blank'/> muhilneel: தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்

Tuesday, January 7, 2014

தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்"தமிழனென்று சொல்லடா !    தலை நிமிர்ந்து நில்லடா ! "

என்று பெருமிதத்துடன் பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. தான் ஓர் தமிழனென்று மார்தட்டிக் கொள்வோர் மத்தியில், தான் ஓர் தமிழன் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள வெட்கப்படும் மாக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சரளமாக தமிழ் மொழி பேசும் உதடுகள் , தமிழ் பேசும் சக மனிதனைக் கண்டதும், சட்டென ஆங்கில மொழிக்கு வளைந்து விடுவதும் ஏனோ ? தம்மை தமிழனென அடையாளப் படுத்திக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறார்கள் தமிழர்கள் ? இது வெளிநாடு வாழ் தமிழர்களிடம் கண்ட செய்கை மட்டுமல்ல, நம் தேசத்தில், தமிழகத்தில் வாழும் தமிழர்களுள் சிலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

தமிழகத்தில், பள்ளிகளில் படிக்கும் சிறார்களின் நிலை இன்னும் மோசம். சிறுவர்கள் பலருக்கு தமிழ் மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரிவதில்லை. தமிழ் என்றாலே அலறி அடித்துக் கொண்டு காத தூரம் ஓடும் சிறார்கள் பலரைக் காண்கிறோம். குறில் நெடில் வேறுபாடு, ழகர – ளகர – லகர வேறுபாடு தெரியாமல் மிகவும் சிரமப் படுகின்றனர். இதனால் மிகுதியான எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன. மதிப்பெண்கள் குறைவதால், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாகிறார்கள். இதனால் மொழியையே வெறுத்து ஒதுக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் வாசிக்கும் பழக்கமே அற்றுப் போனது தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிகளில் தமிழ் வகுப்புகளின் போது, ஆசிரியர், ஒவ்வோர் மாணவரையும் பாடத்தின் ஒவ்வோர் பத்தியாக படிக்கச் செய்து விளக்கம் அளிப்பார். இதனால் மாணவர்கள் தமிழ் படிக்க சிரமப்பட்டதில்லை. இன்று அப்படி ஓர் பழக்கம் நடைமுறையில் உள்ளதா என்பது தெரியவில்லை. வாய்மொழித் தேர்வு ( Oral Exam ) வைத்து, சில வார்த்தைகளை ஆசிரியர் சொல்லச் சொல்ல எழுதுதல் ( Dictation ), பாடங்களை வாசிக்கும் முறை ( Reading ), செய்யுட் பகுதிகளை மனனம் செய்து ஒப்புவித்தல் ( Recitation ) போன்ற மாணாக்கரின் நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் ( Vocabulary ) வளர்க்கும் பயிற்சிகள் இன்றும் பள்ளிகளில் நடத்தப்படுகின்றனவா என்பது தெரியவில்லை.    
      
சில பள்ளிகளில், வகுப்பறையில் கட்டாயம் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமென விதிமுறை இருக்கிறது. மீறினால், அபராதம் விதிக்கப் படுகிறது. இதனால், பல சிறார்கள் வீட்டிலும் ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுகின்றனர். 

சிறார்களை கதைப் புத்தகங்கள், படக் கதைகள்  போன்றவற்றை வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில், சிறுவர் இதழ்களில் வரும் படக் கதைகளை வாசித்துப் பழகினால், நாளடைவில் அவர்களின் வாசிக்கும் திறன் நன்கு வளரும்.
 

தமிழகத்தில், நான்காம் வகுப்பு முதல், தமிழ் விருப்பப் பாடமாக ஆக்கப்பட்டு விடுகிறது. மாணவர்கள் தமிழ் அல்லது இந்தி எடுத்துப் படித்துக் கொள்ளலாம். அங்ஙனம், இந்தி எடுத்துப் படிக்கும் மாணவர்கள், பிற்காலத்தில் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயல்வதில்லை. அதற்கான தேவையோ அல்லது வாய்ப்போ அவர்களுக்கு ஏற்படுவதில்லை. 


