blank'/> muhilneel: November 2013

Tuesday, November 26, 2013

கோபத்தை‬ அடக்க சுலபமான வழிகள் !!!


1. பொருட்படுத்தாதீர்கள்

 உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்

 தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. 

 நன்றி, Facebook

Friday, November 22, 2013

பட்டுப் புடவை பராமரிப்பு முறைகள்

  • பீரோவில் திறந்த நிலையில் பட்டுப்புடவைகளை வைக்கக் கூடாது துணிப் பையில் போட்டு அதனை கவரில் வைத்து வைக்கலாம்.

  • நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். எனவே, பட்டுப் புடவைகள் மீது வேறு ஏதேனும் துணிப் போட்டு அதன் மீது ஐயர்ன் செய்யலாம்.

  • அதுபோல பட்டுப் புடவைகளை ஸ்டீல் பீரோவை விட மர பீரோவில் வைத்தால் என்றும் புதியதுபோல பல வருடங்கள் இருக்கும்.

  • விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுப் புடவையைக் களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட சில மணி நேரங்கள் உலரவிட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

  • பருத்தித் துணியால் ஆன பைகளில் பட்டுப் புடவைகளைப் போட்டு பராமரித்தால் ஜரிகை கறுக்காமல் இருக்கும். 

  • எக்காரணம் கொண்டும் பட்டுப் புடவையைச் சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. சோப்போ, சோப் பவுடரோ உபயோகித்துத் துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

  • பட்டுப் புடவையை மாதத்திற்கு ஒருமுறை, மடித்து வைத்ததற்கு எதிர்ப்புறமாக மடித்து வைக்க வேண்டும். இல்லை என்றால், மடித்த இடங்களில் இருக்கும் ஜரிகைகள் அவ்விடத்தில் தளர்ந்து போய்விடும்.

  • பட்டுப் புடவையில் ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய்க் கறை இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர்விட்டு அலச வேண்டும். சாதாரண கறைகள் ஏதேனும் இருப்பின் அந்த இடத்தில் மட்டும் சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு கறையை நீக்கிவிட்டு உலர்த்தவும்.

  • பட்டுப் புடவைகளை அடித்து பிரஸ் போட்டு துவைக்கக்கூடாது. முதலில் அலசும்போது உப்பு போட்ட குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சாயம் கெட்டிப்பட்டு பட்டுப்புடவை நீண்டநாள் உழைக்கும்.

  • பட்டுப் புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

  • பட்டுப் புடவைகளைத் துவைக்கும்போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். காரமான சோப் கூடவே கூடாது. 

  • பட்டுப் புடவைகளை அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன்மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன்  செய்யக்கூடாது.

  • பட்டுப் புடவைகளை தண்ணீரில் நனைப்பதைவிட ட்ரைவாஷ் செய்வதே நல்லது.

  • பட்டுப் புடவையைக் கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப்பையில் வைக்க வேண்டும்.

  • பாசிப் பருப்பை ஊறவைத்து நீர் விட்டு அரைத்து பட்டுப்புடவையின் கறை உள்ள இடத்தில் தேய்த்து அலசினால் கறை நீங்கி விடும்.

  • பட்டுப் புடவையில் துருக்கறைபட்டால் ஆக்சாலிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் வாங்கி துருபிடித்த இடத்தில் தேய்த்து வெயிலில் வைத்தால் துருக்கறை மாயமாய் மறைந்துவிடும்.

  • பட்டுப் புடவைகளுக்கு இரசக் கற்பூர உருண்டைகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான ஷாம்பு போட்டு, கைகளால் துவைத்து சிறிது கஞ்சி போட்டு நிழலில் காய வைத்துப்பின் இஸ்திரி செய்தால் புதியதுபோல் பளபளக்கும்.

  • ஆறு கிராம்புகளை பழைய துணியில் சிறு மூட்டைபோல் கட்டி, ஜரிகை உள்புறமாக இருக்குமாறு மடித்து வைக்கப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு இடையில் வைத்தால் பட்டு பழுதடையாமல், பூச்சி அரிப்பு ஏற்படாமல் புடவையைப் பாதுகாக்கலாம்.

  • முதல் தரம் பட்டுப் புடவையை அலசும்போது பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு அதில் ஒரு ஐந்து நிமிஷம் பட்டுப் புடவையை முக்கி வைத்து அலசுங்கள். பட்டுப்புடவையின் எக்ஸ்ட்ரா சாயம் எல்லாம் நீங்கிவிடும்.

