காலை வேளையில் வழக்கம் போல், தோழி காவேரிக்காக காத்திருந்த சிந்தனா, சற்று காட்டமாகவே காணப்பட்டாள். அவளது ஆத்திரமும் படபடப்பும் தோழி காவேரி வந்ததும் அதிகரித்தது.
காவேரி வந்ததும் வராததுமாய், சிந்தனா ஆரம்பித்து விட்டாள். " ஏய் ! பாத்தியாடி, இன்டர்- காலேஜ் கவிதை போட்டில ஒரு கவிதை முதலிடம் வந்துருக்கே, அதை நோட்டிஸ் போர்ட்ல போட்டுருக்காங்க பாத்தியா? " என்றாள்.
" ஆமாம். கவிதை நல்லா இருக்கு. ஆனா அதை வேற எங்கயோ படிச்ச மாதிரி இருந்தது " என்றாள் காவேரி.
" அது நான் எழுதுன கவிதை டீ. ஆனா, வேற யாரோ எழுதுனதா சொல்லி போட்டிருக்கு. அதுக்கு முதல் பரிசும் கிடைச்சிருக்கு. நான் கற்பனை பண்ணி எழுதுன கவிதைக்கு எப்படி வேற ஒருத்தர் உரிமை கொண்டாடலாம் ? " என்று பொரிந்து தள்ளினாள்.
"ஹே! கூல் டவுன் மா. அந்தக் கற்பனையும் கவிதையும் உனக்கு மட்டும் தான் தோணியிருக்கணும் அப்படின்னு கட்டாயம் இல்லையே ! ஒரே மாதிரி கற்பனை யாருக்கு வேணும்னாலும் வரலாமே ! இன்னும் சொல்லப் போனா, அது ஒரு சாதாரண கவிதை. இதுக்கு போய் இப்படி கோபப் படுற." என்று சொன்னாள்.
இப்படிச் சொல்லும் காவேரிக்கு எப்படி புரிய வைப்பது ? சொன்னாலும் புரிந்து கொள்ளாது விதண்டாவாதம் பேசுவாள் என்று சிந்தனா அமைதி காத்தாள்.
சிறிது நாட்களில், அவர்களது பாடத்திற்கான திட்ட அறிக்கை ( Project Report) சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அவர்கள் கட்டிடக்கலை பொறியியல் துறையைச் சார்ந்தவர்களாதலால், புது மாதிரியான வடிவமைப்புடன் கூடிய கட்டிடங்களுக்கான திட்டம் வகுத்து வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக புதிய மாதிரியில் கட்டிடத்திற்கான திட்டம் வகுத்திருந்தாள் காவிரி.
திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நாளில், விரிவுரையாளரிடம் காவிரி தன திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க, அவரோ, " இந்த ப்ளான்ல இராதா ஏற்கனவே ப்ராஜெக்ட் பண்றாளே ! நீ வேற ஐடியா செலக்ட் பண்ணும்மா" என்று கூறிச் சென்றுவிட்டார்.
ஆத்திரம் மேலோங்க, கண்கள் கலங்க, தோழி சிந்தனாவிடம் வந்தாள் காவேரி. " எப்படிடி நான் உருவாக்கின பிளான் அவளும் பண்ணலாம் ? என்னோட ப்ராஜெக்ட் அவுட் லைன்( Project out - line ) அவ திருடிட்டாளோ ? அதெப்படி கற்பனை ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியா வரும் ? " என்று பொரிந்து தள்ளினாள்.
" நீ தானடி சொன்ன... கற்பனை ஒரே மாதிரி நிறைய பேருக்கு வரலாம்ன்னு. அப்படி அவளோட கற்பனைல, நீ உருவாக்குன மாதிரியே பிளான் வந்திருக்கும் போல" என்று சிந்தனா சொன்ன போது தான் காவேரி உணர்ந்தாள். தனது கற்பனை, தனது படைப்பு, தனது சிந்தனை, எண்ணங்கள் களவாடப் படுவதன் வலியை உணர்ந்தாள்.
தன் தவற்றினை உணர்ந்து தோழி சிந்தனாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் காவேரி.
பின் குறிப்பு : குறுங்கதை எழுதும் முயற்சியில் என் முதல் படைப்பு. நண்பர்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.
4 comments:
மிக அருமை தோழி..வாழ்த்துகள்!
மிக்க நன்றி தோழி.
சுருக்கமாகவும், இனிமையாகவும் சிறந்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் தொடர வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
Post a Comment