blank'/> muhilneel: July 2013

Monday, July 29, 2013

செடிகளிடம் பேசுவது/ பாடுவது அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியுமா ?





 விதையிலிருந்து   புத்துயிராய்  மண்ணில் ஜனிக்கும் சின்னஞ்சிறிய நாற்றுகள்   செழிப்பாக வளர்வதற்கு சூரியஒளி, நீர், வளமான மண் இவை மட்டும் போதாது. நமது  அன்பு , அக்கறை நிறைந்த பேச்சும், மென்மையான இசையும் அவற்றின் வளர்ச்சிக்கு துணையாய் இருக்கும் என்கின்றனர்  பயிரியலாளர்கள்.

இதைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட அறிவியலாளர்கள், உண்மையிலேயே  அன்பாலும்  இசையாலும்  அதிகப்படியான மகசூல் கிட்டுகிறதா என்பதனை கண்டறிவதற்காக, அறுபது பட்டாணி செடிகளை எடுத்துக் கொண்டனர். அவற்றை மூன்று பிரிவுகளாக பிரித்து தனித்தனியே  மூன்று பசுமைக் குடில்களில் ( Green House ) வளர்த்தனர்.இரண்டு வகையான குரல்களைப் பதிவு செய்தனர். ஒன்று, மிகவும் அன்பும் கருணையும் நிறைந்த கனிவான குரல். மற்றொன்று ஏச்சும், ஆத்திரமும்  நிறைந்த குரல்.ஒரு பசுமைக் குடிலில் அன்பான குரலையும், மற்றொன்றில் ஆத்திரமான குரலையும் ஒலிக்கச் செய்தனர். மூன்றாம் குடிலில், எவ்விதமான ஒலியும் இல்லாது அமைதியாக வைக்கப்பட்டிருந்தது. அறுபது நாட்கள் இச்சோதனை முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

அறுபது  நாட்களுக்குப் பின், தாவரங்களின் வளர்ச்சி, அவற்றின் மகசூல் கணக்கிடப் பட்டன. எந்த பசுமைக் குடிலில் இருக்கும் தாவரங்கள் அதிக மகசூலை வழங்கியுள்ளன என்று கணக்கிட்டபோது,  எந்த இரு குடில்களில் குரல்கள்  ஒலித்துக் கொண்டிருந்தனவோ, அவை நல்ல மகசூலைக் கொடுத்திருந்தன. கனிவான குரல் கேட்டு வளர்ந்த தாவரங்கட்கும், ஆத்திரமான குரல் கேட்டு வளர்ந்த தாவரங்கட்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. நல்ல மகசூலையே கொடுத்திருந்தன. ஆனால், அமைதியாக, ஒலியேதும் இல்லாது வளர்க்கப்பட்ட தாவரங்களின் மகசூல்  மிகவும் குறைவாக, அளவில் சிறிதான பட்டாணிகளையே கொடுத்திருந்தன.


எனவே, நமது பேச்சு செடிகளின் நல் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கின்றன. இனிமேல், செடிகளுக்கு நீரூற்றும் போது, சில நொடிகள் அவற்றுடன் பேசலாமே !!!


Source:  http://dsc.discovery.com/tv-shows/mythbusters/mythbusters-database/talking-to-plants.htm

 

Thursday, July 25, 2013

உறக்கத்திலோர் உளறல் !!!

                      


                    ஜானவி அந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வேதியியல் பாடப்பிரிவில் புதிதாக இணைந்திருந்தாள் . கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சென்ற பின்னரே அவள் வந்து சேர்ந்திருந்தாள் . பொறியியல் நுழைவுத்  தேர்வெழுதி விட்டு, முடிவுகளுக்காய் காத்திருந்தாள் . அவளது மதிப்பெண்கட்கு வெளியூரில் உள்ள புகழ் பெற்ற பொறியியற் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், தங்களது பிள்ளையை தங்களை விட்டு வெகு தொலைவிலிருக்கும் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, அவளது பிரிவால் கஷ்டப்பட அவளது பெற்றோர் விரும்பவில்லை. எனவே, அவளை தங்களது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் கல்லூரியிலேயே சேர்த்தனர்.


                             அன்றாடம் கல்லூரிக்கு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பேருந்தில் பிரயாணம்.  காலை மாலை வேளைகளில் இரண்டு மணிநேர பிரயாணத்தால் அவள் மிகவும் சோர்வுற்றாள் . இதனால், அவளுக்கு பாடங்களில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை. காலையில் அவசர அவசரமாக   உண்டும் உண்ணாமலும் ஓடுவாள். மாலையிலோ, பயணக் களைப்பிலேயே சீக்கிரமாய் உறங்கிப் போவாள். பாடங்கள் படிக்க போதிய நேரம் இல்லாமல் இருந்தது. கல்லூரி விடுதியில் தங்கிக் கொண்டால், அலைச்சலும் மிச்சமாகும், படிக்கவும் நிறைய நேரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், விடுதியில்  சேரப்போவதாக பெற்றோரிடம் கூறினாள். இதைக் கேட்டவுடன், அவர்களுக்கு என்னவோ போல் இருந்தது. மகளைப் பிரிய அவர்கள் விரும்பவில்லை. பின்னர், அவளது படிப்பு  கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அரைமனதாக ஒப்புக் கொண்டனர். இதுநாள் வரை, தன பெற்றோரை பிரியாத ஜானவிக்கு மனது என்னவோ போலிருந்தது. ஒருவாறு மனதினை தேற்றிக் கொண்டாள் . வார இறுதியில் வீட்டிற்கு வந்து செல்லலாம் என்றபடியால், அவளது மனதிற்கு ஆறுதலாய் அமைந்தது.


