blank'/> muhilneel: தமிழ் வளர்ச்சியில் இணையம்

Friday, August 26, 2011

தமிழ் வளர்ச்சியில் இணையம்


தமிழ் வளர்ச்சிக்குக் கணினி, இணையத் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. இணையம் வந்த பிறகுதான் தமிழ்த் தகவல்கள் கடல்கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் பரவின. இணையம் உலகத்தை ஒரு சிற்றூராக்கியது.

எழுத்துருச் சிக்கல், தட்டச்சுப் பலகைச்சிக்கல் தொடக்கத்தில் இருந்தன. இதனால் பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன.

தமிழ்த் தட்டச்சுப் பலகை குறித்த சிக்கல் ஓரளவு தீர்ந்த நிலையிலும் எழுத்துருச் சிக்கல் இருந்து வந்தது. முகுந்து உள்ளிட்ட பொறியாளர்களின் முயற்சியால் ஒருங்குகுறி நுட்பத்தில் தமிழ்த் தட்டச்சுக்கு வழி பிறந்ததால் (2003) தமிழில் செய்தி பரவுவதில் இருந்த தடை நீங்கியது.

அச்சு இதழ்கள்போல தமிழ் மின்னிதழ்கள் எண்ணற்றவை தோன்றின. தமிழ்ப்படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும்பங்காற்றுகின்றன.

செய்திகளையும் வலைப்பூக்கள் முந்தித் தருகின்றன. கட்டற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் தன்னுரிமையை வலைப்பூக்கள் வழங்குவதால் வலைப்பதிவர்கள் பலர் எழுத வந்தனர்.
வலைப்பூக்களில் படைப்புகள் மட்டுமன்றி படங்கள், ஓவியங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் எனப் பல வடிவில் தமிழ்ச் செய்திகள் கிடைக்கின்றன. இதனால் உலகம் முழுவதுமிருந்து தமிழ்ப்படைப்புகளும் படைப்பாளிகளும் கிடைத்தனர். அச்சுவழி கிடைத்த தமிழ்ப்படைப்புகளில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள்தான் படிக்கக் கிடைக்கும் என்ற நிலை மாறி இணையத்தால் புதுப்புது எழுத்தாளர்கள் கிடைத்தனர். தமிழ்ப்படைப்புகளின் வாசகர்தளமும் விரிவடைந்தது.

இணையம் சார்ந்த பல கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு வழக்கத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக மின்னஞ்சல், மின்வருடி, மென்பொருள், வன்பொருள், படிமக்கோப்பு, பதிவர், வலைப்பதிவு, வலைப்பூ, சமூக வலைத்தளம், இணையக்குழு, விசைப்பலகை, திரை, மடிக்கணினி, மேசைக்கணினி, சுட்டி முதலான சொற்கள் பயன்பாடு நோக்கித் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளன. இச்சொற்களின் வருகையால் தமிழ்மொழியில் கலைச்சொல்வளம் மிகுந்து வருகிறது.

இணையத்தின் வரவால் அச்சு வடிவ அகரமுதலிகள் போல் மின் அகரமுதலிகள் உருவாயின. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, க்ரியா அகராதி, கதிரைவேற்பிள்ளை அகராதி, வின்சுலோ அகராதி, பெப்ரிசியசு அகராதி உள்ளிட்ட அகராதிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தில் தமிழ்சார்ந்த செய்திகள் பல இடப்பட்டிருந்தாலும் இன்னும் உள்ளிட வேண்டிய செய்திகள் பல உள்ளன. உள்ளிடப்பட்டவற்றையும் பயன்படுத்துவோர் எண்ணிக்கையளவில் குறைவாகவே உள்ளனர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் செய்ய இயலும், உரையாட இயலும் என்று தெரியாமல் கணினித்துறையில் பலர் இருப்பதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்கப் பல மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. தமிழ் இணையத்துக்கு எனப் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உத்தமம் என்ற அமைப்பு தமிழ்க்கணினி, இணையத் தொழில்நுட்பத்துக்கு என்று உலகெங்கும் பரவி வாழும் தொழில்நுட்பம் தெரிந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கணினித் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பும் தமிழ் கணினித்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது.

மதுரைத் திட்டம் என்னும் தளம் தமிழின் அரிய நூல்கள் 353-ஐ தம் பக்கத்தில் யாரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வைத்துள்ளது. தமிழ் மரபுச்செல்வங்களை வெவ்வேறு வடிவங்களில் தரும் வண்ணம் பல இணைய தளங்கள் தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன.

அவற்றுள் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தளம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் எனத் தமிழரின் மரபுச்செல்வங்களைத் தாங்கி அத்தளம் உள்ளது.

ஈழத்தமிழர்களின் நூல்களையும் இதழ்களையும் பாதுகாக்கும் நூலகம் என்ற தளம் அரிய நூல்களையும் இதழ்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிங்களப் பேரினவாதிகள் யாழ்ப்பாண நூலகத்தை அழித்த பிறகு இனித் தமிழர் அறிவுச்செல்வங்களை யாரும் அழிக்க இயலாதபடி நூலகம் தளத்தில் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
உலகெங்கும் எழுதும் வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் திரட்டிகள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி என்னும் பெயர்கொண்ட திரட்டிகள் தமிழ் எழுதும் பதிவர்களின் படைப்புகளை உலக அளவில் திரட்டித் தந்து தமிழ்ப்படைப்புகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ்ச்சொற்களை அகரவரிசையில் தரும் வண்ணம் மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன. தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. விரும்பியவண்ணம் எழுத்துகளை மாற்றித் தரும் எழுத்துமாற்றிகளும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன.

இணைய வளர்ச்சியால் தமிழ் மொழி பெயர்ப்பு புதிய வீச்சும் வேகமும் பெற்றுள்ளது. தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன.
இன்றைய அனைத்து அதிர்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக இருக்கும்.

 நன்றி: தினமணி 02.08.2011

No comments:

Post a Comment