blank'/> muhilneel: வர்ணனை
Showing posts with label வர்ணனை. Show all posts
Showing posts with label வர்ணனை. Show all posts

Monday, October 28, 2013

ஓடும் மேகங்களே !!! - விமான பயண அனுபவங்கள்.

காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு புதிதாய் ஓடிப் பழகும் சிறு பறவை போல மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கையிலேயே, உள்ளந்தனில் புதியதாய் உத்வேகமொன்று பிறந்தது போல, சற்று வேகமாய் ஓடத் துவங்கி, வானில் ஜிவ்வென்று சுதந்திரமாய் சிட்டெனப் பறந்திட சிறகுகள் நீண்டு விரிந்தது போல் வானில் சிறகுகள் விரித்துப் பறக்கத் துவங்கியது அந்த விமானம்.


File:Stockholm, view from plane.jpgவிமானம் வானில் ஏற ஏற, எத்துனையோ உணர்வலைகள். ஏதோ திடீரென வாயிற்கும் வயிற்றிற்கும் இடையே பெரிய காற்றுப் பந்தொன்று  ஏறி இறங்குவது போல், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளினின்று விடுபட்டு, ஆகாயத்திலிருந்து பூமியைக் கண்டால், எழில் ஓவியமென்று காட்சியளிக்கிறது. இரவுப் பொழுதில் மின் விளக்குகளின் ஒளியில், பூவுலகே ஜோதி வடிவாய்க் காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களின்  ஒளியும், அவற்றின் அணிவகுப்பும் ஏதோ விழா அணிவகுப்பு போல  காட்சியளிக்கிறது. பகல் பொழுதினிலோ, இதுவரை ஓவியர் எவரும் வரைந்திடாத எழில் ஓவியமென காட்சியளிக்கிறது. மலைகள், ஓடைகள், நதிகள் என இறைவனின் கைவண்ணத்தில் உருவான பூரணத்துவம் வாய்ந்த இயற்கையின் அழகை  இன்பமாய்  இரசிக்கலாம்.
View trough airplane window in flight

தரையிலிருப்பதெல்லாம்  காண்பதற்கு  சிறு கடுகாய் மாறிப் போக, ஆகாயத்தின் எழில்  பிரமிக்க வைக்கும் வகையில் கண்முன் விரிகிறது. விமானம் இன்னும் சற்று உயர ஏறி  நடுவானில் செல்கையில், மேகக் கூட்டங்களின் மீது  மிதந்து செல்வது போன்றொரு உணர்வு. பஞ்சுப் பொதிகளென வானில் மிதக்கும் மேகங்களை  சிறிது  கைகளில்  அள்ளிக் கொண்டுவிட்டால் என்ன என்று எண்ணுமளவிற்கு  கொள்ளை அழகுடன்  விளங்கின மேகக் கூட்டங்கள்.


ஆதவனவன்  துயில் கலைந்து,   தன மேகப் போர்வையை விலக்கிப்  பார்த்தானோ, அல்லது, தனது கடமையை செவ்வனே முடித்துவிட்டு, ஓய்வெடுக்க கிளம்பிக் கொண்டிருந்தானோ, தெரியவில்லை. வான் வெளியில் மங்களகரமாய்  பொன் மஞ்சள் வண்ணத்தில்  அழகானதோர் பட்டுக் கம்பளம்  விரிந்தது.


http://www.debbiephotos.com/wp-content/uploads/2011/11/Sunset-Plane-Window.jpg 
வானிலிருந்து பார்கையில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களெல்லாம், ஓர் ஒழுங்குடன் நேர்த்தியாய் அடுக்கப்பட்ட தீப்பெட்டிகளைப் போல் காட்சியளிக்கின்றன. 





பூமியிலிருந்து  அண்ணார்ந்து   பார்த்து  இரசித்த நீலவான்வெளியின்  அழகினையும்,  இதயம்  கொள்ளை கொள்ளும்  ஓடும் மேகங்களின்  அழகினையும்  கண்முன்னே, கைக்கு எட்டும்  தொலைவில் - ஆனால்,  எட்டிப் பிடிப்பதென்பது  சாத்தியமற்ற  ஒன்றென்றாலும்,  மிக  அருகாமையில்  கண்டு  களிப்புறச்  செய்யும்  விமானப்  பயணம்  ஒவ்வொன்றுமே,  நினைவலைகளை  விட்டு  நீங்காத  இன்பம்  நிறைத்த  பயணங்களே !!!  


படங்களுக்கு நன்றி.
கூகுள்.


