blank'/> muhilneel: July 2015

Thursday, July 30, 2015

புத்தொளி பிறந்தது !

வாசலில்  இருசக்கர வாகனத்தின் ஓசை சற்றே உயர்ந்து பின் மெல்ல மெல்லக் குறைந்து பின் மெளனமானது. வண்டியிலிருந்து இறங்கி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை ஒற்றை விரலில் நிறுத்தி தட்டாமாலை சுற்றியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் நிவாஸன்.

கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை அங்கிருந்த மேசையின் மீது வைக்கக் குனிந்தவனுக்கு, அங்கு ஏற்கனவே இருந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்டதும் சற்று தூக்கிவாரிப் போட்டது. வேகவேகமாக தன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், மேசை மீதிருந்த நோட்டின் பக்கங்களையும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். அவன் தேடியது அதில் இல்லை. பரபரப்புடன் தன் அறைக்குச் சென்று தனது அலமாரியில் தேடினான். அங்கும் அவன் தேடியது கிடைக்கவில்லை.

ஏமாற்றத்துடன் அறையை விட்டு வந்த நிவாஸனை அவனது தந்தை எதிர்கொண்டார்.

” என்னப்பா ! ரொம்ப பரபரப்பா எதையோ தேடுற போலயே. என்ன தேடுற ? “

” ஒரு முக்கியமான பேப்பர் ஒண்ணு வெச்சிருந்தேன் அப்பா. அதைக் காணோம். அதைத் தான் தேடறேன் “

உன்  கூட படிக்கிற அனிதாங்கற பொண்ணுக்குக் காதல் கடிதம் எழுதி வெச்சிருந்த.அது தானே ! அது என் கிட்ட தான் இருக்கு.”

அப்பா! அது வந்துப்பா….. நான் அந்தப் பொண்ணைக் காதலிக்கிறேன்.அவள் என்னை விரும்பறாளான்னு தெரியலை.அதைத் தெரிஞ்சிக்கத் தான்  கடிதம் எழுதினேன்.

காதல் ! காதல் ! காதல் ! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா ?

இப்படி ஒரு கேள்விய நான் கேட்க மாட்டேன். ஏன்னா, நம்ம வாழ்க்கையில பிடிப்பு ஏற்பட   வேணும்னா,  காதலிக்கணும். முதல் படியா, நம்மை நாம் காதலிக்கணும். நம் செயல்கள், செய்கைகளைக் காதலிக்கணும். அப்போ தான் நம் மேலேயே  நமக்கு நம்பிக்கை பிறக்கும். நாம் செய்யும் ஒவ்வோர் செயலையும் முழு ஈடுபாட்டுடனும், மனம் நிறைந்த ஆசையுடனும் காதலுடனும் செய்ய வேண்டும். அந்தக் காதல் நம் முயற்சியை மென்மேலும் ஊக்கப்படுத்தும். அந்த முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ, எது கிட்டினாலும், நம் மனதை ஒருநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனதை ஒருநிலைப் படுத்த நாம் அச்செயலின் மீது கொண்ட காதலும் ஈடுபாடுமே துணையாக நிற்கும்.

உன் மேலே உனக்குக் காதலும் நம்பிக்கையும் வந்துட்டா, உன் காதலை வெளிப்படுத்தக் கடிதம் எல்லாம் தேவைப்படாதுப்பா. உன் கண்களும் உதடுகளுமே அதை அழகாக வெளிப்படுத்தும் !

நிவாஸனின் மனதுள் புத்தொளி பரவியது. அவனது வாழ்விலும் காதலிலும் அவனுக்கான வெற்றி ஒளி தெளிவாகத் தெரிந்தது.

பனிப்பூக்கள் கலாச்சார சஞ்சிகை நடத்திய சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

“காதல்! காதல்! காதல்! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா?”

இவ்வரிகள் கதையில் வருமாறு கதையை எழுத வேண்டும். எனது முயற்சி மேலுள்ள கதை. போட்டியில் பரிசு கிட்டவில்லை.

Saturday, July 18, 2015

நெஞ்சில் முள்


வெளியில் ஆளே விறைத்து விடும் அளவுக்கு குளிர். குளிருக்கான ஆடைகளான கம்பளி அங்கி, தொப்பி என அனைத்தையும் மாட்டிக் கொண்டு, கதவைத் திறந்தார் எழிலரசி.  காலையில் வாசலை தெளித்து, கோலம் போட்டால் தான் எழிலரசிக்கு அன்றைய பொழுது தொடங்கியதாக அர்த்தம்.

ஊரில் இருக்கும் வரை, அன்றாடம் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, வண்ணப் பொடி கொண்டு  அழகாக வண்ணம் தீட்டி, பண்டிகை காலங்களில் வாசல் தொடங்கி வீதி வரை  வண்ணக் கோலம் போட்டு பழகிய  எழிலரசிக்கு அமெரிக்கா வந்த புதிதில், அடுக்கு மாடிக் குடியிருப்பில், சிறிய வாசலில் எப்படி கோலம் போடுவது என்ற யோசனையே மேலோங்கியது.  

அரிசியை சற்று நெருநெருவென்று அரைத்து அதை வைத்து கோலம் போட்டு வாசலை அலங்கரித்து விடுவார். இவரது கோலம் போடும் ஆர்வத்தை கடும் குளிரும் கலைத்து விடவில்லை.பண்டிகை காலங்களிலும், வண்ணக் கோலங்கள் வாசலை நிச்சயம் அலங்கரித்திருக்கும். அரிசி மாவுடன் மஞ்சள் தூள் மற்றும் உணவில் கலக்கக் கூடிய வண்ண திரவங்களை (food coloring)   கலந்து வண்ண பொடிகள் செய்வார்.

பெரிய கோலமாக போட முடியாவிட்டாலும், வாசலுக்கு அளவாக,  சிறியதாக சிக்குக் கோலங்களும், கோட்டுக் கோலங்களும் போடுவார். பூஜைக்கென்று தனி அறை இல்லாது போனாலும், சமையலறையில் தெய்வத்திற்கென்று சிறு இடம் ஒதுக்கி, படங்களை அடுக்கி வைத்து, கோலம் போட்டு நாளும் பூஜை செய்வார்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டு  இனியா தூக்கம் கலைந்து எழுந்து வந்தாள். அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும்,

" ஓ ! அம்மா ! வெளியில விறைக்குற அளவுக்கு குளிர் அடிக்குது. எதுக்காக இந்த குளிரிலேயும் கோலம் போடறீங்க ? சீக்கிரமா உள்ள வாங்க ! " அக்கறையுடன் அன்னையிடம் கூறினாள் இனியா.

கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த எழிலரசி,
“ அப்பப்பா ! பயங்கர குளிர் ! “ என்றவாறு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.

“ இந்தக் குளிர்ல எதுக்காக கோலம் போட வெளியில போறீங்க ? “ அக்கறையுடன் கோபித்துக் கொண்டாள் இனியா.

“கோலம் போடுறதுக்கு முக்கிய காரணம், அரிசி மாவுல கோலம் போட்டா, அதை எறும்பு சாப்பிடும். இதனால, ஒரு சின்ன உயிருக்காவது இன்னைக்கு சாப்பிடறதுக்கு வழி பண்ணுன திருப்தி “

“அது மட்டுமில்ல. குனிஞ்சு கோலம் போடுறது நல்ல உடற்பயிற்சியும் கூட “ என்று விளக்கமளித்தார் எழிலரசி.

சற்று நேரம் யோசித்த இனியா, “ பிறகு எதுக்காக அம்மா, வீட்டுக்குள்ள எறும்பு வந்துட்டா உடனே மருந்தடிக்க பெஸ்ட் கன்ட்ரோல் (Pest Control) கூப்பிடறீங்க ? எறும்பு சாப்பிட்டுட்டு போகட்டும் அப்படின்னு விட்டுடலாமே ? அது எவ்வளவு சாப்பிட்டுடப் போகுது ? என்றாள்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் எழிலரசி.

Tuesday, July 7, 2015

அன்பின் உருவம் அன்னை

 
நன்றி, புகைப்படம் இணையத்திலிருந்து  எடுக்கப்பட்டது.


இந்த உலகில் புதிதாய் ஒவ்வோர் உயிரும் ஜனிக்கும் வேளையில் ஓர் அன்னையின் ஜனனமும் நிகழ்கிறது. நாம் இந்த மண்ணில் வாழும் காலத்தில் நமக்கு எத்தனை எத்தனையோ உறவுகள் கிடைக்கலாம்.  இவ்வுலகில் நமக்கான முதல் உறவு – நம் தாய். அன்னைக்கு அடுத்தபடியாக நமக்கு இருக்கும் உறவுகள் அனைத்தையும் நமக்கு அறிமுகம் செய்பவர் நம் அன்னையே.

இவ்வுலகில் தான் படைத்த அனைத்து ஜீவரசிகளுக்கும் தானே துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறைவன் உருவாக்கிய படைப்பே “தாய்”. இறைவனது படைப்பில், உலகில் தன்னலம் கருதாத படைப்பாக்கம் ஒன்று இருக்குமாயின், அவரே “அன்னை”.

அம்மா என்ற வார்த்தையில் இருக்கும் மூன்று எழுத்துகள்,

“ அ “ – உயிரெழுத்து , கருவிற்கு உயிர் கொடுக்கிறார் அன்னை.

“ ம் “ – மெய்யெழுத்து , உயிர் கொடுத்த கருவிற்கு தனது மெய்யில் இடம் கொடுக்கிறார்.

“ மா “ – உயிர் மெய்யெழுத்து , தான் உருவாக்கிய கருவுக்கு உயிரும் மெய்யும் கொடுத்து, உலகின் வெளிச்சத்தை காண வழிகாட்டுகிறார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவான சொல்லே “அம்மா”.

நமக்கான அனைத்துத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்து, நாம் மேற்கொள்ளும் ஒவ்வோர் முயற்சியிலும் நமக்கு ஊக்கம் அளித்து, நம் வெற்றிகளில் நம்முடன் குதூகலித்து, அதே வேலையில் நாம் பெற்ற வெற்றியின் தாக்கம் நம்மை நிலைகொள்ளாது, கீழே தள்ளிவிடும் நிலையில் நாம் இருந்தாலும், அதை நமக்கு உணர்த்தி பாதுகாப்பவர். தோல்வியிலும் துவண்டு விடாது தோள் கொடுத்து நல்லதோர் தோழியாய், துணை நிற்பார் நம் அன்னையே.

தன் மனையாளுக்கு உற்ற துணையாய், பிள்ளை வளர்ப்பில் தன் பங்கென்பது, பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, அறிவுரை கூறுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக எண்ணாது, தன் பிள்ளைகட்காய், தன் மனையாளுடன் அடுக்களை உதவி முதல் துவங்கி, பிள்ளைகட்கு உணவூட்டி, சீருடை அணிவித்து, தலை வாரி, காலணி அணிவித்து, பிள்ளையின் புத்தகச் சுமையை தான் சுமந்து, பள்ளி வாசல் வரை சென்று விட்டு வரும் ஒவ்வோர் தந்தையும் தாயுமானவரே.

கணவரது ஒவ்வோர் முயற்சியிலும் உற்ற துணையாய், பக்க பலமாய் நின்று ஊக்குவிப்பதோடு, தன் பங்கிற்கு தன்னாலான வரையில் பொருளீட்டி, சேமித்து, சிக்கனத்துடன் குடும்பம் நட்த்தும் ஒவ்வோர் அன்னையும் தந்தையுமானவரே.  அன்னையின் அஞ்சறைப் பெட்டியில், சிறுகச் சிறுக சேமித்த சில்லரைக் காசுகளும் சமயங்களில், எதிர்பாரா பெரும் செலவுகட்கும் கூட கைகொடுக்கும். அஞ்சறைப் பெட்டிகளில் சுவையும் மணமும் மட்டுமல்ல, சமயங்களில், அவை உண்டியலாகவும் மாறி, நம் அவசரத் தேவைக்கு உறுதுணையாய் நிற்கும்.

ஐயிரு திங்கள் மடிசுமந்து, பிள்ளைக்கு தன் உதிரத்தையே பாலாக்கி, உணவு, உறக்கம் என்பதையெல்லாம் மறந்து, தன் பிள்ளையே உலகமென, அவர்தம் நலனே தலையாயதாக எண்ணி பெண்டிர் செய்யும் பல தியாகங்கள், இன்றளவும் நம் சமூகத்தில், அது பெண்ணுக்கு மட்டுமே உரித்தான கடமையாக சித்தரிக்கப்படுகிறது. பல வேளைகளில், ஒரு தாயின் கஷ்டம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

தன் உதிரத்தை பாலாக்கி, நமக்கு ஊட்டும் நம் தாய், தன் உதிரத்தை வியர்வையாக்கி நமக்காய் உழைக்கும் நம் தந்தை என, அம்மை அப்பன் இருவருமே தாயுமானவர்களே.


“ தாயிற் சிறந்த கோயிலுமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை “
இந்த உயர் சிந்தனையை நாம் எந்நாளும் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தைக்கு பாலூட்டி, சீராட்டி வளர்ப்பதோடு ஒரு தாயின் கடமை முடிந்து விடுவதில்லை. அந்தக் குழந்தை வளர வளர, அதன் வாழ்க்கையின் ஒவ்வோர் நிலையிலும், ஊக்கம் அளித்து, உற்சாகம் ஊட்டி, உறுதுணையாய் நிற்பார்  அன்னை. பிள்ளைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க, ஓர் தாய் பெரிய பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அவர் பெற்ற அனுபவங்களே நமக்கோர் பல்கலைக்கழகமாக திகழும்.

அன்னை தன் கிள்ளைக்கு உணவூட்டும் போது சொல்லும் கதைகளின் உதவியுடன், இரண்டு கை உணவு அதிகமாக உள்ளே செல்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல், நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் மனதில் பதிகிறது. அதே போல், உறங்குகையில் தாய் சொல்லச் சொல்ல “ உம்…உம்…” என்று சொல்லியபடியே கதை கேட்டு உறங்கும் குழந்தை நல்ல கற்பனை சக்தியுடன், எதையும் தெளிவாக விளக்கமாக விவரிக்கும் தன்மை உடையவராய் விளங்கும்.

நமக்காக நாளெலாம் பார்த்துப் பார்த்து செய்யும் அன்னையின் பெருமையை எண்ணிப் பார்க்க, கொண்டாட, வாழ்த்த வருடத்தில் ஒரு நாள் மட்டும் போதுமா ? 


சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அன்னைக்கு நன்றி சொல்வோம். அன்னையின் கரம் பற்றி அன்புடனும் அனுசரனையுடனும் நடந்து கொள்வோம்.நமக்காக மூன்று வேளையும் உணவு பரிமாறி, நாம் உண்ணும் வரை அருகே இருந்து, நாம் உண்ட திருப்தியில் மனம் மகிழும் அன்னைக்கு ஒருநாள் உணவு பரிமாறி, நாமும் மகிழ்ந்து அவரையும் மகிழ்விப்போம்.
 


  அன்னையை போற்றுவோம். அன்னையின் அன்பில் நம் வாழ்வு நலமும் வளமும் அடையும்.


குறிப்பு:
இக்கட்டுரை தமிழ்க் குடில் நடத்திய அன்னையர் தின கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.