blank'/> muhilneel: விழித்தெழு பெண்ணே !

Sunday, September 20, 2015

விழித்தெழு பெண்ணே !



"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி"

என்று வீரமாகப் பாட்டெழுதி, பெண்களின் மனத்திலும் அந்த வீரத்தினை விதைத்திட்டவர் பாரதியார்.

வீரமும் விதையாக விழுந்து விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால், அந்த வீரம் தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் பரிமளிக்கிறதா என்பது தான் கேள்வி. பெரும்பாலான நேரங்களில் அங்கனம் பரிமளிக்கின்ற வீரம் பெண்ணிற்கே ஆபத்தாக வந்து முடிகிறது. இதனால், பல பெண்களும் மெளனத்தையே  தங்கள் கவசமாகக் கொண்டு விடுகிறார்கள். " அப்படி அல்ல ! எம்மைப் பெற்ற, எம்முடன் பிறந்த, எம் மீது நம்பிக்கை கொண்ட, எம்முடன் எமக்காக வாழும் பெண்டிரின் மெளனத்தினை மொழி பெயர்க்கத் தெரிந்தவர்கள் நாங்கள் ! அவர்தம் உள்ளத்தை உணர்ந்து அவர்களை புண்படுத்தாது அனுசரித்து செல்ல எம்மாலும் முடியும். அவர்தம் முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உத்வேகமாகவும் தூண்டுகோலாகவும் எம்மால் இருக்க முடியும் " என்று உரக்கச் சொல்லும் ஆண்குலங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

பெண் பிள்ளைகள் குடும்பத்தின் சொத்தாக, குலவிளக்காக எண்ணி, பெண் பிள்ளைகள் வேண்டுமென தவமிருந்து பெற்று சீராட்டி பாராட்டி ஆண் பிள்ளைக்கு நிகராக, கல்வி கேள்விகளில் சான்றோராய் ஆக்கி அழகு பார்க்கும் பெற்றோர் இன்று அதிகம். அதற்குப் பின் தானே வருகிறது, திருமணம். இருமனம் இணையும் திருமண பந்தம் இன்று பணம் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. அப்படி தான் இணைந்தாகி விட்டது. அதன் பின்னும் பணமே பிரதானம். ஒன்று பெண்ணானவள் சம்பாதித்து ஆக வேண்டும். அது இல்லையேல், பெண்ணைப் பெற்றோர் அவ்வப்போது சீதனமாக தந்தாக வேண்டும். இல்லையேல், அவள் பாடு திண்டாட்டம் தான். சற்றே சீறி விட்டாலோ, முடிவு விவாகரத்து. தட்சணை  கொடுத்து வாழ துவங்கினாலும், ஏனோ வாழ்க்கை பலருக்கு இனிப்பதில்லை.

இங்கே முகப்புத்தகத்தில் படித்த ஓர் கருத்தினை பகிர்ந்து கொள்கிறேன். மனதினைக் கவர்ந்த, மிகவும் ஈர்த்த கருத்து என்றும் சொல்லலாம்.

" It's not that we expect too much from our boyfriend or husband ..... it's just our dad has set very high standards oh how we should be treated "

" கணவரிடமிருந்து அளவிற்கு அதிகமாக நான் எதையும் எதிர்பார்க்கவில்லை....(இங்கே அன்பு, ஆதரவு, மதிப்பு அனைத்தும் அடங்கும்).
நாங்கள் சமூகத்தால், எம்மைச் சுற்றி இருப்பவர்களால் மதிப்புடனும் கண்ணியத்துடனும் நடத்தப் பட வேண்டிய முறை குறித்து அதிகமான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் எம்முள் விதைத்தவர் எம் தந்தை "

உண்மையில் பெண்ணின் முன்னேற்றம் என்பதற்கு வித்தே, நமது தாய்
தந்தையர், நமது இல்லத்திலிருந்தே தொடங்குகிறது.


சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா ? இல்லை. பெண் என்பவள் ஒர் போகப் பொருளாகவும், கேலியும் கிண்டலுக்கும் உரிய ஒரு பொருளாகவே பார்க்கப் படுகிறாள்.  ஆணுக்கு காதல் மலர்ந்து விட்டதென்றதும், அவன் கண்ட பெண்ணுக்கும் உடனே காதல் வந்துவிட வேண்டும். அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலோ, அவள் முகம் சிதைக்கப் படுகிறாள் அல்லது தாக்கப்படுகிறாள், அவதூறுகளுக்கு ஆளாகிறாள். அப்படி ஓர் கொடூரத்தை செய்யும் முன் அவர்தம் எண்ணங்களில், அவரது தாயும், சகோதரிகளும் நினைவில் வரமாட்டார்களா என்ன ?

