Pages

Tuesday, December 20, 2011

கதை-4



ராம்சரண் வளரும் தொழிலதிபர்.அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்திருந்தது . காரணம், பள்ளி சென்ற அவர்களது ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிக்  கொண்டிருந்தனர். யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டு மிரட்டினார்களா , தொழில் முறை எதிரிகள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .
            அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.யாருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.காவல் துறையினரும் அந்த நகரில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர்.இப்படியே ஒரு மணி நேரம் கழிந்தது.அவளைப் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.மகளைக் காணவில்லை என்ற நினைப்பில், தாய் தேஜஸ்வினிக்கு மயக்கமே வந்து விட்டது.அவளுக்கு ஒருபுறம் மருத்துவ உதவி நடந்து கொண்டிருந்தது.ராம்சரண் கார் டிரைவரை அடிக்காத குறையாக, காரசாரமாய் திட்டிக் கொண்டிருந்தார்."ஸ்கூல் விடுகிற டைமுக்கு எங்க போய் ஊர் சுத்திட்டு இருந்த?" என்று கத்த, டிரைவரோ, "சார், நான் கரெக்டா ஸ்கூல் விடுற டைமுக்கு ஸ்கூல் கேட் கிட்ட தான் சார் இருந்தேன்.பாப்பா வரலை சார், கொஞ்ச நேரம் கழிச்சு டீச்சர் கிட்ட போய் கேட்டதுக்கு, அவங்க, பாப்பா விட்டதும் போய்டுச்சுன்னு சொன்னாங்க சார் .நானும் இவ்வளவு நேரம் அங்க தேடிப் பாத்துட்டு தான் சார் வரேன்" என்றான்.தேஜஸ்வினியின் தோழிகள் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றிக் கொண்டிருந்தனர். ராமின் நண்பர்களும் அலைபேசியில் யார் யாரையோ அழைத்து பேசிக் கொண்டிருந்தனர்.
             மணி ஏழு அடித்தது.அப்போது யாரோ வீட்டின் கேட்டினை  திறந்து கொண்டு வரும் சத்தம் கேட்டது.கார் டிரைவர் வேகமாக ஓடிச் சென்று பார்த்தான்.அங்கு, கேட்டினைத் திறந்து கொண்டு அவர்களது சிறுமி சிந்தியா வந்துகொண்டிருந்தாள். குழந்தையை தேஜஸ்வினி ஓடி வந்து வாரி அணைத்துக் கொண்டாள்."எங்கடா செல்லம் போய்ட்ட,உன்னை யாரவது பிடிச்சிட்டு போயிட்டாங்களா??,யாரவது ஏதாவது சாப்பிட கொடுத்து,உன்னை தூக்கிட்டு போயிட்டாங்களா??" என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே இருந்தாள்.கூட்டத்தைக் கண்டு மிரண்ட குழந்தை,மெதுவாக வாய் திறந்தது."மம்மி, நான் பக்கத்து தெருவுல இருக்க பிரியா வீட்டுக்கு போய் ஹோம் வொர்க் பண்ணிட்டு வரேன்.அவளை அவங்க மம்மி கூப்பிட வந்தப்போ, நானும் அவங்க கூட போயிட்டேன்.வீட்ல நீயோ,டாடியோ எனக்கு ஹோம் வொர்க் சொல்லிக் குடுக்கறது இல்ல.அதனால அவள் கூட போய், அவங்க மம்மி சொல்லிக் குடுத்த ஹோம் வொர்க் பண்ணி முடிச்சிட்டு வரேன்"என்றாள்.அனைவரும் மௌனமாய் வாயடைத்து, பிள்ளைகளுக்கு, பெற்றவர்களின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர்களாய் நின்றனர்.



http://www.eegarai.net/t75627p150-5#698060         

No comments:

Post a Comment