blank'/> muhilneel: விடுகதைகள்-1

Thursday, November 3, 2011

விடுகதைகள்-1

விடுகதையின் தொன்மம்

Myth in Vidukathai - Tamil Literature Ilakkiyam Papers தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாத மிகப்பழமை வாய்ந்த சிறப்பினைக் கொண்டவை. நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் புலப்படுத்தும் நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகும். நாட்டுப்புற இலக்கியங்களிலே நாட்டுப்புற மக்களின் உள்ளத்து எழும் உணர்வுகளையும் கற்பனை ஆற்றலைக் காணலாம். மக்களால் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டுப் பாடப்பட்டு வந்த, வருகின்ற நாட்டுப்புற இலக்கியங்களுள் விடுகதையும் ஒரு கூறாகும். இது விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வினாவிடைப் போக்குடையது. சிந்தனையைத் தூண்டும் சிறப்புடையது. அறிவுக்கு உரைகல்லாக விளங்குவது. புதிர்மைப் பண்பினைக் கொண்டிலங்குவதால் "புதிர்" என்று அழைக்கப்படுகின்றது. "விடுகதையால் கூறுபவனின் உளப்பான்மை வளர்கிறது. ஆர்வத்தினின்றும் விடுகதை கிடைக்கிறது. சிறியோர்க்கும் பெரியோர்க்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது என ஜேம்ஸ் என்ற அறிஞர் கூறுகிறார். கனவு மனிதனது அடிமன உணர்வுகளுக்கு வெளியீடு தருவதுபோல் விடுகதைகளும் வெளியீட்டிற்கு உதவி வருகின்றன. என கர்லோசு கூறுகிறார் (நாட்டுப்புறவியல், ப.123) இதனால் இதன் பெருமையினை உணரலாம். இத்தகு சிறப்புடைய விடுகதைகளில் தொன்மம் பெறும் இடம் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.
விடுகதையின் பழமை:-
உருவகத்தினை அடிப்படைப் பண்பாகக் கொண்ட விடுகதையினைத் தொல்காப்பியர்,
பாட்டு, உரை நூலே, வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்" (தொல். செய்யுளியல் 79)
என யாப்பு முறையினைக் கூறுகின்றபோது "பிசி" என்று கூறுகின்றார்.
"ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
தோன்றுவது கிளர்ந்த துணிவினாலும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே" (தொல்.செய்யுள் 165)
எனப் பிசி அமைகின்ற முறை பற்றியும் விளக்கம் தருகின்றார். விடுகதை என்ற சொற் பயன்பாடு பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் இல்லை என்றாலும், விடுகதை, புதிர், அழிப்பாங்கதை, வெடி, நொடி, எனப் பல சொற்களால் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் விடுகதை என்னும் சொல் புதிர்மைப் பண்புடைய புதிர்கள் அனைத்தையும் குறிப்பிடும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. (நாட்டார் வழக்காற்றியல், ப.49) எழுத்திலக்கியம் அவை தோன்றிய காலச் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதுபோல எழுதா இலக்கியமாகிய விடுகதையும் அதனை விடுக்கின்ற மக்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அச்சமுதாயத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கருப்பொருளாகக் கொண்டிலங்குகின்றது.
தொன்மம்:-
தொன்மம் என்பது பழமை என்பதாகும். பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமைமேற்றே என்று சுட்டப்பட்டுள்ளது. Myth என்ற ஆங்கில சொல்லே தொன்மம் எனத் தமிழில் வழங்கப்படுகிறது. தொன்மம் என்பதற்கு புராணக்கதை, புராணம், புராண மரபுக்கதை, புனைகதை என்றும் தமிழறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். இத் தொன்மங்கள் இலக்கியங்களின் ஆன்மா என அரிஸ்டாட்டில் குறிப்பிடுவது போல நாட்டுப்புற இலக்கியங்களிலும் தொன்மங்கள் ஆன்மாவாக விளங்குவதைக் காணமுடிகின்றது. ஏனெனில் வாய்மொழிக் கூறுகள் எப்பொழுது தனித்தன்மையுடையவனாக ஆக்கப்பட்டனவோ அன்றே தொன்மங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன. (நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள், ப.176) நாட்டுப்புற மக்கள் விடுத்து மகிழும் விடுகதைகளில் தொன்மக்கதைகள் இல்லாவிடினும் தொன்மக்கதைகளில் இடம்பெறும் தெய்வத்தன்மை வாய்ந்த பாத்திரங்களும் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.
