blank'/> muhilneel: காதல் வங்கி- சிறுகதை விமர்சனம்

Sunday, February 23, 2014

காதல் வங்கி- சிறுகதை விமர்சனம்

காதல் வங்கி '


சிறுகதை



By வை. கோபாலகிருஷ்ணன்



-oOo- 



ஜானகி அந்தப்பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்கு பல கெளண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது ஜானகியின் சேவையை மட்டும்தான்.  



மிகவும் அழகான இளம் வயதுப்பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன் சேவையை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும், வரவேற்பும் அளிப்பவள். அனைவருடனும் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகுபவள்.



அடடா ! ........... இவள் எவ்வளவு கட்டிச் சமத்தாக இருக்கிறாள் ! தங்களுக்கு இதுபோன்ற தன்மையான, மென்மையான, அமைதியான, புத்திசாலியான, அழகான, பழகிட நல்ல கலகலப்பான பெண் ஒருத்தி பிறக்கவில்லையே என்றும் அல்லது மருமகள் ஒருத்தி அமையவில்லையே என்றும் ஏங்குவார்கள் அங்கு வரும், சற்றே வயதான வாடிக்கையாளர்கள்.



கெளண்டருக்கு வரும் இளம் வயது வாலிபர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும், இளைஞர்களின் கற்பனையே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.



மொத்தத்தில் வங்கிக்கு வரும் அனைவரையுமே, ஏதோ ஒரு விதத்தில், மகுடிக்கு மயங்கும் நாகம் போல, வசீகரிக்கும் அல்லது சுண்டியிழுக்கும் தனித்தன்மை வாய்ந்தவள் தான் அந்த ஜானகி.



இப்போது ரகுராமனும் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தான். வங்கியின் சேவைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் இருந்த ஆசாமி தான், ரகுராமன்.



மற்ற குழந்தைகள் போல பள்ளியில் சேர்ந்து படித்தவர் அல்ல ரகுராமன்.அவரைப்பொருத்தவரை வங்கி என்றால் ஜானகிஜானகி என்றால் வங்கி. வேறு எதுவும் வங்கியைப்பற்றித் தெரியாதவர். 
எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே !






ரகுராமனுக்கு சிறு வயதிலேயே பூணூல் போடப்பட்டு, அழகாக சிகை (குடுமி) வைக்கப்பட்டு, வேதம் படிக்க வேண்டி திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்கள். பரம்பரையாக வேத அத்யயனம் செய்து வரும் வைதீகக் குடும்பம் அது.



ரகுராமனும் வெகு சிரத்தையாக குருகுலமாகிய வேத பாடசாலையில் வேதம், சாஸ்திரம், சம்ஸ்கிருதம், கிரந்தம் முதலியன நன்கு பயின்று முடித்தவர். 



அது தவிர ஓரளவுக்கு கணித பாடமும், பேச படிக்க எழுதக்கூடிய அளவுக்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தேர்ந்தவர் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வமோ ருசியோ இல்லை தான்.



இருப்பினும் தான் படித்த வேத சாஸ்திரங்களை அனுசரித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த, ஆச்சாரமான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், தற்சமயம் கலியுகத்தில் ஜனங்கள் பட்டு வரும், பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்பதால், தான் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் மக்களுக்கெல்லாம், வேத சாஸ்திர வழிமுறைகளையும், அவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், தனக்கே உரித்தான அழகிய பிரவசனங்கள் [ஆன்மீகச் சொற்பொழிவுகள்] மூலம் மக்கள் மனதில் நன்கு பதிய வைத்து வந்தார்.






ஜானகி வீட்டில் நடைபெற்ற ஏதோவொரு சுப வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் தான் இந்த ரகுராமன். 
ரகுராமன் அவர்களை முதன் முதலாகச் சந்தித்த ஜானகி, அவரின் அழகிற்கும், முகத்தில் தோன்றும் பிரும்ம தேஜஸுக்கும்,  அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திற்கும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மைக்கும், லோகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளுக்கும், வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்து விட்டாள்.



