blank'/> muhilneel: நினைவுப்பாதை - வாழ்த்து அட்டைகள்

Thursday, January 11, 2018

நினைவுப்பாதை - வாழ்த்து அட்டைகள்

வாழ்த்து அட்டைகள்கைபேசி, கணினி, இணையம் என்று இன்று உலகமே நம் கைக்குள் அடங்கி விட்டிருக்கிறது. நம் நட்பு, சுற்றத்துடன் நினைத்த மாத்திரத்தில் நம்மால் தகவல் தொடர்பு செய்து கொள்ள முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு விரைவாக ஒன்றை பெறுகிறோமோ, அதை விட வெகு விரைவாகவே அவற்றை மறந்தும் போகிறோம். இவற்றுள் நாம் பிறரிடமிருந்து பெறும் வாழ்த்துகளும் அடங்கும்.

மின்னஞ்சல்(e-mail), குறுஞ்செய்தி(SMS), முகநூல்(Facebook), கட்செவி(Whatsapp) என்று நமக்கு இன்று அன்பை பரிமாற ஆயிரம் வழிகள். இணையம் மட்டும் துணையிருந்தால் போதும். இந்த அன்புப் பரிமாற்றம் சில காலம் நம் நினைவில் நிற்கும். ஆனால், அன்பின் வார்த்தைகளை காலகாலத்திற்கும் நம்மால் பொக்கிஷமென பாதுகாத்து வைத்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகையில், அதற்கான பதில் முடியுமென சொல்வது சந்தேகமே.

கால ஓட்டத்தில் நம் நினைவை விட்டு அகல்வது ஒருபுறம் இருக்கட்டும். மின்னியல் வாயிலாக நாம் சேமிக்கும் அனைத்தும், ஒரு கட்டத்தில் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறது. தரவுகளை சேமிக்க நமது உபகரணங்களில் (devices) போதிய கொள்ளடக்கம் (memory) இல்லாது போகலாம். அவ்வாறான சமயங்களில், இடப்பற்றாக்குறை காரணமாக நாமே நாம் ஆசையாக படித்ததை, சேமித்ததை அழித்துவிடும் நிலைக்கு நிர்பந்திக்கப் படலாம். இது இன்றைய நிலை.

சில காலத்திற்கு முன், அதாவது, ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன், தகவல் பரிமாற்றம் என்பது அஞ்சல் முறையில் இருந்தது. அஞ்சல் உறைகள் (Envelopes), தபால் தலைகள் (Stamps), வாழ்த்து அட்டைகள் (Greetings), தந்தி முறை (Telegram), உள்நாட்டு அஞ்சல் தாட்கள் (Inland Letter) என்று இவற்றுள் ஏதேனும் ஒன்றிற்காக தபால் நிலையம் சென்ற அனுபவம் நம் அனைவருக்கும் இருக்கும். இவை அனைத்தும் இன்றும் இருக்கிறது. ஆனால், முன்போல் இல்லை. இது நிச்சயமாக நமக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. முன்னைவிட வெகு விரைவாக, வெகு எளிதாக தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது. ஆனால், அஞ்சல் வழியில் கிடைத்த மகிழ்வும், பேரானந்தமும் மின்னஞ்சல் வழியில் சற்றே சுவாரஸ்யம் குறைந்து தான் போய் இருக்கிறது. இங்கு மின்னஞ்சல் என்று குறிப்பிட விரும்புவது, குறுஞ்செய்தி தொடங்கி, மின் வாழ்த்து அட்டைகள், இன்றைய கட்செவி என்றழைக்கப்படும் Whatsapp வரை அனைத்திற்கும் பொருந்தும்.

சில வருடங்களுக்கு முன் வரை, புத்தாண்டு , பொங்கல் வாழ்த்து அட்டைகள் வெகு பிரபல்யம். பொங்கலின் போது களை கட்டும் பூளைப்பூ, ஆவாரம் பூ, கரும்பு, மஞ்சள் இவற்றின் விற்பனையோடு, வாழ்த்து அட்டைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெறும். சூரியன், விவசாயி, பசுக்கள், காளைகள், வயல் வெளி, நெற்கதிர்கள், பொங்கல் பானை , கரும்பு என்று பல வண்ணங்களில், அழகான எண்ணங்களோடு அச்சடிக்கப் பட்டிருக்கும் அட்டைகள் கடைகளில் அலங்காரமாய் வீற்றிருக்கும். இவை மட்டுமல்லாது, வண்ண மலர்கள், நடிக, நடிகையர் படங்கள் போட்ட அட்டைகள் என்று பல வகையான அட்டைகள் விற்பனைக்கு வரும்.

