blank'/> muhilneel

Thursday, August 15, 2013

சுதந்திர தின நல்வாழ்த்துகள் !!!





உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், நமது அடையாளம், நமது இனிய மொழிகளும், பண்பாடும் அன்றோ ? நம்மை ஒன்றிணைப்பது இந்தியன் என்ற மேன்மையான உணர்வே !

‘‘முப்பது கோடி முகமுடையாள்–உயிர்
மொய்ம்புறமொன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்’’

என்ற மகாகவி பாரதியாரின் கூற்றிற்கேற்ப வேற்றுமையில் ஒற்றுமை கண்ட  தேசம் நமது தேசம்.

"சுதந்திரம் நமது பிறப்புரிமை ! "

 எத்துனையோ இன்னலுக்குப் பின் அடைந்தோம், எத்துணையோ உயிர்களை தியாகம் செய்து அதற்கு ஈடாக பெற்றோம் தேசத்தின் சுதந்திரமதை. பலர் இன்னுயிர் ஈந்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரமதை காப்பது நம் கடமையென்பதை மனதில் இருத்தி, காத்திடுவோம் தேசத்தினை. தேசத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நம்மாலான பணிகளை மேற்கொள்வோம்.
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

கொடிப் பாடல் 

 

பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)
இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)
அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)
பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)
சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)




உலகிலுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் !!!

Tuesday, August 6, 2013

எனது முதல் பதிவின் சந்தோஷம் தொடர்கிறது !!! - தொடர் பதிவு

     

      நான் கணினியில் பதிவெழுதத்  துவங்கிய   நாட்களை  மீண்டும் எண்ணிப் பார்த்து  மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர அழைப்பு விடுத்த சகோதரி அம்பாளடியாள் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

         

        எனது கவிதைகளை சேமித்து வைப்பதற்காகவே வலைப்பூ ஒன்றைத் துவங்கினேன்.அது தான் முகிலின் பக்கங்கள். ஆரம்பத்தில், எனது வலைப்பூ இணையத்தில் எவர் வேண்டுமானாலும் பார்த்து படிக்குமாறு (Public) வைத்திருந்தேன். ஆனால், சில நாட்களிலேயே, எனது பதிவுகள் இணையத்தில் பல தளங்களில் பல்வேறு ஆசிரியர்களின் பெயர்களில் உலா வர, அவர்களுக்கு  மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு சிலர் நீக்கி விடுவர். சிலரோ, கண்டு கொள்ளாது நீக்க மாட்டார்கள். எதற்கு வம்பென்று, எனது கவிதை வலைப்பூவை  என் அழைப்பை பெறும் ஒரு சிலர் மட்டும் படிக்குமாறு ( Private ) மாற்றினேன்.மீண்டும், சிறிது நாட்களுக்கு முன்னர் தான் எனது வலைப்பூவை அனைவரும் படிக்கும்படி மாற்றியமைத்துள்ளேன்.

           

          நான் இரசித்த செய்திகள், கர்ம வீரர் காமராஜர் குறித்த  செய்திகள், புகைப்படங்கள், எனது அனுபவங்கள், சமையல் வலைதளங்களில் இருந்து நான் சமைத்து ருசித்த செய்முறை குறிப்புகள், எனது சிறுகதைகள், எனது கைவினை வேலைப்பாடுகள், ஓவியங்கள், உயிர் தகவல் தொழில்நுட்பம் (Bioinformatics) சார்ந்த வினா விடைகள், குறிப்புகள் ஆகியவற்றை இந்த  வலைப்பூவில் பகிர்ந்து வருகிறேன். 

 

                 ஒவ்வோர்  முறையும் புதிய பதிவொன்றை எழுதும் போதும், முதல் பதிவு எழுதும் போது ஏற்பட்ட ஆர்வமும், மகிழ்வும் குறையாது எழுதுகிறேன்.அதற்கு முழு காரணம், ஊக்கமும், உற்சாகமும், ஒவ்வோர் பதிவிற்கும் அன்பான  வாழ்த்தினை அளிக்கும் சக பதிவுலக நண்பர்களே காரணம்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

 

 

நன்றி ! நன்றி !! நன்றி !!!

இந்தப் பதிவினைத் தொடர

1. தேன் மதுரத் தமிழ்  -  சகோதரி  கிரேஸ் பிரதிபா

2.  மழைச்சாரல்  - சகோதரி ப்ரியா

3. கவரிமானின் கற்பனை காவியம்  -

 ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்.