அவருடன் தனக்கு ஏதாவது ஒரு தொடர்பு ஏற்பட வேண்டுமே என சிந்திக்கலானாள்.  தன் வீட்டு விழாவுக்கு வந்திருந்த பலரும், ரகுராமன் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதைப் பார்த்தாள் ஜானகி



நேராகச் சென்று தானும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டு வணங்கி எழுந்தாள், ஜானகி. தான் ஒரு வங்கியில் பணிபுரிவதாகச் சொன்ன ஜானகி, ”உங்களுக்கு எந்த வங்கியில் வரவு செலவு கணக்கு உள்ளது” என்றும் வினவினாள்.



வில்லை முறித்த ஸ்ரீ இராமபிரான் முதன் முதலாக வெற்றிப் புன்னகையுடன் ஸீதாதேவியை நோக்கிய அதே பரவசத்துடன், தன்னை விழுந்து வணங்கிய ஜானகியின் அழகிலும், அடக்கத்திலும், இனிய குரலிலும் மயங்கி, தன்னை மீறி தன் உடம்பில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணந்தார், நம் ரகுராமன்.

   

இருவர் உள்ளத்திலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சியும், காதலும் கசிந்துருக ஆரம்பித்திருந்தது.



உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது. 



காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ !



அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.  புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க ஜானகியே எல்லா உதவிகளையும் வேக வேகமாகச் செய்து உதவினாள்.




அன்று இரவே, ஜானகியின் அம்மா, தன் மகளின் மனதில் பூத்துள்ள புதுப்புஷ்பத்தின் சுகந்தத்தை அறிந்து கொண்டு, உண்மையிலேயே தன் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும், அவளை சற்றே சீண்டிப்பார்த்தாள்.
“ஜானகி, நல்லா யோசனை செய்து பார்த்து நீ எடுத்த முடிவா இது?” என்றாள்.
“இதில் யோசிக்க என்ன இருக்கிறது?” என்றாள் ஜானகி.
“இல்லை, நீ நிறைய படிச்ச பொண்ணு, வேலைக்கும் போகிறாய், கை நிறைய சம்பாதிக்கிறாய். நவ நாகரீகமாக வாழ்க்கைப்பட்டு ஜாலியாக உன் இஷ்டப்படி இருக்க ஆசைப்படலாம்; 
இவரோ வேதம், சாஸ்திரம், புராணம்,  ஆச்சாரம், அனுஷ்டானம், அது இதுன்னு யாருக்குமே லேசில் புரியாத விஷயங்களை, பழைய பஞ்சாங்கம் போல பிரச்சாரம் செய்பவராக இருக்கிறார் ...... அதனால் கேட்டேன்” என்று லேசாக ஊதிவிட்டாள்.

“நான் படிச்ச படிப்பெல்லாம் ஒரு படிப்பா அம்மா? ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை? நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும்? எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும்!; 


அதுவும் கல்யாணம் என்ற ஒன்று ஒருவருடன் எனக்கு ஆகிவிட்டால், என் இஷ்டப்படி எப்படி என்னால் வாழமுடியும்? 
இப்போ உன்னையே எடுத்துக்கொள்ளேன், நீ உன் இஷ்டப்படியா வாழ முடிகிறது அல்லது ஏதாவது முக்கிய முடிவுகளாவது உன் இஷடப்படித்தான் எடுக்க முடிகிறதா? எல்லாமே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது ! நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே !! ;
உனக்கு மாப்பிள்ளையா வரப்போகும் இவர் தான் அம்மா, உண்மையில் மனுஷ்யனாகப் பிறந்தவன் என்ன படிக்கணுமோ அதையெல்லாம் படித்துள்ளார்; எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளணுமோ, அவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்;  
நம் தாத்தா பாட்டி, ஏன் நம் பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் தானே! அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது?” என்றாள் ஜானகி.
தன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும், அவளை மேற்கொண்டு சீண்டுவதிலும் சற்றே ஆசைப்பட்டாள். 




அருமை மகளும் ஆருயிர்த்தோழியும் ஒன்றல்லவா ! இதுவரை தாயாக இருந்து பேசியவள் இப்போது தோழியாக மாறிப் பேசலானாள்:
”உன் ஆத்துக்காரர் பேண்ட், சட்டை கோட்டு சூட்டுப் போட்டு டைகட்டி டிப்-டாப்பாக உனக்கு இருக்க வேண்டாமா? கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா ? “ என்றாள்.
“அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பார்க்கணும்; 
அதிலும் பாதிபேர் குடிச்சுட்டு வராங்க, தம்மடிக்கிறாங்க, ஊரெல்லாம் கடன் வாங்கறாங்க, ஆபீஸுலே எல்லா லோனும் போடுறாங்க, எதை எதையோ தேவையில்லாததை எல்லாம் தேடி அலையறாங்க. கெட்டபழக்கம் ஒண்ணு பாக்கியில்லாம பழகிக்கிறாங்க;
எந்தவொரு ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் கண்ட எடத்துல கண்டதையும் திங்கறாங்க. கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க! 
இலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க. உலகத்துல இன்னிக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்குதுன்னு நாட்டு நடப்பே தெரியாம, நீ ஒரு அப்பாவியா இங்கே இருக்கே;
உனக்கு மாப்பிள்ளையா வரப்போற பத்தரை மாத்துத் தங்கத்தையும், கவரிங் நகைபோன்று நாளடைவில் பளபளப்பிழந்து பல்லைக்காட்டக்கூடிய, இந்தப் படாடோபப் பேர்வழிகளான டிப்-டாப் ஆசாமிகளையும், நீ ஒப்பிட்டுப்பேசறதே எனக்குப்பிடிக்கலை; 
வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் எப்போதுமே தவறான குறுக்கு வழிகளுக்குப் போகவே தயங்குவாங்க! அவங்க மனசாட்சி அதுபோல தப்பெல்லாம் செய்ய ஒரு நாளும் அவர்களை அனுமதிக்காது; 
குடுமி என்னம்மா குடுமி !  ”வெச்சா குடுமி--சரச்சா மொட்டை” ன்னு, அப்பாவும் நீயும் தான் பழமொழி சொல்லுவீங்களே! 
அந்தக்ககாலத்துல நம் முன்னோர்களெல்லாம் இதே குடுமிதானே வெச்சிண்டிருந்தா, இப்போ நாகரீகம் பேஷன்னு அடிக்கடி தலை முடியை மட்டும் மாத்திக்கிறா; 
பொம்மனாட்டிகளும் மாறிண்டே வரா; பாவாடை சட்டை தாவணியெல்லாம் போய், மிடி, நைட்டி, சுடிதார், ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்டுனு ஏதேதோ போட ஆரம்பிச்சுட்டா.சுதந்திரம் வேணும்னு சிலபேர் காத்தாட சுதந்திரமாவே உடை அணிய ஆரம்பிசுட்டா. ஆம்பளைகள் மாதிரி தலையையும் பாப் கட்டிங் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா; 

ஆம்பளைகளும் அடியோட பொம்மனாட்டி மாதிரி மாறிண்டே வரா; ஸ்கூட்டர் பைக் ஓட்டிப்போவது ஆம்பளையா, பொம்பளையான்னே இப்போ டக்குன்னு கண்டு பிடிக்க முடியலே!;
அதுவும் லேட்டஸ்ட் பேஷன் படி இந்தக்கால பையன்களெல்லாம் பொம்மணாட்டியாட்டம் தலைமுடியை வளர்த்து, அள்ளி முடிஞ்சு ரப்பர் பேண்ட் போட்டுக்க ஆரம்பிச்சாச்சு, காதுலேயும் தோடு போல, கம்மல் போல ஏதேதோ வளையம் போட ஆரம்பிச்சுட்டா. 

பழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையேம்மா;
பேஷன் அடிக்கடி மாறும்மா; ஆனா உனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் எப்போதுமே மாறாம அப்படியே நம் சாஸ்திர சம்ப்ரதாயப்படி நல்லவிதமாக நடந்துகொண்டு, அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்” என்று பெரிய பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டாள், ஜானகி.
ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார். 
”எப்படிடீ உனக்கு அவர் இப்படி ஒரு சொக்குப்பொடி போட்டார்?” என்றாள் மேலும் கொஞ்சம் அவளின் அழகான பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு மகிழ.
”அம்மா, அவர் சொற்பொழிவுகள் அடங்கிய CD ஒன்று தேடிப்பிடித்து இன்று தான் கடையில் வாங்கி வந்து கேட்டு மகிழ்ந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார், தெரியுமா!;
நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார்.   பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்; 

