blank'/> muhilneel: வெற்றி
Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts

Sunday, July 14, 2013

எது வெற்றி?





"   எண்ணிய எண்ணியாங்கு எய்துதல்  "  

                இதுவே வெற்றி என்று கொள்ளப்படுகிறது. இதனை, மனதினில் ஆசைப்பட்டதை எப்பாடுபட்டயினும் அடைவது, உள்ளக் கனவுகளை நனவாக்குவது, எதிலும் முன்னணியாய், பலருக்கு முன்னோடியாய் இருத்தல் என்றும் கொள்ளலாம்.
                  இலக்கினை  ஒரே முயற்சியில் எட்டுதலும் வெற்றி தான். அதேபோல், தோல்விகள் ஏற்படினும், மேற்கொள்ளும் முயற்சிகளில் தொய்வேற்படாது, மனம் தளராது, விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும்  இலக்கினை எட்டிப் பிடித்தாலும் வெற்றி தான்.


                 ஆக, வெற்றி என்பது,
  •  செய்ய எண்ணியதை செம்மையாகச் செய்து முடித்தல். 
  •   படிப்படியான முன்னேற்றம். 
  •  " பல தொழில் கற்றவன் ஒரு தொழிலும் செய்யான்" ( Jack of All trades, but Master  of  None ) என்றில்லாமல், ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முன்னேற்றம் கண்டு , தனித்துவத்துடன் விளங்குதலே ஆகும்.  
  • நினைத்த இலக்கை அடையும் வரை முயற்சியைக் கைவிடாது இருத்தல். விவேகானந்தரின் கூற்றுப்படி,"Arise, Awake and Stop not till the Goal is Reached" 
  • எத்துனை முறை  தோற்றாலும், மனம் தளராது, அடுத்த முயற்சியை புத்துணர்வுடனும், தன்னம்பிக்கையுடனும் மேற்கொள்வது. 
  •  முயற்சி மேற்கொள்வதன் நோக்கம் "வெற்றி" . வெற்றி பெறத் தேவை "உழைப்பு" . உழைப்பிற்கு தேவை " உற்சாகம் ". எனவே, மேற்கொள்ளும் காரியம் எதுவாயினும் உற்சாகத்துடன் ஈடுபடுதல்.
                                  
வெற்றி ! - அதுவே மனதின் நோக்கம்
அதற்குத் தேவை - தளர்விலா ஊக்கம்
என்றும் கூடாது - தோல்வியால் ஏக்கம்
படிப்படியான தொடர் வளர்ச்சி - அதுவே ஆக்கம் !!! 

Monday, June 24, 2013

வெற்றி பெற உதவும் பண்புகள்

                          





1. செய்யும் செயலில் முழு ஈடுபாடு கொள்ள  வேண்டும். ஈடுபாடு,விருப்பம் இல்லாது ஏனோதானோ என்று கடனுக்காகச் செய்யும் செயல்களில் வெற்றியை எதிர்பார்த்தல் சரியன்று.
2. நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் உண்மையானவையாகவும் நேர்மையானவையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.குறுக்கு வழியில் பெறும் வெற்றியானது நிலையானதொன்றல்ல. நியாயமான முயற்சியில் தோல்விகள் ஏற்பட்டாலும்,அவை பின்னாளில் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறி நம்மை வெற்றி நோக்கி இட்டுச் செல்லும்.
3. "முயற்சி திருவினையாக்கும்","முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்று தன்னம்பிக்கை தனை துணையாய்க்  கொண்டு போராடுபவர்களைக் கண்டு தோல்வியும் தலைவணங்கி விலகிச் செல்லும்.
4. செல்வம் என்பது   'செல்வோம் செல்வோம்' என்ற பொருள்பட வரும். செல்வம் இன்று வரும்.அது என்று நம்மை விட்டு நீங்கிச் செல்லும் என்பது நமக்குத் தெரியாது. எந்நாளும் நிலைத்து நிற்பது உண்மையான உழைப்பினால் கிட்டிய பெயரும் புகழும் மட்டுமே.
5. வேதனை இல்லாது வரம் கிட்டாது. அதுபோல், சோதனைகளை  எதிர்கொள்ளாது  சாதனைகளை எட்டுவது இயலாது.
6. செய்யும் செயல் எதுவாயினும் அதில் ஒன்றி முனைப்புடன் ஈடுபட வேண்டும். முனைப்பில்லாத செயல் முடியாது.முனைப்புடன் விடாமுயற்சியும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் கிட்டும்.
7. சோர்வு பாராத தொய்வில்லாத உழைப்பினால் கிட்டுமே வசந்தம் வீசும் நல்வாழ்வு.
8. முறையான திட்டமிடல், செயல் திறம், மனத் திடம். இவை மூன்றும் வாழ்வில் உயர் நிலையும், பட்டம்,பதவி இவற்றை பெற்றுத் தரும்.
9. விருப்பத்துடன் கூடிய உழைப்பே வெற்றியை ஈட்டித் தரும். முழு ஈடுபாடு இல்லாமல், அரைகுறை மனதுடன், எவ்வளவு சிரமப்பட்டு உழைத்தாலும், எண்ணிய முடிதல்  என்பது நிறைவேறாத ஒன்றே.
10.எடுத்த காரியம் நிறைவேறும் வரை முயற்சிப்பதிலிருந்து பின்வாங்குவதில்லை என்று முனைப்புடன் இருப்பவர்க்கு தடைக்கல்லும் படிக்கல்லாகும். 
11.  இளமையில் திறமை, விரும்பும் செயல்கள், ஈடுபாடு எல்லாம் திசைமாறிப் போனால்,  வாழ்வும்   தடுமாறிப் போகும்.
12. ஓர் தேசத்தில் இல்லாதோர் இருப்பதால் இழுக்கேதும் இல்லை. ஆனால், கல்லாதோர் மிகுந்திருப்பதே இழுக்கு.
13. தனக்கு ஏற்பட்ட தோல்வி, தன்னைச் சுற்றி இருப்போர்க்கு ஏற்பட்ட தோல்வி, இவற்றின் மூலம் தனது குறைகளை   உணர்ந்து   திருத்திக்  கொள்ளும்  ஒருவன் வெற்றியாளன் ஆவது   எளிது.
14. துணிவும் மனோதிடமும்  இல்லாதவன், தான் எடுத்த செயலில் வெற்றியைப் பெறுதல் என்பது முடியாததொன்றாகும்.
15. தம் கையில் இருக்கும் நிகழ்காலம் தனை பயனுற கழிக்கும் ஒருவன் பெருமையும் புகழும் அடைதல் எளிது.  
16.  செய்யும் செயலிடத்து ஈடுபாடு குறையாது ஆற்றப்படுமாயின், அச்செயல் நம் எண்ணம் போலவே  ஈடேறும்.
17. இன்றைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை , இன்றே முடித்தல் நலம். ஒத்திப் போடப்பட்ட  கடமைகள்  தோல்விக்கே வழி வகுக்கும்.
18. தோல்வியின் போது துவண்டு போகாது, மனதிடத்துடன் இருப்போர், வெற்றியின் போதும் ஆரவாரம் இல்லாது, அமைதியாகவே இருப்பர். வெற்றி தோல்வி இவையிரண்டையுமே அவர்கள் சமமாகக் கொள்வர்.
19. எடுத்துக் கொண்ட செயலுக்காய் தன்னை வருத்திக் கொண்டு, முழுமனதுடன், ஈடுபடுவோருக்கு வாய்ப்பு ஒருநாளும் கைவிட்டுப் போகாது.
20.  வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு , ஓய்வு ஒழிச்சலின்றி முனைப்புடன் எடுத்த காரியத்தில் ஈடுபடுதலே, எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் வெல்வதன் இரகசியம் ஆகும்.
21.  ஆற்ற  வேண்டிய  கடமைகளை, ஆற்ற வேண்டிய காலத்தில் சரிவர ஆற்றினால்,  உலகப் புகழ் அடைவது  திண்ணம்.
22. சுறுசுறுப்பு, செய்யும் காரியம் தனை விரைவாக்கும். ஆனால், பரபரப்பும், பதற்றமும்  காரியம் தனை சிதறடிக்கும்.
23.  தந்திரங்கள்  பல செய்து நிகழ்த்தப்படும் சாதனைகள் சரித்திரம் ஆகாது. அதுபோல், நெஞ்சில் வெறித்தனம்  கொண்டு வெல்வதும் விவேகம் ஆகாது.
24.  எடுத்த காரியம் நலமாய் நடந்தேற, வெற்றியும் மாலைகள் சூட்டிட கல்வி அவசியம்.
25. உண்மையான வாக்கும், தெளிவான நோக்கமும் கொண்டவர் செயல்கள் தோல்வியைச் சந்திப்பதென்பது அரிது.


Friday, April 13, 2012

வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?