மேலும், மேனிலை வகுப்புகளில் பிரெஞ்சு மொழியை தமிழ் மொழிக்கு பதிலாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.  என்ன தான் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தால் தான், மாநில தரம் என்று அறிவித்தாலும், பிரெஞ்சு மொழியில் எளிதாக மதிப்பெண் பெறலாம், மொத்த மதிப்பெண்களும் உயரும். இதனால், பலரும் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக எடுப்பதை தவிர்கின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும்.
பள்ளிகளில் ஆரம்ப கல்வி தொடங்கி மேனிலை வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப் படுகிறது. சில பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இளங்கலை பட்டயப் படிப்புகளில் தமிழ் கட்டாய பாடமாக உள்ளது. ஆனால், அவர்கள் கல்லூரியை / பள்ளியை  விட்டு வெளியேறியதும், அவர்கள் முழுமையாக நாட வேண்டியது ஆங்கிலத்தை மட்டுமே என்றாகி விடுகிறது. அதன் பின், தமிழின் பயன்பாட்டினை மறந்தே போய்விடுவோர் எத்துனையோ பேர்.  "எனக்கு தமிழ் வராது" என்று சொல்வதை பெருமையாக எண்ணும்  சிறுமதியினரும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.
 

 இன்று, இளைஞர்கட்கு வேலைவாய்ப்பு வழங்கும் பன்னாட்டு நிறுவனங்களும், ஆங்கிலத்தையே அடிப்படை தகுதியாக வைத்துள்ளனர். கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆங்கிலமே ஏற்ற மொழியாகக் கருதுகின்றனர். ஆங்கிலம் தெரியாது, தமிழ் மொழி மட்டுமே தெரியும் என்ற காரணத்தினாலேயே, பல இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு சிரமப் படுகின்றனர். இதனால், பலரும் சில ஆயிரங்களை செலவு செய்தாயினும், பேச்சு ஆங்கிலம் ( Spoken English ) கற்றுக் கொள்கின்றனர். பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் பிழையேதும் இல்லை. ஆனால், நம் தாய் மொழியை மறந்து விடுதல் நல்லதன்று.


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடிதங்கள், வாழ்த்து அட்டைகளை பொங்கல்,  தீபாவளி பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு போன்ற விழாக் காலங்களில் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது  நினைவில் இருக்கலாம். நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போதும் , இனிய வாழ்த்துகளை அழகிய தமிழில் எழுதுவோம். ஆனால், அவையெல்லாம் இன்று நமக்கு மலரும் நினைவுகள் ஆகிப் போய்  விட்டன. இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில், மின்னஞ்சல் ( e- mail ), குறுஞ்செய்தி ( SMS ) என்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவற்றின் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு தமிழ் மொழியை பயன்படுத்துவோர் வெகு சிலரே .


இன்று கணினியில்  தமிழ் மொழியை பயன்படுத்தி, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது போல் தமிழிலும் தட்டச்சு செய்கிறோம்.இத்தனை காலம் ஆங்கிலத்தை மட்டுமே கணினியில் கண்டு வந்த நாம், இன்று நம் தாய் மொழியாம் தமிழ் மொழியையும் கணினியில் காண்கிறோம். ஆனால், தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்த முடியும் என்பதை ஆச்சர்யமாக கேட்கும் பலரும் இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.இன்று இணையத்தின் வழியாக  தமிழ் மொழி கற்றல் - கற்பித்தலுக்கான வாய்ப்புகள் பல உள்ளன. மழலையர் கல்வி தொடங்கி முனைவர் பட்டப் படிப்பு வரையிலான பாடங்கள், பாடத்திட்டங்கள் என பல்வேறு வாய்ப்புகள்  உள்ளன. சிறு குழந்தைகளுக்கான  கேட்டல், வாசிப்பு, எழுத்து, ஒப்புவித்தல் போன்ற அடிப்படை திறன்களை வளர்க்கும் பாடத்திட்டம் முதல், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிப் படிப்பிற்கான பாடங்கள் வரை இணையத்தில் உள்ளன.


தமிழ் மொழி கற்றலுக்கான சில வலைத்தளங்கள்

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/
http://www.tamiltutor.com/
http://kidsone.in/tamil/
http://learning-tamil.blogspot.com
http://www.tamildigest.com/

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம்

http://tamilnation.co/literature/projectmadurai/intro.htm

தமிழில் எழுத

http://www.quillpad.in/index.html
http://www.thamizha.com/project/ekalappai
http://software.nhm.in/products/writer
http://www.google.com/inputtools/try/ 

தமிழில் மொழிபெயர்க்க

 http://translate.google.com/#en/ta/
http://dictionary.tamilcube.com/

இணைய தமிழ் அகராதிகள் மற்றும் கலைச் சொல் அகராதிகள் 

http://www.tamildict.com
http://tamilcube.com/
http://www.thozhilnutpam.com/
http://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்

கணிப்பொறி கலைச்சொல் அகராதி

 http://www.thozhilnutpam.com/TamilTechnicalDictionary.pdf


பிறமொழி சொற்கள் தமிழ் மொழியில் கலந்திருப்பது நாம் அறிந்ததே. ஆனால், அண்மைக் காலங்களில், ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து எழுதும் போக்கு மிகுந்து வருகிறது. ஆங்கிலத்தில்  பன்மையை (Plural)  குறிக்க ஒருமைச் சொலின் இறுதியில் " s " , " es "அல்லது " ies "  சேர்த்து எழுதுவோம். 

