blank'/> muhilneel: கரண்ட் கட்

Friday, December 21, 2012

கரண்ட் கட்





வீட்டின் வாசலில் அமர்ந்து சிம்னி விளக்கையும், லாந்தர் விளக்கையும் துடைத்து வைத்துக் கொண்டிருந்தார் மாணிக்கம் வாத்தியார்.அவருக்கு அருகில் ஓர் மண்ணெண்ணெய் கேனும் இருந்தது.

அப்போது, அங்கு பக்கத்து வீட்டுக்காரரும், வாத்தியாரின் நண்பருமான சொக்கலிங்கம் வாத்தியார் வந்தார்.

”என்ன மாணிக்கம் சார், விளக்கு எல்லாம் துடைச்சு வைச்சிட்டு இருக்கற மாதிரி இருக்கு?” என்றார்.

“ஆமாம் சொக்கலிங்கம் அய்யா, பொண்ணுக்கு செமஸ்டர் பரீட்சை நெருங்கீட்டு இருக்குல்ல.கரண்ட் வேற அடிக்கடி இருக்கறதில்ல. கரண்ட்டை நம்பீட்டு இருந்தா படிக்க முடியாது. அதான் விளக்கெல்லாம் துடைச்சு வெச்சிட்டிருக்கேன்” என்றார் மாணிக்கம்.

”ம்ம்ம்….நாமெல்லாம் படிக்கற காலத்துல நம்ம வீடுகள்ல கரண்ட் இருக்காது, தெரு விளக்கு வெளிச்சத்துல படிச்சு வந்தோம். இப்போ, நம்ம வீடுகள்ல கரண்ட் இருந்தும், அதை பயன்படுத்த முடியாத நிலைமை” என்று கூறினார் சொக்கலிங்கம்.

”கரண்ட் இல்லாத கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், ஏதோ கொஞ்சம் நல்லது நடக்குதுங்ற மனத்திருப்தி” என்ற மாணிக்கத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தார் சொக்கலிங்கம்.

“நல்லதா !!! என்னப்பா அது ? பிள்ளைங்க படிப்பில்ல கெடுது, பரீட்சை வேற நெருங்கிட்டு இருக்கு. நீ எதை நல்லதுங்ற? “ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் சொக்கலிங்கம்.

மாணிக்கம் உடனே, “அதுவா…… சந்தேகம் வந்தா பிள்ளைங்க உடனே இன்டர்நெட்ட போடு, கூகுள்ல தேடுன்னு இருந்தாங்க. அவங்க தேடினது சம்மந்தமா என்ன கிடைக்குதோ, அதை ப்ரின்ட் எடுத்து அப்பப்போ பரீட்சைக்குப் படிச்சிட்டு, அப்படியே மறந்தும் போய்ட்டாங்க. இப்போ, கரண்ட் இருக்குறதே அரிதானதால, பகல்ல பிள்ளைகள் எல்லாம் லைப்ரரிக்குப் படையெடுக்க ஆரம்பிக்கறாங்க. நிறைய புத்தகங்களைப் தேடிப் பாத்து, குறிப்பெடுத்து படிக்கறதால, படிக்கறது அப்படியே மனசுல நிக்குது.வாசிக்கற பழக்கமும் பிள்ளைங்க கிட்ட ஏற்பட்டிருக்கு” என்றார்.

“ஆமாம்பா, நீ சொல்றதும் உண்மை தான். முன்னெல்லாம், பரீட்சை அப்போ படிச்சிக்கலாம்னு இருந்த என் பையன் கூட இப்போ அன்னன்னைக்கு படிக்கிறான். பரீட்சைக்கு முந்தின நாள் முழுசும் படிக்க கரண்ட் எங்க இருக்கு? வீட்ல எமர்ஜென்சி லைட் இருந்தாலும், அதை சார்ஜ் பண்ண, நாலஞ்சு மணி நேரம் தொடர்ந்து கரண்ட் தேவைப்படுது.அது எங்க இருக்கு? கஷ்டத்துலயும் ஏதோ ஓர் நன்மை இருக்கத்தான் செய்யுது. சரி வா. நானும் வரேன்.ரெண்டு பேருமா மண்ணெண்ணெய் வாங்கிட்டு வருவோம்” என்றவாறு கிளம்பினர் மாணிக்கமும் சொக்கலிங்கமும். 

No comments:

Post a Comment