VAI. GOPALAKRISHNAN தளத்தில் எழுதி வரும் ஐயா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை நடத்தி வருகிறார்.
அவரது காதலாவது கத்திரிக்காயாவது ! சிறுகதைக்கான எனது விமர்சனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகு நல்வாய்ப்பினை வழங்கிய ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி ! நன்றி !! நன்றி !!!
சிறுகதை
காய்கறி விற்கும் காமாட்சியைக் காண வேண்டும் என தன் கண்கள் இரண்டும் துடிப்பதையும், கால்கள் இரண்டும் அந்தச் சின்ன மார்க்கெட்டை நோக்கி காந்தம் போல இழுக்கப் படுவதையும் கொஞ்ச நாட்களாகவே உணரத் தொடங்கியிருந்தான் பரமு.
நிறம் சுமாராகவே இருந்தும், இருபது வயதே ஆன காமாட்சி நல்ல ஒரு அழகி.
பளிச்சென்ற தீர்க்கமான முகம். நல்ல உயரம். சகல சாமுத்ரிகா லக்ஷணங்களுடன் கூடிய உடல்வாகு கொண்டு பூத்துக்குலுங்கும் பருவ வயதுப்பெண்.
அவளைப் பார்ப்பவர்களுக்கெல்லாம், உற்சாக பானம் ஏதும் அருந்தாமலேயே, அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு வித ‘கிக்’ ஏற்படுவதும் உண்டு.
கை தேர்ந்த சிற்பி ஒருவரால், செதுக்கப்பட்ட பொற்சிலை போலத் தோன்றுகிறாளே ! இன்னும் சற்று கலராக மட்டும் இவள் இருந்திருந்தால், யாராவது சினிமாவில் புதுமுகக் கதாநாயகியாக்க கூட்டிப் போயிருப்பார்களோ என தனக்குள் நினைத்துக் கொண்டான் பரமு.
சிறு வயதிலேயே தாயை இழந்தவன் பரமு. அவனுக்கு உடன் பிறப்புகள் யாருமில்லை. கல்லூரிப் படிப்பை முடித்து ரிசல்ட் வரும் முன்பே ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் போய்ச் சேர்ந்து விட்டார்.
பெண்களுடன் கொஞ்சமேனும் பேசிப் பழகிப்
பழக்கமில்லாத பரமுவுக்கு, இந்தக் காய்கறிகள் விற்கும் காமாட்சியிடம்
மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணமே, அந்த ஊரில் இருந்த மிகப்
பெரியதொரு காய்கறி மார்க்கெட் மட்டுமே.
தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பரமு அவ்வப்போது தமிழில் வெளியாகும் வார இதழ், மாத இத்ழ் முதலியவற்றிற்கு சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் என அனுப்பி அதில் வரும் சன்மானத் தொகையிலும், தற்சமயம் மாணவர்கள் தங்கிப் படித்து வரும் விடுதியின் மெஸ் ஒன்றில் தற்காலிகமாக வேலை பார்த்து, அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திலும் காலம் தள்ளி வருபவன். மேலும் தன் படிப்புக்கு ஏற்ற நல்லதொரு வேலை கிடைக்க மனுக்கள் போட்டுக் காத்திருப்பவன். அந்த மெஸ்ஸிலேயே தங்கிக்கொண்டு, தானும் மாணவர்களுடன் அங்கேயே சாப்பிட்டும் வந்தான்.
தினமும் மெஸ்ஸுக்கு வேண்டிய காய்கறிகள், வாங்க மொபெட் ஒன்றில் விடியற்காலமே பெரிய மார்க்கெட்டுக்குச் சென்றிடுவான்.
சின்ன மார்க்கெட்டில் காய்கறிக் கடை போட்டிருக்கும் காமாட்சியும், பெரிய மார்க்கெட்டுக்கு, மொத்த விலையில் காய்கறிகள் கொள்முதல் செய்ய வந்திடுவாள்.
ஆரம்பத்தில் சாதாரணமாக இது போன்ற சந்திப்புக்கள் பரமுவுக்கும் காமாட்சிக்கும் பெரிய மார்க்கெட்டில் ஏற்பட்டு வந்தன.
பெண்களுடன் பேசவே மிகவும் கூச்சப்படும் பரமுவுடன், காமாட்சிதான் இழுத்துப் பிடித்து பேசி வந்தாள். நாளடைவில் பரமுவுக்கு காமாட்சி மேல், அவனையும் அறியாமல் ஏதோ ஒரு வித பாசமும், நேசமும் மலரத் தொடங்கியது.
அனாதை போன்ற தன்னிடமும் அன்பு காட்டி பேச ஒருத்தி, அதுவும் பூத்துக்குலுங்கும் இளம் வயதுப் பருவப் பெண். கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான் பரமு.
நாளடைவில் காமாட்சியின் காய்கறிக் கூடைகளையும், சாக்கு மூட்டைகளையும், பெரிய பெரிய பைகளையும் முடிந்த வரை பரமுவே, தன் மொபெட் வண்டியில் சுமந்து கொண்டு வருவதும், மீதியை அவள், பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வருவதுமாக, அவர்களின் நட்பு தொடர ஆரம்பித்தது.
இப்போதெல்லாம் காமாட்சி பெரிய மார்க்கெட் பக்கம் வருவதில்லை. எல்லாமே பரமு பாடு என்று விட்டுவிட்டாள். இதனால் இருவருக்குமே லாபமாகவே இருந்தது. பஸ் சார்ஜ், லக்கேஜ் சார்ஜ் எனத் தனித்தனியே செலவு இல்லாமல், காய்கறிகளுக்கான கொள்முதல் விலைகளுடன், பரமுவின் வண்டிக்கு ஆகும் பெட்ரோல் செலவுக்கு மட்டும், தன் பங்கைக் கணக்கிட்டுப் பகிர்ந்து கொண்டாள், காமாட்சி.
சின்ன மார்க்கெட்டில் காமாட்சியின் காய்கறி வியாபாரம் நாளுக்கு நாள் நன்றாகவே நடைபெற்று வந்தது. காரணம், பரமு வாங்கிவரும் பச்சைப்பசேல் என்று பளிச்சென்று உள்ள தரமான காய்கறிகள், நியாயமான விலை, சரியான எடை, வாடிக்கையாளர்களை வளைத்துப் பிடித்து, சுண்டியிழுக்கும் காமாட்சியின் கனிவான பேச்சு முதலியன.
எட்டாவது வரை மட்டும் படித்துள்ள போதும், கணக்கு வழக்கில் புலியான காமாட்சியை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது.
இருந்தும் அன்றாடம் மிரட்டி, உருட்டி பணம் பறித்து வரும் பேட்டை ரெளடிகள், முனிசிபாலிடி பேரைச் சொல்லி ரசீது கொடுக்காமல் தண்டல் வசூலிப்பவன். ஓஸியில் காய்கறிகளை அள்ளிச்செல்லும் காக்கிச் சட்டைக்காரர்கள், கடனில் காய்கறி வாங்கிச் சென்று, கடனைத் திருப்பித் தராத அடாவடிகள் போன்றவர்களைச் சமாளிக்க இளம் வயதுப் பெண்ணான காமாட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.
தன் பக்கத்து நியாயத்திற்கு ஆதரவாக இந்த
சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்க, தனக்கென்று ஒரு துணை இல்லையே என்று மனதில்
வேதனைப்பட்டு வந்தாள்.
அதிகாலையில் எழுந்து குளித்து, சாமி
கும்பிட்டு விட்டு, தூய்மையான மிகவும் எளிமையான உடையுடன் கடையை விரித்து
அமர்ந்தால், மதியம் பன்னிரெண்டு மணி வரையிலும், பிறகு மாலை நான்கு மணி
முதல் இரவு எட்டு மணி வரையிலும், அந்தச் சின்ன மார்க்கெட்டில், இவள்
கடையில், காய்கறி வியாபாரம் சக்கை போடு போடும்.
“தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு?” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே, ஒரு கேலிச் சிரிப்புடன், அன்றொருநாள் அந்த நடுத்தர வயதுக்காரன், கிண்டலாகக் கேட்டபோது, காமாட்சி பத்ரகாளியாகவே மாறி விட்டாள்.
அவள் தன் கையில் வைத்திருந்த தராசுத் தட்டை சுழட்டி அவன் மேல் அடிக்க எழுந்த போது, அந்த சின்ன மார்க்கெட்டே அதிர்ந்து போனது.
வந்திருந்த ஜொள்ளுப் பார்ட்டியும், அவளிடம் வாங்கிய ஒரே அடியில் போதை தெளிந்தவனாக, மேலும் அங்கு நின்றால் தனக்கு விழக்கூடும் தர்ம அடிகளிலிருந்து தப்பிக்கத் தலைதெரிக்க ஓடிவிட்டான்.
இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து காமாட்சியிடம் யாரும் எந்த வம்புக்கும் செல்வதில்லை.
அன்று நடந்த இந்த விஷயத்தை, தைர்யமாக காமாட்சி வாயாலேயே சொல்லிக் கேட்ட பரமுவுக்கும் அவளிடம் ஒரு வித பயம் ஏற்பட்டது.
தன்னுடைய வாலிப வயதுக்கேற்ற ஆசைகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ’நமக்காவது .... காதலாவது .... கத்திரிக்காயாவது ....’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பெரிய மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்திருந்த கத்திரிக்காய் மூட்டையை காமாட்சியிடம் ஒப்படைத்து விட்டு புறப்படலானான்.
ஆனால் அவன் மனம் மட்டும் காமாட்சியையே சுற்றிச்சுற்றி வந்து, ஒரு தலைக் காதல் செய்து வந்தது.
படித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான பரமு மேல் காமாட்சிக்கும் உள்ளூர பாசமும், நேசமும் அதிகம் உண்டு.
இருவரும் சந்தித்து உரையாடும் போது, அவரவர் கஷ்டங்களையும், வாழ்க்கையில் இதுவரை நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளையும் பகிர்ந்து கொள்வதுண்டு.
பரமுவின் நட்பினால், காமாட்சிக்கு பெரிய மார்க்கெட் செல்லும் வேலை இல்லாமல், வியாபாரத்திலேயே முழு கவனமும் செலுத்த முடிந்தது.
பரமுவுக்கு மட்டும், அவன் படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத்து விட்டால், காமாட்சியை பிரிந்து செல்ல நேரிடும். அது போல ஒரு பிரிவு ஏற்பட்டு விட்டால் ! நினைத்துப் பார்க்கவே இருவருக்கும் மனதுக்குள் மிகவும் சங்கடமாகவே இருந்தது.
பரமுவுக்கு மட்டும், அவன் படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத்து விட்டால், காமாட்சியை பிரிந்து செல்ல நேரிடும். அது போல ஒரு பிரிவு ஏற்பட்டு விட்டால் ! நினைத்துப் பார்க்கவே இருவருக்கும் மனதுக்குள் மிகவும் சங்கடமாகவே இருந்தது.
குடிசை வீட்டில் சிம்னி விளக்குடன்
குடியிருந்த காமாட்சி, ஜன்னல் உள்ள ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு,
ஃபேனுடன், வாடகைக்கு குடி போகும் அளவுக்கு, அவளின் காய்கறி வியாபாரம் கை
கொடுத்து உதவியது.
இருப்பினும் சிறு வயதில் பட்டுப்பாவாடை கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட காமாட்சிக்கு, அது நிறைவேறாமலேயே போய் விட்டது. அவள் பூப்பெய்தின போது கூட, அவள் அம்மா பல இடங்களில் பணம் புரட்டி, சாதாரண சீட்டிப்பாவாடை, சட்டை, தாவணி வாங்கிக் கொடுத்தது, காமாட்சிக்கு இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.
அவள் அம்மாவும் என்ன செய்வாள் பாவம்? கணவனை
ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்து, இளம் விதவையான அவள், கடைசியில் தன் தள்ளாத
வயது வரை, காய்கறிக்கூடை ஒன்றை தலையிலும், இடுப்பிலும் சுமந்தபடி வீடு
வீடாகச் சென்று காய்கறி விற்றுப் பிழைத்து வந்தவளே.
காமாட்சியின் தாயாரும் ஒரு நாள் மிகவும் உடம்பு முடியாமல் படுத்து, மறுநாளே, எட்டாவது வகுப்பு முழுப்பரீட்சை எழுதி முடித்து விட்டு வந்த காமாட்சிக்கும் அதிக சிரமம் கொடுக்காமல் போய்ச் சேர்ந்ததில், காமாட்சி ஒரு அனாதை போல ஆகிவிட்டாள்.
படிப்பைத் தொடர முடியாமல் அம்மா செய்து வந்த
காய்கறி வியாபாரத்தையே தானும் செய்ய அன்று ஆரம்பித்தவள் தான். சுமார் ஏழு
வருடங்கள் விளையாட்டு போல ஓடிவிட்டன.
பட்டுப்பாவாடைக்கு ஆசைப்பட்ட அவளின்
சிறுவயது ஆசை அலைகள் இன்றும் ஓயாமல் காமாட்சியை துரத்தி வருகின்றன. எல்லாப்
பெண்களுக்கும் ஏற்படும் நியாயமான ஆசைதான் காமாட்சிக்கும்.
இடுப்பில் கட்டிகொள்ள ஒரு பட்டுப்புடவையும்,
கழுத்தில் போட்டுக்கொள்ள இரண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கலியும் வாங்க
வேண்டும் என்பதே அவளின் இன்றைய ஆசை. அதற்கான தொகையையும் சிறுகச்சிறுக
சேமிக்கத் தொடங்கி விட்டாள்.
காமாட்சியின் அன்றாட லாபமும் சேமிப்பும் உயர
உயர, தங்கம் விலையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வந்ததில் அவள் ஆசை
இதுவரை நிறைவேறாமலேயே உள்ளது. சாண் ஏறினால் முழம் சறுக்குது.
தன்னுடைய இந்தச் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் பரமுவிடம் அவ்வப்போது சொல்லிக் கொள்வாள்.
பரமுவும் தான் படித்த படிப்புக்கேற்ற நல்லதொரு வேலை இதுவரை கிடைக்காமல் இருப்பதையும், பல இடங்களுக்கு மனுப் போட்டும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று சென்று வருவதையும் காமாட்சியிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொள்வான்.
பரமுவும் தான் படித்த படிப்புக்கேற்ற நல்லதொரு வேலை இதுவரை கிடைக்காமல் இருப்பதையும், பல இடங்களுக்கு மனுப் போட்டும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று சென்று வருவதையும் காமாட்சியிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொள்வான்.
அன்றொரு நாள் அதிகாலையில் வழக்கம் போல
காய்கறி மூட்டைகளையும் பெரிய பெரிய பைகளையும் தனது மொபெட்டில் ஏற்றியபடி
வேகமாக வந்த பரமு, சின்ன மார்க்கெட்டில் உள்ள காமாட்சியின் கடை அருகே,
பிரேக் அடித்து சமாளித்து நிறுத்துவதற்குள், பின்னால் வேகமாக துரத்தி வந்த
ஆட்டோ ஒன்று, கவனக்குறைவால், பரமுவின் வண்டி மேல் மோதிவிட, பரமு
மொபெட்டிலிருந்து சரிந்து கீழே விழ, காய்கறிகள் யாவும் ஆங்காங்கே சிதறி,
அங்கு ஒரு பெரிய கும்பலே கூடி விட்டது.
இதைப் பார்த்து ஓடி வந்த காமாட்சியும், மோதிய ஆட்டோக்காரருமாக, காலில் காயம் பட்டிருந்த பரமுவை அதே ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர்.
இதைப் பார்த்து ஓடி வந்த காமாட்சியும், மோதிய ஆட்டோக்காரருமாக, காலில் காயம் பட்டிருந்த பரமுவை அதே ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர்.
