காலை வேளையில், பேருந்தின் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டாள் சரிதா. இது அன்றாடம் நடக்கும் ஓர் வழக்கமான நிகழ்வு தானென்றாலும், அன்று என்னவோ கூட்டம் சற்று அதிகமாக இருந்ததாகவே தோன்றியது. பேருந்திலேறி, அவள் பணிபுரியும் கல்லூரியை வந்தடைவதற்குள் சோர்ந்து விடுவாள்.
அன்றும் வழக்கம் போல், பேருந்து கூட்டமாகவே இருந்தது. அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும், தனக்கு முன் இருந்த பெரும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறி வாயிற்படியை வந்தடைந்தாள். அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்க வேண்டியவர்களும், அப்போது தான் ஏறியவர்களும் பேருந்தின் வாயிலை அடைத்துக் கொண்டு நின்றனர். அவர்களை விலகி வழி விடும்படி கேட்டுக் கொண்டும், எவரும் இம்மி அளவும் இடமோ, வழியோ தருவதாக இல்லை.
ஒருவழியாக அனைவரையும் தாண்டி பேருந்தின் படிக்கட்டினை வந்தடைந்தாள். படியில் இறங்கியவள், தரையில் கால் வைக்க எத்தனித்தாள் . அவளால் முடியவில்லை. இதற்குள், பேருந்தின் நடத்துனரும், " சீக்கிரமா இறங்கும்மா ! " என்று அதட்டவும், யாரோ பின்னாலிருந்து அவளது சேலையை இழுப்பது போல் தோன்ற, சற்று வேகமாக காலை எடுத்தவள், தடுமாறி கீழே விழுந்து விட்டாள். அவளது சேலை, அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பெண்ணின் காலடியில் சிக்கி இருந்திருக்கிறது. இதை அறியாது இறங்கியவள், படியிலிருந்து கீழே விழுந்து விட்டாள்.
கையில் வைத்திருந்த புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தும் சாலையில் சிதறிக் கிடக்க, விழுந்தவள் சுதாரித்து எழுவதற்குள், நடத்துனரின் மனிதாபிமானமற்ற குரல் அவளது காதில் வந்து விழுந்தது.
" ஏம்மா ! அந்தப் பக்கம் போய் விழுகறது தான ! எங்கயாவது பஸ் சக்கரத்துல விழுந்து சாகப் போற. எந்திரி ! எந்திரி ! எனக்கு நேரமாகுது ! பஸ்ஸ எடுக்கணும். போ ! போ ! " என்று அந்த உக்கிரமான குரல் கேட்டும் அவளால் எழ முடியவில்லை.
காலிலும் கையிலும் சரியான அடி. அங்கு நின்றிருந்தவர்கள் யாரும் இவளை கண்டு கொள்ளவில்லை. அப்போது அங்கு வந்த பேருந்திலிருந்து இறங்கிய அவளுடன் பணிபுரியும் ஆசிரியை இராதா அவர்கள், சரிதாவைக் கண்டதும் பதறிப் போய், கை கொடுத்து தூக்கி, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தி, உடனழைத்துச் சென்றார். அந்த நொடியில், அவர் சரிதாவுக்கு தெய்வமாகவே தோன்றினார்.
அவசரகதியான உலகில் சுயநலமும், மனிதாபிமானமுமற்ற மனிதர்கள் மத்தியில் நம் வாழ்க்கை மிகவும் சிரமத்துடனேயே உழன்று கொண்டுதானிருக்கிறது.
ஹ்ம்ம்ம் அவ்வளவு தூரம் மனிதநேயம் அற்றுப்போய் விட்டதா???? வருத்தம் தான்..
ReplyDeleteநல்ல கதை தோழி
நாளுக்கு நாள் மனிதாபிமானம் குறைந்து கொண்டு வருவது வேதனை...
ReplyDelete@ கிரேஸ்
ReplyDeleteமனிதநேயம் மரித்துக் கொண்டு தான் வருகிறது.இது கதை அல்ல தோழி. என் சொந்த அனுபவம்.
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஉண்மை தான் ஐயா.