blank'/> muhilneel: April 2012

Wednesday, April 25, 2012

காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளை பற்றி காமராஜரின் தங்கை மருமகள் தங்கம்மா


தமிழ் மணத்தில் பெரியார் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்து வரும் இந்த நேரத்தில் பெரியார் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளை சந்தித்த சம்பவத்தை காமராஜரின் தங்கை மருமகள் தங்கம்மா சொல்கிறார் கேளுங்கள். "காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க, ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ பாக்க வந்தாரு , அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு "அம்மா நான் உங்களுக்கு ஒன்னும் வாங்காம வந்துட்டேன், கொஞ்சம் இருங்க வந்துடுறேன்" னு சொல்லிட்டு கார்ல இருந்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு. "இத சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு போனார். அன்னைக்கு சாயந்திரம் விருதுநகர் பொட்டல் ல அவரு மீட்டிங் பேசுனாரு, நானும் கேக்க போனேன், காலைல அவளோ சாந்தமா இருந்த பெரியாரா இப்படி ஆவேசமா பொளந்து கட்டுறார்" னு எனக்கு தோனிச்சு மத்தவங்க பேசுறத விட வித்யாசமா இருந்தது அவரு பேச்சு, அதனால நெறைய பேரு கேட்டு கிட்டு இருந்தாங்க. பெரியாரு எவளோ பெரிய ஆளுன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது, அவரமாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுற வங்கள எல்லாம் இந்த காலத்துல பாக்க முடியாது. ஐயா (காமராஜர்) பேசுனா அது மேடைல பேசுற மாதிரி இருக்காது சாதரண ஆளா தான் பேசுவாரு , ஆனா அவரு ஒரு பொய் கூட சொல்ல மாட்டாரு, ஐயா மாதிரி ஒரு ஆள இனிமே யாருமே பாக்க முடியாது. அவருமாதிரி தனக்குன்னு எதுவுமே யோசிக்காத மனுசன என் வாழ்கைல நான் பார்த்ததே இல்ல. ஐயாவ எல்லோரும் கருப்பு காந்தின்னு சொல்லுவாங்க, ஐயா ஒரு கருப்பு தங்கம் , அய்யாவோட அம்மா அதுக்கு நேர் மாறா நல்லா சிவப்பா இருப்பாங்க, அவங்க முகத்த பார்த்தாலே ஒரு அன்பான பார்வை தான் தெரியும், காமராஜர் சினிமாவுல சிவகாமி அம்மாவா ஒருத்தவங்க நடிச்சிருந்தாங்க, அத பார்த்தா ஏதோ பாவமா இருந்தது. ஆனா நிஜத்துல சிவகாமி அம்மாவா பார்த்தா தெய்வீகமா இருப்பாங்க."

Eggless Marble Cake

Friday, April 13, 2012

இயற்கை எழில்

தமிழ்த்தோட்டம்.காம் நடத்திய புகைப்படப் போட்டிக்கு என்னுடைய பதிவுகள்.

தலைப்பு:  இயற்கை எழில்  





சந்தேகக் கோடு…….அது சந்தோஷக் கேடு……


           கல்லூரியில் கணிப்பொறியியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தாள் ராஜி. அந்தக் கல்லூரியில் அவள் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது. அன்று, மாதத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. இளங்கலை மாணவர்கள் தேர்வெழுதும் அறைக்கு கண்காணிப்புப் பணிக்குச் சென்றிருந்தாள்.மாணவர்கள் அனைவருக்கும் விடைத் தாட்களையும், வினாத் தாட்களையும் கொடுத்துவிட்டு அமர்ந்தாள். சிறிது நேரத்தில், துணைத் தாட்கள் கேட்டு மாணவர்கள் ஒவ்வொருவராய் எழ, அனைவருக்கும் கொடுத்துவிட்டு, இருக்கையில் வந்தமர்ந்தாள். மாணவர்களிடம், யாரும் காப்பி அடிக்க முயற்சி பண்ணாதீர்கள் என்று அறிவுறுத்தினாள்.
           கண்காணித்துக் கொண்டிருந்த நேரத்தில் இளங்கலை இரண்டாமாண்டு கணிப்பொறியியல் பயிலும் மாணவன் சந்தர் எதுவும் எழுதாமல், சிந்திப்பதும், சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டாள். அவன், விடைத் தாளில் அவ்வளவாக எதுவும் எழுதவும் இல்லை. படிக்காது வந்திருக்கிறான் போலும் என்றெண்ணினாள். தேர்வுக்கான மூன்று மணி நேரம் முடியும் தருவாயில், மாணவர்கள் ஒவ்வொருவராய் விடைத்தாட்களைக் கொடுத்துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கடைசியாக சந்தர் வந்து தன் விடைத் தாளைக் கொடுத்தான்.ராஜி அவனைப் பார்த்து, சரியாகப் படிக்கவில்லையா? என்று கேட்டாள். சந்தரோ, ஒன்றும் பேசாது அமைதியாக நின்றான். சரி போ என்று கூறி அவனை அனுப்பிவிட்டு, விடைத் தாட்களை எடுத்துக் கொண்டு, ஆசிரியர்கள் ஓய்வறைக்குத் திரும்பினாள். சற்று நேரம் அமர்ந்திருந்தவள், மணி நாலரை ஆனதும், வீட்டிற்குக் கிளம்பினாள். அன்று நடந்த தேர்வின் விடைத்தாட்களை திருத்துவதற்காக எடுத்துச் சென்றாள். வீட்டில் சில விடைத்தாட்களை திருத்தியவள், அவற்றை தன் அலமாரியில் வைத்தாள்.
      அடுத்த நாள், காலை வகுப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், ஓய்வாக இருந்தபடியால், மீதமிருக்கும் விடைத் தாட்களைத் திருத்த எண்ணி எடுத்து வைத்தாள். இரண்டு விடைத் தாட்களைத் திருத்திய ராஜி, வரிசை எண்களின் வாரியாக, அடுத்து இருக்க வேண்டிய சந்தரது விடைத் தாள் இல்லாதது கண்டு திகைத்தாள். எங்கேனும் அருகில் விழுந்து கிடக்கிறதா என்று பார்த்தாள். அங்கு இல்லை. ஒரு வேளை, அவள் சென்ற வகுப்புகளில் எங்கேனும் தவற விட்டு விட்டாளோ எண்றெண்ணி, அந்த வகுப்பறைக்கு மாணவர்களை அனுப்பி, பார்த்து வரச் சொன்னாள். அங்கும் இல்லை என்று கூறி மாணவர்கள் திரும்பினர். அவளுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. முதல் நாள் தேர்வறையில், சந்தர் கேள்விகளுக்கு விடை அறியாது அமர்ந்திருந்தது அவள் நினைவிற்கு வந்தது. உடனே, அவள் மனதில் சந்தர் விடைத்தாளை திருடி இருப்பானோ என்ற எண்ணம் எழுந்தது. அவளது எண்ணம் சரியானது தானா என்று சிந்தித்து பார்க்கக் கூட அவளால் இயலவில்லை. உடனே, அவள் துறைத் தலைவரிடம் சென்று புகாரளித்தாள். அவரும், சந்தரை அழைத்து விசாரித்தார். அவன், தான் விடைத் தாளைத் திருடவில்லை என்று எவ்வளவோ, மன்றாடியும், தலைவர் அவனை நம்பவில்லை. அவனை ஒரு மாதம் கல்லூரியிலிருந்து நீக்கி விட்டார்.
        ஒன்றரை மாதம் சென்றிருக்கும். ராஜி வீட்டிலுள்ள தன் புத்தக அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது, புத்தகங்களின் இடுக்கில் ஏதோ தாள் இருப்பதைக் கண்டாள். எடுத்துப் பார்த்த அவள் அதிர்ந்து போனாள். அது, சந்தரது தொலைந்து போன விடைத்தாள். அவள் எப்படியோ, அந்த விடைத் தாளைத் தவற விட்டு விட்டாள். தனது சந்தேகத்தால், அவன் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டதை எண்ணினாள். தன் தவறால், ஒரு மாணவனின் நன்நடத்தையில் குற்றம் ஏற்பட்டதை எண்ணி வருந்தினாள். தீர ஆராயாமல் செய்த செயலால், அவள் மனம் குற்ற உணர்ச்சியால் நிலைகுலைந்தது.
          அவள் உள்ளத்தில் ஏற்பட்ட சந்தேகமே, அவளது மன நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் கேடாய் அமைந்தது.  

வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?


            உலகில் உள்ள அனைவரும் எப்பாடு பட்டாயினும் வெற்றி பெற விழைகிறோம். நாம் எந்தத் துறையில், எந்தச் செயலை செய்தாலும், அதில் நாம் முன்னோடியாய் இருக்க விழைகிறோம். அதற்காக நாம் பல்வேறு முயற்சிகள், அணுகுமுறைகள்,ஆயத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்கிறோம். அங்ஙனம், நாம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்களில் நாம் கவனம் கொள்ளும் போது, வெற்றிக்கான வித்து இடப்படுகிறது.தெய்வப் புலவர் திருவள்ளுவர் தன் குறளில்,
             "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
              மெய்வருத்தக் கூலி தரும்."
                           - குறள் எண் : 619
என்று குறிப்பிடுகின்றார்.எனவே வெற்றிக்கு அடிப்படையாக முயற்சியே அமைகிறது.
அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்கள்:
        நமது அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்கள் அனைத்தும் நம் எண்ணங்களில் இருந்தே ஆரம்பமாகின்றன.எனவே தான்   "உள்ளுவதெல்லாம்   உயர்வுள்ளல்"  என்கிறார் திருவள்ளுவர்.நம் எண்ணங்கள் என்றும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். எண்ணங்கள் நம் உள்ளத்தில் தோன்றும் போதே, அதற்கான நடவடிக்கைகளும், செயல் முறைகளும் தானாக உருவாகி விடுகின்றன.எனவே, எண்ணங்களே முதல் படி.
           "எண்ணங்கள் செயல்களாகும், செயல்கள் பழக்கங்கள் ஆகும், பழக்கங்கள் நம் நடத்தையை நிர்ணயம் செய்யும்"
"Thoughts become Actions, Actions Create Habits, Habits build Character"
எண்ணங்கள் சிறப்பானதாக இருப்பின் செயல்களும் சிறப்பாக அமையும்.

தேர்ந்தெடுத்தல்,வாய்ப்புகள்,மாற்றங்கள்:
          இவற்றை
3 C's in Life என்று குறிப்பிடுவர். அவை, CHOICE, CHANCE, CHANGE.-You must make a choice to take the chance if you want anything to change”. நாம் வெற்றியை நோக்கி பயணிக்கும் போது, சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.நாம் தெரிவு செய்யும் பாதையில் நமக்கு கிட்டும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். "வாய்ப்புகள் ஒருமுறை தான் கதவைத் தட்டும்" என்று கூறுவர். அங்ஙனம் கிட்டும் வாய்ப்புகளை, அவை கிட்டும் நேரத்தில்  நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப் பயன்படுத்தினால் நமது வாழ்வில் நல்மாற்றங்கள் ஏற்படும்.

Confidence - நம்பிக்கை, Courage - தைரியம், Communication - தகவல்     பரிமாற்றம்:
        நம் திறமைகளை, நாம் சரியான நேரத்தில், சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். நம்மிடம் அளவிற்கு அதிகமான சக்தி உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அவை
Confidence - நம்பிக்கை, Courage - தைரியம், Communication - தகவல் பரிமாற்றம். நமக்கு இருக்கும் இத் திறமைகளை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அதற்கு நம்பிக்கையே மூலதனம். நாம் பிறரிடம் வெளிப்படுத்த விரும்பும் கருத்துக்களை தெளிவாகவும், தைரியமாகவும் கூற  வேண்டும். தன்னம்பிக்கை(Self-Confidence) மற்றும் விடாமுயற்சி மிகுந்து இருக்கும் இடத்தில், வெற்றி வாசற்க் கதவைத் தட்டும்.

