blank'/> muhilneel: இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? (தொடர் பதிவு)

Tuesday, June 24, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? (தொடர் பதிவு)

என்னை தொடர் பதிவிற்கு அழைத்த தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு என் நன்றிகள். இதோ, என் பதில்கள்.

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

               என்னுடைய நூறாவது பிறந்த நாளை என் நண்பர்கள்  உறவினர்கள் நினைவு கூர்வதை விண்ணுலகில் இருந்து கண்டு கழித்து, மகிழ்ச்சியில் திளைக்க விரும்புகிறேன்.
 
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

                நாளும் புதிது புதிதாக, என்னால் எவற்றையெல்லாம் என் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவையும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். கற்பதற்கு வயது ஓர் தடையா என்ன ?
 
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

              பேசப் பழகிக் கொண்டிருக்கும் என் மழலைச் செல்வம் இப்போது புதிதாய் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் வார்த்தை, "தக்காளி". அதை என் பிள்ளை சொல்லும் முறை கண்டு இரசித்து சிரித்தேன். 
     
4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

        நம்மையே அறியாமல் நம்மை கட்டிப் போடும் கணினி, கைபேசிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். சுற்றி இருக்கும் நண்பர்கள் உறவினர்களிடம் மனம் விட்டு பேச அதிக நேரம் கிடைக்கும்.

மண் பானையில் நீரை சேமித்து குளிர்ச்சியான நீராய் பருகலாம்.

மறந்து போன தென்னை ஓலை, பனை ஓலை, பிளாஸ்டிக் கை விசிறிகள் கைகொடுக்கும். மாலைப் பொழுதில், மொட்டை மாடியில் நின்றால், சிலு சிலுவென்று வீசும் காற்று உடலுக்கும் உள்ளத்திற்கும் குளிர்ச்சி தரும்.
    
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

     கணவன் - மனைவி இருவரில் எவரும் உயர்ந்தவருமில்லை, தாழ்ந்தவருமில்லை. ஒருவரது கருத்திற்கும் உணர்வுகளுக்கும் மற்றவர் நிச்சயம் மதிப்பு கொடுக்க வேண்டும். புரிதலுடன் கூடிய பரஸ்பர அன்பே திருமண பந்தத்தில் அவசியம்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

மதப் பிரச்சனை.

 மதம் மனிதனை நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர, மதம் மனிதத்தினை, அன்பினை குலைத்திடக் கூடாது.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களிடம். பெற்றோர், உடன் பிறந்தோர், நெருங்கிய நண்பர்கள்.
 
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

இதைப் பற்றி அறிந்ததும் முதலில் ஆத்திரம் ஏற்படும். என்னைப் பற்றி தவறான தகவல் பரப்புகிறவர் எதற்காக இதைச் செய்கிறார் என்று யோசிப்பேன். நெருங்கியவர்களிடம் விவாதிப்பேன். இதனால், அவருக்கு ஏதோ அற்ப சந்தோசம் கிடைக்கிறது, மகிழ்ந்திருந்து விட்டுப் போகட்டும், எத்தனை காலம் நாம் அவருக்கு அவலாகப் போகிறோம், மெல்ல புதிய விஷயம் கிடைத்ததும், நம்மைப் பற்றிய பேச்சு பழையதாகிப் போய் விடும் என்று விட்டு விடுவேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

அந்த சமயத்தில் எதுவும் சொல்லாது ஆதராவாய் அவரது அருகில் இருந்தாலே, அவருக்கு அது பெரிய ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருக்குமென்றே நான் எண்ணுகிறேன்.
 
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?  

கவிதைகள் கதைகள் உருவாக ஏற்ற நேரம் தனிமை. மனதில் தோன்றும் புதிய எண்ணங்களை குறிப்பெடுத்துக் கொண்டிருப்பேன். அல்லது, புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முயன்று கொண்டிருப்பேன். 

