள், தனது தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க அவருடன் சிறிது காலம் தங்கி இருந்தார். சென்னைக்கு கிளம்பிய வேளையில், தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க, வீட்டில் உணவருந்தினார்.  அவருடன் இருந்த நெடுமாறன் அவர்கள் "நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எத்தனை காலம் இருக்கும் ? " என்று கேட்க, சற்றே யோசித்த காமராசர், 25 வருடங்கள் இருக்கும் என்றார். 

சென்னையில் கடைசி வரை வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் காமராசர். அவரது காரின் ஓட்டுனருக்கு கூட, காமராசரே தான் சம்பளம் வழங்கினார். "எனது சம்பளத்தில் தான் டிரைவர்ஸ் அலவன்ஸ் தருகிறார்களே அதையும், இன்னும் கொஞ்சம் பணம் போட்டு நான் ஓட்டுனருக்கு சம்பளம் வழங்குகிறேன். " என்றார் காமராசர்.

காமராசர் அவர்களின் மரணத் தருவாயில், சென்னையில் அவரது வீட்டில் இருந்தது வெறும் 67 ரூபாய் மட்டுமே. தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அவர் பொருளேதும் விட்டுச் செல்லவில்லை. பெருமையையும் புண்ணியத்தையுமே விட்டுச் சென்றுள்ளார்.

 காமராசரைப் பொறுத்தவரை அடுத்த மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் வழிபாடு. இல்லாதோர், இயலாதோருக்கு தன்னாலான உதவிகளை செய்வது தான் பிரார்த்தனை. இதில் நாம் சரியாக இருந்தால், தெய்வம் இருப்பின் நம்மை வாழ்த்தும். 

காமராசர் கோயிலகளுக்கு செல்கையில், கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். பரிவட்டம் கட்டினால் மறுக்க மாட்டார். விபூதி பூசி விட்டாலும் ஏற்றுக் கொள்வார். தீப ஆராதனையையும் தொட்டுக் கொள்வார். ஆனால், கோயிலை விட்டு வெளியே வந்ததும், அவற்றை உடனிருப்பவர்களிடம் கொடுத்து விடுவார். இதை காண்பவர்கள் ஆச்சர்யத்துடன், தெய்வ நம்பிக்கை இல்லாத நீங்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறீர்களே என்று கேட்டால், அதற்கு அவர், கோயிலில் செய்யும் மரியாதையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மறுத்தால், அதை நமக்கு செய்யும் குருக்கள், அறங்காவலர், பொது மக்கள் மனம் கஷ்டப்படும். அப்படி கஷ்டப்படுத்த கூடாது என்று தான் ஏற்றுக் கொள்கிறேனே தவிர அதை தவிர வேறெதுவும் இல்லை என்பார். மனிதரை மதிக்கும் பாங்கு, தன்னால் எவரது மனதும் புண்பட்டு விடக் கூடாது எனும் உயர் எண்ணம், போன்ற நல்லெண்ணங்களின் உருவே காமராசர்.

முதலமைச்சர் என்ற ஆரவாரம் சற்றும் இல்லாது, சாதாரணமான மனிதராகவே இருந்தார் காமராசர். முதல் முறை அவருக்காக சைரன் ஒலியுடன் கூடிய பாதுகாப்பு கார் கூட வேண்டாமென்று தடுத்து விட்டார். அவரை தேடி இரண்டு முறை பிரதமர் வாய்ப்பு வந்த போதும், அதை மறுத்து லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார் காமராசர். இதனால், இவர் கிங் மேக்கர் என்று அழைக்கப் படுகிறார்.

கல்வித் துறையில் சாதனை புரிந்தமைக்காக காமராசர் அவர்களை தேடி டாக்டர் பட்டம் வந்த போதும், அதை மறுத்து விட்டார். நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், மேதைகள் இருக்கையில் தனக்கு பட்டம் எதற்கு என்று மறுத்து விட்டார். 

காமராசருக்கு கோபம் வந்தால் திட்டி தீர்த்திடுவார். ஆனால், அந்த கோபம் அடுத்த நொடியே பனி போல் விலகிடும். தனது பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராசர் அவர்களுக்கு தோளில் துண்டு அணிவிக்கப் பட்டது. அது முதல் காமராசர் அவர்கள் தோளில் துண்டு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கதர் துண்டுகள் அணிவித்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில், அந்த துண்டுகளை பால மந்திர் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கி விடுவார்.