மனுஷ்யாளால் தான் பகவன் நாமாக்கள் சொல்லி வழிபட முடியுமாம். பகவன் நாமா ஒன்று தான் மோட்சத்திற்கு வழிவகுக்குமாம். 
எவ்வளவு அழகாக மனதில் பதியுமாறு மோட்சத்திற்கான வழிகளைச் சொல்கிறார் தெரியுமா! அவருடைய அபூர்வ விஷயஞானம் மட்டும் தானம்மா அவர் எனக்கு போட்ட ஒரே சொக்குப்பொடி” என்றாள் ஜானகி, தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற ஓர் பொலுவுடனும், பூரிப்புடனும்.
பருவ வயதில் தன் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்னவென்று பெற்ற தாயாருக்குப் புரியாதா என்ன? 
சிரித்தபடியே ஜானகியை அள்ளிப் பருகி, அவள் நெற்றியில் முத்தமிட்டு, தலையைக் கோதிக்கொடுத்து, அவளை அப்படியே கட்டியணைத்துத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள், ஜானகியின் தாயார்.





தினமும் அந்த வங்கியின் வாசலில் ரகுராமன் தனது காரில் வந்து இறங்குவதும், அவர் உள்ளே நுழையும் முன்பே, வந்துவிடும் செல்போன் தகவலால், வழிமேல் விழி வைத்து ஜானகி ஆவலுடன் ஓடிவந்து, அவரை வரவேற்பதும், வாடிக்கையான நிகழ்ச்சியாக இருந்து வந்தது.
ஒரு ஹேண்ட்பேக் நிறைய வழிய வழிய ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லறை நாணயங்களாகவும் ரகுராமன் ஜானகியிடம் தருவார். ஜானகி கையால் ஒரு டம்ளர் ஜில் வாட்டர் மட்டும் வாங்கி அருந்துவார். முதல் நாள் அவளிடம் பணத்துடன் ஒப்படைத்துச் சென்ற காலிசெய்யப்பட்ட ஹேண்ட்பேக்கை ஞாபகமாக திரும்ப வாங்கிச் செல்வார். 
இவ்வாறு இவர்களின் காதல் சந்திப்புக்களும், வங்கிக்கணக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தும் வளர்ந்தும் வந்தன.
ரகுராமனின் வங்கிக்கணக்கில் ஜானகியின் கைராசியால் இன்று பல லக்ஷங்கள் சேர்ந்து விட்டன. அவர்கள் இருவரின் ஆசைப்படி, வங்கிக்கணக்கில் ஒரு அரை கோடி ரூபாய் சேர்ந்த பிறகு, ஊரறிய சிறப்பாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுபோல அவர்கள் மனதுக்குள் ஓர் ஒப்பந்த நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த அரைக்கோடி ரூபாய் சேமிப்பை எட்டப்போகும் நல்ல நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. 





வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தவிர, வங்கிக்கு வந்து போகும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கடந்த ஒரு மாதமாக ஜானகி தன் திருமண அழைப்பிதழ்களை, தன் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் விநியோகித்து வருகிறாள்.
இரு வீட்டாருக்கும் அறிந்த தெரிந்த சொந்தங்களும், நண்பர்களுமாக அனைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ, ஜாம் ஜாம் என்று ரகுராமன் ஜானகியின் விவாஹம், சாஸ்திர சம்ப்ரதாய முறைப்படி, நான்கு நாட்கள், இரு வேளைகளும் ஒளபாஸன ஹோமங்களுடன், இனிதே நடைபெற்று முடிந்தது.
ரகுராமன் விருப்பப்படியே ஜானகி தொடர்ந்து தன் வங்கிப்பணிக்குச் சென்று வரலானாள்.




தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, வங்கியின் கேஷ் கெளண்டரில் எப்போதும் போல சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தாள்.
மிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக ஒரு சிலர் வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொள்வாள் ஜானகி.
அவள் கையால் கொடுக்கும் பணத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு, அந்த தனலக்ஷ்மி அம்பாளே நேரில் வந்து தந்ததாக நினைத்துக்கொண்டனர், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்.
வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் புதுமையாகத் தோன்றிய ஜானகியைப் பார்ப்பவர்களுக்கு, அது சற்றே அதிசயமாக இருப்பினும், அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுப் போகணும் என்ற நல்லெண்ணத்தையே ஏற்படுத்தியது.




நமது  பண்பையும் பாரம்பரியத்தையும் தன்  கதையின் முக்கிய கதாபத்திரங்களின் (ரகுராமன், ஜானகி )   வாயிலாக  நமக்கு  விளக்கிச் சொல்கிறார்  ஆசிரியர்.

