blank'/> muhilneel: கதை
Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Monday, December 21, 2015

மாணவர் சமுதாயம்

அந்தப் பள்ளியின் மதிய உணவு இடைவேளை முடிந்ததற்கான அறிகுறியாய் மணி ஒலிக்க, சிறார் தங்களது உணவு பாத்திரங்களை மூடி கூடைகள் அல்லது பைகளில் வைத்துக் கொண்டு, வேகவேகமாக தத்தமது வகுப்பறை நோக்கி ஓட்டமெடுத்தனர்.

தம் பிள்ளைகட்கு உணவளிக்க  வந்திருந்த தாய்மாரும், உணவுக் கூடைகளை எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு கிளம்ப ஆயத்தமாயினர். சற்று நேரத்திற்கெல்லாம், பள்ளிக்கூட மைதானமே காலியானது.

மணிச் சத்தம் கேட்டதும், துள்ளியோடும் சிறார்களை கவனித்தவாறு நின்றிருந்தார் தலைமையாசிரியை ஜூலியட் அவர்கள். வெறுமையாகக் கிடந்த மைதானத்தை நோட்டமிட்டவாறு நின்றவரின் கண்களில் பட்டது, ஆங்காங்கே இறைந்து கிடந்த குப்பைகள் தாம்.

காலை துவங்கி, மதியம் வரை துப்புரவுப் பணியாளர்கள் சுந்தரி அம்மாளும், சின்னம்மாளும் பள்ளிக்கூடம் முழுவதும் குப்பைகளில்லாது துப்புரவு செய்து வைத்திருந்தனர். ஒரு மணி நேர இடைவெளியில், பள்ளிக் கூடம் குப்பைகளாலும் தாட்களாலும்    நிரம்பி வழிந்தது. மீண்டும் சுந்தரி அம்மாளும், சின்னம்மாளும் தமது துப்புரவுப் பணியை தொடங்கினர்.

இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றெண்ணியபடி, தனது அலுவலகத்தினுள் நுழைந்தார் தலைமையாசிரியை ஜூலியட். சற்று நேரம் யோசித்தவர், உதவி தலைமை ஆசிரியரிடம் ஆலோசித்து விட்டு, பள்ளியின் அறிவிப்பு பலகையில் கீழ்வருமாறு ஓர் அறிக்கையினை வெளியிடச் செய்தார்.

" பெற்றோர் கவனத்திற்கு :

தங்களது பிள்ளைகட்கு மதிய உணவு இடைவேளையின் போது உணவளிக்க வரும் பெற்றோர்கள், பள்ளி வளாகத்தினுள் குப்பை போட்டுச் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். "

இந்த அறிவுப்பு பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது.

அடுத்து வந்த நாட்களில், பள்ளி வளாகத்திள் குப்பைகள் சேர்வது குறைந்தாலும், ஆங்காங்கே குப்பைகள் கிடக்கத் தான் செய்தது. மாணவர்கட்கு சுத்தமாக இருப்பதன் நன்மை, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் கற்றுத் தர எண்ணினார் தலைமையாசிரியை.

மதிய வகுப்புகள் ஆரம்பித்ததும், வகுப்புகளை கண்காணித்தவாறு பள்ளியை சுற்றி வந்தார் தலைமையாசிரியை ஜூலியட். குழாயடிக்குப் பக்கத்தில், உணவுப் பொருட்கள் அதிக அளவில் இறைந்து கிடந்தன. அவற்றை காகங்களும் குருவிகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஒரு நாயும் கூட பள்ளியின் சுற்று வேலி வழியாக குழாயடி நோக்கி வந்தது.

ஒரு நாளைக்கு ஒரு நடுநிலைப் பள்ளியில் இவ்வளவு உணவு வீணாகிறதெனில், அந்த நகரில் இருக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் எவ்வளவு உணவு வீணாகும் ? இது போல் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் நிகழுமெனில், இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வீணாகும் ?  இது தவிர எத்துனையோ இடங்களில் உணவு வீணடிக்கப் படுகிறது.

விவசாயி பயிரை விளைவித்து,  அதை பக்குவமாக பாதுகாத்து, நமக்காக வழங்கும் வரையில் எத்துனை உழைப்பு அதில் இருக்கிறது. அவரது நூறு சதவிகித உழைப்பும் உணவினை வீணடிப்பதால், உதாசீனப் படுத்தப் படுகிறது.

பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்ள கற்றுத் தருவதோடு, உணவின் சிறப்பும், அதை மாணவர்கள் வீணாக்குவதை தடுக்கவும், நாம் உண்ணும் உணவு, நம்மை வந்தடைவதற்கு எத்துனை பேருடைய பல கால உழைப்பும், கஷ்டமும் அதில் இருக்கிறது என்று மாணாக்கருக்கு உணர்த்தவும் எண்ணினார்.

முதல் முயற்சியாக, பள்ளியை சுத்தம் செய்ய ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்த மாணவர்கட்கும், பதினைந்து நாட்கள் பள்ளியின் சுற்றத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பணி அளிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை முடிந்ததும், மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே கிடக்கும் காகிதக் குப்பைகளை அப்புறப் படுத்தி, குப்பைக் கூடைகளில் சேர்த்தனர். இதே போல் நாளும் பல வகுப்பு மாணவர் குழுக்கள் இந்த பள்ளியின்  சுற்றத்தை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைமை  ஆசிரியையின் இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. மாணவர்கட்கு சுத்தத்தின் சிறப்பும் விளங்கியது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, உணவினை வீணாக்காது இருக்கச் செய்ய என்ன செய்வது என்றெண்ணினார். உணவுப் பொருட்களை உருவாக்குவதில் இருக்கும் சிரமத்தை மாணவர்கட்கு உணர்த்த எண்ணினார்.

ஒவ்வொரு வகுப்பு மாணவர்கட்கும் பள்ளியின் பின்புறம் இருக்கும் காலி இடத்தில், தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டது. அந்த இடத்தினை செப்பனிட்டு, அதில் காய்கறிகள் பயிரிட்டு  வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவ்வூரில் இருக்கும் அரசு வேளாண் துறையின் உதவியுடன், மாணாக்கருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சியின் பலனாய், மாணவர்கள் பள்ளியில் தோட்டம் அமைத்துப் பழகினர். அதோடு மட்டுமல்லாது, மாணவர்கட்கு வேளாண் துறையில் இருந்தே விதைகள் வழங்கப் பட்டது. மாணவர்கள் வீடுகளில் தோட்டம் அமைத்துப் பயன்பெற இது ஓர் நல்வாய்ப்பாக அமைந்தது.

இது மட்டுமல்லாது இயற்கை உரத்தின் சிறப்பும், அதை உருவாக்கும் விதத்தையும் கற்றுத் தரப்பட்டது.

உணவினை உருவாக்குவதில் இருக்கும் சிரமமும்,  அதை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டியிருக்கும் உழைப்பினையும் அறிந்த மாணவர்கள், உணவினை வீணாக்குவதை நிறுத்தினர்.

இது மட்டுமல்லாது, மாணவர்கள் மூன்று முதல் நால்வர் கொண்ட குழுக்களாய் பிரிக்கப் பட்டனர். ஒவ்வொரு குழுவுக்கும், மரக் கன்று வழங்கப் பட்டது. அதை மாணவர்கள் பேணிக் காத்து வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே வருடத்தில், பள்ளியை சுற்றி மரங்கள் வளர்ந்து தண்மையை வழங்கின.

பள்ளியில் அறிவை வளர்க்க பாடங்களை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான பாடங்களையும் கற்றுக் கொடுப்பதே உண்மையான கல்வி.

சுத்தம், சுகாதாரம், இயற்கையினை காக்க வேண்டிய பொறுப்பு, இவையனைத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இளம் பிராயத்திலேயே கற்றுக் கொண்டு விட்டால், அது பிற்காலத்தில் பெரும் உதவியாக அமையும். இளைய தலைமுறையை நெறிப்படுத்தினால், நல்லதோர் சமுதாயம் மலருமென்பது திண்ணம்.