விடுகதைகளில் தொன்மம்:-
தமிழ் விடுகதைகள் கடவுளரின் பெயர்களைக் கொண்டிலங்குவதால் அவற்றை விடுத்து மகிழும் மக்கள் சமுதாயம் புராண இதிகாசப் பாத்திரங்களைப் பற்றிய அறிவுடையராய்த் திகழ்கின்றனர் என்பதை உணரமுடிகின்றது. "மிகப் பழங்காலத்தில் பதிவு செய்யப்பட்ட சமயப் பனுவலாகிய வேதங்களில் உள்ள கடவுளர்கள் பற்றிய செய்திகள் மக்களால் மறக்கப்பட்டு, பழமொழிகளிலும் தொன்ம வாக்கியங்களிலும் எச்சங்களாக விளங்கின என்றும், மனிதப் பண்பேற்றப்பட்ட நிலையில் இவை கடவுளர் பற்றிய தொன்மங்களாக உருவெடுத்தன" (நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் ப.180) என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுவதற்கேற்ப வேலையின் களைப்பைப் போக்கிக் கொள்ள வேலைப்பளு தெரியாமலிருக்க நாட்டுப்புற மக்கள் விடைப் பொருளாகவும் விடுகதைப் பொருளாகவும் கடவுளர் பெயரை அமைத்து விடுகதை விடுத்து மகிழ்கின்றனர்.
"மஞ்சள் குருவி ஊஞ்சலாடும்
மகாதேவனுக்குப் பூசைக்காகும்" (எலுமிச்சம் பழம்)
"ஆதியும் அந்தமும்" இல்லாதவன் என்றும் "பிறவாயாக்கைப் பெரியோன்" என்றும் சிறப்பித்துக் கூறப்படும் சிவபெருமான் பிற கடவுளரைவிடத் தலைமைத் தன்மை என்ற நிலையில் இவ்விடுகதையில் சிவனை மகாதேவன் என்று குறிக்கின்றனர். அந்த மகாதேவனுக்குப் பூசைக்குப் பயன்படும் பொருள் எது என்பதை உய்த்துணர்ந்து விடைப்பொருளைக் கண்டறிய இவ்விடுகதையில் முதன்மைக் கடவுளாம் சிவன் உதவுகின்றான்.
"செண்பகவல்லி அம்மனும்
பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து
தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்"
அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா மலை சிதனம் (தூக்கணாங்குருவிக் கூடு)
காடுகளிலும் கழனிகளிலும் வேலைசெய்யும் கிராமத்து மக்களுக்குத் தாங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் காடுகளே விடுகதைக் களங்களாக அமையும். அக்களத்திலே காணும் இயற்கையின் அதிசயங்களைக் கண்டு வியப்படைகின்றனர். வியப்பினை விடுகதைக் கருப்பொருளாக்கி உடன் பணிபுரிகின்றவரையும் வியக்க வைக்கின்றான். மேற்காணும் விடுகதை இவ்வுண்மையினைப் புலப்படுவதைக் காணலாம்.
இயற்கை நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் அறியாத புராதன மனிதன் மந்திரங்களால் அவற்றைப் கட்டுப்படுத்தலாம் என நம்பினான். வளர்ச்சியடைந்த மனிதன் உலகத் தோற்றம், படைப்பு, மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் சிற்றங்கள் கடவுளரின் செயல்கள் என்ற நம்பிக்கை கொண்டான். மரங்களில் பறவையினங்கள் கூடுகட்டி வாழ்வது இயற்கை. ஆனால் அதனை இறைவனின் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்றாகக் கற்பனை செய்து விடுகதை விடுகின்ற பாங்கு இவ்விடுகதையில் அமைந்திருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் எழுந்தருளியுள்ள செண்பகவல்லி அம்மன் அவ்வட்டார மக்களின் வழிபடுகடவுளாக விளங்குகிறாள். அவ்வம்மனோடு உடன் உறையும் இறைவன் பூவண்ணநாதன் அம்மையும் அப்பனும், மனைவி கணவன் என்ற நிலையில் ஓய்ந்திருக்கும் வேளையில் சிரித்து மகிழ்ந்து பூத்தொடுத்த தாகக் கற்பனை செய்து விடுகதையின் விடைப்பொருளைக் கண்டுபிடிக்க வகைசெய்யும் வகையில் விடுகதை அமைத்துள்ளனர்.
"வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க முடியாது
கறுத்தப்பிள்ளையார் கோவிலில் கால்வைக்க முடியாது (கண்)"
கோவில் அமைத்து அதில் இறைவனைக் குடியேற்றி வழிபட்ட மனித சமுதாயம் அக்கோவிலையும் அதிலே குடியிருப்பதாக நம்பும் இறைவனையும் விடுகதைப் பொருளாக்கியதை இவ்விடுகதை விளக்குகின்றது. கண்ணின் வெண்ணிறப் பகுதியினை வெள்ளப்பிள்ளையார் என்றும் கருவிழியினைக் கறுத்தப் பிள்ளையார் என்றும் பூடகமாகச் சொல்லி விடுகதையின் விடையினை கண்டறியச் செய்யும் பாங்கில் விடுகதை அமைத்துள்ளதைக் காணமுடிகிறது.
கோவிலுக்குள் சென்று விளக்கேற்றி வழிபட அனுமதி மறுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்கள் சமுதாயத்தின் வேதனைக்குரலின் பிரதிபலிப்பாக இவ்விடுகதையினைக் கொள்ளலாம். கிராமத்து மக்களின் அனுபவங்கள், இன்ப துன்பங்கள் போன்றவற்றின் வெளிப்பாடுகள் பல்வேறு நாட்டுப்புற இலக்கிய வடிவம் பெறுகின்ற போது தொன்மக் கதைகள் அவற்றில் இடம்பெறும் பாத்திரங்கள் துணைநின்றுள்ளதை அறியலாம்.
"அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு
அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி" (மயில்)
வைணவர்கள் வழிபடுகடவுளாகிய திருமாலின் பல்வேறு அவதாரங்களில் ஒன்றாகிய கண்ணன் பெயர்தாங்கி இவ்விடுகதை அமைந்துள்ளது. இவ்விடுகதையின் விடையாகிய மயில் என்னும் பறவையின் தோற்றத்தைத் தங்கம் பதிக்கப்பட்ட அங்கம் கொண்ட கண்ணனாகக் கற்பனை செய்கிறது மனித மனம்.
அனிருந்தன் என்ற கண்ணனின் பேரன், அசுரரின் சூழ்ச்சியால் அசுரனின் மகளாகிய உஷை என்பவளை மணக்க நிர்பந்தம் செய்யப்படுகிறான். அசுரனிடமிருந்து தனது பேரனை மீட்க அவன் அன்று ஆடிய குடக்கூத்து நாட்டுப்புற மக்களின் மனதில் உறைந்து விடுகதையாக மலர்ந்து மணம் பரப்புகின்றது என்பதனை இவ்விடுகதை சுட்டக் காணலாம்.
"பெட்டியைத் திறந்தேன்
கிருஷ்ணன் பிறந்தான்" (நிலக்கடலை)
இவ்விடுகதையில் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட கிருஷ்ணன் கதை காட்டப்படுகிறது. கம்சனின் சகோதரியாகிய தேவகியின் வயிற்றில் பிறக்கும் ஆண் குழந்தையால் தனக்கு அழிவு நேரிடும் என அஞ்சுகிறான். அதனால் தேவகியின் ஏழு குழந்தைகளையும் ஒவ்வொன்றாகக் கொன்று விடுகிறான். இதனைக் கண்ட தேவகி வேதனைப்பட்டு எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணனைத் தன் சகோதரனின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றக் கருதி, பெட்டிக்குள் வைத்து யமுனை நதியில் இடுகின்றாள். அப்பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட கிருஷ்ணன் பின்னர் யசோதையால் எடுத்து வளர்க்கப்படுகிறான். இப்புராணக்கதையின் சுருக்கமாக இவ்விடுகதை அமைக்கப்பட்டுள்ளதை எவரும் மறுக்கவியலாது. இப்படிப் பல்வேறு விடுகதைகள் தொன்மைப் பாத்திரங்களாகவும், தொன்மக் கதைகளின் விளக்கங்களாகவும் விளங்குவதைக் காணமுடிகிறது.


1.தொன்மங்கள் பல உருவாவதற்கும் ஏட்டில் இடம் பெறுதற்கும் விடுகதைகள் உறுதுணை புரிந்துள்ளன.
2. மிகப்பழமையான இலக்கிய வடிவங்கள் ஏட்டில் இடம்பெறுவதற்கு விடுகதை என்னும் நாட்டுப்புற இலக்கியம் வழிவகுத்துள்ளது.
3. நாட்டுப்புற மக்களின் கற்பனை ஆற்றலும் சிந்திக்கும் திறனும் விடுகதைகளில் வெளிப்படுகின்றன.
4. நாட்டுப்புற மக்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக விடுகதைகள் திகழ்கின்றன.
நன்றி:- வேர்களைத்தேடி
 Source:http://www.koodal.com


1. மண்ணுக்குள்ளே  கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?
2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?
3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?
4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
5. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
6. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
7. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான் அவன் யார்?.
8. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்  அது என்ன ?
11. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்- அவன் யார் ?
12. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது- அது என்ன ?
13. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை- அது என்ன ?
14. மழையில் பிறந்து வெயிலில் காயுது - அது என்ன ?
15. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன் அவன் யார்??
16. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும்- அவன் யார்?
17.பல் துலக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள் - அவன் யார் ?
18.ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு -அது என்ன?
19. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை- அது என்ன?
20. ஊரெல்லாம் வம்பளப்பான்; ஓர் அறையில் அடங்குவான்- அவன் யார்?  
21.இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல,வேகமாய் ஓடும் மான் அல்ல,
கால்கள் உண்டு மனிதனல்ல.- அது என்ன?  
22.தங்கச்சி  விளக்கு  காட்டுவாள்.அண்ணன்  மத்தளம் கொட்டுவான் .
அம்மா  தண்ணீர்  தெளிப்பாள்  - அவர்கள் யார்?
23. குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே-அது  என்ன ?
24 .நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?
25 .மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்துவிடும்?
26 .வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்
27. ஆடி ஆடி நடப்பான், அமைதியாக அதிர வைப்பான்?
28 . குளத்துத் தண்ணீரில்  பாம்பு நீந்துது.பாம்பின் வாயிலோ மஞ்சள் நிறக் குருவி-அது என்ன? 
29 .நீண்ட  உடலிருக்கும்  தூணும் அல்ல ,உடலில்  சட்டை  இருக்கும் ஆனால்   உயிர்   இல்லை,துயிலில்  சுகம்  இருக்கும்  மெத்தை அல்ல ... அது  என்ன? 
30 .ஈரேழு பதினாலு இறகு மயிலாட,முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட.
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?
31 .கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன்.பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன். விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன். - அது என்ன?
32 .தலை போனால் மறைக்கும்;இடை போனால் குரைக்கும்;கால் போனால் குதிக்கும்;மூன்றும் ஒன்று சேர்ந்தால்முந்தி ஓட்டம் பிடிக்கும். - அது என்ன?
33 .பளபளவென்று பட்டுடுத்திப் பதினாயிரம் குஞ்சலம் தொங்கவிட்டுத்
தெருவைச் சுற்றி வருகிற பெண் திரும்பிப் பார்க்க மாட்டாளாம். - அது என்ன? 
34 .அஞ்சு விரல் அமர்ந்தாட;பத்து விரல் பந்தாட;சூரியனுடன் வாதாட;
எமனுடன் போராட - அது என்ன? 
35 . அந்தரமான குகையிலே,சுந்தரமானவள் ஆடுகிறாள் -  அது என்ன?   
36 .மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்.மூத்த பெண் ஆற்றிலே;நடுப்பெண் காட்டிலே;கடைசிப்பெண் வீட்டிலே. _ அவைகள் என்ன ?
37 .பச்சை கதவு,வெள்ளை ஜன்னல்,திறந்தால் கருப்பு ராஜா - அது என்ன? 
38 . கையிலே அடங்குவார்;கதை நூறு சொல்லுவார். - அது என்ன?  
39 . பட்டணத்தில் இருந்து இரண்டு சிறாய் கொண்டு வந்தேன்;ஒன்று எரியுது; இன்னொன்று புகையுது. - அது என்ன?
40 . ஒரு கிணற்றில் ஓரே தவளை! - அது என்ன? 
41 . பறிக்கப் பறிக்க பெரிதாகும்! - அது என்ன? 
42 . படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்;அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். - அது என்ன?
43 .கால் இல்லை; ஓட்டம் உண்டு,மூச்சு இல்லை;காற்று உண்டு. - அது என்ன?
44 . செய்வதைச் செய்வான்;சொன்னதைச் செய்யான். - அவன் யார்?
45 .பிறக்கும் போது வால் உண்டு;இறக்கும் போது வால் இல்லை. - அது என்ன? 
46 . இலையுண்டு; கிளையில்லை,பூ உண்டு; மணமில்லை,காய் உண்டு; விதையில்லை,பட்டை உண்டு, கட்டை இல்லை,கன்று உண்டு; பசு இல்லை - அது என்ன?
47 . உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நியாயம் சொல்வார் - அது என்ன? 
48 . அதட்டுவான்; அலறுவான் - ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான். - அவன் யார்?  
49 .விடிந்தவுடனே வேலையில் இறங்குவான்;வேலை இல்லையேல் மூலையில் கிடப்பான்.  - அவன் யார்?   
50 .வீட்டிலே இருக்கிற அண்டாவுக்குக் காதும் இல்லை:மூடியும் இல்லை. - அது என்ன ? 
51.அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி” அது என்ன?
52.வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க முடியாது
கறுத்தப்பிள்ளையார் கோவிலில் கால்வைக்க முடியாது
அது என்ன?
53.பெட்டியைத் திறந்தேன்,கிருஷ்ணன் பிறந்தான்” அது என்ன?
54.செண்பகவல்லி அம்மனும் பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து
தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்”அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா மலை சீதனம்…அது என்ன?
55.மஞ்சள் குருவி ஊஞ்சலாடும் மகாதேவனுக்குப் பூசைக்காகும் -
அது என்ன?
56.கூரை வீட்டைப் பிரிச்சா..ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன?
57.அம்மா பிள்ளைத்தாச்சி அப்பா ஊர்சுற்றி!இவர்கள் யார்?
58.அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது!அது என்ன?
59.நீரிலே பிறப்பான்.. வெயிலிலே வளர்வான்.. நீரிலே இறப்பான்..!அவன் யார்?
60.சாத்திய கதவிருக்க, ஏற்றிய விளக்கிருக்க,இரவில் வந்தது யார்? இரத்தத்தைக்  குடித்தது யார்?
61.செக்கச் சிவந்திருப்பாள், செட்டியார் மகள் நாளைச்சந்தைக்கு வருவாள் நாத்தியார் மகள்- அது என்ன? 
62.சேலம் சிவப்ப,செவ்வாய்ப்பேட்டை கருப்பு,உடைத்தால் வெள்ளை, உண்டால் கசப்பு-அது என்ன? 
63. கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்-அது என்ன?
64. கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க இடமுண்டு- அது என்ன?
65.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ள நீரைக் கண்டு பதைக்கிறான்- அது என்ன?
66.கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப் போனால் முட்ட வருது- அது என்ன?
67.கழனியில் விளைந்த கதிரை, கத்தரி போட்டு வெட்டுவார்- அது என்ன?
68. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்-
அது என்ன?
69. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து,தெருவிலே திரியும் பூ எது?
70. கரிச்சக்கட்டி வயிற்றிலே வெள்ளை முத்துக்கள், அது என்ன?
71. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை காகம் நிற்குது- அது உன்ன?
72.வண்ணத்தில் சிவப்பழகன்; வாய்க்குள் சேதி வாங்குவான். அவன் யார்?
73.வெள்ளை நிற சாமியார்; தண்ணீரைக் கண்டால் தவமிருப்பார். அவர் யார்?
74.செய்வதைச் செய்யும் குரங்கும் அல்ல;சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல.
அது என்ன?
75.கறுத்த மேகம் கண்ணீர் விட்டால் ஓடோடி வந்து உதவுவான். அவன் யார்?
76.ஓங்கி வளர்ந்தவன் ஒரு பக்கம் சாய்ந்தான். அவன் யார்?
77.அச்சு இல்லாத சக்கரம்: அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
78.உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
79.வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
80.சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
81.இரட்டைக் குழல் துப்பாக்கியில்,எப்போதாவது வேட்டுச் சத்தம்-அது என்ன?
82.வீட்டுக்கு வீடு தவறாது வரும், புத்தாண்டின் முதல் விருந்தாளி-அது என்ன?
83.வெள்ளை உடம்புக்காரிக்கு,பச்சை நிறக் கூந்தல்-அது என்ன?
84. மஞ்சள் தோல் பைக்குள், இனிய வெள்ளைப் பணியாரம்-அது என்ன?
85.துடுக்குப் பையனின் வாலில் இருக்குது அபாயம்-அது என்ன?
86.காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை – அது என்ன?
87.மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது – அது என்ன?
88.உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன்- அவன் யார்?
89. கன்னங்கரேல் என்று இருக்கும், காரிருள் அல்ல கானம் பாடித் திரியும்,வானம்பாடி அல்ல- அது என்ன?
90.ஓடியாடித் திரியும்- உடலைத் தேடிக் குத்தும் – அது என்ன?
91. நூல் நூற்கும், ராட்டை அல்ல ஆடை நெய்யும், தறி அல்ல- அது என்ன?
92. இருந்தாலும்,  இறந்தாலும்,  பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன?
93.தண்ணீரில் நீந்தி வரும் தரையில் தாவி வரும் – அது என்ன?
94. ஊசி போட்ட வைத்தியர் ஊமை போல போகிறார் – அவர் யார்?
95.போகும் இடமெல்லாம் கோடு கிழித்திடுவான் – அவன் யார்?
96.இருப்பது இரண்டு கால், ஓடுவது குதிரை வேகம்,  இறக்கை உண்டு  பறக்காது  – அது என்ன?
97.மழையின்றி மாரியின்றி பச்சையாவதென்ன?பூவின்றி காயின்றி பழம் பழுப்பதென்ன?
98.ஓஹோஹோ மரத்திலே உச்சாணிக் கிளையிலே வைகுண்ட ராஜனுக்கு கழுத்திலே வெள்ளை- அது என்ன?
99.நடைக்கு உவமை நளனுக்கு தூதுவன் – அது என்ன?
100.பகலில் துயிலுவாள்,இரவில் அலறுவாள்- அது என்ன?
101.முதல் எழுத்து விண்ணில் உண்டு வீட்டில் இல்லை!
இரண்டாம் எழுத்து அடுப்பில் உண்டு அகப்பையில் இல்லை!
மூன்றாம் எழுத்து விக்கலில் உண்டு விசும்பலில் இல்லை!
நான்காம் எழுத்து விடுகதையில் உண்டு வியப்பில் இல்லை!
நான் யார்?





 

விடைகள் : http://muhilneel.blogspot.com/p/blog-page.html

source:http://www.thamilworld.com 
           http://www.indusladies.com
           http://kadisms.blogspot.com
           http://www.ungalulagam.com
           http://www.tamilthottam.in 
           http://gunathamizh.blogspot.com