blank'/> muhilneel

Sunday, November 10, 2013

சிந்தனை திருட்டு



                 காலை வேளையில் வழக்கம் போல், தோழி காவேரிக்காக காத்திருந்த சிந்தனா, சற்று காட்டமாகவே காணப்பட்டாள். அவளது  ஆத்திரமும்  படபடப்பும்  தோழி  காவேரி வந்ததும்  அதிகரித்தது.

காவேரி வந்ததும் வராததுமாய், சிந்தனா  ஆரம்பித்து விட்டாள். " ஏய் ! பாத்தியாடி,  இன்டர்- காலேஜ்  கவிதை போட்டில ஒரு கவிதை முதலிடம் வந்துருக்கே, அதை நோட்டிஸ் போர்ட்ல போட்டுருக்காங்க பாத்தியா? " என்றாள். 

" ஆமாம். கவிதை நல்லா இருக்கு. ஆனா அதை வேற எங்கயோ படிச்ச மாதிரி இருந்தது " என்றாள்  காவேரி.

" அது நான் எழுதுன கவிதை டீ. ஆனா, வேற யாரோ எழுதுனதா சொல்லி போட்டிருக்கு. அதுக்கு முதல் பரிசும் கிடைச்சிருக்கு. நான் கற்பனை பண்ணி எழுதுன கவிதைக்கு   எப்படி வேற ஒருத்தர் உரிமை கொண்டாடலாம் ? " என்று பொரிந்து தள்ளினாள்.

"ஹே! கூல் டவுன் மா. அந்தக் கற்பனையும்  கவிதையும் உனக்கு மட்டும் தான் தோணியிருக்கணும் அப்படின்னு  கட்டாயம் இல்லையே ! ஒரே மாதிரி கற்பனை யாருக்கு வேணும்னாலும் வரலாமே ! இன்னும் சொல்லப் போனா, அது ஒரு சாதாரண கவிதை. இதுக்கு போய் இப்படி கோபப் படுற." என்று சொன்னாள்.

இப்படிச் சொல்லும் காவேரிக்கு எப்படி புரிய வைப்பது ? சொன்னாலும் புரிந்து கொள்ளாது விதண்டாவாதம் பேசுவாள் என்று சிந்தனா அமைதி காத்தாள்.
 
சிறிது நாட்களில், அவர்களது பாடத்திற்கான திட்ட அறிக்கை ( Project Report) சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அவர்கள் கட்டிடக்கலை பொறியியல் துறையைச் சார்ந்தவர்களாதலால், புது மாதிரியான வடிவமைப்புடன் கூடிய கட்டிடங்களுக்கான திட்டம் வகுத்து வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக புதிய மாதிரியில் கட்டிடத்திற்கான திட்டம் வகுத்திருந்தாள்  காவிரி.

திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நாளில், விரிவுரையாளரிடம் காவிரி தன திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க, அவரோ, " இந்த ப்ளான்ல இராதா ஏற்கனவே ப்ராஜெக்ட் பண்றாளே !  நீ வேற ஐடியா செலக்ட் பண்ணும்மா" என்று கூறிச் சென்றுவிட்டார்.

ஆத்திரம் மேலோங்க, கண்கள் கலங்க, தோழி  சிந்தனாவிடம் வந்தாள் காவேரி. " எப்படிடி  நான் உருவாக்கின பிளான்  அவளும் பண்ணலாம் ? என்னோட ப்ராஜெக்ட் அவுட் லைன்( Project  out - line )  அவ திருடிட்டாளோ ? அதெப்படி கற்பனை ரெண்டு பேருக்கும் ஒரே  மாதிரியா வரும் ? " என்று பொரிந்து தள்ளினாள்.