Wednesday, October 7, 2015

நல்லார் பொருட்டு பெய்யும் மழை



நகரின் முக்கியமான சாலையாக விளங்கும் அவினாசி சாலை, அந்த விடிகாலை வேளையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என்று பல்வேறு வாகனங்கள் சீறிக் கொண்டிருந்தன. அந்த ஆறு மணி வேளையிலேயே, பேருந்து நிறுத்தத்தில் குறைந்தது பத்து பேராவது பேருந்திற்காக நின்றிருந்தார்கள்.

நெடுஞ்சாலை ஆதலால், அச்சாலையில் இருக்கும் உணவகங்கள், மளிகை கடைகள், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள், அனைத்துமே திறக்கப்பட்டு அன்றைய வியாபாரத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அதே வரிசையிலேயே ஓர் பூங்கொத்து மற்றும் மலர் அலங்கார கடை. அதன் உரிமையாளர் சூர்யா.

கடையைத் திறந்து உள்ளே நுழைந்த சூர்யா, முந்தின நாள் விற்காமல் மீதமிருந்த ரோஜாப் பூங்கொத்துகளை தனியாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் கடையின் வாசலில் புது மலர்ச் செண்டுகளோடு கடைப் பையன் வண்டியில் வந்து சேர, மலர்க் கொத்துகள், அலங்கார மலர்கள் அனைத்தையும் அழகாக நேர்த்தியாக கடையில் அடுக்கி வைத்துவிட்டு, கடையிலிருந்த சாமி படங்களுக்கு புது மலர்ச் சரங்கள் சூடி, விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி வழிபட்ட பின் வியாபாரத்திற்காக கல்லாவில் அமர்ந்தார் சூர்யா.

ஓர்  இளம் ஜோடி வந்து பூங்கொத்துகளை பார்த்தபடி, பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஒன்றை எடுக்கவும், வைக்கவுமாய் இருந்தனர். அதே சமயத்தில் கடைக்குள் நுழைந்த ஓர் இளைஞர், வேக வேகமாக கையில் கிடைத்த ஓர் பூங்கொத்தை எடுத்துக் கொண்டு, அவசரமாக கட்டணத்தை செலுத்தி விட்டு, மீதி சில்லறைக் காசுகளை கூட வாங்க நேரமில்லாதவர் போல, விருட்டென வண்டியிலேறி கிளம்பிவிட்டார்.

கடையின் வாசலில், கதவின் ஓரம் ஓர் தயக்கத்துடன், சிறுமி ஒருத்தி வந்து நின்றாள். உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்று எண்ணியவாறு தயங்கி தயங்கி நின்ற அச்சிறுமி, கடையின் முன் யாரோ வீசிச் சென்றிருந்த குப்பைக் காகிதங்களை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு, அப்போது தான் கழுவியிருந்த தன் முகத்தினை, தன் பாவாடை கொண்டே துடைத்தவாறு நின்றிருந்தாள்.

" வா ஷீபா ! உள்ள வா ! " என்றழைத்தார் சூர்யா.


" அண்ணா ! இன்னைக்கு ஏதாவது பழைய பூ இருக்கா ? இருந்தா தாங்கண்ணா " என்றவாறு கடைக்குள் நுழைந்தாள் பத்து வயது சிறுமி ஷீபா.குப்பையை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு நின்றாள்.

" இருக்குப்பா. அதோ, உனக்காக தான் அங்க எடுத்து வச்சிருக்கேன். எடுத்துக்கோ ! " என்றார்.

முந்தின நாள் விற்காது போன மலர்களை எடுத்து பத்திரமாக நீர் நிரப்பிய பாத்திரம் ஒன்றில் போட்டுவிட்டு செல்வது சூர்யாவின் அன்றாட வழக்கம்.
அப்படி வைப்பதனால், வாடாது புதிது போலவே  மலர்கள்  இருக்கும். அந்த மலர்களை  மறுநாள்    ஷீபா விற்றுக் கொள்ள கொடுத்து விடுவார் சூர்யா.

அவர் செய்யும் உதவிக்காக, கடையை கூட்டி சுத்தம் செய்து வைப்பது, பக்கத்து கடையிலிருந்து டீ, காபி, வடை வாங்கிவருவது போன்ற சிறு சிறு உதவிகளை செய்வாள் ஷீபா.

" அண்ணா ! கொஞ்சம் தண்ணி குடிச்சக்கறேன் " என்றவள், சூர்யாவின் பதிலுக்காக காத்திராமல், மண் பானையிலிருந்து இரண்டு பெரிய தம்ளர் நிறைய தண்ணீரை எடுத்து மடமடவென குடித்துவிட்டு, ரோஜா மலர்களை கைகளில் எடுத்துக் கொண்டு, " வரேன் அண்ணா ! " என்றவாறு கடையை விட்டு வெளியேறினாள்.

சாலையை நோக்கி வந்தவள், சாலையை ஒட்டி இருக்கும் மண் பாதையில் ஒதுங்கி நின்று கொண்டாள். போக்குவரத்து அடையாள விளக்கு சிவப்பாவதைக் கண்டதும், வேகமாக வந்தாள். வந்தவள், நின்றிருந்த ஒவ்வொரு கார்களின் ஜன்னலுக்கு அருகிலும் சென்று தன் கையிலிருந்த ரோஜா மலர்களைக் காட்டியவாறு, " ஒரு பூ அஞ்சு ரூபாய் தாங்க. வாங்கிக்கோங்க " என்றாள்.

சிலர், பட்டென்று தலையை திருப்பிக் கொண்டனர். ஒரு சிலர், காரின் கண்ணாடியை இறக்கி விலையை விசாரித்து விட்டு, பட்டென்று கண்ணாடியை ஏற்றிக் கொண்டனர். சமயங்களில், காரில் பெண்களோ, சிறுமியரோ இருந்தால், அவர்கள் விரும்பினால், ஒன்றிரண்டு ரோஜா மலர்கள் விற்பனை ஆகும். வாடிக்கை பூ வியாபாரிகள் விற்கும் விலையை விட மலிவாக கிடைப்பதால், வாங்கிக் கொள்வார்கள்.

வாங்கியதும், சொன்ன விலையை கையில் கொடுத்துச் செல்பவர்கள் ஒரு சிலர். சொன்ன விலையை விட குறைத்து, பேரம் பேசி வாங்கிச் செல்பவர்கள் சிலர். இன்னும் சிலரோ, காசை காரின் ஜன்னல் வழியாக விட்டெறிந்து விட்டுச் செல்வார்கள். சமயங்களில், காசே கொடுக்காமல், பச்சை விளக்கு விழுந்ததும், விருட்டென கிளம்பிச் செல்பவர்களும் உண்டு.

 ஓர் கருப்பு நிற கார், சிவப்பு குறியீட்டிற்காக நின்றது. அருகில் சென்ற ஷீபா, மலர்களை காட்டியபடி காரின் ஜன்னலருகில் நின்றிருந்தாள். காரின் பின்னிருக்கையில், இரு சிறுமிகள் பள்ளி சீருடையில், அழகாக இரட்டை பின்னல் போட்டு அமர்ந்திருந்தனர்.

ஓட்டுனர் இருக்கையில் ஒரு ஆணும், அவரது  அருகிருக்கும் இருக்கையில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். காரின் கண்ணாடியை இறக்கிய அப்பெண், " மூணு ரோஸ் குடு பாப்பா " என்றவாறு மூன்று அழகான ரோஜா பூக்களை பார்த்து எடுத்துக் கொண்டார். காசைக் கொடுப்பதற்காக, தனது சிறிய கைப்பையை திறந்து ஒரு பூவிற்கு ஐந்து ரூபாய் வீதம் , மூன்று ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து கொடுக்க எத்தனித்த வேளையில், போக்குவரத்து குறியீடு பச்சை ஆகிவிட்டது.

வேகவேகமாக காசைக் கொடுக்கிறேன் என்று ஷீபாவின் கையில்,  தன் ஒரு கையால் மூன்று ஐந்து ரூபாய் நாணயங்களையும், மற்றொரு கையில் கைப்பையையும் வைத்தவாறு கொடுத்துக் கொண்டிருந்தார். பச்சை விளக்கு விழுந்து விட்டதால், அவசரப்பட்ட அப்பெண், ரூபாய் நாணயங்களோடு தனது கைப்பையையும் சாலையில் தவற விட்டு விட்டார். இறங்கி எடுக்கவும் வழியில்லை. பின்னால் நின்றிருந்த வாகனங்களும் " பாம் ! பாம் ! " என்று ஒலியெழுப்ப, வேகமாக வண்டியைக் கிளப்பிச் சென்று விட்டார் அந்த ஆண். போக்குவரத்தும் அதிகமாக இருக்க, ஷீபாவும் சாலையை விட்டு இறங்கி ஓரமாக நின்று கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் சிவப்புக் குறியீடு விழ, இப்போது அவ்வளவாக பெரிய வாகனங்கள் கார், பேருந்து என இல்லாமல், இரு சக்கர வாகனங்களே சாலையில் நின்றிருந்தன. அவற்றின் இடையில் புகுந்து, சிதறியிருந்த ரூபாய் நாணயங்களையும், சில்லறைக் காசுகளையும், கீழே விழுந்து கிடந்த சில அட்டைகளையும், வாகனங்கள் ஏறியதில், நசிந்து போய் கிடந்த கைப்பையையும் எடுத்துக் கொண்டு சாலையின் ஓரம் ஓடி வந்தாள்.

சூர்யாவின் கடை நோக்கி சென்றவள், மேசை மீது சில்லரைக் காசுகளையும், கைப்பையையும் வைத்து விட்டு, மூச்சிறைத்தவாறு அமர்ந்து கொண்டாள்.

"என்னாச்சு ஷீபா ? " என்ற சூர்யாவிடம், சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, " அண்ணா ! ஒரு கார்ல போனவங்க, அவங்களோட கைப்பையை தவற விட்டுட்டாங்க " என்றாள்.

" சரி. இங்க டேபிள் மேல வெச்சிடு. யாராவது தேடி வந்தா குடுத்துடலாம் " என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்க சென்று விட்டார் சூர்யா.

மதியம் உணவு வேளையின் போது, ஒரு பெண்மணி கடைக்கு எதிர்புறம் இருந்த சாலையின் அருகில் எதையோ தேடியபடி வந்தார். அவரை அடையாளம் கண்டு  கொண்ட ஷீபா, வேகமாக அவரிடம் ஓடிச் சென்றாள்.

" நீ காலையில எனக்கு பூ வித்த பொண்ணு தானே ? " என்றார் அப்பெண்மணி.

" ஆமாங்க. உங்க பர்ஸ் பத்திரமா இருக்கு. வாங்க " என்றவாறு சூர்யாவின் கடை நோக்கி விறுவிறுவென்று சென்றாள் ஷீபா.

சற்றே தயங்கியவாறு ஷீபாவின் பின் சென்றார் அப்பெண். நகரில் நடக்கும் பல திருட்டு, கொள்ளை, கொலைகட்கு சிறுவர் சிறுமியரை பகடையாக பயன்படுத்தும் செய்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்பதால், அவர் ஒருவித பயத்துடனே ஷீபாவின் பின் சென்றார்.

கடைக்குள் நுழைந்ததும் " அண்ணா ! இவங்க தான் கைப்பையை தவற விட்டவங்க " என்றாள் ஷீபா.

" இந்தாங்க மேடம். உங்க பை. எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க" என்றவாறு கைப்பையை கொடுத்தார் சூர்யா.

பையை திறந்து பார்த்தவர், " எல்லாம் சரியா இருக்குங்க. ரொம்ப நன்றி " என்றவாறு வேகமாக சென்று விட்டார். சென்றவர், அருகிருந்த தானியங்கி பணம் எடுக்கும் எந்திரத்திற்கு சென்றார்.

சற்று நேரத்தில், மீண்டும் சூர்யாவின் கடைக்கு வந்த அப்பெண், " ரொம்ப நன்றிங்க. இந்த காலத்துல ஒரு ஏ.டி.எம் கார்டு கிடைச்சா, அதை தவறா பயன்படுத்த எத்தனையோ சந்தர்ப்பமும் வழியும் இருந்தும், நீங்க நியாயமா நடந்துக்கிட்டது பெருமையா இருக்குங்க. நான் உங்களை சந்தேகப்பட்டேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என்னுடைய முன்னாள் அனுபவங்கள் தான் என்னைய இப்போ சரி பார்க்க வைச்சது. இப்படி நான் 20,000 ரூபாய் தொலைச்ச அனுபவமும் உண்டு. ரொம்ப நன்றிங்க " என்றார்.

" நான் தப்பா எல்லாம் எடுத்துக்கலைங்க. நீங்க சரி பாத்துக்கிட்டது தான் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. உங்களோட இந்த பாராட்டெல்லாம் இந்த பொண்ணு ஷீபாவுக்கு தாங்க சேரணும். இந்த பொண்ணு தான் ரோட்டுல விழுந்ததை பத்திரமா கொண்டு வந்து என் கிட்ட ஒப்படைச்சது. அதை நீங்க கேட்ட போது நான் கொடுத்துட்டேன். அவ்வளவு தாங்க " என்றார் சூர்யா.

மலரேந்தி நின்றிருந்த வாடி வதங்கிய மலரை உச்சி முகர்ந்த அப்பெண், ஆதரவற்று நிற்கும் ஷீபாவிற்கு தான் ஆதரவாய் இருந்து, கல்வி அளித்து, அவள் வாழ்வில் மேம்பட வழிகோலுவதாய் உறுதியளித்துவிட்டு, ஷீபாவை உடனழைத்துச் சென்றார். அருகிருக்கும் காவல் நிலையத்திற்கு நேரே சென்ற அவர், ஷீபாவை பற்றியும் தன்னைப் பற்றியும் விபரம் கூறினார்.  அவர்கள், ஷீபாவை அருகிருக்கும் அரசினர் காப்பகத்தில் அவளை ஒப்படைப்பதாகவும், அவளுக்கு உதவுவதோ, கல்வி அளிப்பதோ, தத்தெடுப்பதோ எதுவாயினும், அங்கு வந்து  சட்டப்படி செய்து கொள்ள வேண்டுமெனவும் சொல்லி அனுப்பினர்.

ஷீபாவிற்கு நல்வாழ்வளிப்பதில் தீர்க்கமாய் இருந்த அவர் ஷீபாவிற்கு நம்பிக்கை அளித்து, அவளை விரைவில் தன்னுடனே அழைத்துப் போவதாக சொல்லி விட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார். ஏக்கம் பொதிந்த கண்களுடன் சாலையில் ஓடித் திரிந்த சிறுமி, கண்களில் மகிழ்ச்சி வெள்ளம் ஒளியெனப் பாய, ஒளிமயமான எதிர் காலத்தை நோக்கி செல்கிறாள்.

அதுவரை, பளீரென சுட்டெரித்துக் கொண்டிருந்த வானம், மேகப் போர்வை போர்த்திக் கொண்டு, மழை முத்துக்களை மண்ணில் வாரி இறைத்தது.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்க் மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.

                                  - ஔவையார், மூதுரை.


குறிப்பு: இச்சிறுகதை பதாகை சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Sunday, September 6, 2015

கருணையின் பலன்

மதியம் மூன்று மணிக்கு மேலாக துவங்கிய மழைச்சாரல், நேரம் ஆக ஆக வலுப்பெற்று, இப்போது இடி மின்னலுடன் சற்றும் தொய்வில்லாது, அடித்துப் பெய்து கொண்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கான அடையாளம் முற்றிலுமாக மாறிப் போய், எட்டு மணியைப் போல் எங்கும் இருள் கவிந்திருந்தது. அத்துனை நேரம் பெய்த மழையினால், குளிரும் சேர்ந்து கொள்ள, இன்னிசை கீதத்துடன் கொசுப் பட்டாளமும் வீட்டினை ஆக்கிரமிப்பு செய்ய தயாராகும் வேளையில், வீட்டின் கதவு, ஜன்னல்களை எல்லாம் முற்றிலுமாக அடைத்து மூடியபடி, மக்களும் தத்தம் வீடுகளுள் அடைபட்டுப் போயிருந்தனர்.