இடது முழங்கால் பகுதியில் நல்ல அடிபட்டு
வீங்கிப் போய், ஒரு வாரமாக படுத்த படுக்கையாகி விட்டான் பரமு. வலது
உள்ளங்காலையும் ஊன முடியாமல் வலி உள்ளது.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் நல்ல வேளையாக எலும்பு முறிவு ஏதும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் நல்ல வேளையாக எலும்பு முறிவு ஏதும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
காமாட்சி தான், மூன்று வேளையும் தன் கைப்பட
சமைத்த உணவினை எடுத்துப்போய், மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து,
ஆஸ்பத்தரிச் செலவுகளையும் சமாளித்து வருகிறாள்.
பட்டுப்புடவை மற்றும் தங்கச் சங்கிலிக்கான சேமிப்பு தான், ஆபத்திற்கு இப்போது கை கொடுத்து உதவுகிறது.
பரமுவின் உதவி இல்லாததால், காய்கறி கொள்முதல் செய்ய பெரிய மார்க்கெட்டுக்கு இவளே போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. நிழலின் அருமை வெயிலில் சென்றால் தான் தெரியும் என்பது போல, பரமுவின் அருமையை இப்போது நன்றாகவே உணர முடிந்தது காமாட்சியால்.
இன்னும் இரண்டு நாட்களில் பரமு பழையபடி வலியில்லாமல் நடக்க ஆரம்பிக்க முடியும் என்றார், பரமுவுக்கு பிஸியோதெரபி பயிற்சி அளிப்பவர்.
சீக்கிரமாகவே பரமு குணமாகி வரவேண்டி, காமாட்சியும் வேண்டாத தெய்வம் இல்லை.
சீக்கிரமாகவே பரமு குணமாகி வரவேண்டி, காமாட்சியும் வேண்டாத தெய்வம் இல்லை.
மறுநாள் பரமுவுக்கு வந்ததாகச் சொல்லி
மெஸ்ஸில் தங்கியுள்ள ஒரு பையன் கொடுத்த இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு,
சாப்பாட்டுத் தூக்குடன் ஆஸ்பத்தரிக்குப் போனாள், காமாட்சி.
போகும் வழியில், ஆஸ்பத்தரிக்கு மிக அருகில்
உள்ள அரச மரத்துப் பிள்ளையார் கோவிலில் அபிஷேக அலங்காரங்கள் முடித்து,
சூடான சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடந்து கொண்டிருந்தது.
பிள்ளையாரை வேண்டிக்கொண்ட காமாட்சி, ஒரு தொன்னையில் பிரசாதப் பொங்கலையும் வாங்கிக்கொண்டு போய் பரமுவிடம் நீட்டினாள்.
பிள்ளையாரை வேண்டிக்கொண்ட காமாட்சி, ஒரு தொன்னையில் பிரசாதப் பொங்கலையும் வாங்கிக்கொண்டு போய் பரமுவிடம் நீட்டினாள்.
“வா, காமாட்சி! என்ன விஷயம்! இனிப்புடன் வந்துள்ளாய்?” பரமு கேட்டான்.
”ஒரு விசேஷமும் இல்லை. பிள்ளையார் கோவிலில் பிரஸாதமாகக் கொடுத்தார்கள்” என்றாள், பரமுவுக்கு வந்த இரண்டு கடிதங்களையும் நீட்டியபடி.
முதல் கவரைப் பிரித்துப் பார்த்த பரமு, “ஆஹா,
மிகவும் இனிமையான செய்தி தான்; சர்க்கரைப் பொங்கல் விசேஷமாகத் தான் கொண்டு
வந்துள்ளாய்; நான், அந்த வாரப்பத்திரிக்கை நடத்திய ஒரு சிறுகதைப்
போட்டிக்கு “காதலுக்கு உதவிய காய்கறிகள்” என்ற
தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தேன்; அது முதல் பரிசுத்
தொகையான ஐயாயிரம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். உடனடியாக
புகைப்படம் ஒன்றும், சுய விபரக் குறிப்பு ஒன்றும் அனுப்பி வைக்க
வேண்டுமாம்” என்றான்.
