Pages

Monday, October 28, 2013

ஓடும் மேகங்களே !!! - விமான பயண அனுபவங்கள்.

காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு புதிதாய் ஓடிப் பழகும் சிறு பறவை போல மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கையிலேயே, உள்ளந்தனில் புதியதாய் உத்வேகமொன்று பிறந்தது போல, சற்று வேகமாய் ஓடத் துவங்கி, வானில் ஜிவ்வென்று சுதந்திரமாய் சிட்டெனப் பறந்திட சிறகுகள் நீண்டு விரிந்தது போல் வானில் சிறகுகள் விரித்துப் பறக்கத் துவங்கியது அந்த விமானம்.


File:Stockholm, view from plane.jpgவிமானம் வானில் ஏற ஏற, எத்துனையோ உணர்வலைகள். ஏதோ திடீரென வாயிற்கும் வயிற்றிற்கும் இடையே பெரிய காற்றுப் பந்தொன்று  ஏறி இறங்குவது போல், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளினின்று விடுபட்டு, ஆகாயத்திலிருந்து பூமியைக் கண்டால், எழில் ஓவியமென்று காட்சியளிக்கிறது. இரவுப் பொழுதில் மின் விளக்குகளின் ஒளியில், பூவுலகே ஜோதி வடிவாய்க் காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களின்  ஒளியும், அவற்றின் அணிவகுப்பும் ஏதோ விழா அணிவகுப்பு போல  காட்சியளிக்கிறது. பகல் பொழுதினிலோ, இதுவரை ஓவியர் எவரும் வரைந்திடாத எழில் ஓவியமென காட்சியளிக்கிறது. மலைகள், ஓடைகள், நதிகள் என இறைவனின் கைவண்ணத்தில் உருவான பூரணத்துவம் வாய்ந்த இயற்கையின் அழகை  இன்பமாய்  இரசிக்கலாம்.
View trough airplane window in flight

தரையிலிருப்பதெல்லாம்  காண்பதற்கு  சிறு கடுகாய் மாறிப் போக, ஆகாயத்தின் எழில்  பிரமிக்க வைக்கும் வகையில் கண்முன் விரிகிறது. விமானம் இன்னும் சற்று உயர ஏறி  நடுவானில் செல்கையில், மேகக் கூட்டங்களின் மீது  மிதந்து செல்வது போன்றொரு உணர்வு. பஞ்சுப் பொதிகளென வானில் மிதக்கும் மேகங்களை  சிறிது  கைகளில்  அள்ளிக் கொண்டுவிட்டால் என்ன என்று எண்ணுமளவிற்கு  கொள்ளை அழகுடன்  விளங்கின மேகக் கூட்டங்கள்.


ஆதவனவன்  துயில் கலைந்து,   தன மேகப் போர்வையை விலக்கிப்  பார்த்தானோ, அல்லது, தனது கடமையை செவ்வனே முடித்துவிட்டு, ஓய்வெடுக்க கிளம்பிக் கொண்டிருந்தானோ, தெரியவில்லை. வான் வெளியில் மங்களகரமாய்  பொன் மஞ்சள் வண்ணத்தில்  அழகானதோர் பட்டுக் கம்பளம்  விரிந்தது.


http://www.debbiephotos.com/wp-content/uploads/2011/11/Sunset-Plane-Window.jpg 
வானிலிருந்து பார்கையில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களெல்லாம், ஓர் ஒழுங்குடன் நேர்த்தியாய் அடுக்கப்பட்ட தீப்பெட்டிகளைப் போல் காட்சியளிக்கின்றன. 





பூமியிலிருந்து  அண்ணார்ந்து   பார்த்து  இரசித்த நீலவான்வெளியின்  அழகினையும்,  இதயம்  கொள்ளை கொள்ளும்  ஓடும் மேகங்களின்  அழகினையும்  கண்முன்னே, கைக்கு எட்டும்  தொலைவில் - ஆனால்,  எட்டிப் பிடிப்பதென்பது  சாத்தியமற்ற  ஒன்றென்றாலும்,  மிக  அருகாமையில்  கண்டு  களிப்புறச்  செய்யும்  விமானப்  பயணம்  ஒவ்வொன்றுமே,  நினைவலைகளை  விட்டு  நீங்காத  இன்பம்  நிறைத்த  பயணங்களே !!!  


படங்களுக்கு நன்றி.
கூகுள்.


4 comments:

  1. நாங்களும் உடன் பயணித்தோம்... ரசனைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. @ திண்டுக்கல் தனபாலன்
    தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  3. @ கிரேஸ்

    தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete