அதிகாலையில் எழுந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,
அவசர அவசரமாய் குளித்து விட்டு வந்த ராமாயி, அடுப்பு மேட்டில் இருந்த முந்தின நாள்
சாதத்தில், சிறிது மோர் கலந்து அவசர அவசரமாய் குடித்து விட்டு, ஒரு கலயத்தில், தன் மகனுக்கும் எடுத்து வைத்தாள். சுவற்றோரமாய்,
குளிருக்கு இதமாய், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான்,
அவளது பத்து வயது மகன், மணிமாறன். அவனிடம், “ அப்பா, மணிமாறா, நான் வேலைக்கு
கிளம்பறேன். உனக்கு கலையத்துல பழையது எடுத்து வெச்சிருக்கேன், சாப்டுட்டு, பள்ளிக்கோடத்துக்கு
கிளம்பு.” என்றாள். அவள் குரலைக் கேட்டதும், கண் திறந்து பார்த்த மணிமாறன், “அம்மா,
எனக்கு புது நோட்டும், பென்சிலும் வேணும்மா. நான் பேப்பர்ல எழுதி, நோட்ல ஒட்டி வெச்சிருந்தத
டீச்சர் பாத்துட்டாங்க, திங்கட்கிழமை வரும் போது, புது நோட்டோட வரணும், இல்லைன்னா கிளாஸ்க்குள்ள
விடமாட்டேன்னு சொல்லிட்டாங்கம்மா” என்றான். “சரிப்பா, வாங்கித் தர்ரேன்.” என்று சொல்லிவிட்டு
கிளம்பினாள். இன்று முதலாளி அம்மாவிடம், சிறிது பணம்
கேட்டு வாங்க வேண்டும் என்றெண்ணியவாறு வேகமாக நடந்தாள்.
அந்த பங்களாவின் கேட்டினைத் திறந்து கொண்டு,
வீட்டின் பின்கட்டு வழியாக சமையற்கட்டினை அடைந்தவளை, கோபத்துடன் எதிர்கொண்டாள் எஜமானி
அம்மாள் சுகன்யா. “ வங்கம்மா, வாங்க. இப்பத்தான் வர்றீங்களா? காபி குடிங்க” என்று நக்கலாய்,
அவள் வேலைக்குத் தாமதமாய் வந்ததை இடித்துரைத்தாள். “இல்லீங்கம்மா……..” என்று ஆரம்பித்த
ராமாயியை, “ வேலைக்கு வர்ற நேரத்தைப் பாரு. ஆறு மணிக்கு வரணும்னு சொல்லி
இருக்கேண்ல, இப்ப மணி ஆறரை ஆகப் போகுது. இனிமேல் வேலையை ஆரம்பிச்சு, எப்ப முடிக்கறது???
சீக்கிரம் ஆரம்பி “ என்று சிடுசிடுத்து விட்டுச் சென்றாள்.
பரபரவென்று அங்கு குவிந்திருந்த வேலைகள்
அனைத்தையும் ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தாள் ராமாயி. பாத்திரங்கள் துலக்கி, வீடு முழுவதும்
பெருக்கி துடைத்து விட்டு, கொல்லைப் புறத்தில் மலையென குவித்து வைக்கப் பட்டிருந்த
துணிகளை எல்லாம் துவைத்து காயப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். நான்கு மணிநேர ஓய்வில்லா
வேலைகட்குப் பின், அப்பாடா என்று அயர்ந்து ஓரமாய் அமர்ந்தவளை, சுகன்யாவின் அதட்டும்
குரல் விரட்டியது. ”வேலை எல்லாம் முடிஞ்சதா?? மாடியில சின்னையா ரூம் ரொம்ப தூசியா இருக்கு,
அதைப் பார்த்து பெருக்கி சுத்தம் பண்ணி வை. வேண்டாதது எல்லாம் ரூம் வாசல் கிட்ட இருக்கற
ஷெல்ஃப்ல இருக்கு. ரூமை கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணிட்டு, தேவை இல்லாததுன்னு ஷெல்ஃப்ல
இருக்கறதெல்லாம் கொண்டு போய் தெருவோர குப்பைத் தொட்டில போட்டுடு” என்று கட்டளையிட்டாள்.
எஜமானி அம்மாள் ஏவலிட்ட பணிகளை செய்ய எத்தனித்தாள்.
அவளால் செய்ய இயலவில்லை. ஓய்வின்றி வேலை செய்தவளுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. ”அம்மா,
பசியாயிருக்குங்க. பழையது இருந்தா சாப்டுட்டு செய்யட்டுங்களா ??” என்றாள் ராமாயி.
“சரி…சரி.. அந்த அடுப்பு மேடைக்கு கீழ இருக்கற பழைய சாதத்த சாப்டுட்டு வேலைய பாரு”
என்று கூறி விட்டுச் சென்றாள். சாதத்தினை எடுத்து வந்து, ஓர் ஓரமாய் அமர்ந்து உண்டு
விட்டு, பாத்திரங்களை துலக்கி வைத்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பினாள்.