எடுத்துகாட்டாக ,  Pencil என்ற ஒருமையை பன்மையில் Pencils என்றும், Bus  என்ற சொல்லை பன்மையில் Buses என்றும், Lily என்ற சொல்லை பன்மையில் lilies என்றும் எழுதுவோம். இது ஆங்கில மொழியில் பன்மையைக் குறிக்கும் முறையாகும். இதையே நம் தமிழ் மொழியில் பயன்படுத்துதல் சரியா ?

எடுத்துகாட்டாக சில சொற்கள், குட்டீஸ் , சுட்டீஸ், மக்காஸ் . இப்படி பல சொற்கள். தமிழ் மொழியில் பன்மையைக் குறிக்க "கள் " என்னும் விகுதி இருக்கையில், எதற்காக நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்துவதையே தமிழிலும் பயன்படுத்த வேண்டும் ? இதே போல், பிற மொழிகளிலும் பயன்படுத்துகிறார்கள்  என்று  கேள்விப்படவில்லை. நம் தமிழ் மொழிக்கு இருக்கும் தனித் தன்மையை ஏன்  பிறமொழி கலப்பால் கெடுக்க வேண்டும் ?

தமிழை தமிழில் எழுதுவோம். தமிழை ஆங்கிலத்தில் எழுதி அதை தமிங்கலமாக ஆக்க  வேண்டாம்.

எதிர்காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்னவாகும் ? காலத்தின் போக்கில் தமிழ் மொழியே அழிந்து போய் விடுமா என்றெல்லாம் எண்ணி அஞ்சத் தேவையில்லை. தமிழ் மொழி என்றும் அழியப் போவதில்லை. அறிவியல் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களால் தமிழுக்கு அழிவு ஏற்படப்போவதில்லை. தமிழ் என்றென்றும்  தனக்குரிய தனிச் சிறப்புடளுடன் பெருமையுடன் விளங்கும்.

தமிழர்  என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழருடன் தமிழில் உரையாடுவோம். ஏனெனில், தமிழருக்கு தமிழ் தான் முகவரி !!!குறிப்பு :

இந்தக் கட்டுரை ரூபனின் எழுத்துப் படைப்புகள் தளத்தில் நண்பர்  திரு. ரூபன் அவர்கள் நடத்தும்  தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி க்காக எழுதப்பட்டது.

 

12 comments:

Anonymous said...

வணக்கம்

தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டிக்கு தங்களின் கட்டுரை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் கட்டுரை நடுவர்களின் பரீசீலனையில் உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத் தருகிறேன். போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கட்டுரை... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

Tamizhmuhil Prakasam said...

@ரூபன்

கட்டுரை தங்களுக்கு கிடைத்ததை அறியத்தந்தமைக்கு நன்றிகள் நண்பரே....

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Anonymous said...

வணக்கம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு-
நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. . அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Seshadri e.s. said...

தற்காலத்தில் தமிழ் மொழியின் நிலையை தங்கள் கட்டுரையில் தெளிவாகக் கூறியுள்ளீர்கள்! பயனுள்ள பல தளங்களுக்கும் இணைப்பினை அளித்துள்ளீர்கள்! வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி!

Tamizhmuhil Prakasam said...

@ Seshadri e.s.
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !!!

Tamizhmuhil Prakasam said...

@ 2008rupan

அறியத் தந்தமைக்கு நன்றிகள் நண்பரே !!!

Mythily kasthuri rengan said...

நல்ல முயற்சி தமிழ் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

Tamizhmuhil Prakasam said...

@ Mythily kasthuri rengan

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

Iniya said...

வணக்கம் !
போட்டிக்காக எழுதியிருந்தாலும் தமிழ் அழியாதிருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் தெரிந்தது. தமிழின் தற்போதைய நிலையை சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல், தமிழை வளர்ப்பதற்கும் ஆவன செய்யவேண்டும் என்றும் கற்றலுக்கான விபரங்களும் தந்துதவியது சிறப்பே.
சிறப்பான பதிவே ! மேலும் போட்டியில் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்....!

Tamizhmuhil Prakasam said...

@ Iniya

தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

Post a Comment