திருமதி. பி .தமிழ் முகில் நீலமேகம்


Monday, August 5, 2013

என் கணினி அனுபவங்கள் - தொடர் பதிவு

            



                 எனது முதல் கணினி அனுபவங்களை எழுத அழைத்த தோழி இராஜலஷ்மி பரமசிவம் அவர்கட்கு என் நன்றிகள். இதோ என் முதல் கணினி  அனுபவங்கள்.

                                 முதன் முதலில் கணினியைப் பயன்படுத்தியது பள்ளியில்   எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான். அப்போதெல்லாம், கணினி ஏதோ விளையாடுவதற்காகவே பயன்படுத்தப் படுகின்ற ஒன்றாய் எனக்குத் தோன்றியது.ஏனோ, கணினி விளையாட்டுகளில் அவ்வளவாய் ஆர்வம் ஏற்படவில்லை. அதன் பின், பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்துப் படித்தபடியால், கணினி பற்றி அறிய அவ்வளவாக வாய்ப்பு கிட்டவில்லை.

                             கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில்  தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவு எடுத்துப் படித்தேன். அப்போதெல்லாம் ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். முதல் பாடம்  C Programming. Scanf, Printf, syntax இவையெல்லாம் புதிதாகவும், error, compilation,execution என புரியாத பலவும் வர, மனதில் பயமே கிளம்பியது. அதன் பின், அடுத்த செமஸ்டரில் C++, COBOL எல்லாம் பழகப் பழக எளிதாகி விட்டது.

                               ஒரு செமஸ்டர் விடுமுறையின் போது, ஜாவா ( JAVA) கற்றுக் கொள்ள  APTECH  Computers  பயிற்சி மையத்தில் சேர்ந்து, ஆறு மாத பயிற்சியில் பதிவு செய்து கொண்டேன். ஆனால், இருப்பதோ இரண்டு மாத விடுமுறை மட்டுமே. நான் விடுதியில் தங்கி படித்தபடியால், விடுமுறைக்குள் கற்றுக் கொண்டுவிட வேண்டும். அதற்கு அவர்கள், Crash Course ஆக இரண்டு மாதங்களிலேயே ஆறு மாதத்திற்கான பாடங்களை முடித்து விடுவதாகச் சொல்லி, சில ஆயிரங்களை கட்டணமாக வசூலித்து விட்டனர். வகுப்புகள் ஆரம்பமாயின. Java Complete Reference புத்தகத்தினைக் கையில் கொடுத்து, " இதிலுள்ள Programs Execute பண்ணிப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு சென்று விடுவார். வகுப்பு ஆரம்பிக்கும் நேரத்திலும், முடியும் போதும் மட்டுமே வருவார். சந்தேகங்களை ஒரு நாளும் நிவர்த்தி செய்யவும் மாட்டார். நாளை சொல்லித் தருகிறேன் என்று சொல்லுவதோடு சரி. அதன்பின், அதனை மறந்தே போய் விடுவார். அடுத்த நாள் கேட்டால், இன்றைய பாடம் முடிந்ததும் சொல்லித் தருகிறேன் என்பார். அன்றைய பாடம் முடியவும், அடுத்த batch மாணவர்கள் வரவும் சரியாக இருக்கும். அதன்பின், எங்கே சொல்லிக் கொடுப்பார்?  நிர்வாகத்திடம்  அவரைப் பற்றி கூற, அவரோ, நான் கற்றுக் கொள்வதில்லை என்று என் மீதே குறை கூற  "இனி பயிற்சி மையங்களை நாடுவது கூடாது. சொந்த முயற்சியில் கற்றிருந்தாலே நன்றாக கற்றிருக்கலாமோ" என்று தோன்ற, அப்போதே பயிற்சி மையங்களுக்கு முழுக்கு போட்டேன்.

                                    முதுகலை பட்டப்படிப்பின் போது தான் இணைய அறிமுகம். அதன் பின், மின்னஞ்சல் கணக்கு துவங்குவது பற்றி அறிந்து கொண்டேன்.  பாடங்கள் முழுவதுமே இணையத்தை பயன்படுத்தி கற்க வேண்டியவையாகவே இருக்கும்.

                                    கணினியில் தமிழில் எழுதலாம் என்பதை அறிந்தபோது தாங்கவொன்னா சந்தோஷம். Blogger வழங்கும் இலவச வலைப்பூ சேவை தனை பயன்படுத்தி கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறேன். அன்றாடம், புதிது புதிதாய் ஏதேனுமொன்றை கற்று வருகிறேன்.