மாடிப்படி ஏறி, அந்த அறையைத் திறந்தவளுக்கு
மலைப்பாக இருந்தது. ஆம்….. அறை முழுவதும், புத்தகங்களும், பேப்பரும், பேனாக்களுமாய்
இறைந்து கிடந்தன. சாப்பிட்ட தட்டுகளும்,காபி தம்ளர்களும் டேபிளின் மீது அப்படியே கிடந்தன.
ஒவ்வொன்றாக எடுத்து சீர்படுத்திவிட்டு, அறையினை சுத்தம் செய்தாள். பின், இறுதியாக,
எஜமானி அம்மாள் சொன்ன வேண்டாதவற்றை எடுத்துப் பார்த்தாள். அது முழுவதும், சில பக்கங்களே
எழுதிய நோட்டுக்களும், எழுதாத முழு நீள தாட்களும், பேனாக்களும், பென்சில்களுமாய் நிறைந்திருந்தது.
“ இவ்வளவு இருக்கு. இது எல்லாமே வேண்டாததா
என்ன?“ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவற்றை எடுத்து, குப்பைக் கூடையில் போட எத்தனித்தாள். அப்போது தான் அவள் அதை கவனித்தாள்,
அதில் நிறைய நோட்டுகள் சில பக்கங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு இருந்தன. மற்ற பக்கங்கள்
எல்லாம் ஏதும் எழுதா வெள்ளைத் தாட்களாகவே இருந்தன. “ இவ்வளவு பக்கங்கள் இருக்கே, இதைப்
போயி குப்பைல போடச் சொல்றாங்களே. நம்ம பிள்ளைக்கு வேணும்னா கேட்டு எடுத்துட்டு போகலாமா
“ என்றெண்ணியவள், அவற்றை அள்ளிக் கொண்டு கீழே வந்தாள்.
“அம்மா, இதிலே எழுதாத நோட்டுகள், கொஞ்ச பக்கம்
மட்டும் எழுதுன நோட்டுகள் எல்லாம் நிறைய இருக்கும்மா” என்றவளை ஓர் அலட்சியப் பார்வை
பார்த்தாள் சுகன்யா. “ அதான், எல்லாம் வேண்டாம்னு தான எடுத்து வெச்சிருக்கு. குப்பைல
எடுத்து போட வேண்டியது தானே, அதை விட்டுட்டு என்ன பேசிட்டு இருக்க?? ” என்றதட்டினாள்
சுகன்யா. “சரிங்கம்மா” என்று கூறிவிட்டு, ஏதோ கேட்க எத்தனித்தவள், ஏதாவது கேட்டால்,
மீண்டும் திட்ட ஆரம்பித்து விடுவாளோ என்றெண்ணி மவுனம் ஆனாள்.
குப்பைகள் என்று அவர்கள் ஒதுக்கியவற்றை எடுத்துக் கொண்டு வந்தவள், “ அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்கள்ல, நாம இதுல இருக்கற நல்ல நோட்டுப் புத்தகங்கள நம்ம பிள்ளைக்கு எடுத்துகிட்டா என்ன….இவங்களும் நான் நோட்டு வாங்க பணம் கேட்டா, இன்னைக்கு குடுக்கப் போறதில்ல” என்றெண்ணியவள் கேட்டின் அருகில் அமர்ந்து, தன் மகனுக்கு பயன்படும் என்று தோணிய நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். இதனை தற்செயலாக கவனித்துவிட்ட சுகன்யா, விறுவிறுவென்று ராமாயியிடம் வந்தாள். “என்ன பண்ற இங்க?” என்று கேட்டுவிட்டு, ராமாயியின் பதிலுக்குக்கூட காத்திராமல், “
வீட்டிலிருந்து என்ன திருடிட்டு போகப் பாக்கற? ” என்று காரசாரமாய் கத்தத் துவங்கி விட்டாள். அவ்வளவு நேரம் அவளிட்ட ஏவல்கட்கும், அதட்டல்கள் எதற்கும் பேசாது, வேலைகளை கவனித்து வந்த ராமாயி, “அம்மா, கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நீங்க சுத்தப் படுத்த சொன்னீங்க, நான் செஞ்சேன். அங்க, உபயோகமான பொருட்கள் நிறைய குப்பைல கிடந்தது. உங்க கிட்ட சொன்னதுக்கு, அதெல்லாம் குப்பைல போடச் சொல்லீட்டிங்க. நான், அதில என் பிள்ளைக்கு பயன்படலாமேனு தோணுன பொருட்கள குப்பைல இருந்து எடுத்தேன். எதையும் சந்தேகத்தோடயும், அதிகாரச் செருக்கோடயும் பாக்கற நீங்க, முதல்ல உங்க மனச சுத்தப் படுத்திக்கோங்க. உங்க கிட்ட இனி நான் வேலை பாக்கறதா இல்ல. நான் வரேன்” என்று கூறி விடுவிடுவென்று வெளியேறினாள் ராமாயி.