Tuesday, July 16, 2013

பேனா...




Ball-Point Pen & Refill

             மையூற்று எழுதுகோல் (Fountain Pen),பந்துமுனை எழுதுகோல் (Ball-Point Pen), ஹீரோ பேனா  (Hero Pen), ஜெல் பேனா (Gel Pen), பார்க்கர் பேனா  (Parker Pen)  என்று  எத்தனையோ வகையான பேனாக்களை
Micro tip Pen
படிக்கும் காலத்தில் பயன்படுத்தியதுண்டு. பள்ளிகளில் தெளிவான  அழகான கையெழுத்திற்கு  மையூற்றுப் பேனாக்களே  சிறந்ததென்று  ஆசிரியர்கள்  அவற்றை வைத்தே எழுதிப் பழகச் சொல்வர். இன்னும் பல ஆசிரியர்கள்,  பரீட்சைகட்கு  பந்துமுனை பேனாக்களை பயன்படுத்த வேண்டாமென்றும் அறிவுறுத்துவர் .







Ink Pen
Hero Pen

                                  படிக்கிற காலத்தில், அதிகமாகப் பயன்படுத்தியது, மை  பேனாக்களும், பந்துமுனைப் பேனாக்களும்  மட்டுமே. பார்க்கர் பேனா, ஹீரோ பேனாக்கள் எல்லாம் குறைந்த அளவே மை பிடிக்கும். ஜெல் பேனாக்களின் மை விரைவாக தீர்ந்து போய்விடும். எனவே, மை பேனாக்களையே அதிகம் பயன்படுத்தியதுண்டு.
Gel Pen

Feather Pen

                   சில சமயங்களில், பறவைகளின் இறகின் நுனியில் மை தொட்டு எழுதிய எழுதிய அனுபவமும் உண்டு.அதில் எழுதும் போது, எழுத்துக்கள் ஏதோ  Stencil (நகல் எடுக்க உதவும் உள்வெட்டுத் தகடு)  வைத்து  எழுதியது போல்  இரட்டைக் கோடுகளாய் வரும்.மையினை  தனியாக  எடுத்துக் கொண்டு, பறவையின்  இறகின்  நுனியில் மை தொட்டு எழுதுவதும் இனிமையானதோர் அனுபவமே.





Nib
       பேனாக்களில் மை தீர்ந்துவிடில், அருகில் அமர்ந்திருக்கும் சக மாணவரிடம், அவர்களது பேனாவிலிருக்கும்  மையினை சிறிது மேசையின் மேல்  உதறச்  சொல்லி, நிப்பைக் கொண்டு மையை உறிஞ்சி எழுதியதும் உண்டு. சில சமயங்களில், மை தீர்ந்தால், சிறிது தண்ணீர் ஊற்றி  எழுதியது கூட உண்டு. ஏற்கனவே ஒட்டிக் கொண்டிருக்கும் மையுடன், நீர் சேர்த்து எழுதும் போது , எழுத்துக்கள் நன்கு பளிச்சென்று இல்லாமல், சற்று மங்கி இருந்தாலும், ஏதோ அவசரத்திற்கு சமாளிக்க ஏதுவாக இருக்கும்.



Ink-Filler
                         இன்றோ , எழுதும் பழக்கமே குறைந்து கொண்டே வருகின்ற ஒன்றாகி வருகிறது. கணிப்பொறி (Computer), கைபேசி (Cellular Phone), மடிக்கணினி  (Laptop), iPad,iPhone, Tablet PC என்று    தொழில் நுட்ப  வளர்ச்சி  தகவல்களை விரல் நுனியில் கிடைக்கச் செய்கின்றன. தகவல் பரிமாற்றமும் எளிதான ஒன்றாகி விட்டது. தகவல்  தொழில்நுட்பத் துறையும் நாளுக்கு நாள், புதுப்புது மாற்றங்களை சந்தித்து வருகிறது. தந்தி சேவை சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது நாமனைவரும் அறிந்ததே. 



Parker Pen



           நாம் நினைவில் (Memory) ஏற்றிக் கொள்கிறோமோ இல்லையோ, கணினியின்  நினைவகத்தில் ( Computer Memory) ஏற்றிவிட்டு  அதைப் பற்றி மறந்து விடுகிறோம். இன்று கல்வி முறை, பாடத் திட்டங்கள், தேர்வு முறை, மதிப்பீடு  என அனைத்துமே கணினி  மயமானது நாமனைவரும் அறிந்ததே. காலப்போக்கில், பேனாக்கள், பென்சில்கள் போன்ற எழுது பொருட்களே இல்லாமல் போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை !!!!