காமாட்சி புன்னகையுடன், கண்களை அகலமாக விரித்து, அவனை நோக்கினாள்.
இரண்டாவது கவரையும் அவசரமாகப் பிரித்தான், பரமு. அவன் முகத்தில் இப்போது கோடி சூரிய பிரகாஸம். அரசுடமையாக்கப் பட்ட வங்கியொன்றில் நிரந்தர வேலைக்கு நியமனமாகியுள்ளதாகத் தகவல். மருத்துவப் பரிசோதனைக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரச் சொல்லி உத்தரவு வந்துள்ளது.
கால் வலி மறந்து போய் துள்ளிக்குதிக்கிறான்
பரமு. தபாலைக் கொண்டு வந்து கொடுத்த காமாட்சியின் கைகள் இரண்டையும்
பிடித்துத் தன் கண்கள் இரண்டிலும் ஒத்திக் கொள்கிறான்.
பரமுவை இவ்வளவு மகிழ்ச்சியாகவும்,
சந்தோஷமாகவும் காமாட்சி இதுவரை பார்த்ததே இல்லை. அவளுக்கும், பரமுவுக்கு
நல்ல வேலையொன்று நிரந்தரமாகக் கிடைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாகவே இருந்தது.
“எந்த ஊருக்குப் போய் வேலையில் சேரும்படி இருக்கும்?” என்று
அவள் கேட்கும் போதே, அவளின் கண்களில் நீர் தளும்ப, ஏதோ தூசி கண்ணில்
விழுந்து விட்டது போல, தன் புடவைத் தலைப்பால், துடைத்துக் கொள்கிறாள்.
“திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய
நான்கு மாவட்டங்களிலும் வேலைக்குக் காலியிடம் இருப்பதாகவும், ஏதாவது
ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் நம்ம
உள்ளூராகிய திருச்சி மாவட்டத்தைத் தான் தேர்ந்தெடுத்திருந்தேன்” என்றான்.
[அதுவும் உனக்காகவே தான் என்று மனதுக்குள் கூறிக்கொண்டான் ]
“ஒரு வேளை வெளியூரில் வேலை கிடைத்திருந்தால் என்னை அம்போ என்று விட்டு விட்டுப்போய் விடுவாய் தானே?” என்றாள், காமாட்சி.
[என்னையும் உன் கூட கூட்டிக் கொண்டு போக மாட்டாயா? என மனதுக்குள் ஏக்கத்துடன் கூறிக் கொண்டாள் ]
[” நீ என்னுடன் வருவாய் என்றால் வெளியூர் என்ன, வெளிநாடு என்ன, அந்த சந்திர மண்டலத்துக்கே கூட கூட்டிப் போகத் தயாராக இருக்கிறேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ]
“நீ கடந்த ஒரு வாரமாகச் செய்துள்ள உதவிகளுக்கு, உன்னை அம்போ என்று என்னால் எப்படி விட முடியும்?” என்று சொல்லியபடியே, காமாட்சியை வைத்த கண் வாங்காமல், புன்னகையுடனும், நன்றியுடனும் நோக்கினான், பரமு.
“அது சரி, முதல் மாத சம்பளம் வாங்கி என்னய்யா செய்யப் போறே?” காமாட்சி வினவினாள்.
“எனக்குப் பிடித்த காமாட்சி அம்மனுக்கு, பட்டுப் புடவையும், கால்களுக்கு கொலுசும் வாங்கி சாத்தப் போறேன்” என்றான் பரமு.
“அப்புறம்” என்றாள், காமாட்சி.
“அப்புறம், ஒரு ஆறு மாத சம்பளத்தைச் சேர்த்து, காமாட்சி அம்மன் கழுத்துக்கு இரண்டு பவுனில் ஒரு தங்கச் செயினும், ஒவ்வொரு கைக்கும் ஒரு ஜோடி வீதம் தங்க வளையலும், காதுக்குத் தங்கத் தோடும், மூக்குக்கு தங்க மூக்குத்தியும் வாங்கிப் போடுவேன்” என்றான்.
“அப்புறம்” என்றாள் காமாட்சி.
“அப்புறம் என்ன, என் மனசுக்குப் புடிச்சவளாகப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொள்வேன்” என்றான் பரமு.
“உன் மனசுக்குப் பிடித்தவளுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமாய்யா ?” என்றாள் காமாட்சி.
“அதற்கும் அந்தக் காமாட்சி அம்மன் கருணை வைத்தால் தான் முடியும்” என்றான் பரமு.
“என்னய்யா நீ, எதற்கு எடுத்தாலும், காமாட்சி அம்மன்னே சொல்லிக்கிட்டு இருக்கே; எங்கேய்யா இருக்கா அந்தக் காமாட்சி அம்மன்?” என்று பொறுமை இழந்து கேட்டாள் காமாட்சி.
“அவள் எங்கும் நிறைந்தவள். எப்போதும் என் மனதில் குடி கொண்டு இருப்பவள்; எனக்குப் பக்கத்திலேயே எப்போதும் .... ஏன் இப்போது கூட நிற்பவள்; என் கண்களுக்குத் தெரிகிறாள்; உனக்குத் தெரியலையா? புரியலையா? .... அல்லது புரிந்தும் புரியாதது போல நடிக்கிறாயா?” என்றான் பரமு.
வெட்கத்தால் காமாட்சியின் முகம் சிவந்தது. கீழே குனிந்த வண்ணம் கால் விரல்களால் தரையில் கோலம் போடுகிறாள், பரமுவுடன் தன் திருமணக் கோலத்தை மனதில் எண்ணியபடி.
“முதல் பரிசு வாங்கும் அளவுக்கு அப்படி என்னய்யா அந்தச் சிறுகதையில் எழுதியுள்ளாய்?” காமாட்சி, தலை நிமிர்ந்து ஆர்வமுடன் கேட்கிறாள்.
“அதில் வரும் கதாநாயகனுக்கு, கதாநாயகி மேல் தீராத காதல். அந்தக் காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி, படிக்கும் வாசகர்கள் அனைவரும் விரும்பிக் குடிக்கும் விதமாக அணு அணுவாக நான் அனுபவித்து வந்த உணர்வுகளை அப்படியே எழுதியுள்ளேன்; கதை வெளி வந்ததும் நீயே படித்துப் பார் தெரியும்” என்றான் பரமு.
இவ்வளவு ஆசையை மனதில் போட்டுப் பூட்டி
வைத்து எப்படிய்யா வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்க முடிந்தது உன்னால்?
அதைக் கொஞ்சமாவது என்னிடமும் வெளிப்படுத்தியிருந்தால்,என் மனசும்
சந்தோஷப்பட்டிருக்கும் தானே? ஏனய்யா என்னிடம் எப்போதும் பட்டும்
படாததுமாகவே பழகி வந்தாய்?” என்று கேட்டாள் காமாட்சி.
“எல்லாம் ஒரு வித பயம் தான் காமாட்சி.
அன்னிக்கு உன்னிடம் வம்பு செய்த அந்த ஆளை, தராசுத்தட்டைச் சுழட்டி ஓங்கி
அடித்தேன் என்று நீ தானே என்னிடம் சொன்னாய் ! அது போல என்னையும் நீ
தாக்கினால் நான் என்ன செய்வது என்ற பயம் தான்” என்றான் பரமு.
இதைக் கேட்டதும், கடகடவென்று கன்னத்தில் குழி விழச் சிரித்த காமாட்சி, பரமுவின் கன்னம் இரண்டையும் தன் இரு கை விரல்களாலும் செல்லமாகக் கிள்ளி விட்டாள்.
அவள் இவ்வாறு பச்சைக்கொடி காட்டியதும், பயம் தெளிந்த பரமு மட்டும் சும்மா இருப்பானா என்ன !
ஆஸ்பத்தரியின் அறை என்றும் பார்க்காமல் காமாட்சியை அப்படியே அலாக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டான்.
இவர்களின் ஜாலி மூடைப் பார்த்ததும் 'கெளலி'
அடித்தபடி இரண்டு பல்லிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே, குஷியாக அந்த
அறையின் சுவற்றில் இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன.