பெண்ணென்பவளும் உயிர் உள்ளவளே. அவளுக்கும் உள்ளம் என்பது உண்டு. அந்த உள்ளத்தினுள் ஆசைகளும் கனவுகளும் அதிகம் உண்டு. அதைவிட திடமும் தைரியமும் நிரம்பவே உண்டு. எதிர்ப்பு, தடை என்று எது வரினும் துணிந்து போராட திண்ணமும் அதிகம் உண்டு.

சமூகத்தையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பற்றி இதுவரை அலசி ஆராய்ந்தோம். இப்போது, பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்தம் சமூக நிலைக்கு அவர்கள் எங்ஙனம் காரணமாகின்றனர் ? சுதந்திரம் கிடைக்காத வேளையில் அதற்காக ஏங்கித் தவிப்பதும், அப்படி கிடைத்த சுதந்திரத்தை எல்லை மீறிய நடவடிக்கைகளால் பறிகொடுத்து  சிரமப்படுவதும் ஏன் ? ஆண்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர் இல்லை தாம் பெண்கள். அதை கல்வி, கேள்வி, தொழில், திறமை, நிர்வாகம் என்று அனைத்திலும் நிலைநாட்டுகின்றனர். இது வரவேற்கத்தக்க விஷயம். அதுவே, ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானம். அதனால், குடி, போதை, புகைப்பிடித்தல் இது போன்ற செய்கைகள் ஆண்களைப் போல செய்வதில் என்ன பிழை ? என்று விவாதம் செய்வது எதற்கு ? ஆணோ, பெண்ணோ யாராயினும் தீங்கு விளைவிக்கக் கூடியதை விட்டு விலகியிருத்தல் நலம் தானே ? இவையெல்லாம் செய்தால் தான் பெண் உரிமைகளும், ஆண் - பெண் சமத்துவமும் நிலைநாட்டப் படுவதாக எண்ணினால், அது தவறானதோர் கணிப்பாகும்.

பெண் என்பவள் வணிக நோக்கிற்காக ஆபாசமாக சித்தரிக்கப் படுகிறாள். இதை அன்றாடம் நாம் திரைப்படங்களிலும், வணிக விளம்பரங்களிலும் காண்கிறோம். அதைக் கண்டு முகம் சுழிக்கிறோம். இப்போது காட்டப்படும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில், பெண் பாத்திரங்களின் சித்தரிப்பு, ஏதோ பெண் என்பவள் கொடுமை, வன்மம், குரோதத்தின் மொத்த உருவமாக சித்தரிக்கப்படுகிறாள். பொதுவாகவே, பெண்கள் மென்மையானவர்கள். மென்மையோடு உறுதியும் வாய்ந்தவர்கள். அதை இது போன்ற தொலைக்காட்சி நெடுந்தொடர்களில்  அடிமைகளாகவும் ஆட்டிப் படைப்பவர்களாகவும் சித்தரிப்பது ஏனோ ? இவற்றை காண்போரேனும் இவையெலாம் மாயை என்பதை உணர்ந்த அந்த மாயையிலிருந்து  வெளிவருதல் வேண்டும்.

இந்திய பெண்கள் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றோர் ஆய்வு சொல்கிறது. எதனால் ? இந்தியப் பெண்களுக்கு இந்நிலை ஏன் ? அவர்கள் தமது வாழ்வின் இளம் பிராயம் தொட்டு இருக்கும் ஆர்வங்களை திறமைகளை வளர்த்துக் கொள்ளாததும் கூட இதற்கோர் காரணமாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக, ஒருவர் நன்கு படம் வரையும் திறமையோ, பாடும் திறமையோ கொண்டவராக இருக்கலாம். இளம் பிராயத்தில் அத்திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்லதோர் வாய்ப்பு அமையாது போயிருக்கக் கூடும். பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, பின்பு வேலை, அதன் பின் குடும்பம், குழந்தைகள், உத்தியோகம் என்று எப்போதும் ஏதாவது ஒன்றினால் ஆக்கிரமிக்கப் பட்டு இருந்திருப்பார்கள். வயதாகி பணி ஓய்வு பெற்று இருக்கும் வேளையில், ஏதோ சும்மா இருப்பது போலவும், எப்போதும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், உடலுக்கு ஓய்வு கொடுக்கையில், மனம் ஏதோ ஒன்றை இழந்து விட்டது போன்று பாடுபடும். பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமல்ல, வேலைக்கு செல்லாது, வீட்டிலிருந்து குடும்பப் பொறுப்பை நிர்வகிக்கும் பெண்களுக்கும் இந்நிலை ஏற்படும். இதற்கு தீர்வு காண்பது எப்படி ? வீட்டிலுள்ளோருக்கு தேவையானவற்றை செய்து முடித்து விட்டு ஓய்வாக இருக்கும் அவர்கள், அந்த ஓய்வு நேரத்தில் தங்களுக்கென்று, தங்களது திறமைகள், விருப்பங்கள் ஆகியவற்றிற்கு சிறிது நேரம் ஒதுக்குதல் அவசியம். இவர்களது மனநிறைவுக்கும், அமைதிக்கும் குடும்பத்தாரின் முழுமனதுடனான ஆதரவும் அரவணைப்பும் நிச்சயம் தேவை. அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுதல் அவர்களுக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் நிச்சயம் வழங்கும். அவர்களுக்கென  ஒதுக்கும் நேரத்தில் ஆடலாம், பாடலாம், வரையலாம், வண்ணந்தீட்டலாம், எழுத்து திறமையை வெளிக்கொணரலாம், கைவினைகள் செய்யலாம், புகைப்படம் எடுக்கலாம், தோட்டம் அமைக்கலாம். இவையெல்லாம் நமது மனதிற்கு அமைதியையும் தெளிவையும் தருவதோடு, பிறரிடம் நமக்கென தனி மதிப்பினை ஈட்டித் தரும். இதனால், மனமும் மகிழ்வும் நிறைவும் அடையும்.