பொங்கலுக்கு இரண்டு வாரத்திற்கு முன் வாழ்த்து அட்டைகளை வாங்கி, அதில் "அன்புள்ள " என்று தொடங்கி, உறவுகளை எல்லாம் குறிப்பிட்டு, "இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று எழுதி, பொங்கல் பானையுடன், கரும்பும் வரைந்து , "அன்புடன்" என வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களின் பெயர்களை குறிப்பிட்டு, உறையிலிட்டு, அஞ்சல் தலை ஒட்டி, தபால் பெட்டியில் சேர்த்து விட்டு, நமக்கான பொங்கல் வாழ்த்து அட்டைகளுக்காக, நாளும் பள்ளி முடிந்து வந்து வீட்டில் தபால் ஏதேனும் வந்திருக்கிறதா என்று பார்ப்பதிலும், தபால் காரரை பார்த்ததும், வாழ்த்து அட்டைகள் ஏதேனும் வந்திருக்கிறதா என்று கேட்டு மகிழ்வதிலும் ஆரம்பமாகிறது, பண்டிகையின் குதூகலம்.

நமக்கு மிகவும் பிடித்த நெருக்கமான உறவுகள், அது பெரியம்மாவோ, தாத்தா பாட்டியோ, சித்தியோ, அத்தையோ, மாமாவோ, பெரியப்பா, சிற்றப்பா, அண்ணன், தங்கை, மதினி, மச்சான் யாராக இருப்பினும், அவர்களின் கையெழுத்து இட்டு வரும் வாழ்த்து அட்டைகளுக்கு என்றென்றும் தனி மதிப்பு. கால ஓட்டத்தில், வாழ்த்து அட்டைகள் உருக்குலைந்து போனாலும், அதை பொக்கிஷமென காக்கப் பட்டிருக்கும். இன்றளவும், அவை பலரது மனதிற்கு இன்பமளித்து, குதூகலம் அளிக்கலாம்.

காலங்கள் மாற மாற, உலகம் நம் கைக்குள் என்று பெருமிதம் கொள்கிறோம், நாம் உறவுகளை விட்டு வெகுதூரம் ஓடுகிறோமா, அல்லது உறவுகள் நம்மை விட்டு விலகி ஓடுகின்றனவா என்பதை அறியாமலேயே.
பிரதிலிபி  நடத்திய  'நினைவுப்பாதை'  போட்டிக்காக எழுதப்பட்டது.

2 comments:

Angel said...

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் தமிழ்முகில் .
மிகவும் அழகாக இக்கால நிலையை சொல்லி இருக்கீங்க ..நடிகர்கள் குழந்தைகள் பானைக்கரும்பு படம் போட்ட கார்ட்ஸ் இன்னும் மனதில் நீங்காதிருக்கு ...நான் எங்க அப்பா அம்மா உயிருடன் இருந்தப்போ அனுப்பிய வாழ்த்து அட்டைகளை இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் .அதுவும் மகளுக்கு பிறந்தவுடன் அனுப்பியவை இப்போ அவளுக்கு 17 அனாலும் வருடா வருடம் எடுத்து வைப்போம் அந்த கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டையை .அதை மகள் பிற்காலத்தில் கவனமா எடுத்து வைப்பாளா பாதுகாப்பாளா என்பது சந்தேகம்தான் .இயன்றவரை சொல்லித்தருவோம் பிள்ளைகளுக்கு .
நான் இன்னமும் கையால் செய்த வாழ்த்து அட்டைகளை அனுப்பறேன் சில நட்புக்களுக்கு எனக்கு வந்தவற்றையும் பத்திரமாக பெட்டியில் சேமிக்கிறேன் நாளை என்னாகுமோ தெரியலை ..அழகான பதிவு ..மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி. நம் வரை நாம் பாதுகாக்கலாம். நாளை நடப்பதை யார் அறிவார் ?

Post a Comment