                                                       கல்லூரி விடுதியில் ஜானவிக்கு கொடுக்கப்பட்ட அறையில் ஏற்கனவே நால்வர் தங்கி இருந்தனர்.இரண்டு இரண்டாமாண்டு மாணவிகள் அனிதா, கற்பகம், மூன்றாமாண்டு மாணவி சக்தி, முதலாமாண்டு மாணவி சந்தியா. ஐந்தாவதாய் ஜானவி வந்து சேர்ந்தாள். ஜானவி அறைக்குள் சென்று தனது உடைமைகளை வைத்து விட்டு, அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மற்றவர்களது முகத்தில் அவ்வளவாக ஆர்வமில்லாது கடனே என்று அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு மாத காலமாய் நால்வராய் மட்டுமே இருந்து பழகிய அவர்களுக்கு, ஐந்தாவதாய் வரும் ஒருவரை அனுசரித்துப் போக மனமில்லை. அவர்கள் ஏன்  இப்படி இருக்கிறார்கள் என்பது விளங்காமல் சற்று குழப்பமடைந்தாள். அவர்களது செய்கைகளும் நடத்தைகளும் சற்று வருத்தமளித்தாலும், தான் படிப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். எவரைப் பற்றியும்  எண்ணி எதற்கு வீணான மனசஞ்சலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென  சகஜ நிலையில் இருக்க முயன்றாள்.


                                                            ஓர்நாள்  இரவு, விடுதியில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, எங்கும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. வெளி வராண்டாவில் இருக்கும்   மின்விளக்கின் ஒளியைத்   தவிர, மற்ற இடங்களில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அவ்வப்போது, பூச்சிகளின் சப்தம் மட்டுமே.திடீரென, அந்தப் பேரமைதியைக் குத்திக் கிழிக்கும் விதமாக, ஓர் குரல். தூக்கத்திலிருந்து பதறிப்போய்  எழுந்தாள்  சக்தி. முதலில் முனுமுனுப்பாய் ஆரம்பித்த அக்குரல் மெல்ல மெல்ல உயர்ந்தது. சப்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ஜானவி பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பேசுவது எதுவும் ஓர்  கோர்வையாக இல்லாமல், ஏதோ உளறல் போல் இருந்தது. அறையிலிருந்த மற்ற நால்வரும் பயந்து போய்  விழித்துக் கொண்டனர். யாரும் எழுத்திருக்காது படுத்தபடியே வைத்த கண் வாங்காது ஜானவியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென ஜானவி, தடதடவென்று  உருண்டு வந்து, தன்  அருகினில் படுத்திருந்த சக்தியினை வேகமாக கட்டிலுக்கடியில் தள்ளிவிட்டாள் . மேலே காலை தூக்கிப் போட்டவள், சக்தியைப் பார்த்து, " யார் நீ ? " "யார் நீ ?" என்று பெரும் கூச்சலிட்டாள் . எதிர்பாரா நேரத்தில், எதிர்பாராததொரு நிகழ்வினைக் கண்ட சக்தி பயத்தில் அப்படியே உறைந்து போனாள். வீறிட்டு அலறினாள் . இதற்குள், அனைவரும் பயந்து போய், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து பயத்துடன் சுவற்றின் ஓரமாய் ஒதுங்கி நிற்க, சக்தியும் ஒருவாறு சமாளித்து கட்டிலுக்கடியிலிருந்து எழுந்து மற்ற மாணவியருடன் நின்று கொண்டாள். அனைவரும் பயத்தில் ஏதும் புரியாது நின்று கொண்டிருக்க, படுக்கையில் இருந்து எழுந்த ஜானவி, அப்போது தான் உறக்கத்திலிருந்து  எழுந்தவள் போல் ,    " என்னாச்சு ?       ஏன் எல்லாரும் பயந்து போய்  நிக்கறீங்க? " என்றவாறு மற்றவர்களிடம் வந்தாள். ஆனால், அனைவரும் பயந்து ஒதுங்கினர்.        


                                                      அடுத்தநாள் காலை, இச்செய்தி  விடுதி முழுவதும் பரவியது. விடுதி மாணவிகள் அனைவரும் ஜானவியை விசித்திரமாகப் பார்த்தனர். அவளது வகுப்பில் மற்ற மாணவியருக்கும் இவ்விஷயம் தெரியவர, எவரும் அவளுடன் பேசவில்லை.  இன்னும் பலரோ பயந்து ஒதுங்கினர். சிலர் ஒருபடி மேலே போய்  " இவளுக்கு பேய் புடிச்சிருக்கு போல"  என்றனர். சிலர்           "இவளுக்கு பைத்தியம்" என்று தங்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் கேட்ட ஜானவி, கண்கள் குளமாக மௌனமாய் நடந்து கொண்டிருந்தாள் . ஜானவியின்  பின்னால் கூட்டமாக, அவளது வகுப்பு மாணவியர் சிலர் வந்து  கொண்டிருந்தனர். அவர்கள் மெல்லிய  குரலில் " ஏய் ! ஜானவி போறா...இவளுக்கு பேய் புடிச்சிருக்கான்னு பாத்துரலாம்.பேய்க்கு முன்னாடி நின்னு பேசுனா தான் கேட்கும்.பின்னாடி இருந்து பேசுனா தெரியாது. இவ பேயான்னு சோதனை பண்ணிருவோம்" என்று பேசி இருக்கின்றனர்.இதனால் மிகவும் மனமுடைந்து போனாள்  ஜானவி. அறையில் உடனிருக்கும் மாணவியரோ , ஜானவி அறையில் இருந்தால், படீரென கதவை அடைப்பதும், எவரையோ திட்டுவதைப் போல் மறைமுகமாக ஜானவியைத் திட்டுவதும் என  அவளை துன்பப் படுத்தினர். இதனால், காலையில் அறையை விட்டு வெளியேறினால், மாலையில் அறையில்  எவருமில்லாத நேரத்தில் வந்து தன்  வேலைகளை முடித்துக் கொள்வாள்.இரவிலும் வெகுநேரம் கழித்து அனைவரும் உறங்கிய பின்னரே, உறங்க வருவாள். அவளது நிலை மிகவும் பாவமாக இருந்தது.


                                                   சில நாட்களாக ஜானவியை கவனித்து வந்தாள் சக்தி. அவள் ஏதோ சோகத்தில் இருப்பதாய் உணர்ந்தாள். மாணவியர் அவளை கிண்டல் செய்வதையும் கேள்விப்பட்டாள். மிகவும் வருத்தமுற்றாள். அவளது மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை புரிந்தவளாய், அன்று மாலை வகுப்புகளனைத்தும் முடிந்த நிலையில் ஜானவியை அவளது வகுப்பில் சென்று பார்த்தாள்.  ஒருவித பயத்துடனே சக்தியை நோக்கி வந்தாள் ஜானவி. " பயப்படாத ஜானவி. " என்று அவளுக்கு தைரியமளித்தாள். " அன்றைக்கு  இராத்திரி என்ன நடந்ததுன்னு தெரியுமா? " என்றாள். "தெரியலையே அக்கா... எல்லாரும் பயந்து போய் நின்னுட்டு இருந்தீங்க. நானும் வந்து உங்களோட நின்னப்ப , எல்லாரும் என்னையப் பாக்கவே பயந்து ஒதுங்குனீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. நானும் பயந்துட்டேன் அக்கா" என்றாள் .  சக்தி மெதுவாக அந்த இரவு நடந்த விபரங்களை ஒவ்வொன்றாகச் சொன்னாள். " நான் இப்படி எல்லாமா அக்கா பண்ணினேன் ? எனக்கு எதுவுமே தெரியாது அக்கா. சாரி " என்றாள் ஜானவி.  தான் ஏதோ  உடல் கோளாறுக்காக மருந்து எடுத்துக் கொள்வதாகவும், அம்மருந்தின் பக்க விளைவுகள் இவ்வாறு இருக்கக்கூடுமென மருத்துவர் கூறியிருப்பதாக தெரிவித்தாள். உண்மையை அறிந்து கொண்ட சக்தி, அதன்பின் அவளுடன் எப்போதும் போல் சகஜமாகப் பழகினாள்.


                                                        ஒருமாதம் சென்றுவிட்ட நிலையில், ஜானவியுடன் அனைவரும் சகஜமாகப் பழகாவிட்டாலும், ஒரு சிலர் அவளுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டனர். தனிமைத் துயர் தீர்ந்தபடியால், அவளும் மகிழ்வுடன் தன் பாடங்களில் கவனம் செலுத்தலானாள் . ஒருசிலரோ, இன்னும் அவளை கிண்டலடித்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்களை அவள்  ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தன் தோழியருடன் மகிழ்வாகவே தன் கல்லூரி வாழ்வை அனுபவித்தாள்.

                                              மீண்டும் ஓர் நாள் இரவு, ஜானவி தூக்கத்தில் கை கால்களை உதற  ஆரம்பித்தாள். ஏதேதோ பேசினாள் . இம்முறையும் அறையில் உடனிருந்த மற்ற மாணவியர் அனைவரும் பயப்பட, சக்தி மட்டும் அருகில் சென்று அவளை எழுப்பினாள். அவள் எழுந்திரிப்பதாய் இல்லை. பெருங்குரலெடுத்து ஏதோ பேச ஆரம்பித்தாள். மனதினுள் இதற்கு முன் ஏற்பட்ட அனுபவம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , ஜானவியை உலுக்கினாள். " ஜானவி !  ஜானவி ! எழுந்திரு ! என்னாயிற்று உனக்கு ? எழுந்திரு!  " என்று சற்று சப்தமாகக்  கூறினாள். உறக்கம் கலைந்தவளாய் எழுந்த ஜானவி , " என்னக்கா ஆச்சு ? ஏதாவது பேசினேனா? " என்றாள். "ஆமாம் ! " என்றாள்  சக்தி . " பயமா இருக்கு அக்கா! நான் உங்க கையைப் பிடிச்சுட்டு படுத்துக்கறேன்" என்ற ஜானவி, சக்தியின் கையைப் பிடித்தவாறே உறங்கிப் போனாள். அதன்பின், ஓர்நாளும் ஜானவி உறக்கத்தில் பேசவில்லை.

                                                        தனக்கு ஆதரவாயும், பக்கத் துணையாகவும் ஒருவர் இருக்கிறார் என்ற மனோதிடம் ஜானவிக்கு ஏற்பட, அவளது பயம் அனைத்தும் இருந்த இடம் தெரியாது பறந்தோடியது.

p.s.

Somniloquy
           Somniloquy or sleep-talking refers to talking aloud while asleep. It can be quite loud, ranging from simple sounds to long speeches, and can occur many times during sleep. Listeners may or may not be able to understand what the person is saying. Sleep talkers usually seem to be talking to themselves. But sometimes, they appear to carry on conversations with others. They may whisper, or they might shout.actions may be funny or violent. Things that can cause sleep talking include : certain medications, emotional stress, fever, mental health disorder.



Source:
wikipedia.org

webmd.com

 நன்றி. வல்லமை மின் இதழ் 
http://www.vallamai.com/?p=37158 

Monday, July 22, 2013

சில மலர்கள் இரவில் மலர்வது ஏன் ?

செண்பகம்
மனோரஞ்சிதம்
சம்பங்கி

          சில மலர்களில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் ஏற்படுகின்றது.அத்தகைய மலர்கள் இரவில் மட்டுமே மலர்கின்றன. அம்மலர்களின் வாசனை அபாரமாக இருக்கும்.மேலும், இரவில் மலரும் மலர்கள் வெண்மை நிறத்திலேயே இருக்கின்றன.இது அவற்றின் மரபணு தனிப்பண்பு ஆகும்.பகலில் மலரும் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன.அதனால், வண்டுகள்,தேனீக்கள் போன்றவை அவைகளால் எளிதில் கவரப்படுகின்றன.வெண்ணிற மலர்கட்கு பகலில் வண்டுகள்,வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை குறைவு. எனவே, அவை இரவில் மலரும் தழுவலைப் (adaption) பெற்றுள்ளன. வெண்மை நிற மலர்கள் இருளில் நன்கு தெரிவதால், அவை பூச்சிகள்,வௌவால்கள் ஆகியவற்றை எளிதில் கவர்கின்றன.மேலும், இவற்றின் அபார வாசனை பூச்சிகளை தன்வசம் இழுக்கின்றன.மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது.
 
                இரவில் மலரும் மலர்கள் சில: மல்லிகை, செம்பகம்,சம்பங்கி, மனோரஞ்சிதம்,வெண்தாமரை,நிஷாகந்தி.



மல்லிகை
வெண்தாமரை
நிஷாகந்தி

Thursday, July 18, 2013

எதிர்பாரா நேரத்திலோர் பதட்டம் !!!

                         

                          அமெரிக்காவில்,   ஆபத்திலிருக்கும்  மக்களின் அவசர உதவிக்கு (Emergency) பயன்படுத்த 911 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். நம் ஊரில் அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்புப் படைக்கு 101, மருத்துவ உதவிக்கு 102 என்ற தொலைபேசி எண்களைப் போல் தான், அமெரிக்காவில் இந்த 911.
         
                                     நம்மை அறியாமல் தவறுதலாக 91 என்ற எண்களை அழுத்திவிட்டால் கூட, 911 ற்கு அழைப்பு போய் விடும். சில வேளைகளில், எந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்ததோ, அந்த எண்ணிற்கு போலீசார் அழைத்து, ஏதேனும் உதவி தேவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்வார்கள். அல்லது, நமது தொலைபேசி எண்ணைக்  கொண்டு நம் வீட்டிற்கே வந்து, ஏதேனும் ஆபத்திலிருக்கிறோமா, உதவி ஏதேனும் தேவையா என்று விசாரிக்க வந்து விடுவர்.

              
Smoke Detector
                    


            தீவிபத்துகள் ஏதேனும் ஏற்பட்டுவிடின், உடனடியாக நாம் ஆபத்திலிருப்பதை பிறருக்குத் தெரியப்படுத்தவும், உதவிக்கு ஆட்கள் வர ஏதுவாக இருக்க, புகை கண்டறியும் கருவிகள் (Smoke Detectors) வீட்டின் எல்லா அறைகளிலும் இருக்கும். வீட்டினுள் புகை சூழ்ந்தால், உடனே "Fire ! Fire !" என்று அலறியவாறு, "உய்ய்...உய்ய்..." என்று விசிலடிக்க ஆரம்பித்துவிடும். சில கட்டிடங்களில் Sprinkler வசதியும் இருக்கும். இந்த Sprinkler அறையினுள் நெருப்பினால் வெப்பநிலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டு, நீரினை தெளிக்க ஆரம்பிக்கும். புகை கண்டறியும் கருவிகள் தீயணைப்புத் துறையுடன் இணைக்கப்பட்டிருப்பின், தீயணைப்புப் படை வீரர்கள் உடனே வந்து விடுவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.நாங்கள் இருந்த குடியிருப்புகளில், அவை தீயணைப்புத் துறையுடன் இணைக்கப்படவில்லை  என்றே எண்ணுகிறேன். 


Sprinkler-Head

                             
              அமெரிக்கா வந்த புதிதில், ஓர் நாள் வழக்கம் போல்  சமையல் செய்து கொண்டிருந்தேன். நான்கு பர்னர் கொண்ட அடுப்பில், ஒவ்வோர் பர்னரிலும் குழம்பு, பொரியல், சாதம் என்று தயாராகிக் கொண்டிருந்தது. குக்கரில் சாதம் வைத்து விட்டு, விசிலுக்காக காத்திருக்க,விசில் வந்ததும், அடுப்பினை அணைக்கச் சென்றால், திடீரென்று "உய்ய்...உய்ய்" என்ற அலறலோடு, "Fire ! Fire !" என்ற சப்தம் வேறு. வீட்டினுள் சுற்றும் முற்றும் பயத்தோடு பார்த்தால், எங்கும் நெருப்பு இருப்பதாய்த்  தோன்றவில்லை. ஒருவித சைரன் ஓசையுடன் மீண்டும், "Fire ! Fire !" என்ற அலறல். அதன் பின் தான் புரிந்தது, குக்கரின் விசில் வரும்போது வேகமாய் வெளியேறிய நீராவிக்கே இந்தப் பாடு என்று. அதன் பின் தான், அடுப்பிலிருக்கும் Vent Fan ன் பயன்பாட்டினை அறிந்து கொண்டேன்.

                    மற்றொரு நாள், காலை வேளையில், சப்பாத்தி சாப்பிடத் தோன்றவே, பூரிப்பலகையில் சப்பாத்திகளை தேய்த்து வைத்து விட்டு, அடுப்பில் Non-Stick pan காய வைத்து, சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தேன். ஏனோ, வேக  நேரமாகவே, சற்று சூட்டினை அதிகப்படுத்தினால் என்ன என்று அதிகப்படுத்த, சப்பாத்திகள் வேகமாக ஆகின. ஆனால், வீடே ஒரே புகை மண்டலமாக ஆகிப் போனது. "Fire ! Fire !"  என்று அலாரம் அலற, பின் அடுப்பினை அணைத்து விட்டு, கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து, smoke detector ன் அருகே ஓர் துண்டை வைத்து விசிற, கால் மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அலார சப்தம் நின்றது.

                      அதே போல், வீட்டில் விளக்கேற்றி, கற்பூரம், ஊதுபத்தி ஏற்றும் போது, அதிலிருந்து வரும் புகையினாலும் Fire Alarm அடிப்பதுண்டு. இதனால், பலரும் அதிலுள்ள பேட்டரிகளை கழற்றி வைத்துவிடுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போல், பேட்டரிகள் தீர்ந்து விட்டாலும், நிமிடத்திற்கு ஒருமுறை, "  low battery ! low battery ! " என்று அலறிக் கொண்டிருக்கும். இம்முறை, நாம் ஆபத்திலிருப்பதை பிறருக்குத் தெரிவிக்க நல்லதோர் உபாயம் என்றாலும், நாம் சர்வசாதாரணமாய்ச் செய்யும் அன்றாட அலுவல்களில், இதனால் ஏற்படும் சில நிமிட பரபரப்பும், பதட்டமும் சொல்லி மாளாது.