                                
                                     
                                   

Sunday, August 4, 2013

மனக் கோயில்

            

             சாருமதிக்கு கோவிலுக்கு செல்வதென்றாலே ஓர்  புது உற்சாகம் அவளையறியாது வந்து தொற்றிக் கொள்ளும். அது ஏனென்று அவளுக்கே புரியாத புதிர் தான். இத்தனைக்கும் அவள் விழுந்து விழுந்து சாமி கும்பிடுபவளும்  இல்லை. எங்குமே கிட்டாத அளவிலா மனமகிழ்வும், நிறைவான மனமும் அவளுக்கு கோவிலில் கிட்டியது. அர்ச்சனை, அபிஷேகம், நன்கொடை என்று எந்த தெய்வத்திற்கும் அவள் செய்தது கிடையாது. தெய்வ தரிசனத்தில் மனநிம்மதி அடைந்தாள். கோவிலில் பூஜை வேளையின் போது தீப ஆராதனை ஒளியில் இறைவன் அவளைக்கண்டு புன்னைகைப்பது போலவே உணர்வாள்.

              தனக்கும் இறைவனுக்குமான நெருக்கத்தினை அவள் தன் தாய் நாட்டினை விட்டு வெளி தேசத்திற்கு வந்ததும் தான் உணர்ந்தாள். இங்கும் கோவில்கள் இருக்கிறதென்று அறிவாள். ஆனால்,  எங்கு இருக்கிறதென்பது தெரியாது. இணையத்தில், கூகுள் வரைபடங்களின் உதவியோடு, தாம் இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கேனும் கோயில்கள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்த்தாள். அவளது அதிர்ஷ்டம், அவர்கள் இருந்த பகுதியில் ஓர் அனுமார் கோவில் இருந்தது. வார இறுதி நாட்களில் கடைகளுக்குச் சென்று, அந்த வாரத் தேவைக்கான பொருட்களை வாங்கி வரவே சரியாக இருக்கும். வார நாட்களில் ஏதேனும் ஓர் நாள் விடுமுறை கிட்டினால் நன்றாய் இருக்குமே என்று எண்ணினாள். அவளது எண்ணம் விரைவில் நிறைவேறியது. அந்த நாள் வெள்ளிக் கிழமையாய் அமைந்ததில் அவளுக்கு இரட்டிப்பு சந்தோசம்.
    
            கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர். மிகப்பெரிய பரப்பளவில் இருக்கும் ஓர் வணிக வளாகத்தில்  ஒரு பகுதியில் அந்தக் கோயில் அமைந்திருந்தது.உள்ளே சென்று, ஆஞ்சநேயரை கண்குளிர தரிசித்தனர். வெண்ணெய்க் காப்பு  அலங்காரத்தில், புன்னகை தவழ வீற்றிருந்தார்  ஆஞ்சநேயர். பூஜை வேளை நெருங்க நெருங்க மக்கள் கூட்டமாய் வந்தனர். வந்திருந்த மக்கள் பலரும் மலர் மாலைகள், வண்ண வண்ண புஷ்பங்கள் எல்லாம் கொண்டு வந்திருந்தனர். இதைக் கண்ட சாருமதி, " இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகிய வண்ண மலர்கள் கிடைத்தன? " என்று எண்ணினாள். ஏனெனில், அது குளிர் காலம். மரங்களனைத்தும் இலைகளை உதிர்த்து விட்டு, கிளைகள் மட்டும் நெடிதுயர்ந்து நின்றிருந்தன.

                         தீப ஆராதனை முடிந்து அனைவருக்கும் தீப தரிசனம் காட்டப்பட்டது. தீபத்தினை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். அதன் பின், அவளுக்கு அருகிலிருந்த அனைவரும் தீப ஆராத்தியை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர்.  காணிக்கை செலுத்த எண்ணியவளாய் சாருமதி, கைப்பையை திறந்தாள். ஆனால், அது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளாய் நிரம்பியிருந்தது. கைப் பையை மூடிவிட்டு, தீபத்தினை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். அதன் பின், இறைவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள், அனைவருக்கும் பிரசாதமாய் வழங்கப் பட்டது.அர்ச்சகர்  இவர்களுக்கு பிரசாதம் கொடுக்கும்போது ஏதோ, வேண்டா வெறுப்பாக  கொடுத்தது போல உணர்ந்தாள் சாருமதி. அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

                      அன்னையின் மடியில் தங்குதடையின்றி தவழ்ந்தாடும் கிள்ளை போல், சுதந்திரமாய் தன் மன எண்ணங்களை, தன்  இன்ப துன்பங்களை, வெற்றி தோல்விகளை இறைவனிடம் பகிர்ந்து வந்தவளுக்கு, அந்தச் சூழலும், சுற்றமும்  அவளை  ஒதுக்கி வைத்து உதாசீனப் படுத்துவது போல் தோன்றியது. முதல் முறையாக அவள், கோவிலில் ஏதோ அந்நியப் படுத்தப்பட்டவள் போல உணர்ந்தாள்.