பார்வதி அம்மாளும் வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு, விளக்கேற்றி வைத்து விட்டு, தனக்கும், தன் கணவர், பிள்ளைகட்கும் சூடாக தேநீர் கலந்து குடித்தவாறு அமர்ந்திருந்தனர். தொலைக்காட்சியில் சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. அமைதியான சூழலில் குடும்பத்தினர், ஒருவரோடு ஒருவர் உரையாடியவாறு அமர்ந்திருந்தனர். வானொலிப் பெட்டியை உயிர்ப்பிக்க, செவிக்கு இனிமையான பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. எவரது சிந்தையையும், செயலையும் பாதிக்காது, உதடுகள் தன் போக்கில் பாடல் வரிகளை முணுமுணுக்க, செவிகளை இசை மழை நனைத்துக் கொண்டிருந்தது.

இசையில் இலயித்திருந்த பார்வதி அம்மாள், ஏதோ சிந்தை கலைந்தவராய் சுற்றும் முற்றும் பார்த்தார். வாசல் கதவிற்கும், ஜன்னல்களுக்கும் அருகில் சென்று எதையோ உன்னிப்பாக கவனித்தார். கதவிற்கு அருகில் நின்று கவனிக்கையில், யாரோ ஈனசுவரத்தில் முனகுவது போன்ற ஒலி கேட்கவும், கதவினை திறந்து பார்த்தார். வாசலில் எதுவும் தென்படவில்லை. ஆனால், எங்கிருந்தோ சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வாசலை விட்டிறங்கி சுற்றும்  முற்றும் பார்த்தவர், மாடிப் படிகளின் கீழ் இரண்டு நாய்க்குட்டிகள் குளிரில் நடுங்கியபடி, ஒன்றன் மேல் ஒன்றாய் உரசியவாறு இருந்ததைக் கண்டார்.

பிள்ளைகளிடம் புதிதாய் வந்திருக்கும் நாய்க் குட்டிகளைப் பற்றி கூற, அவர்களுக்கோ ஒரே சந்தோஷம். மூத்த பெண் எழிலியும், இளையவன் கணேசனுக்கும் எல்லையிலா மகிழ்ச்சி. வேகவேகமாக நாய்க்குட்டிகளுக்கு சாக்குப் பையும், ஓர் சிரட்டையில் பாலும் எடுத்து வந்தான் கணேசன்.

மாடிப்படிகளுக்கு கீழேயே சாக்குப் பையை விரித்து, நாய்க்குட்டிகளை தூக்கி கணேசன் அதில் அமர வைக்க, சிரட்டையில் சிறிதளவு பாலை ஊற்றி வைத்தாள் எழிலி. ஒன்றன் மேல் ஒன்று ஏறி விளையாடுவதும், சாக்குப் பையை கலைத்துப் போடுவதுமாய் இருந்தன நாய்க்குட்டிகள். எழிலியைக் கண்டதும் சற்றே பின்வாங்கிய நாய்க்குட்டிகள், அவள் அவ்விடத்தை விட்டு அகன்றதும், மெல்ல வந்து பாலை நாவால் நக்கிப் பார்த்தன. சிரட்டையிலிருந்து பாலைக் குடிக்கும் ஆவலில், அதை கீழே கொட்டி, நாவால் நக்கி குடித்து முடித்திட்டு, தங்கள் மேல் கொட்டியிருந்த பாலையும் தங்கள் நாவால் நக்கி, தங்களையும் சுத்தப் படுத்திக் கொண்டன இரு நாய்க்குட்டிகளும்.

இரவில் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்து விட, மழை மட்டும் தன் நித்திரையை தொலைத்திட்டது போன்று ஓய்வில்லாது பெய்து கொண்டே இருந்தது. சமயங்களில், தனியாக பெய்து கொண்டிருந்த மழைக்கு துணையாகிப் போனது போன்று இடியும், மின்னலும் அவ்வப்போது வந்து சென்றன. மழையின் இன்னிசைக்கு பக்க வாத்தியம் போல தவளைகள் கத்திக் கொண்டும், பூச்சிகள் கிரீச்சிட்டுக் கொண்டும் இருந்தன.

நள்ளிரவுக்கு மேல், பார்வதி அம்மாளின் கணவர், அவரது வியாபார விஷயமாக வெளியூர் செல்ல கிளம்பினார். சாலையில், அவர்களது வீட்டுக்கு வெகு அருகாமையில்  ஒரு லாரி நின்றிருந்தது. அப்போதும் மழை பெய்து கொண்டு தான் இருந்தது. தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் செல்கையில், அந்த லாரிக்கு அருகில் நின்றிருந்த ஒருவர் " என்ன சார் ! வெளியூருக்கா ? " என்று கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் சென்று விட்டார்.

மழையின் ஓசை தவிர சாலையெங்கும் ஒரே நிசப்தம். அவ்வப்போது சாலையைக் கடக்கும் வாகனங்களைத் தவிர, வேறு ஒலி ஏதும் இல்லை. அருகில் புதிதாக ஓர் அடுக்குமாடிக் கட்டிடம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்த கட்டிடத்திற்கான கட்டுமானப் பொருட்கள் லாரிகளில் வந்திறங்கும். பகலில் லாரிகள் அவ்வழியே வந்தால் மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்குமென்பதால், இரவில் தான் கட்டுமானப் பொருட்கள் வந்திறங்கும்.

வீட்டிற்கு அருகில் நின்றிருந்த லாரியின் விளக்குகள் ஒளிர்வதும், அணைவதுமாக இருந்தது. அவ்வப்போது உறுமியவாறு சப்தம் அதிகமாவதும், குறைவதுமாய் இருக்க,  உறங்காது விழித்தபடி படுத்திருந்த பார்வதி அம்மாள், ஒருவேளை மழை பெய்ததில் மண்சாலை சேறும் சகதியும் ஆகிப் போனதோ, லாரி சேற்றில் சிக்கிக் கொண்டதோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டார்.  நாய்க் குட்டிகளும் விளக்கின் ஒளியைக் கண்டு குரைத்துக் கொண்டே இருந்தன.

சற்று நேரத்தில், நாய்களின் குரைப்பு அதிகமானது. நாய்க் குட்டிகளின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார் பார்வதி அம்மாள். ஜன்னல் கதவினை திறந்து மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தவர் அதிர்ந்து போனார். வாசலுக்கருகில் இருவர் நின்றிருந்தனர். நாய்க் குட்டிகளை நோக்கி கைகளை ஆட்டியபடி இருந்தனர். சற்றே உற்றுப் பார்க்கையில், நாய்க் குட்டிகளுக்கு உண்ண ஏதோ போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களைக் கண்டதும் பயந்தவர், மனதுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவராய், வேகமாக " யாரது ? " என்று சப்தம் போட்டார்.

நின்றிருந்த இருவரும் சற்றே கலக்கமடைந்தவர்களாய், சுற்றும் முற்றும் பார்த்தனர். ஆனால், அவ்விடத்தை விட்டு அகலவில்லை. இதைக் கண்டதும் இன்னும் பயந்து போனார் பார்வதி அம்மாள். உறங்கும் பிள்ளைகளை துணைக்கு எழுப்பலாம் என்றெண்ணியவர், அவர்களை வீணாக பயமுறுத்துவானேன் என்று தானே சமாளித்து விட எண்ணினார்.

" ஹலோ ! போலீஸ் கன்ட்ரோல் ரூம் ? சார் ! ஒரு திருட்டு கும்பல் எங்கள் வீட்டை சுற்றி இருக்கு சார் ! கொஞ்சம் சீக்கிரமா வாங்க சார் ! என்று உரக்க கூறினார் பார்வதி அம்மாள். உடனே, "தட ! தட !" என்று காலடி ஓசையும், அதைத் தொடர்ந்து, லாரி அங்கிருந்து கிளம்பிச் செல்லும் ஓசையும்.

