blank'/> muhilneel: அன்பு பரிசு

Friday, February 14, 2014

அன்பு பரிசு

கணினியின் அருகில் வைக்கப்பட்டிருந்த கைபேசி " குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா " என்று இனிய குரலில் பாடியது. எடுத்துப் பார்த்தாள் கயல்விழி. கவின் பாரதியின் அழைப்பு என்பதை அறிந்து கொண்டவள், கைபேசியை அமைதிப் படுத்திவிட்டு சென்று விட்டாள். அவள் அலுவலகத்தில் முக்கியக் கூட்டத்தில் இருந்தபடியால், அழைப்பினை அவளால் ஏற்க இயலவில்லை. கூட்டம் முடிய அரை மணி நேரம் ஆயிற்று. முடிந்ததும் முதல் வேலையாக வந்து கவினை தொடர்பு கொண்டாள்.

எதிர்முனையில் கைபேசி அழைப்பு மணி அடித்தது. சில வினாடிகளில் கவின் தொடர்பில் வந்தான்.

" கவின் ! என்னப்பா பண்ற ? சாப்பிட்டாச்சா ? " என்றாள்  கயல்விழி.

" ம்ம் ... சாப்பிட்டாச்சு. நீ  லன்ச்  டைம்ல கூட பிஸியா என்ன ? இப்போ கூப்பிட்டாலும் போன் எடுக்க மாட்டேங்கற ?  " என்று கேட்டான் கவின்.

"இல்லைப்பா. ஒரு மீட்டிங். இப்போ  தான் முடிஞ்சது. முடிஞ்சதும் வந்து உன்னைக் கூப்பிடறேன். இனிமேல் தான் சாப்பிடணும் "

" ஓ ! அப்படியா ? சீக்கிரம் போய்  சாப்பிடு. சாயந்திரம் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன். பை ! " என்றபடி அலைபேசி இணைப்பைத் துண்டித்தான் கவின்.

 கவின் பாரதி - கயல்விழி . திருமணமாகி சில மாதங்களே ஆன இளம் தம்பதியர். திருமணமான சில  நாட்களிலேயே, இருவரும் அமெரிக்கா வந்து விட்டார்கள். இருவரும் கணினித் துறையிலேயே வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வாஷிங்டன் மாநிலத்தில் இருக்கும் சியாட்டில் நகரில் வசித்தனர். இருவரும் நல்ல வேலையில்,  நல்ல சம்பளத்துடன் உயர் பதவியில் இருந்தனர். 


இத்தனை காலம் பெற்றோரின் அரவணைப்பில் இருந்த கயல்விழிக்கு, இன்று அவர்களை விட்டு எங்கோ வெகு தொலைவு தாண்டி, நினைத்தாலும் ஓடிச் சென்று பார்க்கவோ கொள்ளவோ முடியாத இடத்தில் நாமிருக்கிறோமே ! என்றெண்ணி விக்கித்துப் போவாள். நண்பர்கள் உறவினர்கள் விசேடங்களுக்கு செல்ல முடியாது. இவற்றையெல்லாம் நினைக்கும் போது, அவளுக்கு இப்படி சம்பாதிப்பது அவசியமா என்று தோன்றும். மனது மிகவும் கஷ்டமாக இருக்கும். இப்படியான பொழுதுகளில் சில சமயம் கவினுடன் பேசினால் என்ன என்றெண்ணி கைபேசியில் அழைத்து அனைத்தையும் கொட்டி விடுவாள். மனம் இலேசாகிவிடும். ஆனால், பல வேளைகளில், இவளது அழைப்பிற்கு பதிலேதும் இருக்காது. ஏனெனில், கவின் அங்கு வேலை மும்முரத்தில் இருப்பான். அவன் அங்கு வேலையை முடித்துக் கொண்டு கயல்விழியை அழைக்கும் போது, இவள் இங்கு வேலையில்  மூழ்கியிருப்பாள். மாலையில் அலுவலகம் முடிந்து காரில் செல்லும் அந்த சில நிமிடங்களில், இவர்கள் இருவரும் காலை முதல் மாலை வரை பேச நினைத்ததை எல்லாம் பேசி முடிப்பார்கள். வீட்டிற்குச்  சென்று  களைப்புடன் சாப்பிட்டுவிட்டு  உறங்கவே சரியாக இருக்கும். எங்கு போய்  பேசுவது ?


வரவர, கயல்விழிக்கு இந்த வாழ்க்கை மீது வெறுப்பு தோன்ற ஆரம்பித்து விட்டது. என்ன ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை என்று அடிக்கடி அலுத்துக் கொள்ள ஆரம்பித்தாள். பேசாமல் சில காலம் இந்தியாவில் போய்  இருந்தால் என்ன என்றும் எண்ணினாள். ஆனால், அவள் வந்திருந்ததோ, ஒரு வருட கால வேலைக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில். நினைத்த நேரத்தில், அந்த ஒப்பந்தத்தையும் மீறிட முடியாது. எனவே, ஒருவாறு தன்னையே சமாதானப்படுத்திக் கொள்வாள்.


சோர்வு வந்து கயல்விழியின் மனதினை எட்டிப் பார்க்கும் வேளைகளில் எல்லாம்,  இயற்கையே அவளுக்கு ஆறுதலும் ஊக்கமும் ஊட்டும். பதினைந்தாம் மாடியில் இருக்கும் அவளது அலுவலகத்தில் இருந்து  பார்த்தால், சுற்றிலும் இருக்கும் மலைகளில் உறைபனி சூழ்ந்திருப்பது தெரியும். வெயில் சற்று உறைத்து  அடிக்கும்  போது, உறைந்திருக்கும்  பனி கரைந்து, கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் மலைகள் தெரியம். சுற்றிலும்  மதில்சுவர்  போல் அமைந்திருக்கும்  மலைக்கூட்டங்களைக் காண கொள்ளை  அழகாய்  இருக்கும். இயற்கையின்  எழிலில்  தனை மறந்து, தன்  சோர்வு  மறந்து  இலயித்து  நிற்பாள்  கயல்விழி. இயற்கை  அவளது  மனதுக்கு புது  தெளிவையும்  தன்னம்பிக்கையும்  ஊட்டும்.


இப்படியே கிட்டத்தட்ட ஓராண்டு காலம்  ஓடி  விட்டிருந்தது. கயல்விழிக்கும், அந்த  சூழலும் இடமும்  ஒருவாறு  பழக்கமாகி விட்டிருந்தது. ஒருவருட கால ஒப்பந்தம் முடியும் தருவாயில் இருந்தது.  அடுத்து அவளுக்கு பல புதிய வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால், அவளோ எந்த வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கவினும் அவளை கட்டாயப் படுத்தவோ, கட்டுப்படுத்தவோ இல்லை. அவளது  மனம்  போல்  விட்டுவிட்டான்.


முதல் மணநாள் வந்தது. அதனை விமரிசையாக கொண்டாட கவினும் கயல்விழியும் திட்டமிட்டனர். அந்த நகரிலிருக்கும் கணபதி கோவிலுக்கு சென்றுவிட்டு,  மகிழ்வுடன் அந்நாளைக்  கழிக்க எண்ணினர். திட்டமிட்டபடியே, எல்லா இடங்களுக்கும்  சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர். வீடு வந்து சேர்ந்ததும், கயல்விழிக்கு  இன்ப அதிர்ச்சி ஒன்று  காத்திருந்தது. ஆம் !!!


வீட்டினுள்  நுழைந்த  கவின்பாரதி - கயல்விழி  தம்பதியரை  ஆரத்தி எடுத்து  இருவரின் பெற்றோரும்  வரவேற்றனர். ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருசேர, கயல்விழி  என்ன  பேசுவதென்றே  தெரியாமல்  திக்குமுக்காடிப்  போனாள்.  கேக் வெட்டி  மண நாளைக்  கொண்டாடி, நண்பர்கட்கு  விருந்தும்  கொடுத்தனர். அவ்விடத்தில் மகிழ்ச்சி  தாண்டவமாடியது.


கவின்பாரதி கயல்விழியிடம் " நீ  கொஞ்ச நாள்  அம்மா அப்பா கூட இந்தியா போயிட்டு வா. நீ வந்ததுக்கு பிறகு புது ப்ராஜெக்ட் பாத்துக்கலாம். உனக்கு சர்ப்ரைஸ் தரணும்னு தான், நம்ம அம்மா அப்பா இங்க வர்ற விஷயத்த உனக்கு சொல்லல. இது தான் நான் உனக்கு தர்ற  முதல் மணநாள் பரிசு " என்று கவின் பாரதி சொல்லச் சொல்ல கயல்விழியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. 


அந்த மகிழ்ச்சி கண்களில் நீராய் கரைபுரண்டு ஓடியது. கண்ணீரும் புன்னகையும் ஒருசேர  கவினுக்கு நன்றி சொன்னாள்  கயல்.


 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவின் பாரதி கொடுத்த சர்ப்ரைஸ் போல, அன்பான நாளில் அன்பு பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

” இது தான் நான் உனக்கு தர்ற முதல் மணநாள் பரிசு " என்று கவின் பாரதி சொல்லச் சொல்ல கயல்விழியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளினாலும், இருவரும் பிரிய நேரிடுகிறதே என்று நினைக்கையில் எனக்கு என்னவோ மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாகவே உள்ளது.

நல்ல புரிதல் உள்ள தம்பதியினரைப்பற்றி நல்லதொரு அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Mythily kasthuri rengan said...

நான் ரெண்டு நாளாக கருத்து போட முயற்சித்தேன்!
சிஸ்டம்ல பிரச்சனையா /உங்க வலைபூவில் பிரச்சனையான்னு தெரியல?
இதுகூட வருதோ என்னவோ?
உங்க கதாபாத்திரங்களின் பெயர்களே எனக்கு பிடிச்சிருக்கு ,
கதையும் அருமை முகில் !

Tamizhmuhil Prakasam said...

@ Mythily kasthuri rengan

மற்ற நண்பர்களின் கருத்துரைகள் எல்லாம் பிரசுரமாயினவே.
என்ன பிரச்சனை என்று தெரியவில்லை சகோதரி.

தங்களது அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி.

தங்களது ஆதரவுக்கும் தொடர் ஊக்கத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

Post a Comment