blank'/> muhilneel: அமுதைப் பொழியும் நிலவே ! - சிறுகதை விமர்சனம்

Thursday, March 27, 2014

அமுதைப் பொழியும் நிலவே ! - சிறுகதை விமர்சனம்


'அமுதைப் பொழியும் நிலவே !'

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்





என் அலுவலகத்திற்கு மட்டும் அன்று விடுமுறை. காலை சுமார் ஆறரை மணி இருக்கும். வீட்டிலே அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மின் வெட்டு அமுலில் இருக்கும் என்பதால், காற்று வாங்கவேண்டி காலாற நடந்து கொண்டிருந்தேன்.

திருச்சிக்குப் புதியதாக, அரசால் ஒரு சில தொடர் பேருந்துகள் (மிக நீளமான ரயில் பெட்டிகள் போல இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு பஸ்கள்) விடப்பட்டுள்ளன. அதில் பயணிக்க வேண்டும் என்று எனக்கும் பல நாட்களாக ஒரு ஆசை உண்டு. நேற்று வரை அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. 


அந்தத் தொடர் பேருந்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ விசித்திரமான ஒரு சில நினைவுகள் அடிக்கடி வருவதுண்டு. 

சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும். 

மேலும் என்றோ ஒரு நாள், தெருவில் வால் பக்கமாக இணைந்தபடி இரு பைரவர்கள் என் கண்களில் பட்டனர். அந்த இரு பைரவர்களைப் போலவே இந்த இரண்டு பேருந்துகளையும் மிகவும் கஷ்டப்பட்டு இணைத்துள்ளார்களே என்றும் நினைத்துக் கொள்வதுண்டு.


சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட் அருகே, இன்று ரோட்டில் நடந்து சென்ற என்னை உரசுவது போல என் அருகே தொடர்பேருந்து ஒன்று வந்து நின்றது. 

கும்பல் அதிகமாக இல்லாததால், நானும் அதில் ஏறிக்கொண்டு, ஜன்னல் பக்கமாக ஒரு இருக்கையில் காற்று நன்றாக வரும்படி அமர்ந்து கொண்டேன்.


அந்தப் பேருந்து பொன்மலைப்பட்டியிலிருந்து துவாக்குடி வரை செல்வதாக அறிந்து கொண்டேன். காற்றாட துவாக்குடி வரை போய்விட்டு இதே பேருந்தில் திரும்ப வந்து விட்டால், வீட்டில் மின் தடையும் நீங்கி விடும். பாதி விடுமுறையை பஸ்ஸிலும், மீதியை வீட்டிலும் கழித்து விடலாம் என்று கணக்குப் போட்டு, துவாக்குடி வரை செல்ல ஓர்  பஸ் டிக்கெட் வாங்கிக் கொண்டேன். 


வெறும் காற்று வாங்க வேண்டி, காசு கொடுத்துப் பயணமா, என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்வது? மின் வெட்டுச் சமயங்களில் என்னைப்போன்ற சாமான்ய மனிதனின் பிழைப்பும் இன்று நாய்ப் பிழைப்பாகத்தானே உள்ளது !


வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது. அடுத்தப் பேருந்து நிறுத்தத்திலேயே இளம் வயதுப் பெண்கள் பலரும் ஏறிக் கொண்டு பேருந்தை கலகலப்பாக்கினர்.

கும்மென்று ஒரே மல்லிகை மணம் கமழ ஆரம்பித்தது. 



 

எனது பக்கத்து இருக்கையில் ஒரு அழகு தேவதை வந்து அமர்ந்தாள். 





“எக்ஸ்க்யூஸ் மீ, ஸார், இந்த பஸ் பீ.ஹெச்.ஈ.எல். [B H E L] வழியாகத் தானே போகிறது?” 

“ஆமாம், நீங்கள் எங்கே போகணும்?


“ பீ.ஹெச்.ஈ.எல். [B H E L] இல் உள்ள ‘வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ க்கு எட்டு மணிக்குள் போய்ச் சேரணும், ஸார்; தயவுசெய்து ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கோ ஸார்” என்று குழைந்தாள்.


[குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் நான் உறுதியானேன்.