அப்போதும் நாய்க் குட்டிகள் குரைத்துக் கொண்டே இருந்தன. நல்ல சமயத்தில் நாய்க் குட்டிகள் குரைத்து, விழிப்பினை ஏற்படுத்தியமையால், ஓர் கொள்ளைச் சம்பவத்தில் இருந்து ஒரு குடும்பம் காப்பாற்றப் பட்டது. மழைக்காக ஒதுங்கிய குட்டிகளுக்கு உணவளித்து, அவற்றின் மீது காட்டிய கருணைக்கு பிரதிபலனாய், அவை அக்குடும்பம்பத்தையே ஓர் பெரும் இக் கட்டி லிருந்து காப்பாற்றி விட்டன.

அன்று பெய்த மழைக்கு அவர்களது வீட்டில் நாய்க்குட்டிகள் தஞ்சமடைந்தது தெய்வ சங்கல்பமே என்று முழுமையாக நம்பினார் பார்வதி அம்மாள்.



பின்குறிப்பு :
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்திய சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கதை.

Thursday, July 30, 2015

புத்தொளி பிறந்தது !

வாசலில்  இருசக்கர வாகனத்தின் ஓசை சற்றே உயர்ந்து பின் மெல்ல மெல்லக் குறைந்து பின் மெளனமானது. வண்டியிலிருந்து இறங்கி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை ஒற்றை விரலில் நிறுத்தி தட்டாமாலை சுற்றியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் நிவாஸன்.

கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை அங்கிருந்த மேசையின் மீது வைக்கக் குனிந்தவனுக்கு, அங்கு ஏற்கனவே இருந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்டதும் சற்று தூக்கிவாரிப் போட்டது. வேகவேகமாக தன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், மேசை மீதிருந்த நோட்டின் பக்கங்களையும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். அவன் தேடியது அதில் இல்லை. பரபரப்புடன் தன் அறைக்குச் சென்று தனது அலமாரியில் தேடினான். அங்கும் அவன் தேடியது கிடைக்கவில்லை.

ஏமாற்றத்துடன் அறையை விட்டு வந்த நிவாஸனை அவனது தந்தை எதிர்கொண்டார்.

” என்னப்பா ! ரொம்ப பரபரப்பா எதையோ தேடுற போலயே. என்ன தேடுற ? “

” ஒரு முக்கியமான பேப்பர் ஒண்ணு வெச்சிருந்தேன் அப்பா. அதைக் காணோம். அதைத் தான் தேடறேன் “

உன்  கூட படிக்கிற அனிதாங்கற பொண்ணுக்குக் காதல் கடிதம் எழுதி வெச்சிருந்த.அது தானே ! அது என் கிட்ட தான் இருக்கு.”

அப்பா! அது வந்துப்பா….. நான் அந்தப் பொண்ணைக் காதலிக்கிறேன்.அவள் என்னை விரும்பறாளான்னு தெரியலை.அதைத் தெரிஞ்சிக்கத் தான்  கடிதம் எழுதினேன்.

காதல் ! காதல் ! காதல் ! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா ?

இப்படி ஒரு கேள்விய நான் கேட்க மாட்டேன். ஏன்னா, நம்ம வாழ்க்கையில பிடிப்பு ஏற்பட   வேணும்னா,  காதலிக்கணும். முதல் படியா, நம்மை நாம் காதலிக்கணும். நம் செயல்கள், செய்கைகளைக் காதலிக்கணும். அப்போ தான் நம் மேலேயே  நமக்கு நம்பிக்கை பிறக்கும். நாம் செய்யும் ஒவ்வோர் செயலையும் முழு ஈடுபாட்டுடனும், மனம் நிறைந்த ஆசையுடனும் காதலுடனும் செய்ய வேண்டும். அந்தக் காதல் நம் முயற்சியை மென்மேலும் ஊக்கப்படுத்தும். அந்த முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ, எது கிட்டினாலும், நம் மனதை ஒருநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனதை ஒருநிலைப் படுத்த நாம் அச்செயலின் மீது கொண்ட காதலும் ஈடுபாடுமே துணையாக நிற்கும்.

உன் மேலே உனக்குக் காதலும் நம்பிக்கையும் வந்துட்டா, உன் காதலை வெளிப்படுத்தக் கடிதம் எல்லாம் தேவைப்படாதுப்பா. உன் கண்களும் உதடுகளுமே அதை அழகாக வெளிப்படுத்தும் !

நிவாஸனின் மனதுள் புத்தொளி பரவியது. அவனது வாழ்விலும் காதலிலும் அவனுக்கான வெற்றி ஒளி தெளிவாகத் தெரிந்தது.

பனிப்பூக்கள் கலாச்சார சஞ்சிகை நடத்திய சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

“காதல்! காதல்! காதல்! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா?”

இவ்வரிகள் கதையில் வருமாறு கதையை எழுத வேண்டும். எனது முயற்சி மேலுள்ள கதை. போட்டியில் பரிசு கிட்டவில்லை.

Saturday, July 18, 2015

நெஞ்சில் முள்


வெளியில் ஆளே விறைத்து விடும் அளவுக்கு குளிர். குளிருக்கான ஆடைகளான கம்பளி அங்கி, தொப்பி என அனைத்தையும் மாட்டிக் கொண்டு, கதவைத் திறந்தார் எழிலரசி.  காலையில் வாசலை தெளித்து, கோலம் போட்டால் தான் எழிலரசிக்கு அன்றைய பொழுது தொடங்கியதாக அர்த்தம்.

ஊரில் இருக்கும் வரை, அன்றாடம் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, வண்ணப் பொடி கொண்டு  அழகாக வண்ணம் தீட்டி, பண்டிகை காலங்களில் வாசல் தொடங்கி வீதி வரை  வண்ணக் கோலம் போட்டு பழகிய  எழிலரசிக்கு அமெரிக்கா வந்த புதிதில், அடுக்கு மாடிக் குடியிருப்பில், சிறிய வாசலில் எப்படி கோலம் போடுவது என்ற யோசனையே மேலோங்கியது.  

அரிசியை சற்று நெருநெருவென்று அரைத்து அதை வைத்து கோலம் போட்டு வாசலை அலங்கரித்து விடுவார். இவரது கோலம் போடும் ஆர்வத்தை கடும் குளிரும் கலைத்து விடவில்லை.பண்டிகை காலங்களிலும், வண்ணக் கோலங்கள் வாசலை நிச்சயம் அலங்கரித்திருக்கும். அரிசி மாவுடன் மஞ்சள் தூள் மற்றும் உணவில் கலக்கக் கூடிய வண்ண திரவங்களை (food coloring)   கலந்து வண்ண பொடிகள் செய்வார்.

பெரிய கோலமாக போட முடியாவிட்டாலும், வாசலுக்கு அளவாக,  சிறியதாக சிக்குக் கோலங்களும், கோட்டுக் கோலங்களும் போடுவார். பூஜைக்கென்று தனி அறை இல்லாது போனாலும், சமையலறையில் தெய்வத்திற்கென்று சிறு இடம் ஒதுக்கி, படங்களை அடுக்கி வைத்து, கோலம் போட்டு நாளும் பூஜை செய்வார்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டு  இனியா தூக்கம் கலைந்து எழுந்து வந்தாள். அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும்,

" ஓ ! அம்மா ! வெளியில விறைக்குற அளவுக்கு குளிர் அடிக்குது. எதுக்காக இந்த குளிரிலேயும் கோலம் போடறீங்க ? சீக்கிரமா உள்ள வாங்க ! " அக்கறையுடன் அன்னையிடம் கூறினாள் இனியா.

கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த எழிலரசி,
“ அப்பப்பா ! பயங்கர குளிர் ! “ என்றவாறு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.

“ இந்தக் குளிர்ல எதுக்காக கோலம் போட வெளியில போறீங்க ? “ அக்கறையுடன் கோபித்துக் கொண்டாள் இனியா.

“கோலம் போடுறதுக்கு முக்கிய காரணம், அரிசி மாவுல கோலம் போட்டா, அதை எறும்பு சாப்பிடும். இதனால, ஒரு சின்ன உயிருக்காவது இன்னைக்கு சாப்பிடறதுக்கு வழி பண்ணுன திருப்தி “

“அது மட்டுமில்ல. குனிஞ்சு கோலம் போடுறது நல்ல உடற்பயிற்சியும் கூட “ என்று விளக்கமளித்தார் எழிலரசி.

