யாதும் ஊரே
’யா வை யு ம்’ கே ளி ர் !
சிறுகதைத்தொடர்
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
அந்தக் கண்ணாம்பாக்கிழவி அந்த
அனுமார் கோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட திண்ணைக்குக்
குடிவந்து சுமார் அறுபது வருடங்கள் இருக்கும். கோடையோ, குளிரோ, காற்றோ,
மழையோ இரவில் ஒரு சாக்குப்படுதாவுக்குள் முடங்கிக்கிடப்பாள். விடியற்காலம்
எழுந்து தரையெல்லாம் பெருக்கி, சாணிதெளித்து மெழுகி, அழகாகக்கோலங்கள்
போட்டு விடுவாள்.
பகலில் பூக்களும், துளசியும்
யார்யாரோ பறித்துவந்து தருவதும், இவள் அவற்றை அழகாகத் தொடுத்துக்
கோயிலுக்குக் கொடுப்பதும், வாடிக்கையாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருபவை.
எதிர்புறச்சந்தில் உள்ள
பொதுக்கழிப்பிடம், குளியல் அறை முதலியவற்றில் இந்தக்கிழவிக்கு மட்டும்
கட்டணம் ஏதுமின்றி இலவச அனுமதி உண்டு. கோயிலுக்கு நெருக்கமாகவே ஒரு சைவ
உணவகம் உள்ளது. கையில் காசு ஏதும் கிடைத்தால் இரண்டு இட்லி
வாங்கிக்கொள்வாள் இலவச சட்னி சாம்பாருடன். காசு இல்லாவிட்டால் பட்டினியுடன்
கோயில் குழாயில் வரும் தண்ணீரை மட்டுமே அருந்தி மகிழவும் பழகிப்போனவளே.
பக்கத்து கிராமம் ஒன்றில்
பிறந்து, ஏழ்மையில் ஊறி, பருவ வயதில் மற்றொரு கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு,
தாய்மை அடைய வாய்ப்பில்லை என்ற காரணம் கூறிக் கணவனாலும் கைவிடப்பட்டவள்.
நிர்கதியாக அன்று கால்போன போக்கில் நடந்து வந்து, புலம் பெயர்ந்து, இந்த ஊரில் இங்குத்தனியே ஓர் அரசமரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரிடம், தன் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துவிட்டு, புடவைத்தலைப்பில் சுற்றி மறைத்து எடுத்து வந்திருந்த பூச்சி மருந்து பாட்டிலின் மூடியைத்திறந்து, பிள்ளையார் முன்பு வைத்துவிட்டு, கடைசியாக ஒருமுறை விழுந்து கும்பிட்டாள்.
நிர்கதியாக அன்று கால்போன போக்கில் நடந்து வந்து, புலம் பெயர்ந்து, இந்த ஊரில் இங்குத்தனியே ஓர் அரசமரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரிடம், தன் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துவிட்டு, புடவைத்தலைப்பில் சுற்றி மறைத்து எடுத்து வந்திருந்த பூச்சி மருந்து பாட்டிலின் மூடியைத்திறந்து, பிள்ளையார் முன்பு வைத்துவிட்டு, கடைசியாக ஒருமுறை விழுந்து கும்பிட்டாள்.
வாழத்தான் வழியில்லை என்று
புலம் பெயர்ந்து இவ்விடம் வந்தவளுக்கு சாகவும் வழியில்லாமல் போனது. எல்லாம்
ஏதோ தெய்வ சங்கல்ப்பம் என்று நினைத்துப் பேசாமல் அந்த மரத்தடியிலேயே தங்க
ஆரம்பித்தாள்.
இவள் இந்த ஊருக்கு வந்த நேரம்,
வெயிலிலும், மழையிலும் தவித்து வந்த அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு, ஊர்
மக்கள் ஒன்றுகூடி வசூல் செய்து, சிறியதாகக் கோயில் ஒன்று எழுப்பத்
தீர்மானித்தனர். அன்றைய பால்ய வயதுக்காரியான கண்ணாம்பாளும் கோயில் கட்டட
வேலைகளில் தன்னால் ஆன சரீர ஒத்தாசைகளும், உதவிகளும் செய்து தந்து,
அந்தப்பகுதி மக்களுக்குப் பரிச்சயம் ஆனாள்.
