நெகிழி பொருட்களில் மறுசுழற்சி குறியீடும், அந்த குறியீட்டினுள் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்களுள் ஏதேனும் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை எத்தனை பேர் அறிவோம் ? அடுத்த முறை நெகிழி குடிநீர் புட்டிகளோ, அல்லது வேறு ஏதேனும் நெகிழி பொருள் வாங்குகையில், அதில் கீழ்க்காணும் குறியீடும்,அந்த குறியீட்டினுள் ஏதேனும் எண்கள் இருக்கின்றனவா என்றும் பாருங்கள்.
இவை தான் மறுசுழற்சி குறியீடுகள். நாம் வாங்கும் நெகிழிப் பொருட்கள் அனைத்திலும், இது போன்ற குறியீடு இருக்கும். மேலுள்ள படத்தில் இருக்கும் குறியீடுகள் அனைத்தும் மறுசுழற்சியை குறிக்கும் குறியீடுகளே.
இது போன்ற குறியீடுகள் நெகிழியினாலான புட்டிகள் (bottles), இன்னபிற நெகிழி பொருட்கள் அனைத்திலும் இருக்கும். இக்குறியீட்டினுள் இருக்கும் எண்கள் நெகிழியின் நச்சுத்தன்மை குறித்தும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் குறித்தும், எந்த அளவு சூட்டிற்கு உட்படுத்தப் பட்டால் அவை உருகக் கூடும், அதன் மக்கும் தன்மை, மொத்தத்தில் அவை பயன்படுத்த உகந்தவை தானா, மனிதர்களுக்கு பாதுகாப்பானவை தானா போன்ற பல தகவல்களை உள்ளடக்கியது.
இனி ஒவ்வொரு எண்ணும் எதை குறிக்கின்றன, அவை எவ்வகையான நெகிழி, அதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் குறித்து காணலாம்.
எண் ஒன்று கொண்ட குறியீடு PETE அல்லது PET ஆகும். இதன் விரிவாக்கம் Polyethylene Terephthalate. இவ்வகை நெகிழிகளைக் கொண்டு குடிநீர் புட்டிகள், குளிர்பான புட்டிகள் தயாரிக்கப் படுகின்றன. இவ்வகை நெகிழி பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், இவற்றுள் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பிருக்கிறது. மேலும் இவற்றுள் அடைக்கப் பட்டிருக்கும் பொருட்கள் மற்றும் பானங்களின் சுவை (flavor) இப் புட்டிகளிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது. நாம் புட்டிகளில் வாங்கி பயன்படுத்தும் பெப்ஸி(Pepsi), கோக்(Coke), ஃபான்டா(Fanta), மிராண்டா(Miranda) போன்ற குளிர்பானங்கள் காலியானதும், அவற்றை குடிநீர் நிரப்ப பயன்படுத்துகையில், அந்த குளிர்பானங்களின் சுவை நீரிலும் ஏறியிருப்பதை கவனித்திருக்கலாம்.
எண் ஒன்றினால் குறியிடப் பட்டிருக்கும் நெகிழி புட்டிகள் (Plastic bottles) பெரிய கைப் பைகளாகவும், நெகிழியினாலான மேசை, நாற்காலி தயாரிக்கவும் , தரை விரிப்புகளாகவும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
எண் இரண்டு கொண்ட குறியீடு HDPE - High Density Poly Ethylene. இவ்வகை நெகிழி பாதுகாப்பானதாக கருதப்படும் மூன்று வகை நெகிழிகளுள் ஒன்றாகும். நெகிழி பழச்சாறு புட்டிகள் (Plastic Juice bottles), சவர்க்காரத் திரவ புட்டிகள் (shampoo bottles), சலவைக்கார புட்டிகள் (detergent bottles), இருசக்கர மற்றும் நாற்சக்கர வண்டிகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் புட்டிகள் (motor oil bottle) போன்றவை தயாரிக்க இவ்வகை நெகிழி பயன்படுகிறது.
இவ்வகை நெகிழிகள் மற்ற பொருட்களில் ஊடுருவும் தன்மையும், உருகும் தன்மையும் குறைவாக இருப்பதால் இவையும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.
இவ்வகை நெகிழிகள் பேனாக்கள்(Pens), சலவைக்கார புட்டிகள்(Detergent bottles), மறுசுழற்சி கொள்கலன்கள் (Recycling containers) போன்றவை தயாரிக்க மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
வகை மூன்றை சார்ந்த நெகிழிப் பொருட்கள் PVC என்றழைக்கப்படும் தேறலியத்தினால் (Vinyl) உருவாக்கப்பட்டது. இவை உணவுகளை உறையிட்டு மூட பயன்படும் தாட்கள் (food wrap), நீர்க் குழாய்கள் (plumbing pipes) போன்றவை செய்ய பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகை நெகிழிகளில் phthalate எனும் வேதிப் பொருள் இருக்கிறது. இந்த வேதிப் பொருளினால் பல வகையான உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன. கருவின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுவதோடு, சமயங்களில் இவ்வேதிப் பொருள் கருச் சிதைவும் கூட ஏற்படுத்துகிறது.
இவ்வகை நெகிழிகளில் DEHA (Di Ethyl Hydroxyl Amine) என்ற வேதிப் பொருள் உள்ளது. அதிக காலம் இவ்வகை நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால், இவை புற்று நோய்க் காரணியாகவும் (carcinogen)ஆகிவிடுகின்றன.
இவ்வகை நெகிழியை பயன்படுத்தி மருத்துவ சாதனங்கள், எண்ணெய் புட்டிகள், உணவு பொட்டலங்கள் / டப்பாக்கள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன.