" நீ தானடி சொன்ன... கற்பனை  ஒரே மாதிரி நிறைய பேருக்கு வரலாம்ன்னு. அப்படி அவளோட கற்பனைல, நீ உருவாக்குன மாதிரியே பிளான்  வந்திருக்கும் போல" என்று சிந்தனா   சொன்ன போது  தான் காவேரி உணர்ந்தாள். தனது கற்பனை, தனது படைப்பு, தனது சிந்தனை, எண்ணங்கள் களவாடப் படுவதன் வலியை உணர்ந்தாள். 

தன் தவற்றினை உணர்ந்து தோழி  சிந்தனாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்  காவேரி.



 பின் குறிப்பு : குறுங்கதை எழுதும் முயற்சியில் என் முதல் படைப்பு. நண்பர்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.

Monday, November 4, 2013

கர்மவீரர் காமராஜர்


இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!

காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!

‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

அரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!


பத்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

‘ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத்துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!


நன்றி :- ஆனந்த விகடன்

Friday, November 1, 2013

தீபாவளி வாழ்த்துகள் !




வாழ்வில்  அனைத்து  வளங்களும்  பெற்று 
நலமுடன்  வாழ  இந்த தீபத் திருநாளில் 
வாழ்த்துகிறேன் !!!


நண்பர்கள்  அனைவருக்கும்  இனிய  தீபாவளி   நல்வாழ்த்துகள் !!!!

Monday, October 28, 2013

ஓடும் மேகங்களே !!! - விமான பயண அனுபவங்கள்.

காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு புதிதாய் ஓடிப் பழகும் சிறு பறவை போல மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கையிலேயே, உள்ளந்தனில் புதியதாய் உத்வேகமொன்று பிறந்தது போல, சற்று வேகமாய் ஓடத் துவங்கி, வானில் ஜிவ்வென்று சுதந்திரமாய் சிட்டெனப் பறந்திட சிறகுகள் நீண்டு விரிந்தது போல் வானில் சிறகுகள் விரித்துப் பறக்கத் துவங்கியது அந்த விமானம்.


File:Stockholm, view from plane.jpgவிமானம் வானில் ஏற ஏற, எத்துனையோ உணர்வலைகள். ஏதோ திடீரென வாயிற்கும் வயிற்றிற்கும் இடையே பெரிய காற்றுப் பந்தொன்று  ஏறி இறங்குவது போல், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளினின்று விடுபட்டு, ஆகாயத்திலிருந்து பூமியைக் கண்டால், எழில் ஓவியமென்று காட்சியளிக்கிறது. இரவுப் பொழுதில் மின் விளக்குகளின் ஒளியில், பூவுலகே ஜோதி வடிவாய்க் காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களின்  ஒளியும், அவற்றின் அணிவகுப்பும் ஏதோ விழா அணிவகுப்பு போல  காட்சியளிக்கிறது. பகல் பொழுதினிலோ, இதுவரை ஓவியர் எவரும் வரைந்திடாத எழில் ஓவியமென காட்சியளிக்கிறது. மலைகள், ஓடைகள், நதிகள் என இறைவனின் கைவண்ணத்தில் உருவான பூரணத்துவம் வாய்ந்த இயற்கையின் அழகை  இன்பமாய்  இரசிக்கலாம்.
View trough airplane window in flight

தரையிலிருப்பதெல்லாம்  காண்பதற்கு  சிறு கடுகாய் மாறிப் போக, ஆகாயத்தின் எழில்  பிரமிக்க வைக்கும் வகையில் கண்முன் விரிகிறது. விமானம் இன்னும் சற்று உயர ஏறி  நடுவானில் செல்கையில், மேகக் கூட்டங்களின் மீது  மிதந்து செல்வது போன்றொரு உணர்வு. பஞ்சுப் பொதிகளென வானில் மிதக்கும் மேகங்களை  சிறிது  கைகளில்  அள்ளிக் கொண்டுவிட்டால் என்ன என்று எண்ணுமளவிற்கு  கொள்ளை அழகுடன்  விளங்கின மேகக் கூட்டங்கள்.


ஆதவனவன்  துயில் கலைந்து,   தன மேகப் போர்வையை விலக்கிப்  பார்த்தானோ, அல்லது, தனது கடமையை செவ்வனே முடித்துவிட்டு, ஓய்வெடுக்க கிளம்பிக் கொண்டிருந்தானோ, தெரியவில்லை. வான் வெளியில் மங்களகரமாய்  பொன் மஞ்சள் வண்ணத்தில்  அழகானதோர் பட்டுக் கம்பளம்  விரிந்தது.


http://www.debbiephotos.com/wp-content/uploads/2011/11/Sunset-Plane-Window.jpg 
வானிலிருந்து பார்கையில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களெல்லாம், ஓர் ஒழுங்குடன் நேர்த்தியாய் அடுக்கப்பட்ட தீப்பெட்டிகளைப் போல் காட்சியளிக்கின்றன. 





பூமியிலிருந்து  அண்ணார்ந்து   பார்த்து  இரசித்த நீலவான்வெளியின்  அழகினையும்,  இதயம்  கொள்ளை கொள்ளும்  ஓடும் மேகங்களின்  அழகினையும்  கண்முன்னே, கைக்கு எட்டும்  தொலைவில் - ஆனால்,  எட்டிப் பிடிப்பதென்பது  சாத்தியமற்ற  ஒன்றென்றாலும்,  மிக  அருகாமையில்  கண்டு  களிப்புறச்  செய்யும்  விமானப்  பயணம்  ஒவ்வொன்றுமே,  நினைவலைகளை  விட்டு  நீங்காத  இன்பம்  நிறைத்த  பயணங்களே !!!  


படங்களுக்கு நன்றி.
கூகுள்.


Tuesday, October 22, 2013

சேரிடம் அறிந்து சேர்

நட்பு !
இங்கு உதிர சம்மந்த 
உறவுகள் இல்லை !!
இதயத்தையே நண்பனின் 
உறைவிடமாக்கி  காலங்காலமாய் 
உவகையோடு சுமக்கும் 
உன்னத உள்ளங்கள் !!!

நட்பை என்றுமே உயர்வாக எண்ணுபவள் கலைவாணி.யார் எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வாள் . இளங்கலை பட்டப் படிப்பை  முடித்திருந்த அவள், மேற்படிப்பிற்காக புதிய கல்லூரியில் சேர்ந்திருந்தாள். அவளது வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவியர் ஏற்கனவே, அதே கல்லூரியில் இளங்கலை வகுப்பில் ஒன்றாகப்  படித்தவர்கள். புதிய நண்பர்கள், புதிய சூழல் அனைத்தையும் பழக, கலைவாணிக்கு சிறிது காலம் ஆயிற்று.


அன்றாடம் கல்லூரிக்கு தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வாள். சில சமயங்களில், தந்தைக்கு ஏதேனும் அலுவல்கள் இருப்பின், கல்லூரிக்கு நடந்தே சென்று விடுவாள். அப்படி ஒருநாள் நடந்து செல்லும் போது தான், வகுப்பில் உடன் பயிலும் மாணவி சந்திரா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாள். கலைவாணியைக் கண்டதும், வண்டியை நிறுத்தி அவளையும் ஏற்றிக் கொண்டாள். அவ்வப்போது நடந்து செல்லும் போதெல்லாம், சந்திரா, கலைவாணியை தன்னுடன் அழைத்துச் செல்வாள்.


ஒருநாள் சந்திரா, இனிமேல் தானே கலைவாணியை  வீட்டில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி, அன்றாடம் கலைவாணியை அழைத்துச் சென்று, கல்லூரி முடிந்ததும் வீட்டில் கொண்டுவந்து விட்டுச் செல்வாள். எங்கு சென்றாலும் சந்திராவும் கலைவாணியும் ஒன்றாகவே செல்வர். அவர்களிடையேயான உறவு  மிகவும் நெருக்கமானதாக கலைவாணி எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால், உண்மையில்,  தனது  அவசர உதவிகள், வீட்டில் நடக்கும்  விசேஷங்களுக்கு பொருட்கள் வாங்க, சந்திராவின் காதலுக்கு தூது செல்ல என்று அவளது தேவைகட்கு எல்லாம் பயன்படுத்தினாள். இது பல நாட்களாக கலைவாணிக்கு புரியவில்லை.


ஒருமுறை, கல்லூரியில் சுற்றுலா செல்ல ஏற்பாடாயிருந்தது. கலைவாணியின் பெற்றோர் ஏதோ காரணத்திற்காக செல்ல வேண்டாமெனக் கூற, அவர்களை சமாதானப்படுத்தி கலைவாணியையும் சுற்றுலாவுக்கு வரச் செய்தாள். சுற்றுலாவின்  போது, கலைவாணிக்கு சற்று உடல்நலக் குறைபாடு ஏற்பட, மிகவும் சோர்வாக அமைதியாக இருந்தாள். அவளால் கலகலப்பாக இருக்க முடியவில்லை.இதை உணர்ந்து கொள்ளாத சந்திரா, மற்ற தோழியருடன் சேர்ந்து கலைவாணியை மிகவும் உதாசீனப் படுத்த, மிகவும் வருத்தப்பட்டாள் கலைவாணி. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சந்திராவுடன் பழக ஏனோ தயங்கினாள் கலைவாணி.


நான்கைந்து மாதங்கள் சென்றிருக்கும். அவர்களது பாடம் சம்மந்தமாக, ஏதேனும் நிறுவனத்தில் ஆறுமாத காலம் பணியாற்றி, திட்ட அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். அதற்காக, பல நிறுவனங்கள் தேடி அலைந்தால் கலைவாணி. இறுதியில், வெளியூரில் இருக்கும் ஓர்  நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்க, அங்கு சேர்ந்தாள். அங்கு முதல் நாள் சென்ற அவளுக்கு, பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு ஏற்கனவே சந்திரா சேர்ந்திருந்தாள். ஆனால், அதைப் பற்றி கலைவாணியிடம் ஏதும் கூறவில்லை. இதனை அறிந்தபோது, கலைவாணி, இந்த விஷயம் அவளை பாதித்ததாக காட்டிக் கொள்ளவில்லை.


ஒருமாதத்தில் பொங்கல் விடுமுறை வர, விடுதியில் தங்கியிருந்த மாணவியர் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல பிரயாணத்திற்கு பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்தனர். அன்று மாலை, சந்திரா, கலைவாணி , இன்னும் சில தோழிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஊருக்கு செல்வது பற்றி பேச்சு எழ, சந்திரா கலைவாணியிடம், பதிவுச் சீட்டு முன்பதிவு செய்தாயிற்றா என்று வினவினாள். அதற்கு கலைவாணி, தனது பெற்றோர் அவள் இருக்குமிடத்திற்கே வந்து விடுவதாக சொல்லியிருப்பதாகவும், அந்த விடுமுறையை அவர்கள் குடும்பத்துடன் அங்கேயே கழிக்கப் போவதாகவும் கூற, சற்றும் எதிர்பாராமல் " அப்போ, பொங்கலுக்கு முன்னாடி போகி வருமே? இங்க இருந்தா எப்படி கொண்டாடுவீங்க? " என்றவள், சட்டென்று " கலைவாணி போகிக்கு அவளே அவளை எரிச்சுக்குவாடி" என்று சொல்லி கொல்லென்று சிரித்தாள்.  அதைச் சற்றும் எதிர்பாராத கலைவாணி, கலங்கிய கண்களுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.


" சேரிடம் அறிந்து சேர் " 

என்ற கூற்றில் பொதிந்திருக்கும் மாபெரும் உண்மையை அன்று தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்தாள்  கலைவாணி.