பல்வேறு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக, பல முறை இவள் போக வேண்டியதாகச் சொல்லும் இடத்திற்கு நான் சென்று வந்துள்ளதால், அது எனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக இருப்பதும், ஒரு விதத்தில் நல்லதாகப் போய் விட்டது]


“ஓ...கட்டாயமாகச் சொல்கிறேன். நானும் அங்கே தான் போகிறேன். நீங்கள் என்ன வேலையாக அங்கே போகிறீர்கள்?” 


”நான் பாலக்காட்டிலிருந்து வந்துள்ளேன். ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பயின்றுள்ளேன். உலோகப் பற்றவைப்பை சிறப்புப் பாடமாக கற்றுள்ளேன். வெல்டிங் சம்பந்தமாக உலகத்தரம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி எடுக்கப்போகிறேன். 

இதோ எனக்கு வந்துள்ள அழைப்புக் கடிதம். இன்று முதல் ஒரு மாதம் அந்த ட்ரைனிங் எடுக்கணும். தினமும் வரணும். இன்று முதன் முதலாகப் போவதால், பஸ் ரூட், வழி முதலியன தெரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது”. என்றாள் மலையாளம் கலந்த பாலக்காட்டுத் தமிழில். 



அழைப்புக் கடிதத்தை வாங்கி நான் நோட்டமிட்டேன். 

பெயர்: அமுதா. வயது: 19, கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை, வெல்டிங் சம்பந்தமாக ட்ரைனிங் எடுக்கப்போகிறாள்.


அவளின் வெல்டிங் - ட்ரைனிங் முடியும் இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளுடன் என்னையும் நான் வெல்டிங் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? முயற்சிப்போம். என்னுள் பலவிதமான எண்ணங்கள் அலை மோதி, மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின.







  

“இந்த பஸ் நேராக நீங்கள் போக வேண்டிய BHEL Welding Research Institute என்கிற இடத்துக்குப் போகாது. திருவெறும்பூர் தாண்டியதும் ஒரு மிகப்பெரிய ரவுண்டானா வரும். அதை ‘கணேசா பாயிண்ட்’ என்று சொல்லுவார்கள். அங்கே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து போய்விடலாம்” என்றேன்.

”ஓ. கே. ஸார், ஆட்டோவுக்கு எவ்வளவு நான் பணம் தரும்படியாக இருக்கும்?” என்றாள். 


“நோ ப்ராப்ளம்; நானே ஆட்டோவில் கொண்டு போய் உங்களை அந்த இடத்தில் விட்டுவிடுகிறேன். எனக்கும் அந்தப் பக்கம் ஒரு வேலை உள்ளது. நீங்களும் எட்டு மணிக்குள் அங்கு போய்ச் சேர வேண்டுமே! ... அதிருக்கட்டும் ... திருச்சியில் மேலும் ஒரு மாதம் தாங்கள் தங்கி ட்ரைனிங் எடுக்கணுமே, யாராவது சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா? எங்கு தங்கப் போவதாக இருக்கிறீர்கள்?” 

“நேற்று இரவு மட்டும் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ள என் சினேகிதியின் வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தங்கிக் கொண்டேன். இன்று மாலையில் அவளுடனேயே சென்று வேறு எங்காவது லேடீஸ் ஹாஸ்டல் போன்ற நல்ல பாதுகாப்பான செளகர்யமான இடமாகப் பார்க்கணும் என்று இருக்கிறேன்”  என்றாள்.


என்னுடைய விஸிடிங் கார்டு, வீட்டு விலாசம், செல்போன் நம்பர் முதலியன கொடுத்தேன்.

“எந்த உதவி எப்போது தேவைப் பட்டாலும், உடனே தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என்றேன். 

“தாங்க்யூ ஸார்”  என்றபடியே அவற்றை தன் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.



என்னையே முழுவதுமாக அவள் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டது போல நான் உணர்ந்து மகிழ்ந்தேன். 



   

ஞாபகமாக அந்த 'அமுதைப் பொழியும் நிலவான அமுதா’வின் செல்போன் நம்பரையும் வாங்கி என் செல்போனில் பதிவு செய்து, டெஸ்ட் கால் கொடுத்து, தொடர்பு எண்ணை உறுதிப் படுத்திக் கொண்டேன். 

இன்று இரவு அவளை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் தங்கச் செய்து, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, அசத்த வேண்டும் என மனதிற்குள் திட்டம் தீட்டினேன்.


“குமரிப்பெண்ணின் ... உள்ளத்திலே ... குடியிருக்க ... நான் வரவேண்டும் ... குடியிருக்க நான் வருவதென்றால் ... வாடகை என்ன தர வேண்டும்” என்ற அழகான பாடல் பேருந்தில் அப்போது ஒலித்தது, நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது.


அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். 





இந்த என் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.


 







    



திடீரென குப்பென்று வியர்த்தது எனக்கு. 

யாரோ என் தோள்பட்டையைத் தட்டுவது போல உணர்ந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். எதிரில் பேருந்தின்  நடத்துனர்.

“துவாக்குடி வந்திடுச்சு, சீக்கரம் இறங்குங்க” என்றார். 

பக்கத்து இருக்கையில் பார்த்தேன். என் அமுதாவைக் காணோம். 


அப்போ நான் கண்டதெல்லாம் பகல் கனவா? 


தொடர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், நல்ல காற்று வீசியதில் சுகமாகத் தூங்கியுள்ளேன். அருமையான கனவில், அற்புதமான என் அமுதா என்னருகில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறாள். 



 
  

கண்களைக் கசக்கிக் கொண்டே, மீண்டும் துவாக்குடியிலிருந்து சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட்டுக்கு ஒரு பஸ் டிக்கெட் வாங்கிக்கொண்டு, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

\
“அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது. 

பெரும்பாலும் காலியான இருக்கைகளுடன் இருந்த அந்தத் தொடர்ப் பேருந்தில், அடுத்த இரண்டாவது ஸ்டாப்பிங்கான திருவெறும்பூரில் பலர் முண்டியடித்து ஏறினர். 

“கொஞ்சம் நகர்ந்து உட்காரய்யா ..... சாமி” எனச் சொல்லி ஒரு காய்கறி வியாபாரக் கிழவி, தன் கூடை மற்றும் மூட்டை முடிச்சுக்களுடன் என் அருகில் அமர்ந்து கொண்டாள். 

அந்தக்கிழவி என்னைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தன் தலையை நீட்டி, வாயில் குதப்பிய வெற்றிலை பாக்குச்சாற்றை, சாலையில் உமிழ்ந்து விட்டு, என்னையும் ஒரு லுக் விட்டுவிட்டு, தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.



 

“அமுதா...ம்மா .... நீ அங்கன குந்திட்டியா, .... நான் இங்கன குந்தியிருக்கேன்; எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.


oooooOoooo
எனது விமர்சனம்
பேருந்தில் பயணம் மேற்கொள்வதற்கு காரணங்கள் பல இருக்கலாம். அது பணி நிமித்தமாக மேற்கொள்ளும் பயணமாக இருக்கலாம். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் செல்லும் சுற்றுலாப் பயணமாக இருக்கலாம். பயணங்கள் சில வேளைகளில் சோர்வடைந்திருக்கும் மனதினை உற்சாகமூட்டும் வண்ணமும் அமையலாம். நேரமும் பொழுதும் ஓட மறந்து அப்படியே மயங்கிப்  போய், சோர்வினை துணையாக்கி மெல்ல ஊர்ந்து செல்லும் சமயங்களில், பயணங்கள் உற்சாகத்தினையும், பல அனுபவங்களையும், இன்னும் சொல்லப் போனால் கவலை மறந்த சுகமான கண்ணயர்வையும் வழங்கும். அத்தகு ஓர்  பயணத்தைப் பற்றி ஆசிரியர் இங்கு கூறுகிறார்.

தற்சமயம் மின்வெட்டு அதிகமாக அமுலில் இருக்கும் காலமிது. அனைத்தும் மின் மயமான இக்காலத்தில் மின்சாரம் இல்லாது போனால் நம் வாழ்கையே ஸ்தம்பித்துப் போனது போன்றதாகி விடுகிறது. அத்தகு ஒரு சமயத்தில் தான், கதையின் நாயகர் தனது பொழுதினை கழிக்க நகரப் பேருந்தில் பயணிக்கிறார். பேருந்துப் பயணம் பொழுதை கழிக்க மேற்கொண்டது போலும் இருக்கும், வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்காது,  இயற்கையான காற்றினை சுவாசித்த மாதிரியும் இருக்கும்.

பேருந்தோ, இரயிலோ, காரோ, எதுவாயினும் வேகமாக செல்லும் சமயங்களில், குளுமையான காற்று மெல்ல வந்து நம்மைத் தழுவ, உறக்கம் அது தானாக வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும். அத்தகைய உறக்கம் மிகவும் ஆழ்ந்த உறக்கமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அல்லது, சில சமயங்களில் அரைத் தூக்கமாகவும் இருக்க வாய்ப்புண்டு. எவ்வகைத் தூக்கமாயினும் கனவுகள் வந்து நம்மை ஆட்கொள்ள தடை எதுவும் இல்லையே. நமது ஆழ்மன எண்ணங்களே கனவுகளாக விரிகின்றன. இங்கு கதையின் நாயகரும் கனவு காண்கிறார்.

இன்றைய அவசர கதியான உலகில்,  தேவைகளும் ஆசைகளும் கூடவே சுயநலமும்   பெருகி விட்டன. சுயநல மனப்பான்மை பெரிதும் வளர்ந்து விட்டது. பிறருக்கு உதவும் மனப்பான்மை வெகுவாக குறைந்து விட்டது. பிறருக்கு உதவும் எண்ணம் இருந்தாலும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் பலரை காண்கிறோம்.இதற்குக் காரணம், ஏமாற்றும் எண்ணமும், உதவி  செய்தவர்களே வம்பில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலைகளும் அதிகமாக இருப்பதே ஆகும். 

இங்கே கதையின் நாயகர் ஓர் இளம் பெண்ணிற்கு (கனவினில்) உதவுகிறார். பேருந்தில் சந்திக்கும் அந்த பெண்ணையே தன் கனவுக் கன்னியாகயும் வரித்துக் கொள்கிறார். அந்த ஊருக்கு புதிதாக, பிரபலமான தொழில் நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்திருக்கும் அவளுக்கு, தான்  செய்யும் உதவிகளின் மூலம், அவளின் இதயத்தில் குடிபுகுந்துவிட எத்தனிக்கிறார். அவளுக்கு தங்க வீடு, பயிற்சிக்கு சென்று வர பேருந்து வழித் தடங்கள், ஆட்டோ கட்டணங்கள், ஏதேனும் அவசர உதவிகள் வேண்டியிருப்பின் எந்நேரமும் உதவ தயாராய் இருப்பதற்கு அடையாளமாய் தனது முகவரி, தொலைபேசி எண்  என்று அனைத்தையும் கொடுத்து உதவுகிறார்.

இதன் மூலம் நமக்கு என்ன விளங்குகிறது எனில், கதையின் நாயகர், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார். உள்ளத்தின் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள் தானே கனவுகளாக விரிகின்றன.

கனவினில் வந்து களிப்பூட்டிய இளம் பெண், நிஜத்தில் வயது முதிர்ந்த மூதாட்டி ஆகிப் போனதும், கதையின் நாயகரின் ஏமாற்றம், எழுத்துக்களில்  பிரதிபலிக்கிறது. அந்த ஏமாற்றத்தையும் கூட ஆசிரியர் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். இங்கும் அந்த வயதான மூதாட்டி, வேறு ஓர் மூதாட்டிக்கு உதவி புரிகிறார். 

மொத்தத்தில்,உதவும் உயர் குணத்தினை விளக்கும் அழகானதோர்  கதை.


நல்லதொரு வாய்ப்பளித்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல !!!

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மொத்தத்தில்,உதவும் உயர் குணத்தினை விளக்கும் அழகானதோர் கதை.//

மிகவும் அழகாக, பாஸிடிவ் ஆக யோசித்து, எழுதப்பட்டுள்ள விமர்சனம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தங்கள் வலைத்தளத்தில் இதனைப் பகிர்ந்து கொண்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

பிரியமுள்ள கோபு [VGK]

Tamizhmuhil Prakasam said...

தங்களது அன்பான ஊக்கமூட்டும் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

Post a Comment