Monday, November 18, 2013

மரித்துப் போன மனிதம்

 http://dirtynatures.files.wordpress.com/2011/02/crowdedbus.jpg




        காலை வேளையில், பேருந்தின் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டாள் சரிதா. இது அன்றாடம் நடக்கும் ஓர்  வழக்கமான நிகழ்வு தானென்றாலும், அன்று என்னவோ கூட்டம் சற்று அதிகமாக இருந்ததாகவே தோன்றியது. பேருந்திலேறி, அவள் பணிபுரியும் கல்லூரியை வந்தடைவதற்குள்  சோர்ந்து விடுவாள்.


அன்றும் வழக்கம் போல், பேருந்து கூட்டமாகவே இருந்தது. அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும், தனக்கு முன் இருந்த பெரும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறி வாயிற்படியை வந்தடைந்தாள். அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்க வேண்டியவர்களும், அப்போது தான் ஏறியவர்களும் பேருந்தின் வாயிலை அடைத்துக் கொண்டு நின்றனர். அவர்களை விலகி வழி விடும்படி கேட்டுக் கொண்டும், எவரும் இம்மி அளவும் இடமோ, வழியோ தருவதாக இல்லை.


ஒருவழியாக அனைவரையும் தாண்டி பேருந்தின் படிக்கட்டினை வந்தடைந்தாள். படியில் இறங்கியவள், தரையில் கால் வைக்க எத்தனித்தாள் . அவளால் முடியவில்லை. இதற்குள், பேருந்தின் நடத்துனரும், " சீக்கிரமா இறங்கும்மா ! " என்று அதட்டவும், யாரோ பின்னாலிருந்து அவளது சேலையை இழுப்பது போல் தோன்ற, சற்று வேகமாக காலை எடுத்தவள், தடுமாறி கீழே விழுந்து விட்டாள். அவளது சேலை, அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பெண்ணின் காலடியில் சிக்கி இருந்திருக்கிறது. இதை அறியாது இறங்கியவள், படியிலிருந்து கீழே விழுந்து விட்டாள்.


கையில் வைத்திருந்த புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தும் சாலையில் சிதறிக் கிடக்க, விழுந்தவள் சுதாரித்து எழுவதற்குள், நடத்துனரின் மனிதாபிமானமற்ற குரல் அவளது காதில் வந்து விழுந்தது.


" ஏம்மா ! அந்தப் பக்கம் போய்  விழுகறது தான ! எங்கயாவது பஸ் சக்கரத்துல விழுந்து சாகப் போற. எந்திரி ! எந்திரி ! எனக்கு நேரமாகுது ! பஸ்ஸ  எடுக்கணும். போ ! போ ! " என்று அந்த உக்கிரமான குரல் கேட்டும் அவளால் எழ முடியவில்லை.


காலிலும் கையிலும் சரியான அடி. அங்கு நின்றிருந்தவர்கள் யாரும் இவளை கண்டு கொள்ளவில்லை. அப்போது அங்கு வந்த பேருந்திலிருந்து இறங்கிய அவளுடன் பணிபுரியும் ஆசிரியை இராதா  அவர்கள், சரிதாவைக் கண்டதும் பதறிப் போய், கை கொடுத்து தூக்கி, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தி, உடனழைத்துச் சென்றார். அந்த நொடியில், அவர் சரிதாவுக்கு தெய்வமாகவே  தோன்றினார்.


அவசரகதியான உலகில் சுயநலமும், மனிதாபிமானமுமற்ற மனிதர்கள் மத்தியில் நம்  வாழ்க்கை மிகவும் சிரமத்துடனேயே உழன்று கொண்டுதானிருக்கிறது.

Sunday, November 10, 2013

சிந்தனை திருட்டு



                 காலை வேளையில் வழக்கம் போல், தோழி காவேரிக்காக காத்திருந்த சிந்தனா, சற்று காட்டமாகவே காணப்பட்டாள். அவளது  ஆத்திரமும்  படபடப்பும்  தோழி  காவேரி வந்ததும்  அதிகரித்தது.

காவேரி வந்ததும் வராததுமாய், சிந்தனா  ஆரம்பித்து விட்டாள். " ஏய் ! பாத்தியாடி,  இன்டர்- காலேஜ்  கவிதை போட்டில ஒரு கவிதை முதலிடம் வந்துருக்கே, அதை நோட்டிஸ் போர்ட்ல போட்டுருக்காங்க பாத்தியா? " என்றாள். 

" ஆமாம். கவிதை நல்லா இருக்கு. ஆனா அதை வேற எங்கயோ படிச்ச மாதிரி இருந்தது " என்றாள்  காவேரி.

" அது நான் எழுதுன கவிதை டீ. ஆனா, வேற யாரோ எழுதுனதா சொல்லி போட்டிருக்கு. அதுக்கு முதல் பரிசும் கிடைச்சிருக்கு. நான் கற்பனை பண்ணி எழுதுன கவிதைக்கு   எப்படி வேற ஒருத்தர் உரிமை கொண்டாடலாம் ? " என்று பொரிந்து தள்ளினாள்.

"ஹே! கூல் டவுன் மா. அந்தக் கற்பனையும்  கவிதையும் உனக்கு மட்டும் தான் தோணியிருக்கணும் அப்படின்னு  கட்டாயம் இல்லையே ! ஒரே மாதிரி கற்பனை யாருக்கு வேணும்னாலும் வரலாமே ! இன்னும் சொல்லப் போனா, அது ஒரு சாதாரண கவிதை. இதுக்கு போய் இப்படி கோபப் படுற." என்று சொன்னாள்.

இப்படிச் சொல்லும் காவேரிக்கு எப்படி புரிய வைப்பது ? சொன்னாலும் புரிந்து கொள்ளாது விதண்டாவாதம் பேசுவாள் என்று சிந்தனா அமைதி காத்தாள்.
 
சிறிது நாட்களில், அவர்களது பாடத்திற்கான திட்ட அறிக்கை ( Project Report) சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அவர்கள் கட்டிடக்கலை பொறியியல் துறையைச் சார்ந்தவர்களாதலால், புது மாதிரியான வடிவமைப்புடன் கூடிய கட்டிடங்களுக்கான திட்டம் வகுத்து வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக புதிய மாதிரியில் கட்டிடத்திற்கான திட்டம் வகுத்திருந்தாள்  காவிரி.

திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நாளில், விரிவுரையாளரிடம் காவிரி தன திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க, அவரோ, " இந்த ப்ளான்ல இராதா ஏற்கனவே ப்ராஜெக்ட் பண்றாளே !  நீ வேற ஐடியா செலக்ட் பண்ணும்மா" என்று கூறிச் சென்றுவிட்டார்.

ஆத்திரம் மேலோங்க, கண்கள் கலங்க, தோழி  சிந்தனாவிடம் வந்தாள் காவேரி. " எப்படிடி  நான் உருவாக்கின பிளான்  அவளும் பண்ணலாம் ? என்னோட ப்ராஜெக்ட் அவுட் லைன்( Project  out - line )  அவ திருடிட்டாளோ ? அதெப்படி கற்பனை ரெண்டு பேருக்கும் ஒரே  மாதிரியா வரும் ? " என்று பொரிந்து தள்ளினாள்.

" நீ தானடி சொன்ன... கற்பனை  ஒரே மாதிரி நிறைய பேருக்கு வரலாம்ன்னு. அப்படி அவளோட கற்பனைல, நீ உருவாக்குன மாதிரியே பிளான்  வந்திருக்கும் போல" என்று சிந்தனா   சொன்ன போது  தான் காவேரி உணர்ந்தாள். தனது கற்பனை, தனது படைப்பு, தனது சிந்தனை, எண்ணங்கள் களவாடப் படுவதன் வலியை உணர்ந்தாள். 

தன் தவற்றினை உணர்ந்து தோழி  சிந்தனாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்  காவேரி.



 பின் குறிப்பு : குறுங்கதை எழுதும் முயற்சியில் என் முதல் படைப்பு. நண்பர்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.

Monday, November 4, 2013

கர்மவீரர் காமராஜர்


இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!

‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

அரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!


பத்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

‘ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத்துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!


நன்றி :- ஆனந்த விகடன்

Friday, November 1, 2013

தீபாவளி வாழ்த்துகள் !




வாழ்வில்  அனைத்து  வளங்களும்  பெற்று 
நலமுடன்  வாழ  இந்த தீபத் திருநாளில் 
வாழ்த்துகிறேன் !!!


நண்பர்கள்  அனைவருக்கும்  இனிய  தீபாவளி   நல்வாழ்த்துகள் !!!!