blank'/> muhilneel: உண்மை சற்றே வெண்மை - சிறுகதை விமர்சனம்

Sunday, April 20, 2014

உண்மை சற்றே வெண்மை - சிறுகதை விமர்சனம்

உண்மை சற்றே வெண்மை

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


என் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் எப்போதும் குறைந்தபக்ஷம் ஒரு பசு மாடாவது கன்றுக்குட்டியுடன் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பசுக்களும், இரண்டு மூன்று கன்றுக்குட்டிகளும் கூட இருப்பதுண்டு.

என் அப்பாவும், அம்மாவும் பசு மாட்டை தினமும் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி, அதன் நெற்றியிலும், முதுகுப்பகுதியிலும், வால் பகுதியிலும் மஞ்சள் குங்குமம் இட்டு, தெய்வமாக அவற்றைச் சுற்றி வந்து கும்பிடுவார்கள். 

மாட்டுத்தொழுவத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருவார்கள்.  அகத்திக்கீரை, தவிடு, கடலைப்புண்ணாக்கு, வைக்கோல், அரிசி களைந்த கழுநீர், பருத்திக்கொட்டை, மாட்டுத்தீவனங்கள் என ஆரோக்கியமான சத்துணவுகள் அளித்து, பசுக்களை மிகவும் போஷாக்காக வளர்த்து வருவார்கள். 

வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் மாட்டுக்கொட்டகையில் சாம்பிராணி புகை மணம் கமழும். பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் கோமாதாக்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.  


 


கன்றுக்குட்டிகளுக்கு போக மீதி மிஞ்சும் பசும்பால் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பசு மாட்டு சாணத்தில் தயாராகும் விராட்டி என அனைத்துப் பொருட்களும், எங்கள் குடும்பத் தேவைக்குப்போக விற்பனையும் செய்வதுண்டு.

என் பெற்றோருக்கு, மிகவும் அழகு தேவதையாகப் பிறந்துள்ள ஒரே பெண்ணான என்னை, நன்கு செல்லமாக வளர்த்து படிக்கவும் வைத்து விட்டனர். 

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்க இருந்த எனக்கு சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர். கல்லூரிப் படிப்பு முடிந்து வந்த எனக்கு இதுவரை மாப்பிள்ளை மட்டும் சரிவர அமையவில்லை. 

இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.


இப்போது மாடுகளையும் கன்றுகளையும் பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் போட்டு, பால் வியாபாரமும் சக்கைபோடு போட்டு வருகிறது. எனக்கு இன்னும் மாப்பிள்ளை தான் சரியாக அமையவில்லை.

பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. 

”ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. 

ஆயிரம் தடவையானாலும், திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். 

ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!

இப்போதெல்லாம் ஒருசில பசுக்கள் இரவில் ஒரு மாதிரியாகக் கத்தும் போது, என் பெற்றோருக்கு, என்னைப்பற்றிய கவலை மிகவும் அதிகரிக்கிறது. நல்ல வரனாக இவளுக்கு சீக்கரம் அமையாமல் உள்ளதே என மிகவும் சங்கப்பட்டு வருகின்றனர்.

சொல்லப்போனால் வாயில்லாப் பிராணிகள் எனப்படும், அந்தப் பசுக்களைப்போல (என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டி) எனக்கு வாய் இருந்தும் நான் ஒன்றும் கத்துவதில்லை.

என்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.

அன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.தொடரும்
ஏதோ சிகிச்சைக்காக மாட்டு வைத்தியரிடம் 

கூட்டிச்செல்கிறார் என்று  நினைத்துக் கொண்டேன். 


சிகிச்சை முடிந்து வந்த அது பரம ஸாதுவாகி விட்டது. 


அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும் 

குடிகொண்டிருந்தது. இப்போதெல்லாம் அது இரவில் கத்துவதே இல்லை.
மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் 


பேசிக்கொண்டார்கள். 


அந்தப் பசுமாட்டைப் பார்த்த எனக்கு, ஏதோ 

புரிந்தும் புரியாததுமாகவே இருந்து வந்தது.


சென்ற வாரம் என் அப்பாவைத்தேடி ஆறுமுகக்கோனார் 

என்பவர் வந்திருந்தார். 


அவருடன் ஒரு பெரிய பசுமாடும், கன்றுக்குட்டியும் 


வந்திருந்தன. 


“காராம் பசு” என்று பேசிக்கொண்டனர். 


உடம்பு பூராவும் ஆங்காங்கே நல்ல கருப்பு கலராகவும், 

இடைஇடையே திட்டுத்திட்டாக வெள்ளைக்கலராகவும், 

பார்க்கவே வெகு அழகாக, அவைகள் இரண்டும் 

தோற்றமளித்தன.

அவைகளைப்பார்த்த என் அப்பாவுக்கு 

மிகவும் பிடித்துப்போய் விட்டது. 


அம்மாவிடம் போய் ஏதோ ஆலோசனை செய்தார். 


