விதையிலிருந்து புத்துயிராய் மண்ணில் ஜனிக்கும் சின்னஞ்சிறிய நாற்றுகள் செழிப்பாக வளர்வதற்கு சூரியஒளி, நீர், வளமான மண் இவை மட்டும் போதாது. நமது அன்பு , அக்கறை நிறைந்த பேச்சும், மென்மையான இசையும் அவற்றின் வளர்ச்சிக்கு துணையாய் இருக்கும் என்கின்றனர் பயிரியலாளர்கள்.
இதைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட அறிவியலாளர்கள், உண்மையிலேயே அன்பாலும் இசையாலும் அதிகப்படியான மகசூல் கிட்டுகிறதா என்பதனை கண்டறிவதற்காக, அறுபது பட்டாணி செடிகளை எடுத்துக் கொண்டனர். அவற்றை மூன்று பிரிவுகளாக பிரித்து தனித்தனியே மூன்று பசுமைக் குடில்களில் ( Green House ) வளர்த்தனர்.இரண்டு வகையான குரல்களைப் பதிவு செய்தனர். ஒன்று, மிகவும் அன்பும் கருணையும் நிறைந்த கனிவான குரல். மற்றொன்று ஏச்சும், ஆத்திரமும் நிறைந்த குரல்.ஒரு பசுமைக் குடிலில் அன்பான குரலையும், மற்றொன்றில் ஆத்திரமான குரலையும் ஒலிக்கச் செய்தனர். மூன்றாம் குடிலில், எவ்விதமான ஒலியும் இல்லாது அமைதியாக வைக்கப்பட்டிருந்தது. அறுபது நாட்கள் இச்சோதனை முயற்சி மேற்கொள்ளப் பட்டது.
அறுபது நாட்களுக்குப் பின், தாவரங்களின் வளர்ச்சி, அவற்றின் மகசூல் கணக்கிடப் பட்டன. எந்த பசுமைக் குடிலில் இருக்கும் தாவரங்கள் அதிக மகசூலை வழங்கியுள்ளன என்று கணக்கிட்டபோது, எந்த இரு குடில்களில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தனவோ, அவை நல்ல மகசூலைக் கொடுத்திருந்தன. கனிவான குரல் கேட்டு வளர்ந்த தாவரங்கட்கும், ஆத்திரமான குரல் கேட்டு வளர்ந்த தாவரங்கட்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. நல்ல மகசூலையே கொடுத்திருந்தன. ஆனால், அமைதியாக, ஒலியேதும் இல்லாது வளர்க்கப்பட்ட தாவரங்களின் மகசூல் மிகவும் குறைவாக, அளவில் சிறிதான பட்டாணிகளையே கொடுத்திருந்தன.
எனவே, நமது பேச்சு செடிகளின் நல் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கின்றன. இனிமேல், செடிகளுக்கு நீரூற்றும் போது, சில நொடிகள் அவற்றுடன் பேசலாமே !!!
Source: http://dsc.discovery.com/tv-shows/mythbusters/mythbusters-database/talking-to-plants.htm
2 comments:
உண்மை... நன்றி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!
Post a Comment