உணவு / திண்பண்டங்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் நெகிழி டப்பா. |
வகை நான்கைச் சார்ந்த நெகிழிப் பொருட்கள் LDPE (Low Density Polyethylene) ஆகும். இவ்வகை நெகிழிப் பொருட்களைக் கொண்டு கடைகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள், பிழிய பயன்படுத்தும் டப்பாக்கள் ( ketchup bottles, Jam bottles) , உடைகள், தரைவிரிப்புகள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன.
இவ்வகை நெகிழிகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, குப்பைத் தொட்டிகள், தரை ஓடுகள் (floor tiles), உரம் தயாரிக்க பயன்படும் கலன்கள் (Compost bins), குப்பைத் தொட்டிகளில் பயன்படுத்தப் படும் குப்பை பைகள் (trash liner), தபால் உறைகள் போன்றவையாக உருமாறுகின்றன.
குப்பைத் தொட்டிகள் / கூடைகளில் பயன்படுத்தப்படும் குப்பை பைகள் (trash liner)
வகை ஐந்தைச் சார்ந்த நெகிழிப் பொருட்கள் Poly Propylene. இவ்வகை நெகிழி, மருந்து புட்டிகள், தயிர் டப்பாக்கள், தேன் மற்றும் இன்னபிற பாகு பதத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை ( Glucose syrup, Cane syrup, Maple syrup ) அடைத்து விற்கவும் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகை நெகிழியும் பாதுகாப்பானதாக கருதப் படுகிறது.
வகை ஆறினை சார்ந்த நெகிழி Polystyrene. இது styrofoam என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நெகிழி, மறுசுழற்சி செய்ய இயலாது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உடல் நலக் கேடு அதிகம். இவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வேதிப் பொருட்கள், குறிப்பாக எரிக்கையில் வெளியேறும் வேதிப் பொருட்கள் நலக் கேட்டினை ஏற்படுத்தும்.
இவ்வகை நெகிழிகள் முட்டைப் பெட்டிகள், மாமிசம் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் தட்டுகள், குறுவட்டு வைக்கக்கூடிய பைகள் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப் படுகின்றன.
மேற்கண்ட வகைகளில் வகைப்படுத்த இயலாத நெகிழிப் பொருட்கள் வகை ஏழைச் சாரும். இவ்வகையில் பல வகையான நெகிழிகள் கலந்திருக்கின்றன. Poly carbonate, Bisphenol A (BPA). இவற்றில் நம் உடலின் சுரப்புநீர்களை தடை செய்யும் காரணிகள் (Harmone Disruptors) இருப்பதாகவும், அங்கனம் சுரப்புநீர்கள் தடை செய்யப்பட்டால், மலட்டுத் தன்மை(Infertility), மிகைச் சுறுதி (hyper activity), இனப்பெருக்க பிரச்சனைகள் (Reprductive Problems) போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நெகிழியின் பயன்பாட்டினால், இத்தனை பிரச்சனைகள் இருக்கையில் அவற்றை முற்றிலுமாக பயன்படுத்தாமல் விட்டு விடலாமே. நமக்குத் தான் துணிப் பைகள், சாக்குப் பைகள், சணல் கொண்டு செய்யப்பட்ட பைகள், பாத்திரங்களில் வெள்ளிப் பாத்திரம், ஈயப் பாத்திரம், நிலை வெள்ளி (Ever-silver) என்று எத்தனையோ இருக்கின்றனவே. அப்படியும் முடியாது போனாலும் நெகிழிப் பொருட்களில் 1, 3, 6, 7 ஆகிய மறுசுழற்சி எண்கள் கொண்டவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். 2,4, 5 ஆகிய மறுசுழற்சி எண்கள் கொண்டவற்றை வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு நம்மையும், நம் சந்ததியையும் காத்துக் கொள்ள வெண்டும்.
தகவல் திரட்ட உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்
www.nationofchange.org
signsanddisplays.wordpress.com
மொழிபெயர்ப்புக்கு உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்
Google Translate
English to Tamil Dictionary - Translation Online : Tamil Cube
உறுதிமொழி
இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது என்று உறுதிமொழி அளிக்கிறேன்.
இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.
நெகிழியின் பயன்பாட்டினால், இத்தனை பிரச்சனைகள் இருக்கையில் அவற்றை முற்றிலுமாக பயன்படுத்தாமல் விட்டு விடலாமே. நமக்குத் தான் துணிப் பைகள், சாக்குப் பைகள், சணல் கொண்டு செய்யப்பட்ட பைகள், பாத்திரங்களில் வெள்ளிப் பாத்திரம், ஈயப் பாத்திரம், நிலை வெள்ளி (Ever-silver) என்று எத்தனையோ இருக்கின்றனவே. அப்படியும் முடியாது போனாலும் நெகிழிப் பொருட்களில் 1, 3, 6, 7 ஆகிய மறுசுழற்சி எண்கள் கொண்டவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். 2,4, 5 ஆகிய மறுசுழற்சி எண்கள் கொண்டவற்றை வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு நம்மையும், நம் சந்ததியையும் காத்துக் கொள்ள வெண்டும்.
தகவல் திரட்ட உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்
www.nationofchange.org
signsanddisplays.wordpress.com
மொழிபெயர்ப்புக்கு உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்
Google Translate
English to Tamil Dictionary - Translation Online : Tamil Cube
உறுதிமொழி
இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது என்று உறுதிமொழி அளிக்கிறேன்.
இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.