அமெரிக்காவில், ஆபத்திலிருக்கும் மக்களின் அவசர உதவிக்கு (Emergency) பயன்படுத்த 911 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். நம் ஊரில் அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்புப் படைக்கு 101, மருத்துவ உதவிக்கு 102 என்ற தொலைபேசி எண்களைப் போல் தான், அமெரிக்காவில் இந்த 911.
நம்மை அறியாமல் தவறுதலாக 91 என்ற எண்களை
அழுத்திவிட்டால் கூட, 911 ற்கு அழைப்பு போய் விடும். சில வேளைகளில், எந்த எண்ணிலிருந்து
அழைப்பு வந்ததோ, அந்த எண்ணிற்கு போலீசார் அழைத்து, ஏதேனும் உதவி தேவையா என்று ஊர்ஜிதப்படுத்திக்
கொள்வார்கள். அல்லது, நமது தொலைபேசி எண்ணைக் கொண்டு நம் வீட்டிற்கே வந்து, ஏதேனும் ஆபத்திலிருக்கிறோமா,
உதவி ஏதேனும் தேவையா என்று விசாரிக்க வந்து விடுவர்.
Smoke Detector |
தீவிபத்துகள் ஏதேனும் ஏற்பட்டுவிடின், உடனடியாக நாம் ஆபத்திலிருப்பதை பிறருக்குத் தெரியப்படுத்தவும், உதவிக்கு ஆட்கள் வர ஏதுவாக இருக்க, புகை கண்டறியும் கருவிகள் (Smoke Detectors) வீட்டின் எல்லா அறைகளிலும் இருக்கும். வீட்டினுள் புகை சூழ்ந்தால், உடனே "Fire ! Fire !" என்று அலறியவாறு, "உய்ய்...உய்ய்..." என்று விசிலடிக்க ஆரம்பித்துவிடும். சில கட்டிடங்களில் Sprinkler வசதியும் இருக்கும். இந்த Sprinkler அறையினுள் நெருப்பினால் வெப்பநிலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டு, நீரினை தெளிக்க ஆரம்பிக்கும். புகை கண்டறியும் கருவிகள் தீயணைப்புத் துறையுடன் இணைக்கப்பட்டிருப்பின், தீயணைப்புப் படை வீரர்கள் உடனே வந்து விடுவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.நாங்கள் இருந்த குடியிருப்புகளில், அவை தீயணைப்புத் துறையுடன் இணைக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.
Sprinkler-Head |
அமெரிக்கா வந்த புதிதில், ஓர் நாள் வழக்கம் போல் சமையல் செய்து கொண்டிருந்தேன். நான்கு பர்னர் கொண்ட அடுப்பில், ஒவ்வோர் பர்னரிலும் குழம்பு, பொரியல், சாதம் என்று தயாராகிக் கொண்டிருந்தது. குக்கரில் சாதம் வைத்து விட்டு, விசிலுக்காக காத்திருக்க,விசில் வந்ததும், அடுப்பினை அணைக்கச் சென்றால், திடீரென்று "உய்ய்...உய்ய்" என்ற அலறலோடு, "Fire ! Fire !" என்ற சப்தம் வேறு. வீட்டினுள் சுற்றும் முற்றும் பயத்தோடு பார்த்தால், எங்கும் நெருப்பு இருப்பதாய்த் தோன்றவில்லை. ஒருவித சைரன் ஓசையுடன் மீண்டும், "Fire ! Fire !" என்ற அலறல். அதன் பின் தான் புரிந்தது, குக்கரின் விசில் வரும்போது வேகமாய் வெளியேறிய நீராவிக்கே இந்தப் பாடு என்று. அதன் பின் தான், அடுப்பிலிருக்கும் Vent Fan ன் பயன்பாட்டினை அறிந்து கொண்டேன்.
மற்றொரு நாள், காலை வேளையில், சப்பாத்தி சாப்பிடத் தோன்றவே, பூரிப்பலகையில் சப்பாத்திகளை தேய்த்து வைத்து விட்டு, அடுப்பில் Non-Stick pan காய வைத்து, சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தேன். ஏனோ, வேக நேரமாகவே, சற்று சூட்டினை அதிகப்படுத்தினால் என்ன என்று அதிகப்படுத்த, சப்பாத்திகள் வேகமாக ஆகின. ஆனால், வீடே ஒரே புகை மண்டலமாக ஆகிப் போனது. "Fire ! Fire !" என்று அலாரம் அலற, பின் அடுப்பினை அணைத்து விட்டு, கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து, smoke detector ன் அருகே ஓர் துண்டை வைத்து விசிற, கால் மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அலார சப்தம் நின்றது.
அதே போல், வீட்டில் விளக்கேற்றி, கற்பூரம், ஊதுபத்தி ஏற்றும் போது, அதிலிருந்து வரும் புகையினாலும் Fire Alarm அடிப்பதுண்டு. இதனால், பலரும் அதிலுள்ள பேட்டரிகளை கழற்றி வைத்துவிடுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போல், பேட்டரிகள் தீர்ந்து விட்டாலும், நிமிடத்திற்கு ஒருமுறை, " low battery ! low battery ! " என்று அலறிக் கொண்டிருக்கும். இம்முறை, நாம் ஆபத்திலிருப்பதை பிறருக்குத் தெரிவிக்க நல்லதோர் உபாயம் என்றாலும், நாம் சர்வசாதாரணமாய்ச் செய்யும் அன்றாட அலுவல்களில், இதனால் ஏற்படும் சில நிமிட பரபரப்பும், பதட்டமும் சொல்லி மாளாது.
4 comments:
பழக்கத்தால் 'எல்லாம்' சரியாகி விடும்...
உண்மை தான் ஐயா....சரியாகச் சொன்னீர்கள்...
இந்த ஊரில் அப்படித் தான் குப்பை கொட்டுகிராயோ என்று என் பெண்ணைப் பார்த்து நான் கேட்பதுண்டு.
இந்த மாதிரி சின்ன சின்ன அன்புத் தொல்லைகளினால் தான். என் அனுபவத்தை தாண்டி விட்டது உங்கள் அனுபவம். சொன்ன விதம் அருமை.
வாழ்த்துக்கள்......தொடருங்கள்......
அனுபவங்களை எழுதத் தூண்டி ஊக்கப்படுத்திய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
Post a Comment