            உலகில் உள்ள அனைவரும் எப்பாடு பட்டாயினும் வெற்றி பெற விழைகிறோம். நாம் எந்தத் துறையில், எந்தச் செயலை செய்தாலும், அதில் நாம் முன்னோடியாய் இருக்க விழைகிறோம். அதற்காக நாம் பல்வேறு முயற்சிகள், அணுகுமுறைகள்,ஆயத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்கிறோம். அங்ஙனம், நாம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்களில் நாம் கவனம் கொள்ளும் போது, வெற்றிக்கான வித்து இடப்படுகிறது.தெய்வப் புலவர் திருவள்ளுவர் தன் குறளில்,
             "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
              மெய்வருத்தக் கூலி தரும்."
                           - குறள் எண் : 619
என்று குறிப்பிடுகின்றார்.எனவே வெற்றிக்கு அடிப்படையாக முயற்சியே அமைகிறது.
அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்கள்:
        நமது அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்கள் அனைத்தும் நம் எண்ணங்களில் இருந்தே ஆரம்பமாகின்றன.எனவே தான்   "உள்ளுவதெல்லாம்   உயர்வுள்ளல்"  என்கிறார் திருவள்ளுவர்.நம் எண்ணங்கள் என்றும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். எண்ணங்கள் நம் உள்ளத்தில் தோன்றும் போதே, அதற்கான நடவடிக்கைகளும், செயல் முறைகளும் தானாக உருவாகி விடுகின்றன.எனவே, எண்ணங்களே முதல் படி.
           "எண்ணங்கள் செயல்களாகும், செயல்கள் பழக்கங்கள் ஆகும், பழக்கங்கள் நம் நடத்தையை நிர்ணயம் செய்யும்"
"Thoughts become Actions, Actions Create Habits, Habits build Character"
எண்ணங்கள் சிறப்பானதாக இருப்பின் செயல்களும் சிறப்பாக அமையும்.

தேர்ந்தெடுத்தல்,வாய்ப்புகள்,மாற்றங்கள்:
          இவற்றை
3 C's in Life என்று குறிப்பிடுவர். அவை, “CHOICE, CHANCE, CHANGE.-You must make a choice to take the chance if you want anything to change”. நாம் வெற்றியை நோக்கி பயணிக்கும் போது, சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.நாம் தெரிவு செய்யும் பாதையில் நமக்கு கிட்டும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். "வாய்ப்புகள் ஒருமுறை தான் கதவைத் தட்டும்" என்று கூறுவர். அங்ஙனம் கிட்டும் வாய்ப்புகளை, அவை கிட்டும் நேரத்தில்  நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப் பயன்படுத்தினால் நமது வாழ்வில் நல்மாற்றங்கள் ஏற்படும்.

Confidence - நம்பிக்கை, Courage - தைரியம், Communication - தகவல்     பரிமாற்றம்:
        நம் திறமைகளை, நாம் சரியான நேரத்தில், சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். நம்மிடம் அளவிற்கு அதிகமான சக்தி உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அவை
Confidence - நம்பிக்கை, Courage - தைரியம், Communication - தகவல் பரிமாற்றம். நமக்கு இருக்கும் இத் திறமைகளை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அதற்கு நம்பிக்கையே மூலதனம். நாம் பிறரிடம் வெளிப்படுத்த விரும்பும் கருத்துக்களை தெளிவாகவும், தைரியமாகவும் கூற  வேண்டும். தன்னம்பிக்கை(Self-Confidence) மற்றும் விடாமுயற்சி மிகுந்து இருக்கும் இடத்தில், வெற்றி வாசற்க் கதவைத் தட்டும்.

நம்பிக்கை & தன்னம்பிக்கை
(Confidence & Self - Confidence):
                      நம்பிக்கையே நமது வாழ்வின் ஜீவ நாடி.நாம் வாழும் இந்த உலகில், இந்த நொடியில் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. ஆனாலும், நாம் ஏதோ ஒன்றின் அடிப்படையில் நமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது தான் நம்பிக்கை.
                          " Yesterday is History; Tomorrow is mystery; Today is the Gift- That's why we call it as Present"
             நாம் செய்யும் செயல்கள், மேற்கொள்ளும் முயற்சிகள் இவையனைத்தையும் நாம் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.நம்பிக்கையே நமது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாய் அமையும்.நம் வாழ்வில் வெற்றி இலக்கை அடைவதே நம் குறிக்கோள். ஆனால் சில சமயங்களில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். ஆனால் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது,தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து,அதை சரி செய்து கொள்ள வேண்டும். தோல்வியில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி இருக்கிறது. அது நமக்கு ஓர் படிப்பினையாகும். எனவே தான் " தோல்வியே வெற்றிக்கு முதல் படி"
என்று குறிப்பிடுகின்றோம். தோல்வி ஏற்பட்டாலும், முயற்சியைக் கைவிடாது தன்னம்பிக்கையுடன் உழைத்தால் நம் லட்சியத்தில் நமக்குவெற்றி கிட்டும்.
              "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது;எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்"
இதுவே கீதையின் சாரம்.
திட்டமிடல்(Planning):
        ஒரு செயலை நாம் செய்யத் தொடங்கும் முன், அதற்கான திட்டத்தை நாம் வகுக்க வேண்டும். திட்டம் என்பது செயலின் ஒரு பகுதி. திட்டமிடல் என்பது வெற்றிக்கான ஒரு வழிகாட்டி. எதிர்பாரா சவால்களை சந்திக்க நாமே நம்மை தயார்படுத்திக் கொள்ள திட்டமிடல் துணைப்புரியும். நம் உள்ளத்துக் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு புதிய தொடக்கம். திட்டமிடல் மூலம் உழைப்பு வீணாவது தவிர்க்கப்படும். முயற்சிக்கு உண்டான அதிகபட்ச பலன் கிடைக்கும். பேரிட்டோ என்ற அறிஞரின் கருத்துப்படி திட்டமிட்டு செய்யும் செயலில் 20% உழைப்பில் 80% காரியம் முடிந்து விடும். செயல் சிறியதானாலும், பெரியதானாலும் அதற்கேற்ப ஒரு திட்டம் கட்டாயத் தேவை.  திட்டம் தீட்டி வேலை செய்யும் பொழுது நமது செயல் விரைவாகவும் சிறப்பாகவும் அமைகிறது. ஒரு  திட்டமானது, நாம் தற்போது இருக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து, நாம் அடைய வேண்டிய இலக்கினை நோக்கி இட்டுச் செல்லும். முதலில் குறிக்கோளை மனதில் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த குறிக்கோளிற்கு ஏற்றவாறு திட்டம் தீட்ட வேண்டும்.நாம் தீட்டும் திட்டங்களிற்கு கால வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும்.அங்ஙனம் நிர்ணயம் செய்தால் தான் நம்முள் ஓர் உந்துதல் ஏற்படும். நிர்ணயம் செய்யப்பட்ட காலவரையரைக்குள் தீட்டிய திட்டத்தை செயலாற்றிட வேண்டும். கால வரையரையில்லாத திட்டங்கள் வெறும் கற்பனைகளாய் கரைந்து விடும்.செயல்வடிவம் பெறாத திட்டங்கள் பயனற்று விடும்.எனவே, திட்டமிட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட தெளிவான திட்டம் வெற்றிக்கு வழி வகுக்கும். ஒருகால், தோல்வியே சந்திக்க நேரிடினும் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். அவை நமக்கு   நல்ல அனுபவங்களாக, படிப்பினைகளாக அமைந்து நமக்கு வெற்றியைத் தேடித்தரும்.
உழைப்பு(HardWork):
              "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
  தாழாது உஞற்று பவர்"   
                                            - குறள் எண் : 620
      ஒரு செயலில் வெற்றி பெற வேண்டுமெனில் தன்னம்பிக்கையுடன் கூடிய திட்டமிட்ட உழைப்பு மிகவும் அவசியம். தளராத முயற்சியும், உழைப்பும் ஒரு மனிதனிடத்தில் இருந்தால் அவனுக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.நமது உழைப்பு எப்படிப்பட்டதாய் இருந்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும்.நாம் என்ன செய்கிறோம், அதை ஏன் செய்கிறோம், அதைச் செய்வதால் நமக்கு என்ன பலன், அதற்கு போதுமான உழைப்பை நாம் மேற்கொள்ளுகிறோமா என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.நம்மை விட உயர்ந்தவர்களின் செயல்புரியும் விதம், சிறப்பானதாக இருப்பின் அதை பின்பற்ற தயங்கக் கூடாது. வெற்றி பெற்றவர்களின் அறிவுரையை பெறவும் மறக்கக் கூடாது.  செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும்.
              ஈடுபாடு சிறிதுமின்றி,கட்டாயத்தின் பேரால் மேற்கொள்ளும் உழைப்பினால் வெற்றி கிட்டுவதில்லை.எந்தச் செயலைச் செய்தாலும் அதில் முழு மனதாய் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.அங்ஙனம் செய்யும் பட்சத்தில், நமக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.
          “ வெற்றி வேண்டுமா... போட்டுப் பாரடா எதிர் நீச்சல்...”
இதை மனதில் கொண்டு உழைப்போம்....வெற்றி மலர்களை மாலைகளாய் சூடுவோம்.