ஜானகியின்  குணாதிசயங்கள் 


  • சுறுசுறுப்பானவள் 
  • நேரத்தின் மதிப்பை உணர்ந்தவள் 
  • சிரித்த முகம் 
  • அன்பாக  உபசரிக்கும் பண்பு 
  • மென்மையானவள் 
  • கலகலப்பானவள் 
  • புத்திசாலி 
ரகுராமனின்  குணாதிசயங்கள் 

  • எளிமையானவர் 
  • பிறர் துயர் கண்டு வருந்தி , அதிலிருந்து அவர்களை  மீட்டெடுக்கும்  உபாயம் தேடுபவர்.
  • நல்லறிவு 
  • அனைவரும் நலமாய் இருக்க வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம்  கொண்டவர்
  • உலக அனுபவம் அதிகமில்லாதவர் 


 ரகுராமன் - ஜானகி இருவருக்கும் இடையில் மலரும் காதலை, ஒரு மெல்லிய மலர் மலரும் நிகழ்வைப் போன்று சித்தரிக்கிறார். 

மொட்டு ஒன்று மலராகி நறுமணம் வீசத் துவங்கும் தருணம்  எதுவென்று நம்மால் துல்லியமாகச்  சொல்லி விட முடியுமா ? அது போல் தான் ஒருவரது மனதில் காதல் மலர்வதும். ஒருவர் மீது காதல் உணர்வு தோன்றுவதற்கு  காரண காரியம் எதுவுமே தேவையில்லை. கண்டதும் கட்டுண்டு  தன்னலம் மறந்து  பரவசம் தனை  வழங்கும்  உணர்வே  காதல். காரண  காரியத்துடன்  ஒருநாளும்  காதல்  பிறப்பதில்லை. அப்படி காரணத்துடன்  பிறக்கும்  உணர்வானது  காதலே இல்லை. 

அதே போல் தான்  இங்கும்  ஆசிரியர்   ரகுராமன் மீது  ஜானகிக்கும்,  ஜானகி  மீது  ரகுராமனுக்கும்  ஏற்பட்ட  கருத்தொருமித்த காதலை  அழகானதொரு உவமையின் வாயிலாக விவரிக்கின்றார்.  இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை " ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது "  என்ற  அழகான உவமையின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார்.


"   பழகப் பழக  பாலும் புளிக்கும் "    என்ற  பழமொழிக்கேற்ப,  ஒரு காலத்தில்  நாம்  விரும்பி  இலயித்துப் போய்க் கிடக்கும்  ஆடம்பரமும், அலங்காரமும், நவ நாகரீகமுமே , நாளடைவில்   நமக்கே  சலிப்பு தட்டிப் போய்  விடக் கூடும். ஒருவரது வெளித் தோற்றம் மற்றும் அவரது ஆடை அலங்காரத்திற்கும் , அவர்களது சிந்தனைகட்கும்  பழக்க  வழக்கங்கட்கும்  எவ்வித சம்மந்தமும் இல்லை. ஒருவரது சிந்தனையே செயல்களாகின்றன. அந்தச் செயல்களே ஒரு மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும்  உலகிற்கு அடையாளம் காட்டுகின்றன . 


" அரிது அரிது  மானிடராய்ப்  பிறத்தல்  அரிது "     என்ற  ஔவைப்  பிராட்டியின்   வாக்கிற்கேற்ப,  மானுடப்  பிறவியின்  சிறப்பையும்  பெருமையையும், பிறவிப் பெருங்கடலை  நீந்திக் கடப்பதற்கான உபாயத்தையும்   ரகுராமனின் ஆன்மீக  சொற்பொழிவின்  வாயிலாக  விளக்கிச் சொல்கிறார். 


