கல்லூரியில் கணிப்பொறியியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தாள் ராஜி. அந்தக் கல்லூரியில் அவள் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது. அன்று, மாதத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. இளங்கலை மாணவர்கள் தேர்வெழுதும் அறைக்கு கண்காணிப்புப் பணிக்குச் சென்றிருந்தாள்.மாணவர்கள் அனைவருக்கும் விடைத் தாட்களையும், வினாத் தாட்களையும் கொடுத்துவிட்டு அமர்ந்தாள். சிறிது நேரத்தில், துணைத் தாட்கள் கேட்டு மாணவர்கள் ஒவ்வொருவராய் எழ, அனைவருக்கும் கொடுத்துவிட்டு, இருக்கையில் வந்தமர்ந்தாள். மாணவர்களிடம், யாரும் காப்பி அடிக்க முயற்சி பண்ணாதீர்கள் என்று அறிவுறுத்தினாள்.
கண்காணித்துக் கொண்டிருந்த நேரத்தில் இளங்கலை இரண்டாமாண்டு கணிப்பொறியியல் பயிலும் மாணவன் சந்தர் எதுவும் எழுதாமல், சிந்திப்பதும், சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டாள். அவன், விடைத் தாளில் அவ்வளவாக எதுவும் எழுதவும் இல்லை. படிக்காது வந்திருக்கிறான் போலும் என்றெண்ணினாள். தேர்வுக்கான மூன்று மணி நேரம் முடியும் தருவாயில், மாணவர்கள் ஒவ்வொருவராய் விடைத்தாட்களைக் கொடுத்துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கடைசியாக சந்தர் வந்து தன் விடைத் தாளைக் கொடுத்தான்.ராஜி அவனைப் பார்த்து, “சரியாகப் படிக்கவில்லையா?” என்று கேட்டாள். சந்தரோ, ஒன்றும் பேசாது அமைதியாக நின்றான். ”சரி போ” என்று கூறி அவனை அனுப்பிவிட்டு, விடைத் தாட்களை எடுத்துக் கொண்டு, ஆசிரியர்கள் ஓய்வறைக்குத் திரும்பினாள். சற்று நேரம் அமர்ந்திருந்தவள், மணி நாலரை ஆனதும், வீட்டிற்குக் கிளம்பினாள். அன்று நடந்த தேர்வின் விடைத்தாட்களை திருத்துவதற்காக எடுத்துச் சென்றாள். வீட்டில் சில விடைத்தாட்களை திருத்தியவள், அவற்றை தன் அலமாரியில் வைத்தாள்.
அடுத்த நாள், காலை வகுப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், ஓய்வாக இருந்தபடியால், மீதமிருக்கும் விடைத் தாட்களைத் திருத்த எண்ணி எடுத்து வைத்தாள். இரண்டு விடைத் தாட்களைத் திருத்திய ராஜி, வரிசை எண்களின் வாரியாக, அடுத்து இருக்க வேண்டிய சந்தரது விடைத் தாள் இல்லாதது கண்டு திகைத்தாள். எங்கேனும் அருகில் விழுந்து கிடக்கிறதா என்று பார்த்தாள். அங்கு இல்லை. ஒரு வேளை, அவள் சென்ற வகுப்புகளில் எங்கேனும் தவற விட்டு விட்டாளோ எண்றெண்ணி, அந்த வகுப்பறைக்கு மாணவர்களை அனுப்பி, பார்த்து வரச் சொன்னாள். அங்கும் இல்லை என்று கூறி மாணவர்கள் திரும்பினர். அவளுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. முதல் நாள் தேர்வறையில், சந்தர் கேள்விகளுக்கு விடை அறியாது அமர்ந்திருந்தது அவள் நினைவிற்கு வந்தது. உடனே, அவள் மனதில் சந்தர் விடைத்தாளை திருடி இருப்பானோ என்ற எண்ணம் எழுந்தது. அவளது எண்ணம் சரியானது தானா என்று சிந்தித்து பார்க்கக் கூட அவளால் இயலவில்லை. உடனே, அவள் துறைத் தலைவரிடம் சென்று புகாரளித்தாள். அவரும், சந்தரை அழைத்து விசாரித்தார். அவன், தான் விடைத் தாளைத் திருடவில்லை என்று எவ்வளவோ, மன்றாடியும், தலைவர் அவனை நம்பவில்லை. அவனை ஒரு மாதம் கல்லூரியிலிருந்து நீக்கி விட்டார்.
ஒன்றரை மாதம் சென்றிருக்கும். ராஜி வீட்டிலுள்ள தன் புத்தக அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது, புத்தகங்களின் இடுக்கில் ஏதோ தாள் இருப்பதைக் கண்டாள். எடுத்துப் பார்த்த அவள் அதிர்ந்து போனாள். அது, சந்தரது தொலைந்து போன விடைத்தாள். அவள் எப்படியோ, அந்த விடைத் தாளைத் தவற விட்டு விட்டாள். தனது சந்தேகத்தால், அவன் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டதை எண்ணினாள். தன் தவறால், ஒரு மாணவனின் நன்நடத்தையில் குற்றம் ஏற்பட்டதை எண்ணி வருந்தினாள். தீர ஆராயாமல் செய்த செயலால், அவள் மனம் குற்ற உணர்ச்சியால் நிலைகுலைந்தது.
அவள் உள்ளத்தில் ஏற்பட்ட சந்தேகமே, அவளது மன நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் கேடாய் அமைந்தது.
**************************************************************
http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/
http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/
No comments:
Post a Comment