blank'/> muhilneel: யாருக்கு நஷ்டம் ?

Tuesday, January 21, 2014

யாருக்கு நஷ்டம் ?

" கமலா ரொம்ப பாவம்பா. அவளுக்கு பரீட்சைன்னாலே ரொம்ப பயமாம். கிளாஸ்ல வைக்கிற சின்ன டெஸ்ட் எல்லாம் ரொம்ப நல்லா எழுதீடறா, ஆனால், மாதப் பரீட்சை, அரைப் பரீட்சை, கால் பரீட்சைல எல்லாம் பெயில்  ஆயிடறா. ஏன்னே புரியல. ஒவ்வோர் பரீட்சை முடிந்து, விடைத்தாள் குடுக்கும் போது, டீச்சர் என்னைய கூப்பிட்டு கேக்கறாங்க. என்னைய, அவளுக்கு படிக்க உதவ சொல்லி இருக்காங்க. அவளுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபுடிக்கணும். அவளும் நல்லா படிக்க உதவணும் " மிகுந்த அக்கறையுடன் தன்  தோழி  சுனந்தவிடம் கூறிக் கொண்டிருந்தாள்  சில்வியா.


சில்வியா, கமலா, சுனந்தா மூவரும் ஒரே வகுப்பில் பயிலும் தோழிகள். கமலா சற்று படிப்பில் பின்தங்கி இருந்தபடியால், அவளுக்கு உதவிட சில்வியாவிடம் சொல்லியிருந்தார் ஆசிரியர். கமலாவிற்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது, சந்தேகங்களை நிவர்த்தி செய்வது, பாடங்களை ஒப்பிக்கச் செய்வது, வகுப்புத் தேர்வுகளை திருத்திக் கொடுப்பது என்று சில வேலைகளை சில்வியாவிற்கு கொடுத்திருந்தார். கமலா மீது தனிக் கவனம் எடுத்துக் கொண்டார் ஆசிரியர். ஆனாலும் ஏனோ, கமலா வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், ஏனோ மாதத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தோல்வியுற்றாள்.


அன்று, எப்போதும் வழக்கமாக நடக்கும் வகுப்புத் தேர்வு இருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து, முதல் பாட வகுப்பின் போது, தேர்வு நடப்பதாய் இருந்தது. மதிய உணவினை முடித்துக் கொண்டு, வகுப்பிற்கு வந்து, தன்  இருக்கையில் அமர்ந்தாள்  சில்வியா. நடக்கவிருக்கும் தேர்வுக்கான பாடங்களை ஒருமுறை நினைவு படுத்திக் கொண்டிருந்தாள். அப்போது, அவள் அமர்ந்திருந்த இருக்கையின், முன்னால் இருந்த இருக்கைக்கு அடியில் ஒரு நோட்டுப் புத்தகத்தினை கவனித்தாள். காற்றில், நோட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் வேகமாய்ப் பறந்தன. காலில் படும்படியாக கீழே கிடக்கிறதே என்று குனிந்து எடுத்தாள்.


அது ஓர்  தேர்வு ஏடு.  அதனை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஏட்டில், கடைசியாய் எழுதிய தேர்வுக்குப் பின், சில வெற்றுத் தாட்கள் விடப்பட்டு, அடுத்த பக்கத்தில், அன்றைய தேர்வுக்குரிய பாடத்தில் உள்ள  முக்கிய கேள்விகளுக்குரிய விடைகள் அனைத்தும் தெளிவாக, அடித்தல், திருத்தல் இல்லாமல், அழகாக எழுதப் பட்டிருந்தது. அது யாருடையது என்று பார்த்த சில்வியாவிற்கு  மேலும் அதிர்ச்சி. அது கமலாவினுடையது.


"இந்தப் பெண் இத்தனை நாளாய் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறாளே ! " என்று ஆத்திரம் வந்தது. அடுத்த நொடியே, " இந்த கமலா நம்மை ஏமாற்றுவதாய் எண்ணிக் கொண்டு, தனையறியாது, தன்னையே  ஏமாற்றிக் கொண்டிருக்கிறாளே ! இதற்கோர் முடிவு கட்ட வேண்டும்" என்றெண்ணிய சில்வியா ஆசிரியரிடம் விஷயத்தை கூறிவிட்டாள். 


மதிய வகுப்பிற்கு வந்த ஆசிரியருக்கு,  கமலாவின் ஏமாற்று வேலைகளைக் கேள்விப்பட்டதும், ஆத்திரம் மேலோங்கியது. அவளது முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும், இப்படி ஏமாற்றி வந்துள்ளதே இப்பெண் என்ற எண்ணத்துடன், கமலாவை அழைத்தார். அவளிடம் கேட்ட கேள்விகள் எதற்கும் பேசாமல் அவள் மௌனம் சாதிக்கவே, மேலும் கோபம் கொண்டு, சடாரென்று மேசையின் மீதிருந்த பிரம்பினை எடுத்து கமலாவை விளாசித் தீர்த்து விட்டார்.


இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கமலா  பள்ளிக்கு வருவதில்லை. மாற்றுச் சான்ரிதழ் வாங்க பதினைந்து நாட்கள் சென்ற நிலையில், பள்ளிக்கு வந்திருந்தாள். அப்போது, அவள் தன்  சக தோழியிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தாள்.


      " ஆமா. பொம்பளைப் புள்ளைங்க படிச்சு என்ன ஆகப் போகுது ? நாளைக்கி கல்யாணம் பண்ணி, சமைச்சு போட்டு, பிள்ளைங்கள பாத்துக்கறதுக்கு, இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கணுமா என்ன ? " என்றாள். கல்வி வேண்டாமென எண்ணுகிறாளே, இதனால் யாருக்கு நஷ்டம் ?


அறியாமை இருளைத் தேடி, ஓர் பயணத்திற்கு ஆயத்தமானாள் கமலா. உணராத உள்ளங்கட்கு வேதம் ஓதி என்ன ஆகப் போகிறது ? இதனால், பின்னாளில் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை எங்ஙனம்  எதிர்கொள்ளப் போகிறாள் ?   
நன்றி, வல்லமை இணைய இதழ் 

4 comments:

கிரேஸ் said...

//ஆமா. பொம்பளைப் புள்ளைங்க படிச்சு என்ன ஆகப் போகுது ? நாளைக்கி கல்யாணம் பண்ணி, சமைச்சு போட்டு, பிள்ளைங்கள பாத்துக்கறதுக்கு, இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கணுமா என்ன ? " // பெரியவர்கள் பலரின் நினைவும் இதுவாகத்தானே இருக்கிறது, இன்றும்! கமலா என்ன செய்வாள், இந்த ரீதியிலான பேச்சுவார்த்தைகளை வீட்டில் கேட்டிருப்பாள்..
பெரியவர்கள் மாறினால் இளையவரும் மாறுவர். பகிர்விற்கு நன்றி தோழி!

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிகள் சகோதரி.

Mythily kasthuri rengan said...

மாற வேண்டியவர்கள் படித்து மாறவேண்டும் தோழி !அருமையான நடை !வாழ்த்துக்கள் .

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

Post a Comment