blank'/> muhilneel: சமயோசிதத்தால் உயிர் தப்பிய குரங்கு

Friday, January 24, 2014

சமயோசிதத்தால் உயிர் தப்பிய குரங்கு

crocodile-and-monkey-story


அந்தக்   காட்டின்  நடுப் பகுதியில்  பெரிய ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையில் ஒர் பெரிய நாவல் மரம். அம்மரத்தில்,  குரங்கு ஒன்று வசித்து வந்தது. நாவற் பழங்களை உண்டு அக்குரங்கு வாழ்ந்து வந்தது.   ஆற்றில் முதலைகள் இருந்தன. ஓர் நாள் ஆற்றின் கரையோரம் வந்த முதலை, மரத்திலிருந்த குரங்கைக் கண்டது.

"என்ன குரங்காரே, நலமா ? "

" நல்ல சுகம் முதலையாரே. இந்தாருங்கள் கொஞ்சம் நாவல் பழங்களை சாப்பிடுங்களேன்."

நாவல் பழங்களை உண்ட முதலை, " மிகவும் ருசியாக உள்ளதே. தினமும் எனக்கு தகுகிறீரா குரங்காரே ? " என்றது.

" அதனால் என்ன ? தினமும் தருகிறேன்." என்றது. 

இப்படியே நாட்கள் சென்றன. குரங்கிற்கு, ஆற்றிற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள ஆசை. ஆனால் எப்படி செல்வதென்பது அதற்கு தெரியவில்லை.

தினமும் நாவல் பழங்களை வாங்கிச் செல்லும் முதலை, தன் மனைவிக்கும் கொடுத்து வந்தது. ஓர் நாள், அப்  பெண் முதலை, 

" நாவல் பழங்கள் இவ்வளவு ருசியாக உள்ளதே. இதையே அன்றாடம் உண்ணும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் ? " என்று நாவில் நீரூற கூறியது.

தன் மனைவியின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசனையில் ஆழ்ந்தது முதலை. மெல்ல நீந்தியபடி கரைக்கு வந்தது.

கரையிலிருந்த குரங்கைக் கண்டதும், " இதை எப்படியாவது தந்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமே ! " என்றெண்ணியது.

அப்போது குரங்கு, " எனக்கு ஓர் ஆசை. அது நிறைவேற உதவுவீர்களா முதலையாரே " என்றது.

"என்ன வேண்டும் கேளுங்கள் குரங்காரே " என்றது முதலை.

"எனக்கு நதிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். எனக்கோ தண்ணீரில் நீந்த தெரியாது. தண்ணீரில் மூழ்கி விடுவேனோ என பயமாக இருக்கிறது. நீங்கள் என்னை உங்கள் முதுகிலேற்றிச் செல்வீர்களா ? " என்றது.

"ஆஹா ! நம் எண்ணம் இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறும் என்றெண்ணவே இல்லையே " என்று மனதிற்குள் மகிழ்ந்த முதலை,

"கண்டிப்பாக அழைத்துச் செல்கிறேன். என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் " என்றது.

மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்த குரங்கு, வரப்போகும் ஆபத்தை உணராது வேடிக்கை பார்த்தபடியே சென்றது.

சற்று தூரம் சென்றதும், முதலை, " குரங்காரே ! என் மனைவி தாங்களளித்த நாவல் பழங்களை சாப்பிட்டு விட்டு, பழங்களே இவ்வளவு சுவையாக இருந்தால், இதை உண்ணும் குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும். குரங்கின் ஈரலை சாப்பிட ஆசையாக உள்ளது  என்று ஆவலுடன் கேட்டாள்.  தங்களிடம் சொன்னால் வரமாட்டீர்களென தெரியும். எப்படி வர வைப்பதென்று எண்ணிக் கொண்டிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள்" என்று சொன்னது.

இதைக் கேட்டதும், அதிர்ச்சி அடைந்த குரங்கு, ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, 

" அப்படியா, மிக்க மகிழ்ச்சி. ஆனால், இதை தாங்கள் கரையிலிருக்கும் போதே சொல்லியிருக்கலாமே. இப்போது தான் என் ஈரலைக் கழற்றி மரத்தில் காயப்போட்டேன். சொல்லியிருந்தால், வரும்போதே எடுத்து வந்திருப்பேன்.என்னைக் கரையில் கொண்டு போய் இறக்கி விடுங்கள். நான் மரத்திலேறி எடுத்து வந்து விடுகிறேன் " என்று தந்திரமாக கூறியது.

இதை உண்மை என நம்பிய முதலை, குரங்கை கரையில் கொண்டு விட்டது. கரையை அடைந்ததும் சடாரென மரத்தில் தாவியேறிய குரங்கு, " அட முட்டாள் முதலையே ! ஈரலை கழற்றி வைக்க முடியுமா ? கழற்றினால், என்னால் தான் உயிரோடு இருக்க முடியுமா ?  உன்னை நம்பிய என்னை ஏமாற்றி  நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாயே. போய் வா." என்று சொல்லிவிட்டு மரத்தில் தாவி மறைந்தது.

ஆராயாத நட்பு ஆபத்தில் விட்டு விடும்.

படத்திற்கு நன்றி,
http://bforball.com

4 comments:

Mythily kasthuri rengan said...

குட்டி பாப்பாவிற்கு சொல்ல நல்ல கதை தோழி !

Tamizhmuhil Prakasam said...

எங்கள் மகனுக்கு சொல்ல யோசித்த போது நினைவுக்கு வந்த கதை தோழி. வலைப்பூவில் எழுதினால், இன்னும் சிலருக்கு பயன்படுமென எண்ணி எழுதினேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி தோழி.

Mathu S said...

அந்த காலத்திற்கே போன ஒரு அனுபவம்
இந்தக் கதை எனக்கு திரு சிவக்கனி சொன்னது.
அவன் இப்போ பாங்களூர்,,
அவன் நினைவை தந்த பதிவு
www.malartharu.org

Tamizhmuhil Prakasam said...

தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.தங்களது பசுமையான நினைவுகளை இக்கதை மலரச் செய்தது என்பதை அறிந்து மகிழ்கிறேன் சகோதரரே.

Post a Comment