பெண்கள் தங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ளாது, தம்மையும் தாம் சார்ந்த சமூகத்தினையும் சுற்றி நடக்கும் நன்மைகள், தீமைகள் என அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொண்டால், விழிப்புணர்வும், நம்பிக்கையும், மனோதிடமும் நிச்சயம் கிடைக்கும் என்பது திண்ணம்.

குறிப்பு :

புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி,
http://www.slideshare.net/KunalNagpal2/women-empowerment-35827905

உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(3)  பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

10 comments:

Geetha said...

பெண்ணின் பிரச்சனைகளை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள் அருமை..வாழ்த்துகள் வெற்ரி பெற...

Tamizhmuhil Prakasam said...

@ Geetha M

நன்றி தோழி.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//பெண்கள் தங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ளாது, தம்மையும் தாம் சார்ந்த சமூகத்தினையும் சுற்றி நடக்கும் நன்மைகள், தீமைகள் என அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொண்டால், விழிப்புணர்வும், நம்பிக்கையும், மனோதிடமும் நிச்சயம் கிடைக்கும் என்பது திண்ணம்.// திண்ணமே!

வீட்டில் இருக்கும் பெண்களும் தங்களுக்கான வெளியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு கட்டுரை எழுத நினைத்திருந்தேன்..அதை அழகாகச் சொல்லி விட்டீர்கள். அருமையான கட்டுரை தோழி..வெற்றிபெற வாழ்த்துகள்.

Tamizhmuhil Prakasam said...

@ கிரேஸ்

நன்றி தோழி.

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! நாட்டின் "கண்கள் "அவர்களை பற்றி கருத்துக்கள்! அருமை! வெற்றியடைய வாழ்த்துக்கள்


எல்லா கண்களும் "கண்களை "பார்க்கும்படி மது குடித்து .....
அது மிகப்பெறிய வருத்தமே .....!!

Tamizhmuhil Prakasam said...

@ கரூர்பூபகீதன்

உண்மை தான் சகோ. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ.

மணிச்சுடர் said...

பெருமைக்குரிய பெண்ணினத்தின் உயர்ச்சி அவர்கள் அமைத்துக் கொள்ளும சமூகக் கட்டுமானத்திலேயே இருக்கிறது. கட்டுரை அருமை. வாழ்த்துகள்.

Tamizhmuhil Prakasam said...

@ Pavalar Pon.Karuppiah Ponniah

நன்றிகள் ஐயா.

Parameswaran C said...

மரியாதைக்குரியவரே,
வணக்கம். தங்களது கட்டுரை அருமையாக உள்ளதுங்க. உதாரணமாக ,''ஆணுக்கு காதல் மலர்ந்து விட்டதென்றதும், அவன் கண்ட பெண்ணுக்கும் உடனே காதல் வந்துவிட வேண்டும். அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலோ, அவள் முகம் சிதைக்கப் படுகிறாள் அல்லது தாக்கப்படுகிறாள், அவதூறுகளுக்கு ஆளாகிறாள். அப்படி ஓர் கொடூரத்தை செய்யும் முன் அவர்தம் எண்ணங்களில், அவரது தாயும், சகோதரிகளும் நினைவில் வரமாட்டார்களா என்ன ?'' என்ற வரிகள் பெண்களை இழிவுபடுத்தும் சமூகத்திற்கு சரியான சாட்டையடியாகவே கருதுகிறேன்.வாழ்த்துக்களுடன் அன்பன்,
C.பரமேஸ்வரன்,
http://konguthendral.blogspot.com
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் - 638402

Tamizhmuhil Prakasam said...

@ Parameswaran. C

ஐயா, தங்களது கருத்து மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது அன்பான வருகைக்கும், மேலான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment