blank'/> muhilneel: யாரால் இந்த உயர் நிலை ?

Friday, April 13, 2012

யாரால் இந்த உயர் நிலை ?

யாரால் இந்த உயர் நிலை ?

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது  உயர்வு

             பூவினது தண்டின் நீளமானது, அது நிற்கும் நீரின் அளவே ஆகும். அது போல், மாந்தரது உயர்நிலை என்பது, அவர்களது உள்ளத்தில் கொண்ட ஊக்கத்தின் அளவு என்று குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. ஊக்கம் என்பது என்ன? ஊக்கமென்பது நமக்குள்ளேயே தோன்றும் ஒருவித உந்து சக்தி. ஒரு செயலைச் செய்யத் தூண்டும் அல்லது வழிகாட்டும் ஓர் உள்ளுணர்வு.
                    அத்தகைய ஊக்கத்தினையும், உள்ளுணர்வையும் என்னுள் ஏற்படுத்தியவர்கள் என் தாய் தந்தையரே !!!

தந்தை மகற்காற்றும் நன்றி  அவையத்து
 முந்தி யிருப்பச் செயல்

       என்ற  குறளிற்கேற்ப, என் முன்னேற்றம், என் முயற்சிகள் அனைத்திற்கும் முன்னுதாரணமாய், வழிகாட்டியாய் விளங்குபவர்கள் என் தாய் தந்தையரே.அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த என்னை ஊக்கப்படுத்தி, உறுதிப்படுத்தி, என் பக்கத்துணையாய் நின்று, என் கல்வி, என் பணி அனைத்திலும் எனக்கு வழிகாட்டி, எனக்கோர் நல் வாழ்க்கைத் துணையைத் தேடித் தந்து, எனது இன்றைய உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு என்னைக் கொண்டு வந்தவர்கள் என் தாய் தந்தையரே.
      சுற்றியுள்ளோர் நம்மைப் பற்றி ஆயிரம் புறங்கூறினும், அவற்றை மனதில் கொள்ளாது, அவர்கட்கு எந்தவொரு தீங்கினையும் நினையாது, உலகத்து உயிர்களனைத்தும் நலமாய் வாழ வேண்டும் என்ற எண்ணமதை என் மனதில் பதித்தவர்கள் என் பெற்றோரே.

பகைவனுக் கருள்வாய் - நன்நெஞ்சே
 பகைவனுக் கருள்வாய்

என்ற சிந்தனையை மனதில் கொண்டு, அதன்படியே வாழ்ந்து, எங்கள் மனதிலும் அச்சிந்தனையை வளர்த்தவர்கள்.

    அன்னை தந்தையே
    ஆசானாய் வந்தமைந்தார்..
    கல்விக்கு மட்டுமல்ல -
    வாழ்க்கைக்கும் !!!
    உற்ற துணையாய்
    நம்பிக்கை விளக்காய்
    எம்மை வழிநடத்துகிறார்.

               ஓர் அழகான கூட்டுக் குடும்பமதில் எனக்கோர் வாழ்வைத் தேடிக் கொடுத்து, அந்த அழகு மாலையதில் என்னையுமோர் மலராய் இணைத்துப் பார்த்து மகிழ்பவர்கள் எம் தாய் தந்தையர். ஏட்டிலிருந்த எழுத்ததை உலகறியச் செய்யும் வண்ணம், என் எண்ணங்களையும், எழுத்துக்களையும் இணையத்தில் இணைத்திட எனக்கு வழிகாட்டி எனக்கு உற்சாகமூட்டும் என் மைத்துனி திருமதி. பி.ஆர்.லஷ்மி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
              இவர்களனைவரது அளவிடற்கரிய அன்பும் ஆதரவுமே எனது உயர் நிலைக்கு காரணமாய் நான் கருதுகிறேன்.

மகன்      தந்தைக்காற்றும்   உதவி இவன்     தந்தை
எந்நோற்றான் கொல்லெனும் சொல்

எனும் குறளிற்கேற்ப என்னைப் பெற்றவர்களுக்கு பெருமை தேடித் தர விழைகிறேன்.
-     தமிழ் முகில் பிரகாசம்.

தமிழ்த்தோட்டம்.காம் நடத்திய "அனுபவங்கள்  பகிர்தல் போட்டி" க்கான என்னுடைய பதிவு.

No comments:

Post a Comment