காமராசரின் தங்கை பேரன் கனகவேல் அவர்கள் மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பிக்கையில், காமராசரின் பெயரை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு கோபம் கொண்ட காமராசர், கோபித்துக் கொண்டார். " என் பெயரை எதற்காக குறிப்பிட்டிருக்கிறாய் ? " என்று கேட்டதும் கனகவேல் அவர்கள், " மெட்ராஸ் முகவரி கேட்டாங்க தாத்தா. அதான் உங்க பேரை கொடுத்துட்டேன். நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணினால் நான் டாக்டர் ஆகிடுவேன் " என்று சொல்ல, " கனகவேலு, அரசாங்கத்துல இருந்து குழு அமைச்சு டாக்டர், இஞ்சினியரிங் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பாங்க. நீ இன்டர்வியூல நல்லா பதில் சொன்னா, உனக்கு கிடைக்கும். அப்படி கிடைக்கலைன்னா, கோயம்புத்தூர்ல விவசாய படிப்புல சேர்ந்து படி" என்று சொல்லி அனுப்பி விட்டார். தனது அதிகாரத்தை தன் உறவுகள் பயன்படுத்த மறுத்து பேசிய தலைவர் எங்கே ? இன்றைய தலைவர்கள் எங்கே ?


இவர் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை அன்றோ ! ஆனால், அன்றவர் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி இலவசமாய் வழங்கிய கல்வி இன்று வியாபாரப் பொருளாய் ஆகிப் போனது தான் வேதனையிலும் வேதனை.


குறிப்பு :

இக்கட்டுரை தமிழ்க் குடில் அறக்கட்டளை நடத்திய பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின கட்டுரைப் போட்டிக்காக எழுதப் பட்டது.

Thursday, October 1, 2015

அமிலத்தில் ஆடிய அனிச்சங்கள்

பெண்கள் மீதான அமிலத் தாக்குதல் என்பது அவர்கள் காதலிக்க மறுத்த ஒரே காரணத்திற்காக என்று இத்தனை நாள் எண்ணியிருந்தேன். ஆனால், புது டில்லியில் உள்ள ஷெரோஸ் ஹேங் அவுட்(Sheroes Hangout) என்ற தேநீர் அங்காடி பற்றியும், அதை நடத்தும் அமில தாக்குதலுக்கு உள்ளான ஐந்து பெண்கள் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவங்களை பற்றியும் படிக்கையில், இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா , இவர்களும் மனிதர்கள் தானா அல்லது மாக்களில் இவர்கள் சேர்த்தியோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. இந்த ஷெரோஸ் அங்காடி, " Stop Acid Attack " http://www.stopacidattacks.org/ இயக்கத்தினால் நடத்தப்படுகிறது. வீரர்களை heroes என்று ஆங்கிலத்தில் சொல்வதைப் போல, வீராங்கனைகளை sheroes என்று குறிப்பிடும் விதமாகவே, இவ்வங்காடிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்த அங்காடியை நடத்துவோர், ஐந்து பேர் கொண்ட குழு. நீத்து, ரூபா, சான்ச்சல் பஸ்வான், கீதா, ரீத்து ஆகிய ஐவரும் தான் இந்த அங்காடியை நடத்துகிறார்கள். இவர்கள் ஐவருமே, அமில வீச்சுக்கு ஆளானவர்கள். 




 இப்புகைப்படம் இவர்களது முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

நீத்துவிற்கு மூன்று வயதாக இருக்கையில், அவரது தந்தையாலேயே அமில வீச்சுக்கு ஆளானவர். அமில வீச்சினால் இவரது கண் பார்வையையும் இழந்து விட்டார்.

ரூபாவின் இந்நிலைக்கு காரணம் அவரது மாற்றாந் தாய்.

ரீத்துவின் முகத்தை சிதைத்து, அவரது கனவு, கற்பனை, இலட்சியம் அனைத்தையும் அழித்தவர், முகமறியா ஒருவர்.

சான்ச்சல் பஸ்வான் உறக்கத்தில் இருக்கையில், போக்கிரிகளால் அமில தாக்குதலுக்கு ஆளானவர்.

ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, தனது கணவராலேயே, அமிலம் வீசி சிதைக்கப்பட்டவர் கீதா.

இந்த தேநீர் அங்காடியின் சிறப்பு என்னவெனில், இது ஓர் தேநீர் அங்காடி மட்டுமல்ல, இங்கு புத்தகங்கள் வாசிக்க, ஓர் புத்தக அங்காடியும் உண்டு (Reader's Cafe).  

இங்கு, செயற்திறன் பட்டறையும் (Activism workshop) நடத்தப்படுகிறது. அமிலத் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களில் பலரும் எழுதப் படிக்க கூட தெரியாதவர்கள். இவர்களில் பலர் கணினி பயன்பாடு, கைபேசி பயன்பாடு போன்றவை அறியாதவர்கள் தாம். இந்த செயற்திறன் பட்டறையின் முக்கிய நோக்கம் என்னவெனில், இது போன்ற பெண்களுக்கு கணினி பயன்பாடு, கைபேசிகள் மற்றும் இன்னபிற தகவல் தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுத்து, அதன் மூலம் அவர்கள் முன்னேற்றம் அடைய வாய்ப்பளிக்கிறது.

இங்கிருக்கும் மற்றுமோர் அம்சம், கைவினைகள் கண்காட்சி மற்றும் விற்பனைப் பிரிவு. இந்தக் கண்காட்சியில், தாக்குதலுக்கு உள்ளான பெண்களின் கைவினைகள், அவர்தம் ஓவியங்கள், படைப்புகள், புத்தகங்கள், கையால் செய்யப்பட்ட நகைகள் போன்றவை  எப்போதும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கும். இது தவிர, நாட்டிலுள்ள எவர் வேண்டுமானாலும், தத்தமது திறமைகளை இங்கு வெளிக்காட்டலாம். இதன் மூலம் கிடைக்கும் பணம், இந்த தேநீர் அங்காடியை நடத்த பயன்படுத்தப் படுகிறது.

இவர்களது வலைதளம் : http://sheroeshangout.com/
இவர்களது முகநூல் பக்கம் : https://www.facebook.com/SheroesHangout

இந்த தேநீர் அங்காடியில்  உணவு வகைகள் மற்றும்  பானங்கள் விற்கப்படுகின்றன. இவர்களது உணவு பட்டியலட்டையில் (menu card) உணவு மற்றும் பானங்களின் வகைகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கான விலைப்பட்டியல் கொடுக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் என்ன கொடுக்க விரும்புகிறார்களோ (Pay-what-you-want) அதைக் கொடுக்கலாம். இந்த அங்காடி செயல்பட 70 சதவீதத்திற்கும் மேலான பண உதவி, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளால் வழங்கப்படுகிறது.

இப்பெண்களின் முக்கிய நோக்கம், மக்களிடையே அமில தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான்.

அமிலத்தில் ஆடிய அனிச்சங்கள்
உரு தொலைத்த உன்னதங்கள்
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும்
விடாது கைப்பற்றிக்  கொண்டு
அழகென்பது உருவிலல்ல 
நல்ல உள்ளத்தில் தானென
உலகிற்கே நம்பிக்கைக்கு உதாரணமான
உயர் ஜீவன்கள் !

தகவல் திரட்ட உதவிய வலைப்பக்கங்கள்:



உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(3)  பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

Tuesday, September 29, 2015

நெகிழி பொருட்களில் இருக்கும் எண்கள் - நாம் எதை பயன்படுத்துகிறோம் ?

நெகிழி பொருட்களில் மறுசுழற்சி குறியீடும், அந்த குறியீட்டினுள் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்களுள் ஏதேனும் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை எத்தனை பேர் அறிவோம் ? அடுத்த முறை நெகிழி குடிநீர் புட்டிகளோ, அல்லது வேறு ஏதேனும் நெகிழி பொருள் வாங்குகையில், அதில் கீழ்க்காணும் குறியீடும்,அந்த குறியீட்டினுள் ஏதேனும் எண்கள் இருக்கின்றனவா என்றும் பாருங்கள். 



இவை தான் மறுசுழற்சி குறியீடுகள். நாம் வாங்கும் நெகிழிப் பொருட்கள் அனைத்திலும்,  இது போன்ற குறியீடு இருக்கும். மேலுள்ள படத்தில் இருக்கும் குறியீடுகள் அனைத்தும் மறுசுழற்சியை குறிக்கும் குறியீடுகளே.

இது போன்ற குறியீடுகள் நெகிழியினாலான புட்டிகள் (bottles),  இன்னபிற நெகிழி பொருட்கள் அனைத்திலும் இருக்கும். இக்குறியீட்டினுள் இருக்கும் எண்கள் நெகிழியின் நச்சுத்தன்மை குறித்தும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் குறித்தும், எந்த அளவு சூட்டிற்கு உட்படுத்தப் பட்டால் அவை உருகக் கூடும், அதன் மக்கும் தன்மை, மொத்தத்தில் அவை பயன்படுத்த உகந்தவை தானா, மனிதர்களுக்கு பாதுகாப்பானவை தானா போன்ற பல தகவல்களை உள்ளடக்கியது. 

இனி ஒவ்வொரு எண்ணும் எதை குறிக்கின்றன, அவை எவ்வகையான நெகிழி, அதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் குறித்து காணலாம்.



எண் ஒன்று கொண்ட குறியீடு PETE அல்லது PET ஆகும். இதன் விரிவாக்கம் Polyethylene Terephthalate. இவ்வகை நெகிழிகளைக் கொண்டு குடிநீர் புட்டிகள், குளிர்பான புட்டிகள் தயாரிக்கப் படுகின்றன. இவ்வகை நெகிழி பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், இவற்றுள் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பிருக்கிறது. மேலும் இவற்றுள் அடைக்கப் பட்டிருக்கும் பொருட்கள் மற்றும் பானங்களின் சுவை (flavor) இப் புட்டிகளிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது. நாம் புட்டிகளில் வாங்கி பயன்படுத்தும் பெப்ஸி(Pepsi), கோக்(Coke), ஃபான்டா(Fanta), மிராண்டா(Miranda) போன்ற குளிர்பானங்கள் காலியானதும், அவற்றை குடிநீர் நிரப்ப பயன்படுத்துகையில், அந்த குளிர்பானங்களின் சுவை நீரிலும் ஏறியிருப்பதை கவனித்திருக்கலாம்.

எண் ஒன்றினால் குறியிடப் பட்டிருக்கும் நெகிழி புட்டிகள் (Plastic bottles) பெரிய கைப் பைகளாகவும், நெகிழியினாலான மேசை, நாற்காலி தயாரிக்கவும் , தரை விரிப்புகளாகவும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

 


எண் இரண்டு கொண்ட குறியீடு HDPE - High Density Poly Ethylene.  இவ்வகை நெகிழி பாதுகாப்பானதாக கருதப்படும் மூன்று வகை நெகிழிகளுள் ஒன்றாகும். நெகிழி பழச்சாறு புட்டிகள் (Plastic Juice bottles), சவர்க்காரத் திரவ புட்டிகள் (shampoo bottles), சலவைக்கார புட்டிகள் (detergent bottles), இருசக்கர மற்றும் நாற்சக்கர வண்டிகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் புட்டிகள் (motor oil bottle) போன்றவை தயாரிக்க இவ்வகை நெகிழி பயன்படுகிறது.

இவ்வகை நெகிழிகள் மற்ற பொருட்களில் ஊடுருவும் தன்மையும், உருகும் தன்மையும் குறைவாக இருப்பதால் இவையும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.

இவ்வகை நெகிழிகள் பேனாக்கள்(Pens), சலவைக்கார புட்டிகள்(Detergent bottles), மறுசுழற்சி கொள்கலன்கள் (Recycling containers) போன்றவை தயாரிக்க மறுசுழற்சி செய்யப்படுகின்றன.



வகை மூன்றை சார்ந்த நெகிழிப் பொருட்கள் PVC என்றழைக்கப்படும் தேறலியத்தினால் (Vinyl) உருவாக்கப்பட்டது. இவை உணவுகளை உறையிட்டு மூட பயன்படும் தாட்கள் (food wrap), நீர்க் குழாய்கள் (plumbing pipes) போன்றவை செய்ய பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகை நெகிழிகளில் phthalate எனும் வேதிப் பொருள் இருக்கிறது. இந்த வேதிப் பொருளினால் பல வகையான உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன. கருவின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுவதோடு, சமயங்களில் இவ்வேதிப் பொருள்  கருச் சிதைவும் கூட ஏற்படுத்துகிறது. 

இவ்வகை நெகிழிகளில் DEHA (Di Ethyl Hydroxyl Amine) என்ற வேதிப் பொருள் உள்ளது. அதிக காலம் இவ்வகை நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால், இவை புற்று நோய்க் காரணியாகவும் (carcinogen)ஆகிவிடுகின்றன. 

இவ்வகை நெகிழியை பயன்படுத்தி மருத்துவ சாதனங்கள், எண்ணெய் புட்டிகள், உணவு பொட்டலங்கள் / டப்பாக்கள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன.

உணவு / திண்பண்டங்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் நெகிழி டப்பா.



வகை நான்கைச் சார்ந்த நெகிழிப் பொருட்கள் LDPE (Low Density Polyethylene) ஆகும். இவ்வகை நெகிழிப் பொருட்களைக் கொண்டு கடைகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள், பிழிய பயன்படுத்தும் டப்பாக்கள் ( ketchup bottles, Jam bottles) ,  உடைகள், தரைவிரிப்புகள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன.

இவ்வகை நெகிழிகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, குப்பைத் தொட்டிகள், தரை ஓடுகள் (floor tiles), உரம் தயாரிக்க பயன்படும் கலன்கள் (Compost bins), குப்பைத் தொட்டிகளில் பயன்படுத்தப் படும் குப்பை பைகள் (trash liner), தபால் உறைகள் போன்றவையாக உருமாறுகின்றன.

குப்பைத் தொட்டிகள் / கூடைகளில் பயன்படுத்தப்படும் குப்பை பைகள் (trash liner)


வகை ஐந்தைச் சார்ந்த நெகிழிப் பொருட்கள் Poly Propylene. இவ்வகை நெகிழி, மருந்து புட்டிகள், தயிர் டப்பாக்கள், தேன் மற்றும் இன்னபிற பாகு பதத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை ( Glucose syrup, Cane syrup, Maple syrup ) அடைத்து விற்கவும் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகை நெகிழியும் பாதுகாப்பானதாக கருதப் படுகிறது.


வகை ஆறினை சார்ந்த நெகிழி Polystyrene. இது styrofoam என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நெகிழி, மறுசுழற்சி செய்ய இயலாது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உடல் நலக் கேடு அதிகம். இவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வேதிப் பொருட்கள், குறிப்பாக எரிக்கையில் வெளியேறும் வேதிப் பொருட்கள் நலக் கேட்டினை ஏற்படுத்தும்.

இவ்வகை நெகிழிகள் முட்டைப் பெட்டிகள், மாமிசம் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் தட்டுகள், குறுவட்டு வைக்கக்கூடிய பைகள் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப் படுகின்றன.


மேற்கண்ட வகைகளில் வகைப்படுத்த இயலாத நெகிழிப் பொருட்கள்  வகை ஏழைச் சாரும். இவ்வகையில் பல வகையான நெகிழிகள் கலந்திருக்கின்றன. Poly carbonate, Bisphenol A (BPA). இவற்றில் நம் உடலின் சுரப்புநீர்களை தடை செய்யும் காரணிகள் (Harmone Disruptors) இருப்பதாகவும், அங்கனம் சுரப்புநீர்கள் தடை செய்யப்பட்டால், மலட்டுத் தன்மை(Infertility), மிகைச் சுறுதி (hyper activity), இனப்பெருக்க பிரச்சனைகள் (Reprductive Problems) போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நெகிழியின் பயன்பாட்டினால், இத்தனை பிரச்சனைகள் இருக்கையில் அவற்றை முற்றிலுமாக பயன்படுத்தாமல் விட்டு விடலாமே. நமக்குத் தான் துணிப் பைகள், சாக்குப் பைகள், சணல் கொண்டு செய்யப்பட்ட பைகள், பாத்திரங்களில் வெள்ளிப் பாத்திரம், ஈயப் பாத்திரம், நிலை வெள்ளி (Ever-silver) என்று எத்தனையோ  இருக்கின்றனவே. அப்படியும் முடியாது போனாலும் நெகிழிப் பொருட்களில் 1, 3, 6, 7 ஆகிய மறுசுழற்சி எண்கள் கொண்டவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். 2,4, 5 ஆகிய மறுசுழற்சி எண்கள் கொண்டவற்றை வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு நம்மையும், நம் சந்ததியையும் காத்துக் கொள்ள வெண்டும்.

 தகவல் திரட்ட உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்

www.nationofchange.org 

signsanddisplays.wordpress.com 

 மொழிபெயர்ப்புக்கு உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்

Google Translate

English to Tamil Dictionary - Translation Online : Tamil Cube





உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்கா எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.