வாசலில் இருசக்கர வாகனத்தின் ஓசை சற்றே
உயர்ந்து பின் மெல்ல மெல்லக் குறைந்து பின் மெளனமானது. வண்டியிலிருந்து
இறங்கி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை ஒற்றை விரலில் நிறுத்தி தட்டாமாலை
சுற்றியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் நிவாஸன்.
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை
அங்கிருந்த மேசையின் மீது வைக்கக் குனிந்தவனுக்கு, அங்கு ஏற்கனவே இருந்த
நோட்டுப் புத்தகத்தைக் கண்டதும் சற்று தூக்கிவாரிப் போட்டது. வேகவேகமாக தன்
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், மேசை மீதிருந்த நோட்டின்
பக்கங்களையும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். அவன் தேடியது அதில்
இல்லை. பரபரப்புடன் தன் அறைக்குச் சென்று தனது அலமாரியில் தேடினான்.
அங்கும் அவன் தேடியது கிடைக்கவில்லை.
ஏமாற்றத்துடன் அறையை விட்டு வந்த நிவாஸனை அவனது தந்தை எதிர்கொண்டார்.
” என்னப்பா ! ரொம்ப பரபரப்பா எதையோ தேடுற போலயே. என்ன தேடுற ? “
” ஒரு முக்கியமான பேப்பர் ஒண்ணு வெச்சிருந்தேன் அப்பா. அதைக் காணோம். அதைத் தான் தேடறேன் “
உன் கூட படிக்கிற அனிதாங்கற பொண்ணுக்குக் காதல் கடிதம் எழுதி வெச்சிருந்த.அது தானே ! அது என் கிட்ட தான் இருக்கு.”
அப்பா! அது வந்துப்பா….. நான் அந்தப்
பொண்ணைக் காதலிக்கிறேன்.அவள் என்னை விரும்பறாளான்னு தெரியலை.அதைத்
தெரிஞ்சிக்கத் தான் கடிதம் எழுதினேன்.
காதல் ! காதல் ! காதல் ! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா ?
இப்படி ஒரு கேள்விய நான் கேட்க
மாட்டேன். ஏன்னா, நம்ம வாழ்க்கையில பிடிப்பு ஏற்பட வேணும்னா,
காதலிக்கணும். முதல் படியா, நம்மை நாம் காதலிக்கணும். நம் செயல்கள்,
செய்கைகளைக் காதலிக்கணும். அப்போ தான் நம் மேலேயே நமக்கு நம்பிக்கை
பிறக்கும். நாம் செய்யும் ஒவ்வோர் செயலையும் முழு ஈடுபாட்டுடனும், மனம்
நிறைந்த ஆசையுடனும் காதலுடனும் செய்ய வேண்டும். அந்தக் காதல் நம் முயற்சியை
மென்மேலும் ஊக்கப்படுத்தும். அந்த முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ, எது
கிட்டினாலும், நம் மனதை ஒருநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனதை
ஒருநிலைப் படுத்த நாம் அச்செயலின் மீது கொண்ட காதலும் ஈடுபாடுமே துணையாக
நிற்கும்.
உன் மேலே உனக்குக் காதலும்
நம்பிக்கையும் வந்துட்டா, உன் காதலை வெளிப்படுத்தக் கடிதம் எல்லாம்
தேவைப்படாதுப்பா. உன் கண்களும் உதடுகளுமே அதை அழகாக வெளிப்படுத்தும் !
நிவாஸனின் மனதுள் புத்தொளி பரவியது. அவனது வாழ்விலும் காதலிலும் அவனுக்கான வெற்றி ஒளி தெளிவாகத் தெரிந்தது.
பனிப்பூக்கள் கலாச்சார சஞ்சிகை நடத்திய சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
“காதல்! காதல்! காதல்! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா?”
இவ்வரிகள் கதையில் வருமாறு கதையை எழுத வேண்டும். எனது முயற்சி மேலுள்ள கதை. போட்டியில் பரிசு கிட்டவில்லை.
2 comments:
// முதல் படியா, நம்மை நாம் காதலிக்கணும் // அப்படிச் சொல்லுங்க...
பெரும்பாலும் காதல் என்பது ஆங்கில வார்த்தையான லவ் இலிருந்தே அறியப் படுகிறது ஆனால் ஆங்கில லவ் வுக்கு பல பொருள்கள் இருப்பது உணராமல் நம்மில் பலரும் காதல் என்றால் ஆண் பெண் இருபலருக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பையே எடுத்துக் கொள்கிறார்கள்.
Post a Comment