Tuesday, July 16, 2013

பேனா...




Ball-Point Pen & Refill

             மையூற்று எழுதுகோல் (Fountain Pen),பந்துமுனை எழுதுகோல் (Ball-Point Pen), ஹீரோ பேனா  (Hero Pen), ஜெல் பேனா (Gel Pen), பார்க்கர் பேனா  (Parker Pen)  என்று  எத்தனையோ வகையான பேனாக்களை
Micro tip Pen
படிக்கும் காலத்தில் பயன்படுத்தியதுண்டு. பள்ளிகளில் தெளிவான  அழகான கையெழுத்திற்கு  மையூற்றுப் பேனாக்களே  சிறந்ததென்று  ஆசிரியர்கள்  அவற்றை வைத்தே எழுதிப் பழகச் சொல்வர். இன்னும் பல ஆசிரியர்கள்,  பரீட்சைகட்கு  பந்துமுனை பேனாக்களை பயன்படுத்த வேண்டாமென்றும் அறிவுறுத்துவர் .







Ink Pen
Hero Pen

                                  படிக்கிற காலத்தில், அதிகமாகப் பயன்படுத்தியது, மை  பேனாக்களும், பந்துமுனைப் பேனாக்களும்  மட்டுமே. பார்க்கர் பேனா, ஹீரோ பேனாக்கள் எல்லாம் குறைந்த அளவே மை பிடிக்கும். ஜெல் பேனாக்களின் மை விரைவாக தீர்ந்து போய்விடும். எனவே, மை பேனாக்களையே அதிகம் பயன்படுத்தியதுண்டு.
Gel Pen

Feather Pen

                   சில சமயங்களில், பறவைகளின் இறகின் நுனியில் மை தொட்டு எழுதிய எழுதிய அனுபவமும் உண்டு.அதில் எழுதும் போது, எழுத்துக்கள் ஏதோ  Stencil (நகல் எடுக்க உதவும் உள்வெட்டுத் தகடு)  வைத்து  எழுதியது போல்  இரட்டைக் கோடுகளாய் வரும்.மையினை  தனியாக  எடுத்துக் கொண்டு, பறவையின்  இறகின்  நுனியில் மை தொட்டு எழுதுவதும் இனிமையானதோர் அனுபவமே.





Nib
       பேனாக்களில் மை தீர்ந்துவிடில், அருகில் அமர்ந்திருக்கும் சக மாணவரிடம், அவர்களது பேனாவிலிருக்கும்  மையினை சிறிது மேசையின் மேல்  உதறச்  சொல்லி, நிப்பைக் கொண்டு மையை உறிஞ்சி எழுதியதும் உண்டு. சில சமயங்களில், மை தீர்ந்தால், சிறிது தண்ணீர் ஊற்றி  எழுதியது கூட உண்டு. ஏற்கனவே ஒட்டிக் கொண்டிருக்கும் மையுடன், நீர் சேர்த்து எழுதும் போது , எழுத்துக்கள் நன்கு பளிச்சென்று இல்லாமல், சற்று மங்கி இருந்தாலும், ஏதோ அவசரத்திற்கு சமாளிக்க ஏதுவாக இருக்கும்.



Ink-Filler
                         இன்றோ , எழுதும் பழக்கமே குறைந்து கொண்டே வருகின்ற ஒன்றாகி வருகிறது. கணிப்பொறி (Computer), கைபேசி (Cellular Phone), மடிக்கணினி  (Laptop), iPad,iPhone, Tablet PC என்று    தொழில் நுட்ப  வளர்ச்சி  தகவல்களை விரல் நுனியில் கிடைக்கச் செய்கின்றன. தகவல் பரிமாற்றமும் எளிதான ஒன்றாகி விட்டது. தகவல்  தொழில்நுட்பத் துறையும் நாளுக்கு நாள், புதுப்புது மாற்றங்களை சந்தித்து வருகிறது. தந்தி சேவை சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது நாமனைவரும் அறிந்ததே. 



Parker Pen



           நாம் நினைவில் (Memory) ஏற்றிக் கொள்கிறோமோ இல்லையோ, கணினியின்  நினைவகத்தில் ( Computer Memory) ஏற்றிவிட்டு  அதைப் பற்றி மறந்து விடுகிறோம். இன்று கல்வி முறை, பாடத் திட்டங்கள், தேர்வு முறை, மதிப்பீடு  என அனைத்துமே கணினி  மயமானது நாமனைவரும் அறிந்ததே. காலப்போக்கில், பேனாக்கள், பென்சில்கள் போன்ற எழுது பொருட்களே இல்லாமல் போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை !!!!

Monday, July 15, 2013

இயற்கையின் வரமும் பூரணத்துவமும்




Road To Munnar From Bodinayakanur
              


             எப்பொழுதும் ஆரவாரத்துடனும் பரபரப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சாலையில், ஓர் பள்ளிக்கூடம், திருமண மண்டபம், மூன்று டீக்கடைகள், தொழிலாளர் சங்கமொன்று, இரண்டு மளிகைக் கடைகள்  என்று பலவகையான இடங்கள், அங்கு மனிதர்களும் வந்து போவதுமாய் இருந்தார்கள். அந்தச் சாலையும் , நகர பேருந்து நிலையத்திலிருந்து வருகின்ற சாலையும் சந்திக்கும் இடத்தில், கம்பீரமாய் சிலையாய் சிரித்துக் கொண்டிருந்தார் பெருந்தலைவர் காமராசர்.
                     
                 அந்தச்  சாலையின் இருமருங்கிலும், பல பிரிவுகளாய், பல தெருக்கள், பல்வேறு பெயர்களுடன். முருகன் டீக்கடையை ஒட்டியிருந்த சந்தினுள்  நுழைந்து  நடக்க, அங்கே சாலை குறுகலாய் ஆகி, சாலையின் இரு மருங்கிலும் எதிரெதிராய் பல வீடுகள். உள்ளே, மேலும் பல தெருக்கள். தெரு முடிந்த இடத்திலிருந்து, வயல்வெளிகள் ஆரம்பமாயின. நீர்ப்பாசனத்துடன் இருந்த வயல்களில், பச்சைப் பசேலென பயிர்கள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

              ஒரு சிறு தெரு முற்றுப் பெற்ற இடத்தில், மண் மேடாய் காட்சியளித்தது. அந்த மண் மேட்டில், கோழிகளும், சேவல்களும் தம் குஞ்சுகளுடன் மண்ணைக் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தன. அங்கே, அடர்ந்து, கிளைகளைப் பரப்பி, பல புள்ளினங்கட்கு அடைக்கலமளித்து காத்து வரும் உயர்ந்த நாவல் மரம். நாவல் பழங்கள் கனியும் காலத்தில், பழங்களனைத்தும் கரும் ஊதா நிறத்தில், காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கும். சற்று பலமான காற்றடித்தால், பழங்களனைத்தும் உதிர்ந்து மண்ணில் விழுந்து கிடக்கும். அவற்றுள் பல, பறவைகள் கொத்திப் போட்டதாய் இருக்கும். பழம் கோத்த வரும் பறவைகள் கூட்டம் ஒருபுறம், கிழே சிதறிக் கிடக்கும் பழங்களை எடுக்க வரும் சிறுவர் கூட்டம் ஒருபுறமென, காலை வேளைகளில், அம்மரத்தடியே கலகலவென பல வகையான ஒலிகளால் நிரம்பி இருக்கும்.

                         நாவல் மரத்திற்கு சற்று தள்ளி, மிகப் பழமையானதொரு புளிய மரம். அதன் வயதறிந்தவர்கள், கிட்டத்தட்ட ஐம்பது அறுபதாண்டு கால பழமையான மரமாக இருக்கலாம் என்று கூறுவர். அம்மரம், அந்தப் பகுதிவாழ் பெண்களுக்கு, ஓர் வேலைவாய்ப்பினையும், வருமானத்திற்கான வழிதனையும் ஏற்படுத்திக் கொடுத்ததென்று சொன்னால், அது மிகையாகாது.மரத்திலிருந்து உதிரும் புளியம்பழங்களை சேகரித்து, அவற்றிலிருக்கும் கொட்டைகளைத் தட்டி எடுத்து, நார்க் கழிவுகளை நீக்கி, சுத்தமான புளியை, கூட்டுறவு சங்கத்தினில் கொடுத்தால், ஒரு கிலோ புளிக்கு இவ்வளவு என விலை நிர்ணயம் செய்து, எடுத்துக் கொள்வர். சில சமயங்களில், கூட்டுறவு சங்கமே மக்களுக்கு கொட்டைப் புளியை வழங்குவதும் உண்டு. இது போக, கோழி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு போன்ற சிறுதொழில்களிலும் மக்கள் ஈடுபட்டு வந்தனர். வயல்வெளிகளின் அருகில் கூட்டமாய்ச் செல்லும் வாத்துக்களின் அழகே தனி.

                           இயற்கையுடன் இயைந்த வாழ்வொன்றை மேற்கொள்ளும் அச்சிற்றூரை, இயற்கையன்னை மிகப் பொலிவுடனே அலங்கரித்து வைத்திருக்கிறாள் . ஊருக்கு மகுடமென அழகிய மலைச் சிகரங்கள், சுற்றிலும் வேலியென  அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், மலையருவி என அமைந்திருக்கும் அவ்வூர்  இயற்கையின் வரமதையும், பூரணத்துவத்தையும்  பெற்றிருக்கிறது எனில், அதை மறுத்திட முடியுமோ ??  




Sunday, July 14, 2013

எது வெற்றி?





"   எண்ணிய எண்ணியாங்கு எய்துதல்  "  

                இதுவே வெற்றி என்று கொள்ளப்படுகிறது. இதனை, மனதினில் ஆசைப்பட்டதை எப்பாடுபட்டயினும் அடைவது, உள்ளக் கனவுகளை நனவாக்குவது, எதிலும் முன்னணியாய், பலருக்கு முன்னோடியாய் இருத்தல் என்றும் கொள்ளலாம்.
                  இலக்கினை  ஒரே முயற்சியில் எட்டுதலும் வெற்றி தான். அதேபோல், தோல்விகள் ஏற்படினும், மேற்கொள்ளும் முயற்சிகளில் தொய்வேற்படாது, மனம் தளராது, விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும்  இலக்கினை எட்டிப் பிடித்தாலும் வெற்றி தான்.


                 ஆக, வெற்றி என்பது,
  •  செய்ய எண்ணியதை செம்மையாகச் செய்து முடித்தல். 
  •   படிப்படியான முன்னேற்றம். 
  •  " பல தொழில் கற்றவன் ஒரு தொழிலும் செய்யான்" ( Jack of All trades, but Master  of  None ) என்றில்லாமல், ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முன்னேற்றம் கண்டு , தனித்துவத்துடன் விளங்குதலே ஆகும்.  
  • நினைத்த இலக்கை அடையும் வரை முயற்சியைக் கைவிடாது இருத்தல். விவேகானந்தரின் கூற்றுப்படி,"Arise, Awake and Stop not till the Goal is Reached" 
  • எத்துனை முறை  தோற்றாலும், மனம் தளராது, அடுத்த முயற்சியை புத்துணர்வுடனும், தன்னம்பிக்கையுடனும் மேற்கொள்வது. 
  •  முயற்சி மேற்கொள்வதன் நோக்கம் "வெற்றி" . வெற்றி பெறத் தேவை "உழைப்பு" . உழைப்பிற்கு தேவை " உற்சாகம் ". எனவே, மேற்கொள்ளும் காரியம் எதுவாயினும் உற்சாகத்துடன் ஈடுபடுதல்.
                                  