நம்பிக்கை & தன்னம்பிக்கை
(Confidence & Self - Confidence):
                      நம்பிக்கையே நமது வாழ்வின் ஜீவ நாடி.நாம் வாழும் இந்த உலகில், இந்த நொடியில் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. ஆனாலும், நாம் ஏதோ ஒன்றின் அடிப்படையில் நமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது தான் நம்பிக்கை.
                          " Yesterday is History; Tomorrow is mystery; Today is the Gift- That's why we call it as Present"
             நாம் செய்யும் செயல்கள், மேற்கொள்ளும் முயற்சிகள் இவையனைத்தையும் நாம் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.நம்பிக்கையே நமது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாய் அமையும்.நம் வாழ்வில் வெற்றி இலக்கை அடைவதே நம் குறிக்கோள். ஆனால் சில சமயங்களில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். ஆனால் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது,தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து,அதை சரி செய்து கொள்ள வேண்டும். தோல்வியில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி இருக்கிறது. அது நமக்கு ஓர் படிப்பினையாகும். எனவே தான் " தோல்வியே வெற்றிக்கு முதல் படி"
என்று குறிப்பிடுகின்றோம். தோல்வி ஏற்பட்டாலும், முயற்சியைக் கைவிடாது தன்னம்பிக்கையுடன் உழைத்தால் நம் லட்சியத்தில் நமக்குவெற்றி கிட்டும்.
              "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது;எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்"
இதுவே கீதையின் சாரம்.
திட்டமிடல்(Planning):
        ஒரு செயலை நாம் செய்யத் தொடங்கும் முன், அதற்கான திட்டத்தை நாம் வகுக்க வேண்டும். திட்டம் என்பது செயலின் ஒரு பகுதி. திட்டமிடல் என்பது வெற்றிக்கான ஒரு வழிகாட்டி. எதிர்பாரா சவால்களை சந்திக்க நாமே நம்மை தயார்படுத்திக் கொள்ள திட்டமிடல் துணைப்புரியும். நம் உள்ளத்துக் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு புதிய தொடக்கம். திட்டமிடல் மூலம் உழைப்பு வீணாவது தவிர்க்கப்படும். முயற்சிக்கு உண்டான அதிகபட்ச பலன் கிடைக்கும். பேரிட்டோ என்ற அறிஞரின் கருத்துப்படி திட்டமிட்டு செய்யும் செயலில் 20% உழைப்பில் 80% காரியம் முடிந்து விடும். செயல் சிறியதானாலும், பெரியதானாலும் அதற்கேற்ப ஒரு திட்டம் கட்டாயத் தேவை.  திட்டம் தீட்டி வேலை செய்யும் பொழுது நமது செயல் விரைவாகவும் சிறப்பாகவும் அமைகிறது. ஒரு  திட்டமானது, நாம் தற்போது இருக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து, நாம் அடைய வேண்டிய இலக்கினை நோக்கி இட்டுச் செல்லும். முதலில் குறிக்கோளை மனதில் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த குறிக்கோளிற்கு ஏற்றவாறு திட்டம் தீட்ட வேண்டும்.நாம் தீட்டும் திட்டங்களிற்கு கால வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும்.அங்ஙனம் நிர்ணயம் செய்தால் தான் நம்முள் ஓர் உந்துதல் ஏற்படும். நிர்ணயம் செய்யப்பட்ட காலவரையரைக்குள் தீட்டிய திட்டத்தை செயலாற்றிட வேண்டும். கால வரையரையில்லாத திட்டங்கள் வெறும் கற்பனைகளாய் கரைந்து விடும்.செயல்வடிவம் பெறாத திட்டங்கள் பயனற்று விடும்.எனவே, திட்டமிட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட தெளிவான திட்டம் வெற்றிக்கு வழி வகுக்கும். ஒருகால், தோல்வியே சந்திக்க நேரிடினும் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். அவை நமக்கு   நல்ல அனுபவங்களாக, படிப்பினைகளாக அமைந்து நமக்கு வெற்றியைத் தேடித்தரும்.
உழைப்பு(HardWork):
              "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
  தாழாது உஞற்று பவர்"   
                                            - குறள் எண் : 620
      ஒரு செயலில் வெற்றி பெற வேண்டுமெனில் தன்னம்பிக்கையுடன் கூடிய திட்டமிட்ட உழைப்பு மிகவும் அவசியம். தளராத முயற்சியும், உழைப்பும் ஒரு மனிதனிடத்தில் இருந்தால் அவனுக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.நமது உழைப்பு எப்படிப்பட்டதாய் இருந்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும்.நாம் என்ன செய்கிறோம், அதை ஏன் செய்கிறோம், அதைச் செய்வதால் நமக்கு என்ன பலன், அதற்கு போதுமான உழைப்பை நாம் மேற்கொள்ளுகிறோமா என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.நம்மை விட உயர்ந்தவர்களின் செயல்புரியும் விதம், சிறப்பானதாக இருப்பின் அதை பின்பற்ற தயங்கக் கூடாது. வெற்றி பெற்றவர்களின் அறிவுரையை பெறவும் மறக்கக் கூடாது.  செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும்.
              ஈடுபாடு சிறிதுமின்றி,கட்டாயத்தின் பேரால் மேற்கொள்ளும் உழைப்பினால் வெற்றி கிட்டுவதில்லை.எந்தச் செயலைச் செய்தாலும் அதில் முழு மனதாய் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.அங்ஙனம் செய்யும் பட்சத்தில், நமக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.
          “ வெற்றி வேண்டுமா... போட்டுப் பாரடா எதிர் நீச்சல்...”
இதை மனதில் கொண்டு உழைப்போம்....வெற்றி மலர்களை மாலைகளாய் சூடுவோம்.