அந்த அரசமரப்பிள்ளையாரைச்சுற்றி
அந்த நாளில் மிகவும் கீழ்த்தட்டு மக்களே அதிகம் வசித்து வந்தனர்.
கைரிக்ஷா வண்டிகள், கைவண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், ஒருசில
சைக்கிள் ரிக்ஷாக்கள், ஒரே ஒரு ஆட்டோ ரிக்ஷா, செருப்புத்தைக்கும்
தொழிலாளிகள், ரோட்டோரத்தில் கடைபோடும் காய்கறிக்காரர்கள், ஆங்காங்கே
டீக்கடைகள், சவரக்கடைகள், சலவைத் தொழிலாளிகள் மற்றும் அவர்கள் வளர்க்கும்
கழுதைகள், தெரு நாய்கள் என அந்தப்பகுதியே ஒரு மாதிரியாக மிகவும் எளிமையாக
ஆரவாரம் ஏதுமின்றிக் காட்சியளித்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள்
நேர்மை, உண்மை, மனிதாபிமானம், பரோபகாரம், தர்ம சிந்தனை முதலியன
நிறைந்திருந்த ஓர் அருமையான சூழலுடன் விளங்கியது அந்தப்பகுதி.
இன்றைய நாகரீகத்தின் பாதிப்புத்
தலையெடுக்காத காலம் அது. கண்ணாம்பாளுக்கும் பருவ வயதானபடியால், அங்குள்ள
சற்றே வசதிபடைத்த ஒருசில வீடுகளில், தன் உடலுழைப்பைக்கொடுத்து ஏதோ கொஞ்சமாக
சம்பாதித்து, மிகவும் கெளரவத்துடனும் மானத்துடனும் தன் வயிற்றுப்பிழைப்பை
கழித்து வந்தாள்.
பிள்ளையார் கோயில் பக்கத்திலேயே ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்துவந்த ஒரு கிழவியுடன் சிநேகம் வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் அங்கேயே அந்தக்கிழவிக்குத் துணையாகப் படுத்துக்கொண்டு காலம் தள்ளி வந்தாள்.
பிள்ளையார் கோயில் பக்கத்திலேயே ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்துவந்த ஒரு கிழவியுடன் சிநேகம் வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் அங்கேயே அந்தக்கிழவிக்குத் துணையாகப் படுத்துக்கொண்டு காலம் தள்ளி வந்தாள்.
ஓரிரு வருடங்கள் இவ்வாறு
போனபோது, ஒருநாள் அந்தப்பெரிய மரத்தில், குதித்துக்கும்மாளம் அடித்த
குரங்குகளில் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்து பிள்ளையார் கோயில்
வாசலுக்கு முன்புறம் தன் உயிரை விட்டுவிட்டது.
”தான் கொண்டுவந்திருந்த விஷபாட்டிலைத் தட்டிவிட்டு அன்று தன் உயிரைக்காப்பாற்றிய குரங்காக இருக்குமோ” என நினைத்த கண்ணாம்பாளுக்கு, கண்களில் கண்ணீர் வந்தது. இந்தக்குரங்கின் மரணம், அவள் மனதை மிகவும் பாதிப்பதாக இருந்தது.
அங்கிருந்த
கைரிக்ஷாக்காரர்களும் மற்ற ஏழைத்தொழிலாளிகளுமாகச் சேர்ந்து, ஒரு வேட்டியை
விரித்து, அதில் அந்த உயிர்நீத்த குரங்கைப்படுக்க வைத்து, சிறிய மலர்மாலை
ஒன்று வாங்கிவந்து அதன் கழுத்தில் அணிவித்து, குங்குமத்தைக்குழைத்து அதன்
நெற்றியில் நாமம் இட்டு, அதன் இறுதிக்கடனுக்குப் பணம் வசூல் செய்தனர்.
பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே ஒரு குழிவெட்டி, அந்தக்
குரங்கைப்புதைத்து, புதைத்த இடத்தின் மேல், அந்தப்பிள்ளையாருக்கு சமமாக,
ஓர் அனுமன் கோயிலும் எழுப்ப ஆரம்பித்தனர்.
தொடரும்
அனுமன் கோயில்
கட்டப்படும்போதும், தன்னால் ஆன திருப்பணிகள் [சரீர ஒத்தாசைகள்]செய்து உதவிய
கண்ணாம்பாளை, ஒரு காவலாளிபோல, அந்தக்கோயில் வளாகத்தினுள்ளேயே தங்கிக்கொள்ள
அவ்வூர்ப் பொதுமக்கள் அனுமதி வழங்கினர்.
தீபாவளி போன்ற பண்டிகை
நாட்களில் ஒருசில வசதி படைத்த பக்தர்கள், கண்ணாம்பாளுக்கும் உடுத்திக்கொள்ள
புது வஸ்திரங்கள் வாங்கித்தந்து, இனிப்புகள் பலகாரங்கள் முதலியன தந்து
உதவுவதுண்டு. கண்ணாம்பா தானாக யாரையும் எதுவும் கேட்பது கிடையாது.
கோயிலுக்கு தன்னால் முடிந்த சேவைகள் செய்வதிலேயே ஆத்ம திருப்தி அடைந்து
வந்தாள்.
வாழவழியின்றி அகதியாக, அனாதையாக
வந்தவளுக்கு, அந்தப்பிள்ளையார் மற்றும் அனுமார்சாமியின் கருணையினால்,
அவளும் மிகவும் பாதுகாப்பாக அந்தக் கோயிலிலேயே தங்கிக்கொள்ள ஒரு ஆதரவும்,
புகலிடமும் அளிக்கப்பட்டதில் அவளுக்கும் திருப்தியே.
தங்க இடம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த அனுமாரும், பிள்ளையாரும் அவளைக் கைவிடாமல், பட்டினி போடாமல் காத்தும் வந்தனர்.
அங்கிருந்த குருக்கள் அவர்களின் தயவால், ஒண்டிக்கட்டையான இவளின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை உத்தேசித்து, அவ்வப்போது அவள் வயிற்றைக் கழுவிக்கொள்ள தேங்காய் மூடிகள், வாழைப்பழங்கள், வடைகள், சர்க்கரைப்பொங்கல், சுண்டல், தயிர்சாதம், கொழுக்கட்டை என அவ்வப்போது எதாவது பிரஸாதமாக அவளுக்கும் கிடைத்து வந்தன.
அங்கிருந்த குருக்கள் அவர்களின் தயவால், ஒண்டிக்கட்டையான இவளின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை உத்தேசித்து, அவ்வப்போது அவள் வயிற்றைக் கழுவிக்கொள்ள தேங்காய் மூடிகள், வாழைப்பழங்கள், வடைகள், சர்க்கரைப்பொங்கல், சுண்டல், தயிர்சாதம், கொழுக்கட்டை என அவ்வப்போது எதாவது பிரஸாதமாக அவளுக்கும் கிடைத்து வந்தன.
தனக்குக்கிடைக்கும் இந்த
தின்பண்டங்களைத் தான் மட்டுமே சாப்பிடாமல், தன் குழந்தைகள் போன்ற
மாருதிக்கும், அனுமந்துவுக்கும் என ஒதுக்கித் திண்ணையின் ஒரு ஓரத்தில் மூடி
வைத்திருப்பாள்.
இரவு நேரங்களில் எங்கேயோ
போய்த்தங்கும் அந்த குறிப்பிட்ட இரு குரங்குகள் மட்டும், காலை சுமார் பத்து
மணியளவில், கண்ணாம்பாக்கிழவியின் திண்ணைக்கு ஆஜராகி, உரிமையுடன் அந்த மூடி
வைத்திருக்கும் திண்பண்டங்களைத் திறந்து எடுத்துச்சாப்பிட்டு விட்டு,
திரும்பச்செல்லும் சமயம் கண்ணாம்பாளின் கைகளைத்தொட்டு (நன்றி
தெரிவிப்பதுபோல) தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
காலம் மாறமாற காட்சிகளும் மாறுவதுபோல, இப்போது அந்தக்கோயிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் மிகவும் நாகரீகமாகப்போய்விட்டன.
ஒரே குப்பை மேடாகத் தெரு
நாய்களும், பன்றிகளும் கூட்டம் கூட்டமாகப்படுத்திருந்த இடங்களும்,
திறந்தவெளிக் கழிப்பிடமாக இருந்த அசிங்கமான ஒதுக்குப் புறப்பகுதிகளும்,
அவற்றைத்தாண்டி இருந்த விளை நிலங்களும், இன்று ப்ளாட் போடப்பட்டு, பல்வேறு
அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிப்போய்விட்டன.
மனைகளின் மதிப்பும் விலைகளும் பலமடங்கு அதிகமாகி விட்டன. வாகனங்களின் வருகை மிகவும் அதிகரித்து, அமைதியாக இருந்த அந்தப்பகுதி இப்போது ஒரே இரைச்சலாகவும், பரபரப்பாகவும் மாறி விட்டது.
மனைகளின் மதிப்பும் விலைகளும் பலமடங்கு அதிகமாகி விட்டன. வாகனங்களின் வருகை மிகவும் அதிகரித்து, அமைதியாக இருந்த அந்தப்பகுதி இப்போது ஒரே இரைச்சலாகவும், பரபரப்பாகவும் மாறி விட்டது.
புதுப்புது மனிதர்கள்
நடமாடத்தொடங்கி விட்டனர். ரோட்டிலிருந்த கைவண்டிகள், ரிக்ஷாக்கள், குதிரை
வண்டிகள், மாட்டு வண்டிகள் எல்லாம் காணாமல் போய், மோட்டர் பைக்குகள்,
கார்கள், ஆட்டோக்கள், சிற்றுந்துகள், பேருந்துகள் என கணக்கிலடங்காமல்
ஓடத்துவங்கின.
ரோட்டில் இப்போது காலாறக்
கைவீசி காற்று வாங்கியபடி நடக்க முடியவில்லை. எங்கும் ஒரே கூட்டமாக
இருந்தது. பெரிய பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் என
கடைகளாக இல்லாமல் கடல்களாகக் காட்சியளித்தன. பெரும்பாலான குடிசைகள் எல்லாம்
அகற்றப்பட்டு விட்டன. ரோட்டோரக்கடைகளும், டீக்கடைகளும், சிறு
வியாபாரிகளும் போன இடம் தெரியவில்லை.
மரத்திலிருந்து தவறி விழுந்து
இறந்துபோனக் குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய
நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள்.
இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது.
இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது.
சாலை விபத்தில்
இறப்பவரைச்சுற்றி கூட்டம் போட்டு போக்குவரத்துக்கு நெருக்கடியை
ஏற்படுத்தக்கூடாது; போலீஸ்காரர்கள் வந்து போட்டோ படம் எடுத்து, உயிர்
இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும்
வரை, யாரும் விபத்தில் அடிபட்டுக்கிடப்பவரைத் தொடக்கூடாது என்று ரொம்பவும்
சட்டம் படித்தவர்கள் போல சொல்லித்திரியும் படிப்பறிவு பெற்றவர்களைப்
பார்க்கும் கண்ணாம்பாளுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.
“யார் பெற்ற பிள்ளையோ” என்று துடிதுடித்துப்போவாள் ... அது போன்ற விபத்துக்களைப் பார்க்கும்போது.
அங்கு கோயிலுக்குப்
பக்கத்திலேயே உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தினமும்
கோயிலுக்கு வந்து போவதுண்டு. குறிப்பாக தேர்வு எழுதப்போகும் போது
இந்தக்கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டுப் போவதுடன்,
இந்தக்கண்ணாம்பாக் கிழவியையும் வணங்கி ஆசிபெற்றுச் செல்வது வழக்கம்.
அவ்வாறு தன்னிடம் வரும் ஒவ்வொரு குழந்தைகளையும் தொட்டுத்தடவி, “நல்லாப்படியுங்க, நிறைய மார்க் வாங்குங்க” என ஆசி கூறி வாழ்த்தி அனுப்பி வைப்பாள்.
கண்ணாம்பாளுக்கு, இப்போது
சுமார் எண்பது வயது இருக்கும். நாளுக்கு நாள் உடம்பில் தெம்பு குறைந்து
வருகிறது. தான் இதுவரை சேர்த்து வைத்துள்ள சொற்பத்தொகையில்,
அந்தப்பிள்ளையாருக்கு ஒரு அர்ச்சனையும், அந்த அனுமார்சாமிக்கு ஒரு
வடைமாலையும் போட வேண்டும் என்ற தன்னுடைய வெகுநாள் ஆசையை அந்தக்கோயில்
குருக்கள் ஐயாவிடம் கூறினாள்.
“பேஷா, நாளைக்கே செய்து
விடலாம், கண்ணாம்பா; உன்னால் முடிந்ததைக்கொடு போதும். மீதியை நான் போட்டு
ஜோராகச் செய்து கொடுத்து விடுகிறேன்” என்றார் அந்தக்குருக்கள்.
தொடரும்
”நாளை காலை பத்து மணிக்கு என் குழந்தைகள் மாருதியும், அனுமந்துவும் வரும் சமயம் பிரஸாதம் கிடைப்பது போலச் செய்துகொடுங்க சாமீ” என்று
சொல்லித் தன் சுருக்குப்பையிலிருந்த பணத்தையெல்லாம் ஒரு மூங்கில் தட்டில்
கொட்டி, அவரை விட்டே மொத்தம் எவ்வளவு தேறும் என்று பார்க்கச்சொன்னாள்,
அந்தக்கிழவி.
எண்ணிப்பார்த்தவர் “இரண்டாயிரத்து முன்னூற்று மூன்று ரூபாய் உள்ளது” என்றார்.
தான் யாரிடமும் யாசகம் ஏதும்
கேட்காதபோதும், கோயிலுக்கு வரும் பெரும்புள்ளிகள் சிலர் தன் மேல் அன்பு
காட்டி அவர்களாகவே மனமுவந்து அளித்துச்சென்ற தொகை, பல வருடங்களாக சேர்ந்து
இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகியிருப்பது, கண்ணாம்பாளுக்கு மிகவும்
ஆச்சர்யமாக இருந்தது.
“அதிலிருந்து
வடைமாலைக்கும், அர்ச்சனைக்குமாக ரூபாய் முன்னூற்று மூன்றை
எடுத்துக்கொள்ளுங்கள்; மீதி இரண்டாயிரத்தைத் தாங்களே என் கடைசிகாலச்
செலவுக்கு வைத்துக்கொண்டு, அனாதையான எனக்கு ஏதாவது ஆச்சுன்னா,
’கோவிந்தாக்கொள்ளி’ போட்டு, என்னை நல்லபடியாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து
விடுங்க” என்றாள் கண்ணாம்பாள் கிழவி.
“அதெல்லாம் ஒண்ணும்
கவலையேபடாதே; பணத்தை வேண்டுமானால் நான் பத்திரமாக என்னிடம்
வைத்துக்கொள்கிறேன்; எப்போதாவது செலவுக்குப்பணம் வேண்டுமானால் என்னிடம்
தயங்காமல் கேட்டு வாங்கிக்கோ; பிள்ளையாருக்கும், அனுமாருக்கும் இவ்வளவு
நாட்கள் இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்திருக்கும் நீ, நூறு வயசுவரை
செளக்யமாய் இருப்பாய்; மனதை மட்டும் தளரவிடாமல் தைர்யமாய் வைத்துக்கொள்” என்றார் குருக்கள்.
தான் பெற்ற குழந்தைகள் போல ரசித்து ருசித்து சாப்பிடும் அவற்றைப் பார்த்த கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி.
அப்போது குருக்களுக்கு
தபால்காரர் கொடுத்துச்சென்ற பதிவுத்தபால் ஒன்றைப் பிரித்து, குருக்கள்
உரக்கப்படிக்க, கிழவியும் அவர் அருகே நின்றபடி, அதிலிருந்த விஷயங்களைக்
கேட்டுக்கொண்டிருந்தாள்.
‘போக்குவரத்துக்கும்,
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தற்சமயம் மிகவும் இடையூறாக
முச்சந்தியில் உள்ள அந்தக்கோயில்கள், ஆக்கிரமிப்புப்பகுதியில் எந்தவித
முன்அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டவை என்று, நகர முனிசிபல் கார்பரேஷன்
முடிவு செய்து விட்டதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் அந்தக் கோயில்களைத் தரை
மட்டமாக இடிக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற்று விட்டதாகவும்,
இடித்தபின் போக்குவரத்துக்கான பாதை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெறும்
என்றும், இது ஒரு தகவலுக்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ் என்று அறியவும்’ என்று எழுதப்பட்டிருந்த விஷயம், குருக்களால் வாசிக்கப்பட்டு, கண்ணாம்பாக்கிழவியால் காதில் வாங்கிக் கொள்ளப்பட்டது.
தனக்குத்தெரிந்தே, தன்
பார்வையில், அந்த நாளில் கட்டப்பட்டதும், ஆதரவற்ற அனாதையான தனக்கு இன்று
வரை ஒரு பாதுகாப்பு அளித்து வருவதுமான அந்தக்கோயில்கள்,
இடிக்கப்படப்போகின்றன என்ற செய்தி, அந்தக்கிழவிக்குத் தலையில் இடி
விழுந்தது போல ஆனது.
இதைக்கண்ட மாருதியும் அனுமந்துவும் கதறி அழுதன.
கோயில் கதவுகள் சாத்தப்பட்டன. அன்றைய பூஜைகள் அத்துடன் நிறுத்தப்பட்டன.
கிழவியின் இறுதி யாத்திரைக்கு அவள் விருப்பப்படியே அந்தக்குருக்கள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
கண்ணாம்பாள் கிழவியின் திடீர் மறைவுச்செய்தி காட்டுத் தீபோல அந்தப்பகுதி மக்களுக்குப்பரவியது.
அந்தக்கிழவி அனாதை
இல்லையென்பதுபோல அந்தப்பகுதி மக்களும், ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளும்,
திரளாகக்கூடியது மட்டுமின்றி, அனுமந்துவும் மாருதியும் மரத்திலிருந்த
தங்கள் குரங்குப் பட்டாளத்தையே கூட்டி வந்து, கிழவியின் இறுதி ஊர்வலத்தில்,
சுடுகாடு வரை பின் தொடர்ந்து வந்தது, அந்தப்பகுதி மக்களை மிகவும்
வியப்பில் ஆழ்த்தியது.
oooooOooooo
எனது விமர்சனம்
யாதும்
ஊரே... யாவரும் கேளிர் என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு. யாதும் ஊரே
யாவையும் கேளிர் என்று கதைக்கு தலைப்பிட்டு, ஆசிரியர் உலகில் உள்ள சகல
ஜீவராசிகளுக்கும், ஓரறிவு ஜீவராசி துவங்கி, ஆறறிவு ஜீவராசி வரை,
அனைத்திற்கும் ஒன்றோடொன்று ஏதேனும் ஓர் வகையில் பிணைப்பு உண்டென்பதை நமக்கு
விளக்குகிறார்.
நமக்கு மிகவும் பரிச்சயமான சூழல், பரிச்சயமான மனிதர்கள்,
நம்முடன் நாளும் அன்பாய் அனுசரணையாய் பழகும் வாயிலா ஜீவன்கள் போன்றே கோயில்
பூசாரி, கண்ணாம்பா பாட்டி, ஆஞ்சநேயரின் மறு அவதாரங்களான மாருதி, அனுமந்து
இவர்களனைவரும் நம் கண் முன் உலா வருகிறார்கள். நம்மிடையே நிகழும் ஓர்
நிகழ்வு போன்றே இக்கதை நம் மனதுள் ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது.
தன் படைப்பில் உருவான உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்து காப்பாற்றி விடுகிறவன் இறைவன் என்பது எவ்வளவு உண்மை.
தாய்மையடைய
வாய்ப்பில்லாது போனதால் நிர்கதியாக விடப்பட்டவர் , சாகத் துணிந்த
நேரத்தில், கடவுளின் சந்நிதானத்தில் வைத்து வணங்கி விட்டு குடிக்க
வைத்திருந்த விஷத்தினை குரங்குகள் தட்டி விட்டது தெய்வ சங்கல்பம்.
அதே தெய்வத்திற்கு ஆலயம் எழுப்பும் பணியில், உதவி செய்ய கிடைத்த
வாய்ப்பு, இராம பிரானுக்கு அணிற்பிள்ளை செய்த உதவி போன்றதாயினும், அதனால்
அவருக்கு கிடைத்தது வருமானமும், புண்ணியமும்.
மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்த குரங்கு
தனக்குதவிய குரங்காக இருக்குமோ என்றெண்ணி பாட்டி தவிக்கையில், அந்த
தவிப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது. அதன் நினைவாக எழுப்பப்பட்ட
அனுமார் கோயிலே புகலிடமாகவும், அன்றாட கோயில் பிரசாதமே உணவாகவும் கிடைக்க
வயதான பாட்டிக்கு இறைவன் வழி செய்து விடுகிறான்.
தான் படைத்து உலகில் உலவ விட்ட உயிர்களைக் காத்து, அவர்கள்
வாழ வழிவகை செய்பவனும் இறைவனே. பாட்டிக்கு வாழ்வாதாரமாக கோயில் திருப்பணியை
கொடுத்து காப்பாற்றுகிறான். பாட்டியின் வாயிலாக வானரங்களின் அன்றாடத்
தேவையை பூர்த்தி செய்கிறான் இறைவன்.
பாட்டிக்கு பிள்ளை இல்லாத குறையை தீர்க்க, அனுமந்து, மாருதி
என்ற வானரங்களின் பேரன்பை வாரி வழங்குகிறார். அவற்றிற்கு அன்றாடம்
உணவளித்து, தன் பிள்ளைக்கு உணவூட்டியதைப் போல் பாட்டி பெருமகிழ்ச்சி அடைய
வழிவகை செய்கிறார். அவற்றின் அன்பு மற்றும் நன்றிப் பெருக்கும் பாட்டிக்கு
பிள்ளைப் பாசமாக கிடைக்க வரமருளுகிறார் இறைவன். இங்கு நினைவுக்கு வருவது
என்னவெனில்,
" அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் "
எனும் திருவள்ளுவரின் கூற்றே ஆகும்.
"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"
என்னும்
திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, கண்ணாம்பா பாட்டி தான் வாழும் காலம் வரை
தன்னாலான அனைத்து உதவிகளையும் தன்னலம் கருதாது, உயிர்களிடத்து பேதம்
பாராட்டாது செய்து வந்தாள்.
எதிர்காலத்தில் நிகழ இருப்பவைகளை முன்னமே அறியும் தீர்க்க
தரிசியை போல், தன் மரணம் நெருங்கும் காலம் குறித்து கண்ணாம்பா பாட்டி
முன்னமே அறிந்திருப்பார் போலும். தன்னால் எவருக்கும் எவ்விதமான இடைஞ்சலும்
வந்துவிடக்கூடாது என்று எண்ணி தன் இறுதி வழிக்குறிய செலவிற்கும் தயாராக
முன்னமே பணம் கொடுத்து வைத்திருக்கிறார். ஆனால், அவ்வளவு சீக்கிரம் மரணம்
அவரைத் தழுவிக் கொள்ளும் என்பது அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
பேரிடியாய் கோயில் இடிபாடு செய்தி கண்ணாம்பா பாட்டியை
தாக்க, இத்தனை காலம் தனக்கு ஆதரவாய் பல்வேறு ஜீவன்களையும், பல மனிதர்களின்
உறவுகளையும், உதவிகளையும், பாட்டிக்கு வாழ்வாகவே ஆகிப் போயிருந்த கோயில்,
அந்த உயர்ந்த ஆன்மாவை தாங்கிக் கொள்ளும் அன்புக் கரமாகவே ஆகிப்
போயிருந்தது.
அன்பே உருவான கண்ணாம்பா பாட்டி மீது மரணம் பேரன்பு
கொண்டுவிட்டதோ ? தான் நேசித்த உயிர்கள், தன்னைப் பற்றி பலகாலம் கழித்து
அறிந்து கொள்ளும் மனிதர்கள் அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிடுகிறார்
கண்ணாம்பா பாட்டி.
நல்ல மனம் படைத்த ஜீவனை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளித்த ஆசிரியருக்கும் நன்றிகள்.
|
3 comments:
அன்புடையீர், வணக்கம்.
தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க சுவையாகவும் உள்ளது.
தங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
//அன்பே உருவான கண்ணாம்பா பாட்டி மீது மரணம் பேரன்பு கொண்டுவிட்டதோ ? தான் நேசித்த உயிர்கள், தன்னைப் பற்றி பலகாலம் கழித்து அறிந்து கொள்ளும் மனிதர்கள் அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிடுகிறார் கண்ணாம்பா பாட்டி.//
’மரணமே பாட்டி மீது பேரன்பு கொண்டுவிட்டதோ?’ என்றோர் வித்யாசமான வினாவினை எழுப்பி, விமர்சனத்தினை முத்திரை வரிகளால் அழகாக எழுதி முடித்துள்ளீர்கள்.
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
- அன்புடன் கோபு [VGK]
எல்லோருக்கும் கருணை உள்ளம் வேண்டும் என்பதை உணர்த்தும் மிகச்சிறந்த கதை. படிக்கும் போதே கண்ணீர் சொரிந்தது.
Post a Comment