Monday, July 15, 2013

இயற்கையின் வரமும் பூரணத்துவமும்




Road To Munnar From Bodinayakanur
              


             எப்பொழுதும் ஆரவாரத்துடனும் பரபரப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சாலையில், ஓர் பள்ளிக்கூடம், திருமண மண்டபம், மூன்று டீக்கடைகள், தொழிலாளர் சங்கமொன்று, இரண்டு மளிகைக் கடைகள்  என்று பலவகையான இடங்கள், அங்கு மனிதர்களும் வந்து போவதுமாய் இருந்தார்கள். அந்தச் சாலையும் , நகர பேருந்து நிலையத்திலிருந்து வருகின்ற சாலையும் சந்திக்கும் இடத்தில், கம்பீரமாய் சிலையாய் சிரித்துக் கொண்டிருந்தார் பெருந்தலைவர் காமராசர்.
                     
                 அந்தச்  சாலையின் இருமருங்கிலும், பல பிரிவுகளாய், பல தெருக்கள், பல்வேறு பெயர்களுடன். முருகன் டீக்கடையை ஒட்டியிருந்த சந்தினுள்  நுழைந்து  நடக்க, அங்கே சாலை குறுகலாய் ஆகி, சாலையின் இரு மருங்கிலும் எதிரெதிராய் பல வீடுகள். உள்ளே, மேலும் பல தெருக்கள். தெரு முடிந்த இடத்திலிருந்து, வயல்வெளிகள் ஆரம்பமாயின. நீர்ப்பாசனத்துடன் இருந்த வயல்களில், பச்சைப் பசேலென பயிர்கள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

              ஒரு சிறு தெரு முற்றுப் பெற்ற இடத்தில், மண் மேடாய் காட்சியளித்தது. அந்த மண் மேட்டில், கோழிகளும், சேவல்களும் தம் குஞ்சுகளுடன் மண்ணைக் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தன. அங்கே, அடர்ந்து, கிளைகளைப் பரப்பி, பல புள்ளினங்கட்கு அடைக்கலமளித்து காத்து வரும் உயர்ந்த நாவல் மரம். நாவல் பழங்கள் கனியும் காலத்தில், பழங்களனைத்தும் கரும் ஊதா நிறத்தில், காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கும். சற்று பலமான காற்றடித்தால், பழங்களனைத்தும் உதிர்ந்து மண்ணில் விழுந்து கிடக்கும். அவற்றுள் பல, பறவைகள் கொத்திப் போட்டதாய் இருக்கும். பழம் கோத்த வரும் பறவைகள் கூட்டம் ஒருபுறம், கிழே சிதறிக் கிடக்கும் பழங்களை எடுக்க வரும் சிறுவர் கூட்டம் ஒருபுறமென, காலை வேளைகளில், அம்மரத்தடியே கலகலவென பல வகையான ஒலிகளால் நிரம்பி இருக்கும்.

                         நாவல் மரத்திற்கு சற்று தள்ளி, மிகப் பழமையானதொரு புளிய மரம். அதன் வயதறிந்தவர்கள், கிட்டத்தட்ட ஐம்பது அறுபதாண்டு கால பழமையான மரமாக இருக்கலாம் என்று கூறுவர். அம்மரம், அந்தப் பகுதிவாழ் பெண்களுக்கு, ஓர் வேலைவாய்ப்பினையும், வருமானத்திற்கான வழிதனையும் ஏற்படுத்திக் கொடுத்ததென்று சொன்னால், அது மிகையாகாது.மரத்திலிருந்து உதிரும் புளியம்பழங்களை சேகரித்து, அவற்றிலிருக்கும் கொட்டைகளைத் தட்டி எடுத்து, நார்க் கழிவுகளை நீக்கி, சுத்தமான புளியை, கூட்டுறவு சங்கத்தினில் கொடுத்தால், ஒரு கிலோ புளிக்கு இவ்வளவு என விலை நிர்ணயம் செய்து, எடுத்துக் கொள்வர். சில சமயங்களில், கூட்டுறவு சங்கமே மக்களுக்கு கொட்டைப் புளியை வழங்குவதும் உண்டு. இது போக, கோழி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு போன்ற சிறுதொழில்களிலும் மக்கள் ஈடுபட்டு வந்தனர். வயல்வெளிகளின் அருகில் கூட்டமாய்ச் செல்லும் வாத்துக்களின் அழகே தனி.

                           இயற்கையுடன் இயைந்த வாழ்வொன்றை மேற்கொள்ளும் அச்சிற்றூரை, இயற்கையன்னை மிகப் பொலிவுடனே அலங்கரித்து வைத்திருக்கிறாள் . ஊருக்கு மகுடமென அழகிய மலைச் சிகரங்கள், சுற்றிலும் வேலியென  அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், மலையருவி என அமைந்திருக்கும் அவ்வூர்  இயற்கையின் வரமதையும், பூரணத்துவத்தையும்  பெற்றிருக்கிறது எனில், அதை மறுத்திட முடியுமோ ??  




Monday, July 8, 2013

ஒரு வெயில் பொழுதில்....


   
      
      இரயில்வே கேட்டைத் தாண்டியதும் சிற்றுந்தின் (mini bus)நட த்துனர் விசில் கொடுக்க, ஒரு நிமிடம் நின்றுவிட்டு கிளம்பத் தயாராய் பேருந்திலிருந்து சட்டென்று இறங்கிக் கொண்டேன்.

     ரோட்டின் மறுபக்கம் சென்று,அந்த ரோட்டின் முதல் சந்தினுள் நுழைந்தேன். அந்தச் சந்து குறுகலாகவும்,ஒரே நேர் சாலையாகவும் சென்றது. வழியெங்கும், ஆங்காங்கே தெருவின் ஓரங்களில் காவல் தெய்வங்களாய் நின்றிருந்த தேவி கருமாரியம்மன், தேவி காளியம்மன், கருப்பசாமி, சுடலை மாடன் என அனைவரையும் வரிசையாய் வணங்கியபடியே சென்று கொண்டிருந்தேன்.

       அனைத்து தெருக்களும் ஒரே மாதிரியாய், குறுகலாய், கிட்டத்தட்ட ஒரே மாதிரி வீடுகளுடன் இருந்தன. ஓரிரு முறையே வந்து பழகியவர்கள், தாங்கள் தேடி வந்த விலாசங்களை கண்டு பிடிப்பது சற்று சிரமம். புதிதாய் வருபவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.

       சற்று தூரம் வந்ததும், தெரு முடிந்த இடத்தில் சாலை இரண்டாய்ப் பிரிய, இரு மருங்கிலிருந்த சாலைகளிலும், வழிநெடுகிலும் தொழிற்சாலைகள். மாவு அரவை தொழிற்சாலை, காபி அரவை தொழிற்சாலை, எண்ணெய் ஆட்டும் தொழிற்சாலைகள் என வரிசையாய் பலவகை தொழிற்சாலைகள், பலவகை வாசனைகளுடன்.

       வீடுகளின் வாசல்களிலும், திண்ணைகளிலும் பெண்களும், சிறுமிகளுமாய் அமர்ந்து தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர். ஒருவர் தாளில் பசை தடவி, குச்சி வைத்து ஒட்டி, வால்களாகப் போட, ஒருவர் அதை மடித்து, அச்சுக் கட்டையில் வைத்து, சில்லடைத்து தீப்பெட்டிகளாய் ஒட்டிப் போடுவதுமாய் மும்முரமாய் வேலை நடந்து கொண்டிருந்தது. பல சமயங்களில், ஒருவரே வால் மடித்து, சில்லடைத்து தீப்பெட்டிகள் ஒட்டிப் போடுவதும் உண்டு.

        ஊரே மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த மதிய வேளையில், சூரியனும் கண்ணும் கருத்துமாய் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான். நன்கு பளீரென தகதகக்கும் சூட்டுடன், தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி, பூமியின் மீது, தன் கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான்.

            சட்டென்று, யாரும் எதிர்பாரா நேரத்தில், எவரும் எதிர்பாராததொரு மாற்றம். பளபளவென வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்த வானம், சட்டென்று தன் ஆபரணக் கடையை மூடிக்கொண்டது போல், இருள் சூழ்ந்து கொண்டது. ஆம்...வானில் மழை மேகங்கள் அனைத்தும் அவசர மாநாடு கூட்டிவிட்டன. பேச்சும், விவாதமும் சற்று அதிகமாகவே இருப்பது போன்று, இடியும் மின்னலும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. கூட்டத்தில் நல்லதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது போலும்... படபடவென்று கைத்தட்டல்களாய் மழை முத்துக்கள் சிதற, அந்த அழகான மகிழ்வான தருணமதில், தண்மையை இரசித்தபடி நானும் நிற்கிறேன்.