இந்தப் பதிவைத் தொடர நான் அழைக்கும் நட்புறவுகள் :

1. சகோதரி உஷா அன்பரசு அவர்கள்  
2.  சகோதரி ஞா. கலையரசி அவர்கள்  
3.  சகோதரி ஆதி வெங்கட் அவர்கள்  
4.  சகோதரி எழில் அவர்கள்  

5.  சகோதரி ஜெயஸ்ரீ சங்கர்  அவர்கள் 

10 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி தோழி.
பதில்கள் ஒவ்வொன்றும் அருமை..குறிப்பாக திருமண நாளின் அறிவுரை மிக நன்று. உங்கள் மழலையுடன் மகிழ்ச்சி பெருகட்டும்.
வாழ்த்துகள் தோழி.

Avargal Unmaigal said...

ஆஹா நான் ஆரம்பித்து வைத்த தொடரில் நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா? ஹீ.ஹீ பதில்கள் அருமை பாராட்டுக்கள்

Tamizhmuhil Prakasam said...

@ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நன்றிகள் தோழி.

Tamizhmuhil Prakasam said...

@ அவர்கள் உண்மைகள்

நீங்கள் தான் ஆரம்பித்து வைத்தீர்களா ?

என்னைப் பற்றியும், எனது எண்ணங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே இதை கருதிக் கொள்கிறேன்.

நன்றி சகோதரரே.

திண்டுக்கல் தனபாலன் said...

/// மதம் மனிதத்தினை, அன்பினை குலைத்திடக் கூடாது... ///

சிறப்பு...

பாராட்டுக்கள்...

வாழ்த்துக்கள்...

Mythily kasthuri rengan said...

மூன்றும் நாலும் கவிதை!!!
அருமை தோழி!
வாழ்த்துகள்!

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ Mythily Kasthuri Rengan

மிக்க நன்றி தோழி.

ஜெயஸ்ரீ ஷங்கர் said...

என்னை தொடர் பதிவிற்கு அழைத்த தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு என் நன்றிகள். இதோ, என் பதில்கள்.

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

வழக்கம்போலத்தான், முதியோர்களுடன்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

"என்னைக் கற்றுக் கொள்ளவே விரும்புகின்றேன்..."

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

அட.....இப்பத்தான் சிரிச்சுண்டே இருக்கேன்....உங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதும் சந்தோஷச் சிரிப்பு...!

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

மின்சார விலங்கிலிருந்து விடுபட்டு இயற்கைக்குள்ளே சிக்கிக் கொள்வேன்..!

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

கணவன் - மனைவி என்ற உறவுக்குள் ஒடுங்கிவிடாமல் நண்பர்களாக வாழணும் ...!

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

முதியோர் இல்லங்களை வளரவிடாமல்.....முதியோர்களுடன் வாழும் இல்லங்களாக மாற்றும் எண்ணம் உண்டு...!

இன்னொன்று: பணப் பிரச்சனை ..! நிச்சயம் என்னால் முடிந்தால் இதைத் தீர்க்க உத்தேசம்...! (குபேரா......நான் இங்க இருக்கேன்...இங்க....இங்க....)

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
' ஜெயஸ்ரீயின் மனசாட்சியிடம்'

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அடுத்தவரின் அற்பச் செயலுக்கு இப்படியும் மனம் அவஸ்தைப் பட விடலாமோ?

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

தோழியின் கணவர் இறந்து விட்டால்...! சோகத்தில் அவளோடு மௌனமாக சோகத்தில் பங்கெடுப்பேன்.
இழந்தது பேரிழப்பு தான்...பார்வையும், ஸ்பரிசமும் ஆதரவைச் சொல்லும்."சோகத்தைக் கடத்திடும் காலம்.." அந்த நேரத்தில் ஆறுதலாக இருப்பேன்.


10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
ஆஹா..தனிமை...! நானும்...... நானுமா...! எண்ணங்களை எழுத்தாக்குவேன்.

Tamizhmuhil Prakasam said...

அனைத்து பதில்களும் மிக அருமை சகோதரி.

என் அழைப்பினை ஏற்று தொடர் பதிவில் பங்கேற்றமைக்கு நன்றிகள் சகோதரி.

Post a Comment