வெற்றி ! - அதுவே மனதின் நோக்கம்
அதற்குத் தேவை - தளர்விலா ஊக்கம்
என்றும் கூடாது - தோல்வியால் ஏக்கம்
படிப்படியான தொடர் வளர்ச்சி - அதுவே ஆக்கம் !!! 

Monday, July 8, 2013

நன்றி



                     பார்கவி  அந்த அடுக்குமாடிக்   குடியிருப்பிற்கு  வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அவர்களது அடுக்குமாடித் தொகுதியில் மூன்று தளங்கள் இருந்தன. இவர்களது  வீடு முதல் மாடியில் இருந்தது. தரை தளத்தைத் தாண்டி முதல் தளத்துக்கு வருமுன் உயிரை கையில் பிடித்துக் கொண்டே தான் வருவாள் பார்கவி. அவளது மகள் மகி குட்டிக்கோ, அதைவிட பெரும் பயம். எப்போதும் அந்த தரை தளத்தினைத் தாண்டும் வரை அம்மாவை ஒண்டிக் கொண்டே தான் செல்வாள். இவர்களது பயத்திற்கான காரணம், தரைதளத்தில் இருக்கும் மூன்றாம் எண்  வீட்டிலிருக்கும் திரு. ரோஜர்  அவர்களது  செல்லப் பிராணியே அதற்குக்  காரணம்.


                    சீசர், கிட்டத்தட்ட அறுபத்தைந்து  பவுண்டு எடையும்,  முப்பது இன்ச் உயரமும் கொண்ட கம்பீர உயரம். காண்பவர் எவரும் சட்டென்று  பயந்துவிடக் கூடிய அளவுக்கு இருக்கும். ஆனால், திரு.ரோஜரோ , " டோன்ட் ஒர்ரி. ஹீ  இஸ்  ஜஸ்ட் எ லிட்டில் பாய். ஹீ  வில் நாட் ஹார்ம்  எனிஒன்" (Don't worry. He is just a little boy. He will not harm anyone)  என்று கூறுவார். அது மெல்ல உர்ரென்று  உருமினாலே, ஏதோ  " பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஜாக்கிரதை ! " என்று எச்சரிக்கை விடுப்பது போல் இருக்கும். பூட்டிய வீ ட்டினுள் தான் இருக்கும்.ஆனாலும் வெளியில் எவரும் நடக்கும் அரவம் கேட்டால் போதும், பயங்கரமாக குரைத்து, கதவைப் பிராண்டி, வெளியில் போய், வருபவர் மேல் பாய்ந்துவிட மாட்டோமா எனும்படியாகத் தான் இருக்கும் அதன் செய்கைகள். 

                      
                     ஒரு மாதம் சென்றிருக்கும். சில நாட்களாகவே ஏனோ சீசரின் சப்தம் கேட்பதே இல்லை. ஏனென்று சில வேளைகளில் பார்கவி எண்ணினாலும், "அப்பாடா. சில நாட்களாக நாயின் சப்தமோ, அரவமோ இல்லாததால் நிம்மதியாக நடமாட முடிகிறதே"  என்றெண்ணி  அமைதியானாள்.

                          
                          ஓர்நாள், துணிகளைத் துவைப்பதற்காக லாண்டரிக்குச்  சென்று  துணிகளை எல்லாம் மெஷினில் போட்டுவிட்டு, அங்கிருந்த சிறிய தகவல் பலகையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, அவளது கண்ணில் அந்த அறிக்கை பட்டது.


                     
                                  
                             சீசரைப் பற்றிய விபரங்கள்.... அதன் நிறம், உயரம், எடை, பெயர், வகை, அதன் புகைப்படம் போன்றவற்றை  குறிப்பிட்டிருந்தனர். " இதனால் தான் சில நாட்களாக சீசரின் சப்தம் கேட்பதில்லை போலும் " என்று மனதினுள் எண்ணிக் கொண்டு, தன வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் . அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய  மஹி குட்டியிடம்  "சீசர் காணாம போயிடிச்சாம் மஹி மா.... லாண்டரில நோட்டீஸ் போட்டிருக்காங்க " என்றாள் .
 " அச்சச்சோ ! காணாம போயிடுச்சா ? பாவம் மா ... அது சாப்பிட எல்லாம் என்ன  பண்ணுதோ ! " என்று  மஹி  பாவமான குரலில் கூறினாள். சில நாட்களில் சீசர் பற்றி மறந்தே போயினர்.


                            ஒரு நாள் மாலை, அதிகப்படியான குளிரும் இல்லாமல், மிகுதியான வெயிலும் இல்லாமல், சற்று இதமான சீதோஷணம்  நிலவியது. சற்று தூரம் காலாற நடந்து வரலாம் என தாயும் மகளும் கிளம்பினர். அவர்கள் இருந்த இடம், மரங்களடர்ந்த காட்டுப் பகுதி. சில காட்டுப் பகுதிகளை அழித்தே  அங்கு குடியிருப்புகளாகவும், அடுக்குமாடி  வீடுகளாகவும் கட்டி இருந்தனர். சற்று தூரம் நடந்து வந்தவர்கள், " சரி , வீட்டுக்கு திரும்பி  போகலாம் " என்றவாறு வீட்டிற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தனர். அவர்களது குடியிருப்பிற்கு அருகில் வந்ததும்  மஹி, " ஏதோ முனகுற மாதிரி சத்தம் கேக்கல ? " என்றாள். 
" இல்லையே ! "  என்ற பார்கவியை  அங்கு அருகிலிருந்த பள்ளத்தாக்கினை  எட்டிப் பார்க்கச் சொன்னாள்  மஹி . எட்டிப் பார்த்தவளுக்கு  ஆச்சர்யம். அங்கு சீசர்  நின்று கொண்டு மேட்டின் மேல் ஏற முயற்சிப்பதும், சறுக்கி கீழே விழுவதுமாய் இருந்தது. அதைக் கண்டதும் பார்கவி, மேட்டின் மீது அமர்ந்து கொண்டு, கையை நீட்ட, சீசரும் சற்று முயன்று, பார்கவியின் கைகளை தொட, அப்படியே  அதைத் தூக்கி வெளியில் விட்டாள் பார்கவி. நடுங்கிக் கொண்டிருந்த சீசரை மெல்ல தடவிக் கொடுத்ததும், வாலாட்டி விட்டு, வேக வேகமாய் தன்  எஜமானனை தேடி ஓட  ஆரம்பித்தது.