எனது விமர்சனம்
காதலாவது
கத்தரிக்காயாவது என்ற இக்கதையில் ஆசிரியர் பரமு – காமாட்சி இடையே மலரும்
அழகான காதலை சொல்கிறார்.
பெண்களிடம்
அவ்வளவாகப் பேசிப் பழக்கமில்லாதவன் பரமு.கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவன்.அனாதை என்ற எண்ணம்
கொண்ட பரமுவிற்கு, காமாட்சி அவன் மீது காட்டும் அன்பினால்,அவள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.ஆனால்,
அவனுக்கோ பயம். ஏனெனில், அவளிடம் எவரேனும் தவறாக நடக்க எத்தனிப்பதாக அவளுக்குத் தோன்றினால்,
கோபத்தில் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடும் அவளது குணம். தானும் தன் காதலை சொல்லப்
போக, அதை காமாட்சி ஏதேனும் தவறாக எண்ணி விடுவாளோ என்றெண்ணி அமைதி காக்கிறான் பரமு.
காமாட்சி
பரமு இருவருமே ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நடந்து கொள்ள அங்கு ஓர் நல்ல நட்பு நிலவுகிறது.
ஒரு
பெண்ணுக்கு நியாயமாக மனதில் தோன்றும் ஆசைகளை காமாட்சியின் வாயிலாகச் சொல்கிறார் ஆசிரியர்.
ஆம், அது புடவை மீதும் நகை மீதும் ஏற்படும் ஆசை தான். அதற்காக, தன் வருமானத்திலிருந்து
சேமித்தும் வருகிறாள். அந்தச் சேமிப்பே பிறிதொரு நாளில் ஏற்பட்ட அவசரத் தேவைக்கு கைகொடுத்தும்
உதவுகிறது.
எப்போதும்
உடன் ஒத்தாசையாய் இருப்பவர்களது அருமை, அவர்கள் அருகில் இல்லாதபோது தான் தெரியும் என்ற
உண்மையை, பரமு விபத்தொன்றில் சிக்கிக் கொண்ட போது காமாட்சி உணர்ந்து கொள்வதாக சித்தரிக்கிறார்
ஆசிரியர்.
காமாட்சியின்
சேமிப்பாக இருந்த கையிருப்பே மருத்துவ சிகிச்சைக்கு கைகொடுத்து உதவுகிறது.
“கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்” என்பது
பழமொழி. அதற்கேற்ப, பரமுவிற்கு ஒரே சமயத்தில் இரு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. பரமு
எழுதிய சிறுகதைக்கு ஐயாயிரம் ரூபாய் முதல் பரிசாக கிடைக்கிறது.அதே சமயத்தில், அரசுடைமையாக்கப்
பட்ட வங்கி ஒன்றில் நிரந்தர வேலை ஒன்றும் கிடைக்கிறது.
அந்தச்
சூழலில் தன் மனதில் உள்ள காதலை பரமு வெளிப்படுத்தும் விதம் மிகவும் அருமையாக ஆசிரியரால்
கையாளப்பட்டுள்ளது.காமாட்சியை அம்மனாக உருவகம் செய்து, அம்மனுக்கு பட்டுப் புடவை, தங்கச்
சங்கிலி, தோடு, மூக்குத்தி,கொலுசு அனைத்தும் சூட்டி அழகு பார்க்கப் போவதாக சொன்ன விதம்
மிகவும் அருமை.
காமாட்சி
அம்மன் கருணையாலேயே தனது காதல் நிறைவேறும் என்று சொல்லுமிடத்தில், காமாட்சியையே அம்மனாக
பரமு உருவகித்துக் கொண்டதாக சொன்னது அழகு.
மொத்தத்தில்,
இரு இளம் உள்ளங்களில் உதயமான உன்னதமான காதல் ஒன்றை இந்த “காதலாவது
கத்தரிக்காயாவது” கதையில் அழகாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-03-03-third-prize-winner.html
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-03-03-third-prize-winner.html
நல்வாய்ப்பளித்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், எனது விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றிகள் !!!