சற்று நேரம் யோசித்த இனியா, “ பிறகு எதுக்காக அம்மா, வீட்டுக்குள்ள எறும்பு வந்துட்டா உடனே மருந்தடிக்க பெஸ்ட் கன்ட்ரோல் (Pest Control) கூப்பிடறீங்க ? எறும்பு சாப்பிட்டுட்டு போகட்டும் அப்படின்னு விட்டுடலாமே ? அது எவ்வளவு சாப்பிட்டுடப் போகுது ? என்றாள்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் எழிலரசி.

Tuesday, April 14, 2015

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...



        “ டிங் ! டிங் ! டிங் ! “  பள்ளிக்கூட மணி ஓசை கேட்டதும்,  அதுவரை பேச்சும் சிரிப்பும், கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறார் கூட்டம், “கா ! கா ! “ என்ற குரல் கேட்டதும் தம் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள பறந்தோடி வரும் காக்கை இனத்தைப் போல, தம் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்ள தத்தம் வகுப்பறை நோக்கி ஓடினர்.

      அன்று முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. விடுமுறையில் சுற்றுலா சென்று வந்த இனிய நினைவுகள், அங்கு தாங்கள் கண்ட பல புதிய விஷயங்கள், உறவினர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், சிறாருடன் கோலி, பம்பரம், பட்டம் என ஆசை தீர நாளெல்லாம் விளையாடிய நினைவுகள், கோயில் திருவிழா மகிழ்வலைகள் என்று தத்தமது இன்ப தருணங்களை நண்பர்களுடன் பகிர்ந்தவாறு சிறார் சலசலத்துக் கொண்டிருந்தனர்.
 
  முதல் இருக்கையில் கண்மணியும் வள்ளியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கண்மணியின் கையில் புதிதாய் ஒரு கடிகாரம். நடுவில் வாத்து பொம்மையின் முகம். அதைத் திறந்தால், உள்ளே அழகான கடிகாரம். அதைக் கண்டதும் வள்ளிக்கு மிகவும் பிடித்துப் போனது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். வள்ளி அதை தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் மெல்லியதாய் ஒரு புன்முறுவலுடன் வள்ளியை பார்ப்பாள் கண்மணி. சமயங்களில், ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், வள்ளியின் கவனம் கடிகாரத்தின் மீதே சென்றது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் வள்ளி. 

      உணவு இடைவேளையின் போது, கண்மணி வள்ளியிடம்,
“ வள்ளி ! இந்தா புள்ள, நீ இந்த கடிகாரத்தை கொஞ்ச நேரம் கட்டிக்கோ. உனக்கு இது ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். நான் சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சு போகையிலே வாங்கிக்கறேன் “ என்றாள்.

   ஆனால் வள்ளியோ, அவசரமாக “ ஐயோ ! வேணாம் புள்ள ! அது விலை உசந்ததா இருக்கும் போல இருக்கு. நான் ஏதாச்சும் தெரியாம உடைச்சோ, பழுதாக்கியோ வெச்சுட்டேன்னா, நீ வீட்டுல திட்டு வாங்குவ. என்னால புதுசா வாங்கியும் தர முடியாது” என்று மறுத்தாள்.

  மாலையில் வீடு திரும்பியதும், அன்று பள்ளியில் நடந்தவை ஒன்று கூட விடாமல் தன் தாய் தகப்பனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

“ ஐயா, இன்னைக்கு அந்த காரை வீட்டுப் பிள்ளை கண்மணி இல்ல, அது புதுசா ஒரு கடிகாரம் கட்டியிருந்தது. பாக்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. வாத்து பொம்மை போட்ட கடியாரம் அது. அந்த பொம்மை மொகம் மூடி மாதிரி இருந்துச்சு. அந்த மூடிய திறந்ததும் உள்ள அழகா கடிகாரம். நம்ம வீட்டுல இருக்குற கடியாரத்துல இருக்கற மாதிரி முள் எல்லாம் இல்ல. அதுல மணி அப்படியே வந்துச்சு. அதுல இருக்குற பட்டன அமுக்குனா கீ ! கீ !  சத்தம் கூட வந்துச்சு. அத அப்படியே பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அந்த பிள்ளை என்னைய  அந்த கடியாரத்தை கட்டிப் பாக்க சொன்னுச்சு. ஆனா, நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் வள்ளி.

  கடிகார நினைவுகளோடே உறங்கியும் போனாள். கனவிலும் அதே கடிகாரம் வந்து மகிழ்வூட்டியது. “ அழகா இருக்கு புள்ள. விலை உசந்ததா இருக்கும் போல. பத்திரமா வெச்சுக்கோ “ என்று தூக்கத்தில் பேசிக் கொண்டாள். மகளின் பேச்சைக் கேட்டு பெற்றோரும் புன்முறுவல் பூத்தனர்.

   அடுத்த நாள் பள்ளிக்கூடம் முடிந்து, வீட்டிற்கு வந்த வள்ளி, பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். வீதியில் “ ஜிங் ! ஜிங் !” என்ற ஒலி. வாசலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியின் தந்தை, 

   “ அம்மாடி வள்ளி ! இங்க வா தாயீ !  என்று அழைத்தார். “ அதோ ! அங்கன போற ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிடு ! “ என்றார்.

வாசலுக்கு ஓடி வந்த வள்ளி, ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிட, வள்ளியின் தந்தை “ அப்பா ! ஒரு கடியாரம் செஞ்சு குடுப்பா !” என்றார்.
வள்ளிக்கு அவர் வைத்திருந்த பெரிய கழியின் உச்சியில் அழகாக சிங்காரம் செய்யப்பட்டு, காதுகளில் ஜிமிக்கி, கைகளில் வளையல், கழுத்தில் சங்கிலி அணிந்து, இரண்டு கைகளையும் ஜால்ரா போல சேர்த்து “ஜிங் ! ஜிங் ! “ என்று தட்டிக் கொண்டிருக்கும் பொம்மையை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. பொம்மையின் அடியில், கழியில் ரோஸ் மற்றும் வெள்ளை நிறக் கலவையுடன் ஜவ்வு மிட்டாய். ஜரிகைக் காகிதம் சுற்றப் பட்டு இருந்த அந்த ஜவ்வு மிட்டாயிலிருந்து கொஞ்சம் எடுத்து அதை இழுத்து, வளைத்து, உருட்டி அழகான கைக்கடிகாரமாக மாற்றிக் கொடுத்தார் அந்த ஜவ்வு மிட்டய்க்காரர். சிறிது மிட்டாயை எடுத்து மோதிரமாக மாற்றி விரலில் அணிவித்து விட்டு, இன்னும் கொஞ்சம் எடுத்து அவளது கன்னத்திலும் ஒட்டி விட்டார். வள்ளிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

“ ஐயா ! இன்னொரு மயில் மிட்டாய் செஞ்சு வாங்கிக்கவா ? “ என்று ஆசை ஆசையாய் கேட்டாள் வள்ளி.

“ யாருக்கு தாயீ ? “

“ என் கூட படிக்கிற கண்மணிக்கு !” 

“சரி , வாங்கிக்கோ ! “ என்றபடி

“இன்னொன்னு செஞ்சு குடுத்துருப்பா “ என்றார் வள்ளியின் தகப்பனார்.
அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள் வள்ளி.

“அம்மாடி ! இப்போதைக்கு இந்த கடியார மிட்டாய வெச்சுக்கோ. இன்னும் செத்த நாள் பொறுத்து ஐயா உனக்கு நிஜ கடியாரமே வாங்கித் தாரேன் “ என்றார்.

மகிழ்ச்சியுடன் “ சரி ஐயா “ என்றவாறு குதித்தோடினாள் வள்ளி.

அடுத்த நாள் பள்ளிக்கு செல்கையில், மறவாமல் ஜவ்வு மிட்டாய் வைத்திருந்த தூக்கினை எடுத்துக் கொண்டாள்.

கண்மணியும் தன் தந்தை தனக்காக இருவேறு நிறங்களில் வாங்கிக் கொடுத்திருந்த கைகடிகாரங்களில், ஒன்றை தனக்கென வைத்துக் கொண்டு மற்றொன்றை ஆசைப்பட்டு கேட்ட தன் தோழிக்கு கொடுக்கப் போவதாய் சொல்லி தந்தையிடம் அனுமதி பெற்று வாங்கி வந்தாள். 

“ அன்பிற்கும் உண்டோ,  அடைக்கும் தாழ் “

குறிப்பு :

இக்கதை நண்பர் கோவை ஆவி அவர்கள் நடத்திய
வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை - குறும்பட- சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றது.






Wednesday, March 4, 2015

தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை




ரூபன் &யாழ்பாவாணன் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய கதை.



காணும் பொங்கல் பண்டிகை நாளான அன்று, கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. மக்கள் கடல் பெரிதா, ஆழிக்கடல் பெரிதா  என்றெண்ணுமளவுக்கு காணுமிடமெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்தக் கூட்டத்தினுள் சற்று நேரம் சுற்றித் திரிந்தால், தான் அன்று கொண்டு வந்திருந்த பலூன்கள் அனைத்தும் விற்று விடும். கொஞ்சமேனும் இலாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில், கடற்கரையை நோக்கி தனது சைக்கிளை வேகமாக மிதித்தான் பூபாலன்.

பூபாலன் ஒரு பலூன் வியாபாரி. பட்டப் படிப்பு முடித்திருந்தான். அவனது படிப்பிற்கேற்ற உத்யோகம் இன்னும் அவனுக்கு கிட்டவில்லை. ஆனாலும் மனம் தளராது முயன்று கொண்டிருந்தான்.  அவனது வருமானம் குடும்பத்திற்கு பயன்படுமா என்றால், பல வேளைகளில் இல்லை என்றே சொல்லலாம். அவனது தந்தை ஒரு அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிந்து வருகிறார். அவரது வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. தந்தைக்கு மேலும் கஷ்டம் கொடுக்கக் கூடாது எண்றெண்ணி, கிடைக்கும் சிறு சிறு வேலைகள் செய்து வந்தான். கடந்த சில நாட்களாக, நண்பர் ஒருவரின் உதவியோடு இந்த பலூன் வியாபாரம் செய்து வந்தான்.

கடற்கரையை வந்தடைந்தான் பூபாலன். வந்ததும், பலூன்களை  ஊதி சைக்கிளில் கட்டினான். சற்று நேரத்திற்கெல்லாம், சிறுவர் கூட்டம் பூபாலனை சூழ்ந்து கொண்டது. சிறுவர்கள் விரும்பியபடி அழகழகாக பல்வேறு வடிவங்களில் பலூன்கள் ஊதிக் கொடுத்தான். ஆப்பிள் பலூன், பூ பலூன், இதய வடிவ பலூன், என்று பல்வேறு வகையான பலூன்கள் சிறார்களை பூபாலனை நோக்கி இழுத்தது.

சிறுவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒருவராய், ஒவ்வொரு வண்ணத்தில் பலூன் கேட்டனர்.

"அண்ணா ! எனக்கு பச்சை கலர்ல ஆப்பிள் பலூன் " என்றாள் ஒரு சிறுமி.

"எனக்கு சாதா பலூன் ! மஞ்சள் கலர்ல வேணும் " என்று கேட்டான் ஒரு சிறுவன்.

" சார் !  புளூ கலர்ல எனக்கு பலூன் தாங்க ! " என்றான் ஒரு சிறுவன்.

சிறார் கேட்ட வகை வகையான பலூன்களை ஊதிக் கொடுத்தான் பூபாலன்.

சிறிது நேரம் கூட்டம் இல்லாததால், ஒரு காபி குடிக்கலாம் என்று எண்ணி, காபி விற்கும் ஒருவரை அழைத்து, காபி வாங்கிக் கொண்டான். அதை குடித்துக் கொண்டிருக்கையிலேயே, இருவர் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு அவ்வழியே வந்தனர். 

பூபாலன் வைத்திருந்த பலூன்களைக் கண்டதும், அந்த சிறுமி 

"அங்கிள் ! பலூன் வேணும். " என்றபடி அங்கேயே நின்று கொண்டது.

"அப்பறம் வாங்கலாம் பாப்பா. " என்றார் உடன் வந்த ஒருவர்.

"இல்ல ! இப்பவே வேணும். " என்றது அந்த குழந்தை.

"சரி ! வாங்கிக் குடு" என்றார் மற்றொருவர்.

அவர்களும் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு, பூபாலன் அருகே வந்தனர். சிறுமி, பலூன்களைக் கண்டு குதூகலித்தாள். அந்த இருவரும் பூபாலனை அவசரப் படுத்தினர். 

" சீக்கிரம் குடு பா !" என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர். 

அவர்களது பரபரப்பைக் கண்டதும் பூபாலனுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது.

பலூன் ஒவ்வொன்றாக எடுத்து ஊதுவான். அவை சரியில்லை என்று தூக்கி எறிந்தான். சில பலூன்களை வேண்டுமென்றே உடைத்தான்.

" வேற பலூன்காரர் கிட்ட வாங்கிக்கலாம் பாப்பா ! " என்று ஒருவன் குழந்தையை அங்கிருந்து கூட்டிச் செல்ல முற்பட்டான். ஆனால், குழந்தையோ,

" எனக்கு இவர் கிட்ட இருக்குற பலூன் தான் வேணும்" என்று சொல்லி அடம் பிடித்து நின்றது.

சில நிமிடங்களில், அங்கு ஆண் பெண் இருவர் பரபரப்புடன் " பாப்பா ! பாப்பா !"
என்றபடி ஓடி வந்தனர்.

அங்கு சிறுமியைக் கண்டதும் , " பாப்பாஆஆஆ ! " என்றபடி அந்த பெண் மயக்கமுற்று விழுந்துவிட்டார்.

அவர்கள் பின்னாலேயே சில போலீசாரும் வந்து விட்டனர்.

போலீசைக் கண்டதும்,  சிறுமியுடன் வந்த இருவரும் மெல்ல கூட்டத்தில் நழுவ பார்த்தனர். அவர்களை பிடித்துக் கொண்டான் பூபாலன். பூபாலனை தாக்கி விட்டு ஓட முற்பட்டனர் இருவரும். உடனே போலீசார் அவர்களை பிடித்தனர்.

பூபாலன் அதுவரை அங்கு நடந்ததையும், அவர்கள் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும், நேரம் கடத்த முயன்றதையும் சொன்னான். அவர்கள் சிறுவர் சிறுமியரை கடத்தும் கும்பலைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்களை பிடிக்க உதவியமைக்கு நன்றியையும் தெரிவித்துச் சென்றனர் போலீசார்.

இதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்தார் அந்த பெண்மணி. தன் மகளை ஆரத் தழுவியபடி,

" என் மகளை எனக்கு பத்திரமா காப்பாத்தி குடுத்திருக்கீங்க தம்பி ! ரொம்ப நன்றி பா ! " என்று நாதழுதழுக்க கூறினார்.

"உங்களுக்கு வேண்டிய உதவிய செய்யறேன் தம்பி. என்னைய வந்து பாருங்க"
என்று உடன் வந்திருந்த ஆண் கூறிவிட்டு, தனது விலாசம், தொலைபேசி எண் அடங்கிய ஓர் அட்டையை பூபாலனிடம் கொடுத்து விட்டு, தன் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, தன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.

சில நாட்களில், அவர் கொடுத்த விலாசத்திற்கு சென்றான் பூபாலன். அங்கு ஓர் பெரிய வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வந்தது.  அங்கு வாசலில் இருந்த காவலாளியிடம் அந்த அட்டையைக் காண்பித்ததும், உள்ளே அனுமதிக்கப்பட்டான் பூபாலன்.

அதன்பின், அவனது வாழ்க்கையின் தடம் நிச்சயம் மாறித்தானே போயிருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எவ்வளவு உண்மை !

குறிப்பு :

சிறுகதைப் போட்டியில் இக்கதைக்கு ஆறுதல் பரிசு கிட்டியுள்ளது.

சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015  

Tuesday, November 25, 2014

ஆயிஷா - இரா. நடராசன் அவர்களின் அறிவியல் புனைக்கதை

உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட  படைப்பு.


Saturday, July 26, 2014

அழகு

இரண்டு நாட்களாகவே பொன்மதியின் முகத்தில் சந்தோஷம், வெட்கம் கலந்த பூரிப்பு  நிழலாடியது. வழக்கத்தை விட சற்று அதிகமாகவே மஞ்சள் பூசிய முகம்  பளபளத்தது. பொன்மதியின் இந்த திடீர் பூரிப்பிற்கும், பளபளப்பிற்கும் காரணம், அந்த வாரக் கடைசியில், பொன்மதியை பெண் பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வர இருக்கிறார்கள்.

 பொன்மதி - காட்சிக்கு எளிமையானவள், மன உறுதி மிகக் கொண்டவள், எவரிடமும் கலகலப்பாய் பழகும் சுபாவம் கொண்டவள். நிறம் சற்று கருப்பென்றாலும், களையான முகம் கொண்டவள். உள்ளமோ, கள்ளம் கபடமறியா தூய்மையான பாலின் நிறத்தை ஒத்தது. கல்லூரிப் படிப்பை அந்த ஆண்டு தான் முடித்திருந்தாள்.

ஒரு நாளும் பொன்மதிக்கு, தன் கருப்பு நிறம் ஓர் பெரும் குறையாகவே தோன்றியதில்லை. " நிறமோ, உருவமோ ஒருவருக்கு உயர்வையும் உன்னதத்தையும் தருவதில்லை. மனதில் தோன்றும் எண்ணங்களே மனிதனை உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்கின்றன " என்ற உயரிய கருத்தை அவளது உள்ளத்தில் ஆழப் பதித்து வளர்த்திருந்தனர் அவளது பெற்றோர்.

எவரிடமும் கயமை பாராட்டாது, முடிந்தவரை பிறருக்கு தன்னாலான உதவிகளை செய்து , அனைவரிடமும் அன்பு பாராட்டி வந்தாள் பொன்மதி. எவரிடமும் சற்றும் அதிர்ந்து பேச மாட்டாள். கோபம் கொள்ள மாட்டாள். தன்னைப் பற்றி எவரேனும் அவதூறு பேசினாலோ, கிண்டல் கேலி செய்து பேசினாலோ, அதைக் கண்டு கோபம் கொள்ளாது அமைதியாக சென்று இருந்து விடுவாள்.

" உன்  காதுபடவே  உன்னை  இவ்வளவு கிண்டல் பண்றாங்களே, நீ எப்படி இதையெல்லாம் கேட்டுட்டு பொறுமையா இருக்க ? " என்று கேட்கும் தோழிகளுக்கு,

" போகட்டும் விடு. இப்போ, அவங்க வாய்க்கு நான் அவலா இருக்கேன். நாளைக்கு  பேச புதுசா கிடைச்சதும், நான் அவங்களுக்கு நமநமத்துப் போயிடுவேன். கொஞ்ச நாள் தானே. இது மூலமா அவங்களுக்கு ஏதோ சந்தோஷம், அனுபவிச்சிட்டுப் போகட்டும் விடு " என்று சமாதானம் சொல்வாள்.

தன்னைப் பெண் பார்க்க வரப் போகிறவர் எப்படி இருப்பாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், அவளது தந்தை நாகராஜன், 

" மாப்பிள்ளை வீட்டிலிருந்து வர்ற வெள்ளிக்கிழமை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் அம்மா " என்ற தந்தைக்கு, நாணம் கலந்த புன்னகையை பதிலாக உதிர்த்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள் பொன்மதி.

வெள்ளிக் கிழமையும் வந்தது. பொன்மதிக்கு ஒருபுறம் மகிழ்ச்சி, ஒருபுறம் படபடப்பு என்று இனம் புரியாத உணர்வலைகள் மனதுள் அலைமோதின. மாலையில் நல்ல நேரம் எப்போதென்று பார்த்து அப்போது கோயிலுக்கு செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் கோயிலுக்கு வந்து விடுவதாக சொல்லியிருந்தார்கள்.

மாலையில் தனது பெற்றோர் மற்றும் சில நெருங்கிய உறவுகளுடன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே வந்து காத்திருந்தனர். பொன்மதியை தூரத்திலிருந்து பார்த்தவர்கள், என்ன நினைத்தார்களோ, என்னவோ, சட்டென்று தாங்கள் வந்திருந்த காரிலேறி சென்று விட்டனர். என்ன ஏதென்று காரணம் புரியாது பெண் வீட்டார் தவித்தனர்.

ஓரிரு நாட்களுக்குப் பின், பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்த நாகராஜன்  அவர்களின் மாமா வந்த போது  சொன்ன பின்னர் தான் அவர்கள் பொன்மதி கருப்பு நிறமாக இருக்கிறாளென்றும், அதனால் பெண்ணைப் பிடிக்கவில்லை என்றும் சொல்லி  இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

பொன்மதியின் பெற்றோருக்கு மனம் என்னவோ போலிருந்தது.  தங்கள் மகள் வருத்தப் படுவாளே என்று எண்ணி மிகவும் வருத்தப்பட்டனர். இரண்டு நாட்களாக வீட்டில் அனைவரிடையேயும் ஒரு வித அமைதி நிலவியது.  அனைவரும் மௌனத்தையே துணையாக்கிக் கொள்ள, அனைவரது மௌன தவத்தையும் கலைப்பவளாய் பொன்மதி பேச ஆரம்பித்தாள்.

" அம்மா ! அப்பா ! எதுக்கு இப்போ வருத்தப்படுறீங்க ? பலதரப்பட்ட மனிதர்கள், அவர்களோட எண்ணங்கள், குணாதிசயங்கள், எதிர்பார்ப்புகள் இப்படி பல விஷயங்களை தெரிஞ்சிக்க கிடைத்த ஒரு வாய்ப்பா இதை எடுத்துக்குவோமே. நிறத்தை வெச்சு ஒருத்தரை எடை போடும் இத்தகைய மனிதர்களுடன், நாளை என்னோட வாழ்வு அமைஞ்சிருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. " நடப்பதெல்லாம் நன்மைக்கே " அப்படின்னு எடுத்துப்போம் " என்றாள் பொன்மதி.

ஓர் பெருத்த ஏக்கப் பெருமூச்சு மட்டுமே பெற்றோரிடமிருந்து பொன்மதிக்கு பதிலாக கிடைத்தது.

மீண்டும் பொன்மதியே தொடர்ந்தாள். முடி கருப்பா இருந்தால் தான் அழகு. நம் பார்வைக்கு கண்ணின் கருவிழி தான் ஆதாரம். அதில் வெள்ளை விழுந்தால் கண் புரை என்று சொல்கிறோம்.தோலில் திட்டு திட்டாக பளீரென்று வெள்ளை நிறமாக மாறினால், வெள்ளையாகி விட்டோம், வெள்ளை தான் அழகு என்றெண்ணி விட்டு விடலாமே ? அதை ஏன் வெண்குஷ்டம் அப்படின்னு சொல்லி டாக்டர் கிட்ட ஓடணும் ?

கருப்பு தான் அனைத்து நிறங்களுக்கும் அடிப்படை. எல்லா நிறங்களும் கருப்புக்குள்ள அடங்கிடும்.எனக்கு நல்லா சிவப்பா அல்லது மாநிறமா கூட மாப்பிள்ளை வேண்டாம். நல்ல கருப்பான மாப்பிள்ளையே பாருங்கப்பா. வெளித்தோற்றம் கருப்பா இருந்தாலென்ன ? உள்ளம் மாசு மரு இல்லாம வெள்ளையா இருந்தாலே போதும். அது தான் உண்மையான அழகு.

மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம் பொலபொலவென மழை சுமந்த கார்மேகம் போல கொட்டித் தீர்த்துவிட்டு, இலேசான மனதுடன் தனது அறை நோக்கி சென்றாள். அவளுக்கான இராஜகுமாரன் இனிமேலா பிறந்து வரப்போகிறான்? எங்கோ பிறந்து வளர்ந்து இருப்பான். விரைவில், இந்த இராஜகுமாரியை தேடி வருவான்.