                                      வீட்டிற்கு  தாயும் மகளும் வந்து சேர்ந்தனர். அப்போது, இவர்களின் வருகைக்காக காத்திருப்பது போல,  வாசலில் சீசர் தனது எஜமானர் ரோஜருடன் நின்று கொண்டிருந்தது. இவர்களைக் கண்டதும் வாலாட்டிக் கொண்டே, சுற்றிச் சுற்றி வந்தது. " வீ   ஃபௌண்ட்  ஹிம் இன் தி வூட்ஸ். ஹீ  வாஸ் மோனிங் பார் ஹெல்ப். வீ  ரெஸ்கியூட் ஹிம்." ( We found him in the woods. He was moaning for help. We rescued him) என்றதும், " தேங்க்ஸ்  எ லாட். ஐ  வில் பே  யூ  தி ரிவார்ட் " (  Thanks a lot, I will pay you the reward) என்றார் திரு.ரோஜர். " நோ...நோ... வீ  டோன்ட்  வான்ட்  தி ரிவார்ட். இட்ஸ்  ஜஸ்ட் எ ஸ்மால் ஹெல்ப் " ( No...No... We don't want the reward. It's just a small help) என்று  மறுத்து விட்டார் பார்கவி. நன்றியுடன் தாயையும் மகளையும் பார்த்து வாலாட்டியது சீசர். பின் தன் எஜமானனை சுற்றி வந்து அவரது காலடியில் படுத்தது.


                     அதன் பின், ஓர் நாளும் சீசர், இவர்களைப் பார்த்து குறைப்பதில்லை. மாறாக, நன்றியுடன் வாலாட்டியது . 


  http://www.vallamai.com/?p=36703                                        
 

ஒரு வெயில் பொழுதில்....


   
      
      இரயில்வே கேட்டைத் தாண்டியதும் சிற்றுந்தின் (mini bus)நட த்துனர் விசில் கொடுக்க, ஒரு நிமிடம் நின்றுவிட்டு கிளம்பத் தயாராய் பேருந்திலிருந்து சட்டென்று இறங்கிக் கொண்டேன்.

     ரோட்டின் மறுபக்கம் சென்று,அந்த ரோட்டின் முதல் சந்தினுள் நுழைந்தேன். அந்தச் சந்து குறுகலாகவும்,ஒரே நேர் சாலையாகவும் சென்றது. வழியெங்கும், ஆங்காங்கே தெருவின் ஓரங்களில் காவல் தெய்வங்களாய் நின்றிருந்த தேவி கருமாரியம்மன், தேவி காளியம்மன், கருப்பசாமி, சுடலை மாடன் என அனைவரையும் வரிசையாய் வணங்கியபடியே சென்று கொண்டிருந்தேன்.

       அனைத்து தெருக்களும் ஒரே மாதிரியாய், குறுகலாய், கிட்டத்தட்ட ஒரே மாதிரி வீடுகளுடன் இருந்தன. ஓரிரு முறையே வந்து பழகியவர்கள், தாங்கள் தேடி வந்த விலாசங்களை கண்டு பிடிப்பது சற்று சிரமம். புதிதாய் வருபவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.

       சற்று தூரம் வந்ததும், தெரு முடிந்த இடத்தில் சாலை இரண்டாய்ப் பிரிய, இரு மருங்கிலிருந்த சாலைகளிலும், வழிநெடுகிலும் தொழிற்சாலைகள். மாவு அரவை தொழிற்சாலை, காபி அரவை தொழிற்சாலை, எண்ணெய் ஆட்டும் தொழிற்சாலைகள் என வரிசையாய் பலவகை தொழிற்சாலைகள், பலவகை வாசனைகளுடன்.

       வீடுகளின் வாசல்களிலும், திண்ணைகளிலும் பெண்களும், சிறுமிகளுமாய் அமர்ந்து தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர். ஒருவர் தாளில் பசை தடவி, குச்சி வைத்து ஒட்டி, வால்களாகப் போட, ஒருவர் அதை மடித்து, அச்சுக் கட்டையில் வைத்து, சில்லடைத்து தீப்பெட்டிகளாய் ஒட்டிப் போடுவதுமாய் மும்முரமாய் வேலை நடந்து கொண்டிருந்தது. பல சமயங்களில், ஒருவரே வால் மடித்து, சில்லடைத்து தீப்பெட்டிகள் ஒட்டிப் போடுவதும் உண்டு.

        ஊரே மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த மதிய வேளையில், சூரியனும் கண்ணும் கருத்துமாய் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான். நன்கு பளீரென தகதகக்கும் சூட்டுடன், தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி, பூமியின் மீது, தன் கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான்.

            சட்டென்று, யாரும் எதிர்பாரா நேரத்தில், எவரும் எதிர்பாராததொரு மாற்றம். பளபளவென வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்த வானம், சட்டென்று தன் ஆபரணக் கடையை மூடிக்கொண்டது போல், இருள் சூழ்ந்து கொண்டது. ஆம்...வானில் மழை மேகங்கள் அனைத்தும் அவசர மாநாடு கூட்டிவிட்டன. பேச்சும், விவாதமும் சற்று அதிகமாகவே இருப்பது போன்று, இடியும் மின்னலும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. கூட்டத்தில் நல்லதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது போலும்... படபடவென்று கைத்தட்டல்களாய் மழை முத்துக்கள் சிதற, அந்த அழகான மகிழ்வான தருணமதில், தண்மையை இரசித்தபடி நானும் நிற்கிறேன்.