" இறைவா ! உன்னை நான் என் மனக் கோயிலில் வைத்தே ஆராதிக்கிறேன். உன் பூரண அருளை எனக்கு அளிப்பாய் !!!"  என்று அவளது மனம் அரற்றிற்று. 


Saturday, August 3, 2013

பிரம்ம கமலம்




நாம் பலவகையான தாவரங்களை அறிவோம். வித்து (Seeds) தாவரங்கள், கிழங்கிலிருந்து (tubers,bulbs ) உற்பத்தியாகும் தாவரங்கள்,வெட்டி வைக்கும் தண்டுகளில் இருந்து புதிய கிளைகளும் இலையும் தளைக்கும் தாவரங்கள் (Striking / Cloning) என்று பலவகைத் தாவரங்களும் உண்டு. ஓர் இலை மட்டும் கூட ஓர் பெரிய செடியை உருவாக்கும் ஆற்றல் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட ஓர் தாவரம் தான் நிஷாகந்தி என்றழைக்கப்படும் பிரம்ம கமலம்.

இத்தாவரத்தின் அறிவியல் இருசொற் பெயர்  ( Binomial Nomenclature)  Epiphyllum oxypetalum  என்பதாகும்.

இம்மலர்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், பிரம்ம கமலம் என்றும், மலையாளத்தில் நிஷாகந்தி  என்றும், ஆங்கிலத்தில்   Queen of the Night, Night-blooming Cereus, Large-flowering Cactus, Sweet-scented Cactus, Vanilla Cactus, Lunar Flower, Large Blooming Cereus, Large flowered torch thistle, Large-flowered Night Cactus என்று பல மொழிகளில் அழைக்கப்படுகிறது.

அறிவியல் வகைப்பாடு

Kingdom : Plantae
(unranked) : Angiosperms
(unranked) : Eudicots
(unranked) : Core Eudicots
Order : Caryophyllales
Family : Cactaceae
Genus : Epiphyllum
Species : E.oxypetalum

நீண்டு சற்று அகலமானதாக இருக்கும் இலைகளைக் கொண்டது இத்தாவரம். இலையினைப் பாதியளவு மண்ணுள் புதையுண்டு இருக்குமாறு  நட்டு வைத்துவிட்டால், இலையே புதிதாக வேர்விட்டு மண்ணில் பதிந்து கொள்ளும். அதன் பின், இலையே அத்தாவரத்தின் தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டுகளில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அதே கணுக்களில் தான் மொட்டுக்கள் உருவாகி கண்கவர் மலர்களாய் மலர்ந்து  மணம் வீசும்.

 
இம்மலர்களுக்கு  உரிய தனிச் சிறப்பு என்னவெனில், இவை இரவில் தான் மலரும்.இம்மலர்களின் வாசனை அபாரமானதாக இருக்கும். இத்தகைய அபார வாசனைக்கு காரணியான வேதிப் பொருள்  Benzyl Salicylate என்பதாகும். 


மலர்ந்து சிலமணி நேரங்களே இம்மலர்கள் மணம் பரப்புகின்றன. அதன்பின் வாடிப் போய்விடுகின்றன.இம்மலர்கள் வாடாமல்லி, மஞ்சள், சிகப்பு வெள்ளை,ஆரஞ்சு என்று பல்வேறு நிறங்களிலும் இருக்கின்றன.அனைத்து மலர்களும் இரவிலேயே மலர்கின்றன.


 





ஒரு செடியில் அதிகபட்சமாக நான்கு முதல் ஐந்து மலர்கள் வரை இருக்கும். சில சமயங்களில் அதிசயத்தக்க வகையில் , பத்து முதல் பதினைந்து மலர்கள் வரையிலும் இருக்கலாம்.அனைத்தும் ஒரே நேரத்தில் மலர்ந்து , நம்மை வாசனையால் கிறங்கடிக்கலாம். 

படங்களுக்கு நன்றி.
1. jaghamani.blogspot.com
2. indiastudychannel.com
3. flikr.com
4.digplanet.com
5.parayilat.blogspot.com