யாரால் இந்த உயர் நிலை ?

யாரால் இந்த உயர் நிலை ?

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது  உயர்வு

             பூவினது தண்டின் நீளமானது, அது நிற்கும் நீரின் அளவே ஆகும். அது போல், மாந்தரது உயர்நிலை என்பது, அவர்களது உள்ளத்தில் கொண்ட ஊக்கத்தின் அளவு என்று குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. ஊக்கம் என்பது என்ன? ஊக்கமென்பது நமக்குள்ளேயே தோன்றும் ஒருவித உந்து சக்தி. ஒரு செயலைச் செய்யத் தூண்டும் அல்லது வழிகாட்டும் ஓர் உள்ளுணர்வு.
                    அத்தகைய ஊக்கத்தினையும், உள்ளுணர்வையும் என்னுள் ஏற்படுத்தியவர்கள் என் தாய் தந்தையரே !!!

தந்தை மகற்காற்றும் நன்றி  அவையத்து
 முந்தி யிருப்பச் செயல்

       என்ற  குறளிற்கேற்ப, என் முன்னேற்றம், என் முயற்சிகள் அனைத்திற்கும் முன்னுதாரணமாய், வழிகாட்டியாய் விளங்குபவர்கள் என் தாய் தந்தையரே.அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த என்னை ஊக்கப்படுத்தி, உறுதிப்படுத்தி, என் பக்கத்துணையாய் நின்று, என் கல்வி, என் பணி அனைத்திலும் எனக்கு வழிகாட்டி, எனக்கோர் நல் வாழ்க்கைத் துணையைத் தேடித் தந்து, எனது இன்றைய உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு என்னைக் கொண்டு வந்தவர்கள் என் தாய் தந்தையரே.
      சுற்றியுள்ளோர் நம்மைப் பற்றி ஆயிரம் புறங்கூறினும், அவற்றை மனதில் கொள்ளாது, அவர்கட்கு எந்தவொரு தீங்கினையும் நினையாது, உலகத்து உயிர்களனைத்தும் நலமாய் வாழ வேண்டும் என்ற எண்ணமதை என் மனதில் பதித்தவர்கள் என் பெற்றோரே.

பகைவனுக் கருள்வாய் - நன்நெஞ்சே
 பகைவனுக் கருள்வாய்

என்ற சிந்தனையை மனதில் கொண்டு, அதன்படியே வாழ்ந்து, எங்கள் மனதிலும் அச்சிந்தனையை வளர்த்தவர்கள்.

    அன்னை தந்தையே
    ஆசானாய் வந்தமைந்தார்..
    கல்விக்கு மட்டுமல்ல -
    வாழ்க்கைக்கும் !!!
    உற்ற துணையாய்
    நம்பிக்கை விளக்காய்
    எம்மை வழிநடத்துகிறார்.

               ஓர் அழகான கூட்டுக் குடும்பமதில் எனக்கோர் வாழ்வைத் தேடிக் கொடுத்து, அந்த அழகு மாலையதில் என்னையுமோர் மலராய் இணைத்துப் பார்த்து மகிழ்பவர்கள் எம் தாய் தந்தையர். ஏட்டிலிருந்த எழுத்ததை உலகறியச் செய்யும் வண்ணம், என் எண்ணங்களையும், எழுத்துக்களையும் இணையத்தில் இணைத்திட எனக்கு வழிகாட்டி எனக்கு உற்சாகமூட்டும் என் மைத்துனி திருமதி. பி.ஆர்.லஷ்மி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
              இவர்களனைவரது அளவிடற்கரிய அன்பும் ஆதரவுமே எனது உயர் நிலைக்கு காரணமாய் நான் கருதுகிறேன்.

மகன்      தந்தைக்காற்றும்   உதவி இவன்     தந்தை
எந்நோற்றான் கொல்லெனும் சொல்

எனும் குறளிற்கேற்ப என்னைப் பெற்றவர்களுக்கு பெருமை தேடித் தர விழைகிறேன்.
-     தமிழ் முகில் பிரகாசம்.

தமிழ்த்தோட்டம்.காம் நடத்திய "அனுபவங்கள்  பகிர்தல் போட்டி" க்கான என்னுடைய பதிவு.