Pages

Sunday, August 18, 2013

கண் திறந்தது !!!




உறையூர் கிராமத்தில் சொக்கன், விறகு வெட்டி தன் அன்றாட ஜீவனத்தை நடத்திக் கொண்டு வந்தார். தினமும் காலை, அருகிலிருக்கும் காட்டுக்குச் சென்று விறகுகளை வெட்டி வந்து, தன் குடிசைக்கு வெளியில் விறகு கட்டைகளை  சிறுசிறு கட்டுகளாகக்  கட்டி அடுக்கி வைத்திருப்பார். சில சமயங்களில், லாரி அல்லது டெம்போ போன்ற வாகனங்களில் ஆட்கள் வந்து மரங்களை ஏற்றிச் செல்வர். இல்லையெனில், சொக்கன் அவற்றை வண்டியில் கட்டி சுமை ஏற்றிக்கொண்டு சென்று மரமறுக்கும் தொழிற்சாலையில் போட்டு வருவார். சில சமயங்களில், சில்லறை விலைக்கும் மக்கள் விறகு வாங்கிச் செல்வர்.

சொக்கனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் முனியன். மிகவும் புத்திசாலி. சூட்டிகையானவனும் கூட. எதையும் கூர்ந்து கவனித்து கிரகித்துக் கொள்ளும்  ஆற்றல் பெற்றவன்.எந்த விஷயமானாலும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விடுவான்.படிப்பிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தான் .தான் கற்றதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துபவன்.

ஓர் நாள் மாலை, சொக்கன் வெட்டிய  மரச்சுமையை வண்டியிலேற்றிக் கொண்டு  வீடு வந்து சேர்ந்தார். அவர் வழக்கமாக மரங்களை இறக்கி வைக்குமிடத்தில் இரண்டு அரையாள் உயர வேம்பு கன்றுகள் புதிதாய் நடப்பட்டு இருந்தன. யாரிங்கு நட்டு வைத்திருப்பார்கள் என்று எண்ணியவாறு, 

“ முனியா ! முனியா ! இங்கன வா ஐயா ! “ என்று தன் மகனை அழைத்தார்.

“ என்ன அப்பாரு ? கூப்பிட்டீகளா ? “ என்றவாறு வந்தான் சொக்கனின் மகன் முனியன்.

“ யாரய்யா இங்ஙன வேப்பஞ் செடிய நட்டு வெச்சது ?” என்ற சொக்கனது கேள்விக்கு 

“நாந்தான் அப்பாரு வெச்சேன்” என்றான் முனியன்.

“ஏன்?” என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தினார் சொக்கன். 

சிறிது நேர அமைதிக்குப் பின், “நமக்கு மரக்  கட்டைகள், விறகு அடுக்கி வைக்க இருக்கறதே இந்த கொஞ்ச இடம் தான், நீ இங்கன கொண்டு வந்து மரக் கண்ணை நட்டு வெச்சுட்டியே ஐயா” என்றார்  சொக்கன்.

“எங்க பள்ளிக்கூடத்துல இன்னிக்கு வாத்தியாரு நமக்கெல்லாம் மூச்சுக் காத்து தர்றது இந்த மரங்களும் செடிகொடிகளுந்தேன்னு சொன்னாக. நம்ம வீட்ல தொழிலே மரம் வெட்டுறதுதேன். இப்போ நம்ம பொழப்புக்காக மரத்த வெட்டி சம்பாதிச்சு சாப்பிடறோம். இப்புடியே மரத்த வெட்டிட்டே இருந்தா, நாளைப்பின்ன நாம உசுரோட இருக்க தேவையான மூச்சுக் காத்துக்கு எங்ஙன போய் மரத்த தேடுறது ? அதேன், இங்ஙன ரெண்டு வேம்பு கண்ணுகளை நட்டு வெச்சிருக்கேன். இதுக வளந்து நின்னா, நாளைக்கு நமக்கு உபயோகமா இருக்குமில்ல ? நாம மரக் கட்டைகளை அடுக்கி வைக்க வேற இடம் பாத்துக்கலாம் அப்பாரு“ என்ற முனியனது பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய் நின்றார் சொக்கன். அவரது கண்களில் நீர் கரைபுரண்டோடியது. அந்த நொடியே, சொக்கனது மனம், “ இனி மரங்களை வெட்டுவதில்லை! “ என சபதம் கொண்டது.

தான் இத்தனை காலம், மரங்களை வெட்டி மனித சமூகத்திற்கே பெரும் கேடுதனை விளைவித்து வந்திருந்ததை உணர்ந்தார். தான் இத்தனை நாள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, மாதா மாதம் ஒரு மரக் கன்றேனும் நட வேண்டுமென மனதில் உறுதி மேற்கொண்டார். அதனை நிறைவேற்றும் விதமாக, ஒரு மரக் கன்றினை நட்டு நீரூற்றினார். அந்த மரக் கன்று காற்றில் அசைந்தாடி, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர் மேல் உரசி நின்றது. அவரது மனதில் புத்துணர்வை உணர்ந்தார்.

No comments:

Post a Comment