blank'/> muhilneel: யார் குற்றம் ?

Monday, September 2, 2013

யார் குற்றம் ?




மாடியிலிருந்த வராந்தாவை முக்கால் பாகம் அடைத்துக் கொண்டிருந்தது அந்த பெரிய பெட்டி. சில மாதங்களுக்கு முன் புதிதாய் வாங்கியிருந்த தொலைக்காட்சிப் பெட்டி இருந்த பெட்டி அது.வீட்டில் ஏற்கனவே இருந்த தொலைக்காட்சிப் பெட்டி சிறியதாக இருந்தபடியால், அதை வேறோர் அறைக்கு மாற்றிவிட்டு, வரவேற்பறையில் பிரம்மாண்டமாய் பொருத்தப் பட்டிருந்தது அந்த தொலைக்காட்சிப் பெட்டி.அது இருந்த அட்டைப் பெட்டியோ, பிரம்மாண்டமாய்   மாடி வராந்தாவை பிடித்துக் கொண்டது.


கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் அந்தப் பெட்டி வராந்தாவில் கிடந்தது. அப்போது தான் மழைக் காலம் ஆரம்பித்திருந்தபடியால், மழைச் சாரல் பட்டு பட்டு அந்தப் பெட்டி நைந்து போக ஆரம்பித்திருந்தது. சில நாட்களாக, ஒரு சாம்பல் நிறப் பூனை வேறு, வராந்தாவை  சுற்றிச் சுற்றி வர, அது அந்தப் பெட்டியினுள் ஏதேனும் அசிங்கம் செய்து விடுமோ என்றெண்ணி, அந்தப் பெட்டியை   மாடியிலிருந்த ஓர் அறையில் போட்டு  அறையை அடைத்து விட்டிருந்தார் அம்மா. அதன் பின், அந்தப் பெட்டியைப் பற்றி வீட்டில் அனைவரும் மறந்தே போயிருந்தனர்.


ஒரு வாரம் சென்ற நிலையில், மாடியின் வராந்தாவை அந்த சாம்பல் நிறப் பூனை வளைய வந்து கொண்டிருந்தது.அவ்வப்போது "மியாவ் ! மியாவ் !" என்று கத்திக் கொண்டே இருக்கும். அதன் குரலைக் கேட்டாலே, வீட்டில் அனைவரும் உஷாராகி அதனைத் துரத்தக் கிளம்பி விடுவர். ஏனெனில், வீட்டில் மீன் தொட்டி வைத்திருந்தனர். கண்கவர் வண்ணங்களில் துள்ளியோடும் மீன்களைக் காண்பதுவே ஓர் இனிய பொழுது போக்கு, மனதிற்கு  இதமளிப்பதும் கூட. ஒருமுறை, மீன் தொட்டியின் மீதேறி  பூனை நின்று கொண்டிருந்தது. தொட்டி கண்ணாடி வைத்து முக்கால் பாகம் மூடப் பட்டிருந்ததால் மீன்களனைத்தும் தப்பித்தன.


சில சமயங்களில், அடுப்பங்கரையில் இருக்கும் பாலைக் குடித்துவிட்டு ஓடிவிடும், அல்லது வெளியிலிருந்து பிடித்து வரும் எலிகளை வீட்டின் வாசலில் போட்டுச் சென்று விடும். அதிகாலை வேளைகளில் வீட்டின் வாசலில் இரத்தமும் சதையுமாய்க் கிடக்கும் எலியைக் கண்டால், அன்று முழுவதும் மனம் என்னவோ போல் இருக்கும். இதனாலேயே, அந்த வீட்டில் பூனையைக் கண்டால், ஏதோ துஷ்டனைக் கண்டது போல் துரத்தியடித்தனர்.


சில நாட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பூனை, ஏனோ இரண்டு நாட்களாக கண்களில் தென்படவே இல்லை. நல்ல வேளை. இனி பூனைக்கு பயப்படத் தேவையில்லை என்று அந்த வீட்டினர் நிம்மதிப்  பெருமூச்சு விட்டனர்.  ஆனால், அந்த நிம்மதி  நிலைக்கவில்லை.  இரண்டே நாட்களில் மீண்டும் பூனையின் சப்தம் கேட்கத் துவங்கியது. ஆனால், அந்தச் சாம்பல் நிறப் பூனை கண்களில் தென்படவில்லை. வேறு ஏதேனும் புதிய பூனை வீட்டினுள் தஞ்சமடைந்திருக்கிறதா என்று பார்த்தனர். அப்படி எதுவும் தென்படவுமில்லை. வேறு எங்கிருந்து சப்தம் வருகிறதென்பதை அறிந்து கொள்ளவும் இயலவில்லை.


அந்தக் குடும்பத்திலிருந்த அனைவரும் பணிக்குச் செல்பவர்கள். ஆதலால், விடுமுறை நாட்கள் கிடைக்கும் போது, வீடு முழுவதும் அலசி, ஒட்டடை அடித்து சுத்தம் செய்யும் வேலைகள் நடைபெறும். அப்படி ஒரு நாள், வேலை செய்து கொண்டிருக்கும் போது தான், பூனையின் சப்தம் எங்கிருந்து வருகிறதென்பதையே கண்டறிந்தனர். அந்தச் சப்தம்  வேறெங்கிருந்தும் வரவில்லை, புதிதாக வாங்கியிருந்த தொலைக்காட்சி இருந்த அட்டைப் பெட்டியினுள் இருந்தே வந்திருக்கிறது. வராண்டாவில் கிடந்த பெட்டியினுள் பூனை வந்து குட்டி போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. அதை அறியாது பெட்டியை அறையினுள் வைத்துப் பூட்டிவிட, தாய்ப் பூனை வந்து குட்டிகளைத் தேடியும் கிடைக்காததால், அது சென்று விட்டது.


மொத்தம் ஐந்து குட்டிகள் இருந்தன. வெள்ளை நிறத்தில் இரண்டு குட்டிகள், சாம்பல் கலந்த வெள்ளை நிறக் குட்டிகள் இரண்டு, பாலின் நிறத்தில் ஒரு குட்டி இருந்தன. அனைத்தும் புசுபுசுவென்று அழகாய் இருந்தன. ஒன்றன் மேல் ஒன்றாய் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு குட்டி பெட்டியை விட்டு வெளியில் வருவதெப்படி என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.அன்றாடம் அந்தக் குட்டிகளுக்கு பால் வைத்து பார்த்துக் கொண்டனர்.


ஒரு மாதம் சென்றிருக்கும். தேர்வு விடுமுறை வந்தது. அந்தக் குடும்பத்தினர் விடுமுறைக்கு வெளியூர் செல்ல எண்ணினர். உடனே அவர்களது எண்ணத்தில் உதித்தது   இந்தப்  பூனைக் குட்டிகள் தாம். வெளியூர் சென்றிருக்கும் சமயத்தில் குட்டிகளை யார் பார்த்துக் கொள்வது ? தெரிந்தவர்கள் எவரிடமேனும்  கொடுத்து  பார்த்துக்  கொள்ளச் சொல்லலாமா?    என்று எண்ணியவர்கள், வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு அருகில் மாடியின் கீழ் விட்டுச் சென்றால், இவற்றின் குரல் கேட்டு தாய்ப் பூனை வந்து  தூக்கிச் சென்றுவிடும்  என்றெண்ணி குட்டிகளை அப்படியே பெட்டியுடன் வைத்தனர். பெட்டியிலிருந்து  வெளியே  எடுத்து  விட்டால், ஏதேனும் நாயோ, அல்லது வேறு மிருகங்களோ குட்டிகளை காயப்படுத்தியோ, கொன்றோ விடுமென்று பெட்டியுடனே  வைத்துச் சென்றனர். அவை குடிக்க அவற்றிற்கு பால் வைத்திருந்தனர்.


விடுமுறைக்கு வெளியூர்  சென்றுவிட்டு, மூன்று வாரங்கள்  கழித்து வந்தவர்கள், பூனைக் குட்டிகள் எவ்வாறு இருக்கின்றன என்று   பார்த்தனர். ஆனால், அங்கு அவர்கள்  கண்ட காட்சி, அவர்களை  மிகுந்த   துயரத்திற்குள்  ஆழ்த்தியது. பூனைக் குட்டிகள் அனைத்தும்  பெட்டியினுள் இறந்து கிடந்தன. அனைவரது மனமும்  அப்படியே  துயரத்தில்  உறைந்து  போயின. பாவம் செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு  அனைவரது  மனதையும்  ஆட்கொண்டது. யாரைக் குற்றம் சொல்ல ? அந்தக் குடும்பத்தினரையா ? அன்றி தாய்ப் பூனையையா ? அறியாது செய்த பிழை, தற்செயலாய் நடந்த ஓர்  நிகழ்வு, அந்தக்  குடும்பத்தினரை மிகவும்  பாதித்தது.



4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு பாடம்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பாவம்..என்ன சொல்வது..சில விஷயங்கள் இப்படித்தான் நடந்து விடுகின்றன.

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ கிரேஸ்

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

Post a Comment