எண்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்தக் காராம்பசுவும் 


கன்றுக்குட்டியும் அப்பாவுக்குச் சொந்தமாகி விடுமாம்.

“எண்பதாயிரம் ரூபாயா?” மிகவும் விலை 

ஜாஸ்தியாக உள்ளதே, என்று என் அம்மா 

வியந்து போனாள்.
“ஒரு வேளைக்கு பத்து லிட்டருக்குக் குறையாமல் 

பால் கறக்குமாம்; 


ஏழு அல்லது எட்டே மாதங்களில் போட்ட 


பணத்தை எடுத்து விடலாம்; 
காராம் பசு என்றால் சும்மாவா? அதன் உடம்பில் உள்ள இரட்டைக்கலருக்கே மதிப்பு அதிகம் தான்” 


என்று அப்பா அம்மாவிடம் சொல்வது, 

என் காதிலும் விழுந்து தொலைத்தது.
இப்போது இந்த மாட்டை ஆசைப்பட்டு, 

இவ்வளவு பணம் போட்டு வாங்கிவிட்டால், 

திடீரென என் கல்யாணம் குதிர்ந்து வந்தால், 

பணத்திற்கு என்ன செய்வது என்றும் யோசித்தனர் 

என் பெற்றோர்கள். கல்யாணச் செலவுகளைத்தவிர, நகைநட்டு, 

பாத்திரம் பண்டமெல்லாம் எப்பவோ சேகரித்து 

வைத்து விட்டாள், மிகவும் கெட்டிக்காரியான என் தாய்.

என்னைப்போலவே தளதளவென்று இருக்கும் 

இந்தக் காராம்பசுவுக்கு உடம்பிலும், மடியிலும்

வெவ்வேறு இரண்டு கலர்கள் இருப்பதால் 

மார்க்கெட்டில் மெளஸ் ஜாஸ்தியாக உள்ளது.
ஆனால் அதே போல எனக்கும், என் உடம்பின் 

அதே பகுதியில், சற்றே ஒரு ரூபாய் 

நாணயமளவுக்கு, வெண்மையாகவே உள்ளது. அதுவே எனக்கு சுத்தமாக மார்க்கெட்டே 

இல்லாமல் செய்து, என் திருமணத்திற்கு 

இடையூறாக இருந்து வருகிறது.இந்தக் காராம்பசு, தன் இயற்கை நிறத்தை 

ஆடை ஏதும் போட்டு மறைத்துக் 

கொள்ளாமல், உண்மையை 

உண்மையாக வெளிப்படுத்தும் பாக்யம் பெற்றுள்ளதால், 

அதற்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உள்ளது.நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து 

என் உடலையும், அந்தக்குறையையும் நான் 

மறைக்க வேண்டியுள்ளது. என்னுடைய  பொதுவான, மேலெழுந்தவாரியான, 

உருவ அழகைப்பார்த்து, மிகுந்த ஆர்வமுடன் பெண் 

கேட்டு வந்து போகும், பிள்ளையைப்பெற்ற 

மகராசிகளிடம், மிகுந்த கூச்சத்துடன் 

இந்த ஒரு சிறிய விஷயத்தை உள்ளது உள்ளபடி 

உண்மையாக கூற வேண்டியுள்ள, சங்கடமான 

துர்பாக்கிய நிலையில் இன்று நாங்கள் உள்ளோம்.உண்மையை இப்போது மறைத்துவிட்டு, 


பிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால், 


என் இல்வாழ்க்கை கருமையாகி 


விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்.”ஆனால் ஒன்று; என்னைக் கட்டிக் கொள்ளப் 

போகிறவன் இனி பிறந்து வரப்போவதில்லை;   


ஏற்கனவே எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து 

கொண்டு தான் இருக்க வேண்டும்; 


அவனை நமக்கு அந்த பகவான் தான் 

சீக்கரமாக அடையாளம் காட்ட வேண்டும்”, என்று என் அம்மா தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, 

தானும் ஆறுதல் அடைந்து, என்னையும் 

ஆறுதல் படுத்துவதாக நினைத்து வருகிறாள்.அந்தக்காளை இந்தக் காராம்பசுவை 

விரும்பி ஏற்றுக்கொள்ள பிராப்தம் 

வருவதற்குள், பட்டதாரியான எனக்கு, 

“முதிர்க்கன்னி” என்ற 

முதுகலைப்பட்டமளிப்பு விழா 

நடந்தாலும் நடந்து விடலாம்.
நான் என்ன செய்வது? காராம்பசுவாகப் பிறக்காமல், 


கன்னிப்பெண்ணாகப் 


பிறந்து விட்டேனே !


oooooOooooo
எனது விமர்சனம் 


பொன் கொட்டிக் கொடுக்க தயாராய் இருந்தாலும், சிறு நிறவேறுபாடு குறை, பெண்ணொருத்தியின் திருமணத்திற்கே தடையாகிப் போகிறது. அதே நிற வேறுபாடு கொண்ட பசுவிற்கோ, எவ்வளவு விலையானாலும் கொட்டிக் கொடுத்து வாங்க பெரும் போட்டா போட்டி. ஏன்  இந்த முரண்பாடு ? கதையின் நாயகியின் மனதில் எழும் இந்த நியாயமான கேள்வி இக்கதையைப் படிப்பவர் மனதிலும்  எழுகிறது. பெண்களை  நிறம், உயரம், எடை என்று பல்வேறு உடற்கூறுகளைக் கொண்டு ஏற்பதும் நிராகரிப்பதும் சமூகத்தில் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. ஆனால், இதுவே,ஆணுக்கு நல்ல சம்பாத்தியம் மட்டும் இருந்தாலே, அதுவே ஓர் முக்கிய கூறாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. பணத்திற்கு முன் அங்கு அழகு, நிறம் எல்லாம் ஒரு பொருட்டாகவே கொள்ளப்படுவதில்லை.


பருவத்திற்கே உரித்தான உணர்வுகளையும், உள்ளமதில் பொங்கியெழும் உணர்ச்சிகளையும் பெண்ணானவள் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிறாள். அவளுள் தோன்றும் எண்ணங்களை எவரிடமும் வெளிப்படுத்தியோ, பகிர்ந்து கொண்டு மனதிற்கு சற்றே ஆறுதல் தேடவோ இயலுவதில்லை. அவளுக்கும் அவளது உணர்வுகளுக்குமே பெரும் போராட்டம் ஏற்படுகிறது. இதனால், பல்வேறு சமயங்களில், அவளுக்கு தான் தனிமைப் படுத்தப் பட்டது போன்றோர் உணர்வும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏனோ விலகிப் போவது போன்றோர் உணர்வும் ஏற்படுகிறது. அத்தகைய பெண்ணின் மன உணர்வுகளை கதையின் நாயகி பாத்திரத்தின் வாயிலாக எடுத்தியம்புகிறார் ஆசிரியர்.


பெற்றோர்களின் நிலை இன்னும் மோசம். பெண்ணுக்கு நல்ல வரன் அமையவில்லையே என்று எண்ணி எண்ணியே சோர்ந்து விடுகின்றனர் பெற்றோர். தங்களது சோர்வான மனநிலை தங்களது மகளையும் பற்றிக் கொள்ளக் கூடாதே என்று வெளியில் எதையும் காட்டிக் கொள்வதில்லை அவர்கள்.


உண்மையை வெளிப்படையாக சொல்லிவிட்டாலும்,  என்னவோ ஏதோ  என்றெண்ணி ஒதுங்குபவர்கள் சிலர். குறைகளுக்கேற்ப தட்சணையை பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு குறைகளுக்கும் இவ்வளவு என்று அளவுகோல் கொண்டு, தட்சணையுடன் ஏற்றுக் கொள்வோர் பலர். ஆனாலும், மனதில் தயக்கம் தலை தூக்கியே நிற்கிறது பலருக்கு.


உள்ளதை உள்ளபடி நம் கண்முன்னே காட்சிப் படுத்திவிடுகிறது பசு. நாகரீகம் மனிதனை பல படிநிலைகள் முன்னேற்றி உள்ளது. நாம் நம்மைப் பற்றிய உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட எண்ணினால், நமக்கு கிடைக்கப் போவது காட்டுமிராண்டிப் பட்டமே.

கள்ளங் கபடமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட பெண்ணவளின் வாழ்வில் உடலிலுள்ள சிறு வெண்ணிற வேறுபாடு ( தேமல்) பெரும் கரும்புள்ளியாய் அமைந்திடக்  கூடாதென்று  சற்றே வெண்மையை உண்மையை மறைக்காது கூறி பெண்ணுக்கு நல்வரன் தேடும் அப்பெற்றோருக்கு அழகு, செல்வம், குணம் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற நல்லவர் ஒருவர் மாப்பிள்ளையாகவும், பெண்ணணங்கு அவளது மனம் கவர் கள்வனாகவும் கிடைக்க வாழ்த்துவோம்.

நல்லதோர் வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் அருமை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உண்மையை மறைக்காது கூறி பெண்ணுக்கு நல்வரன் தேடும் அப்பெற்றோருக்கு அழகு, செல்வம், குணம் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற நல்லவர் ஒருவர் மாப்பிள்ளையாகவும், பெண்ணணங்கு அவளது மனம் கவர் கள்வனாகவும் கிடைக்க வாழ்த்துவோம்.//

மிகவும் அழகான அருமையான நேர்மறை எண்ணங்களுடன் கூடிய நல்ல விமர்சனம்.
பாராட்டுக்கள்.

அடியேன் எழுதிய இந்த என்கதையை தங்களின் அற்புதமான விமர்சனத்துடன் தங்கள் தளத்தில் தனிப்பதிவாகப் பகிர்ந்துகொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

அன்புடன் கோபு

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment