blank'/> muhilneel: பாசம்- சிறுகதை

Sunday, November 18, 2012

பாசம்- சிறுகதை


         வழக்கமாக விளையாட  வரும்போதெல்லாம், தன் நண்பர்கள்  பட்டாளத்துடனே அந்த மைதானத்திற்கு  வரும் இராசேந்திரன், அன்று  சற்று முன்னதாகவே வந்து  விட்டான். அந்த பசுஞ்சோலை கிராமத்தில், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்கும் விளையாட்டு மைதானமாகத் திகழ்ந்தது, ஊருக்கு எல்லையாக இருந்த அந்த பொட்டல் காடு தான். இராசேந்திரன், வீட்டிலிருந்து சந்தோஷமாய் குதித்து விளையாடியபடி அந்த பொட்டல் காடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வழியில், அவனைக் கண்ட பக்கத்து வீட்டு சிவகாமி பாட்டி “என்னப்பா, விளையாட கிளம்பிட்டியா ? பாத்து பத்திரமா போய்ட்டு வா“ என்றவரிடம் “சரி பாட்டி“ என்று பதிலளித்துவிட்டு துள்ளி ஓடினான்.
          வழிநெடுக தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கடலையை கொறித்துக் கொண்டே வந்தவனது கவனத்தை, ஓர் சிறு முனகல் சத்தம் ஈர்த்தது. அவன் சட்டென்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கிருந்து சத்தம் வந்ததென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெதுவாக திரும்பி நடக்கத் தொடங்கியவனுக்கு, மீண்டும் அக்குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி நடந்தான். சத்தம் அங்கு அருகிலிருந்த தண்ணீர்ப் பந்தலில் இருந்து வருவதை உணர்ந்து, அருகில் சென்று பார்த்தான். அங்கோர் மேசையின் அடியில், சில மண் பானைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.பானைகள் மெல்ல ஆடுவதைக் கண்ட அவன், மெல்ல ஒவ்வோர் பானையாக எடுத்துப் பார்த்தான். பார்த்தவனுக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்.
                வெளி உலகே அறியாது, சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை உணராது, அளவிலா ஆனந்தத்துடன் நான்கு நாய்க்குட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாய் ஏறி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனது கண்களில் ஆர்வமும், மனதில் மகிழ்ச்சியும் நிரம்பியது. சில நிமிடங்கள் தனைமறந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவற்றை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் மேலிட்டது. சுற்றிலும் பார்த்தவனுக்கு, அங்கோர் கோணிப்பை கிடப்பது தெரிந்தது. அதை எடுத்து வந்தவன், ஒவ்வோர் நாய்க்குட்டியாய் எடுத்து பையினுள் போட்டான். அவன் தூக்கியதும், ஒவ்வொரு குட்டியும் மெல்லிய முனகலுடன் அவனது கரங்களில் தஞ்சமடைந்தன. பின், அலுங்காமல் குலுங்காமல் அந்தக் கோணிப் பையை தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான் இராசேந்திரன்.
            வீட்டிற்குள் நுழையும் போதே “அம்மா!!!” என்றழைத்தவாறு வந்தவனை, எதிர்கொண்டார் அவனது தந்தை. “ அம்மா கிராமத்து எல்லையில் இருக்கிற எல்லையம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார் அப்பா, வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகும்” என்றார். எப்போதும் வீட்டிற்குள் நுழையும் போதே, அவனது வருகைக்காக காத்திருந்து, வந்ததும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று, உண்ண வழங்கும் தாய் அன்று வீட்டில் இல்லாதது, அவனுக்கு சற்று வருத்தமாகவே இருந்தது.  இராசேந்திரனின் கையில் இருந்த கோணிப்பையை கவனித்த அவனது தந்தை, “ என்னப்பா அது கோணிப்பையில?” என்றார். “நாய்க்குட்டிகள் பா. அந்த பொட்டல் பக்கத்துல இருக்கிற தண்ணீர்ப் பந்தல்ல இருந்தது. பார்க்க ஆசையா இருந்தது. எடுதுட்டு வந்தேன் பா “ என்றான். “சரி, முகம் கழுவிட்டு வா. பால்  ஊற்றித் தருகிறேன். நீ குடித்துவிட்டு, நாய்க் குட்டிகளுக்கும் கொஞ்சம் எடுத்து வை” என்றார் தந்தை. தந்தை கொடுத்த பாலைக் குடித்து விட்டு, குட்டிகளுக்கும் பால் எடுத்து வைத்தான். அவை குடிக்கும் அழகினை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் அதில் ஏனோ லயிக்கவில்லை.
  வாசற்படியில் வந்தமர்ந்த இராசேந்திரன், கன்னத்திற்கு தன் கைகளால் முட்டுக் கொடுத்து அமர்ந்து, தன் தாய் வருகிறாளா  என்று வீதியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது, கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டான். மணி ஏழரை அடித்தது. வீட்டினுள் வந்து, சிறிது தண்ணீர் அருந்தி விட்டு, மீண்டும் வாசலுக்கு சென்றான். அப்போது, தெரு முனையில் யாரோ வருவது போல தோன்றியது. ஆவலாய் எட்டிப் பார்த்தான்.அவனது தாய் வருவது தெரிந்தது. அவள் வீட்டினுள் நுழைந்தது தான் தாமதம், “ எனக்கு என்ன அம்மா வாங்கிட்டு வந்தீங்க? “ என்றான். “ உனக்கு வேணுங்கறதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். அந்த பையில இருக்கு, எடுத்துக்கோ “ என்றாள் அவனது தாய். “ ஏன் அம்மா எங்கிட்ட சொல்லாம போய்ட்டிங்க?? நான் உங்களை எவ்வளவு தேடினேன் தெரியுமா?? “ என்றான். “ இன்னைக்கு எல்லையம்மன் கோவில்ல விசேஷம். மாசா மாசம் இரண்டாம் சனிக்கிழமை நடக்கும். நானும், ரெண்டு மூனு மாசமா போகனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா போக முடியல. இன்னிக்கு தெருவுல எல்லாரும் போவதா, பக்கத்து வீட்டு சிவகாமி அம்மா சொன்னாங்க. அதான் டா ராஜா போய்ட்டு வந்தேன்.” என்றாள்.தாயும் மகனும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட தந்தை அங்கு வந்தார். இராசேந்திரனைப் பார்த்து, “ உன் தாய் நீ வீட்டிற்கு வரும் போது இல்லைன்னதும், உன் மனம் எவ்வளவு தேடுது, அதே போல் தானே தன் குட்டிகளைக் காணாது, இவைகளின் தாய் இவற்றைத் தேடும்” என்றார். அப்போது தான், இராசேந்திரனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. 
          மறுநாள் காலை, தந்தையுடன், குட்டிகளை எடுத்துக் கொண்டு தண்ணீர்ப் பந்தலுக்கு சென்று குட்டிகளை எடுத்த இடத்தில் விட்டான். குட்டிகள் மெல்லிய குரலில் முனகின. பந்தலை விட்டு ஓரமாய் ஒதுங்கினார்கள் தந்தையும் மகனும். அப்போது, எங்கிருந்தோ தாய் நாய் ஓடி வந்தது. தன் குட்டிகளைக் கண்டதும், பாசத்துடன் அவற்றை தம் நாவால் வருடிக் கொடுத்தது. தாயைக் கண்ட குட்டிகள் வாலை ஆட்டி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தின. மன நிம்மதியுடனும், மகிழ்வுடனும் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்தான் இராசேந்திரன்.


No comments:

Post a Comment