இன்றைய  நாகரிகம்  மனிதர்களிடையே  ஏற்படுத்தியுள்ள  மாற்றங்கள் 
  1. குடிப்பழக்கம்  , புகை பிடித்தல் - ஆண்   பெண்  பாகுபாடு  இல்லாமல்  உயிர்கொல்லிக்  கிருமியென   மனித இனத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது.  
  2. நாகரிகத்தின் பெயரில்  பெண்கள் ஆண்களைப் போல  உடை உடுத்துதல், சிகை அலங்காரம் செய்து கொள்ளுதல் 
  3. நாகரிகம் வளர வளர,  உடைகள்   சுருங்கிக் கொண்டே  இருத்தல்
  4. ஆண்கள்  பெண்களைப் போல  சிகை வளர்த்துக் கொள்ளுதல்,  கடுக்கன் என்று பெண்களைப் போல காதில்  கம்மல் மாட்டிக் கொள்ளுதல் 
  5. காலங்காலமாய்  கடைபிடிக்கப் பட்டு வந்த  சாஸ்திரங்களும்  சம்பிரதாயங்களும்  ஒருசிலரால்  கடமைக்காக  கடைபிடிக்கப்படுகிறது. பலரோ,  அவற்றையெல்லாம்  சுத்தமாக  மறந்தே  போய்  விட்டனர்.


நாளொரு மேனியும்  பொழுதொரு வண்ணமுமாய்   அவர்களது   உறவு  சிறு  கிள்ளையைப்   போல்  புதுப் பொலிவுடன்,    எழில்  மேலிட ,  அழகாய்  வளர்ந்து  வந்தது  என்றும்,    காதல்  அவர்களிடையேயான  உறவினை   மென்மேலும்   உறுதிப் படுத்தியது என்றும் அழகாய் சொல்கிறார் ஆசிரியர்.


உவமைகள் 


  1. ஜானகியின்  காதல் - அன்றலர்ந்த புது   புஷ்பம் 
  2. ஜானகி - ரகுராமனின் உறவு  -  ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.
  3. தாயின்  காதலுக்கான ஒப்புதல்  -  ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார்.  
  4. ஜானகியின் அழகைப் பற்றிய வர்ணனை - கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன், தனலட்சுமி  அம்பாள் 
  5. ஜானகியின்  புன்னகை  - கொடி மின்னல் 
 ஒரு  பெண்ணிற்கான  அழகான  ஆரோக்கியமான அலங்காரங்கள்  என்று  ஆசிரியர்  குறிப்பிடுபவை 

  1. புடவை 
  2. நகைகள் 
  3. மெட்டி 
  4. வளையல்கள் 
  5. நீண்ட கூந்தல் 
  6. மருதாணி 
  7. மஞ்சள் 
  8. குங்குமம் 
  9. மலர்கள் 
  10.  மாங்கல்யம் 
 ஒரு  மனிதனுக்கு  உண்மையான  அழகென்பது , அவர்கள் செய்து கொள்ளும்  அலங்காரத்தினாலோ , அல்லது  பகட்டான  ஆடை ஆபரணங்களினாலோ  கிடைப்பது அல்ல. தூய்மையான  உள்ளமும், அன்பும் , உயர்பண்புமே  உண்மையான  அழகு.

குணநலஞ்  சான்றோர்  நலனே  பிறநலம் 
எந்நலத்  துள்ளதூஉ  மன்று .
                                                            - குறள்  982
 
 பொருள்:
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.
     
இந்த உண்மையை தனது  காதல் வங்கி சிறுகதையின் வாயிலாக  அழகாக விளக்கிச் சொல்கிறார் ஆசிரியர்.
நல்லதொரு வாய்ப்பளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கட்கு என்  மனமார்ந்த நன்றிகள்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொன்றாக விமர்சித்த விதம் அருமை... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான விமர்சனம்
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
நிறையக் கற்றும் கொண்டேன்
வாழ்த்துக்களுடன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடியேன் எழுதிய கதைக்கான தங்களின் இந்த ’சிறுகதை விமர்சனம்’ மிக அழகாக அருமையாக எழுதப்பட்டுள்ளது. மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன். பொக்கிஷமாக என்னிடம் தனியே சேமித்து வைத்துள்ளேன்.

இவ்வாறு தங்களின் பதிவினில் இதனைப் பகிர்ந்து கொண்டுள்ளதும் ஓர் புதுமையான முயற்சியாக சிறப்பாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

எனக்குத் தகவல் அளித்த என் அருமை நண்பர் திண்டுக்கல் திரு. பொன் தனபாலன் அவர்களுக்கு என் நன்றிகள்.

அன்புடன் VGK

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ Ramani S

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. நல்லதொரு வாய்ப்பினை பதிவர்களுக்கு அளித்து ஊக்கமூட்டும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment