blank'/> muhilneel: பெண்கள் முன்னேற்றம் - சரியான பாதையில் பயணிக்கிறோமா ? சமூக நோக்கில் பெண் முன்னேற்றம்.

Saturday, May 7, 2016

பெண்கள் முன்னேற்றம் - சரியான பாதையில் பயணிக்கிறோமா ? சமூக நோக்கில் பெண் முன்னேற்றம்.

பெண்கள் முன்னேற்றம் என்று எதை நாம் எண்ணுகிறோம் ? கல்வி, வேலைவாய்ப்பு, கருத்துச் சுதந்திரம், இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு. சரி, இவற்றுள் எதை எதை எல்லாம் பெண்கள் அடைந்திருக்கிறார்கள் ? அடைந்திருக்கிறார்கள் எனில், உண்மையாக அடைந்திருக்கிறார்களா, அல்லது, அடைந்து விட்டது போலொரு மாயை தான் நிலவுகிறதா ?

இன்றைய பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, செயல்திறன் என பலவற்றிலும் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை எனுமளவுக்கு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மிளிர்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட துறை என்று மட்டுமல்லாமல், பலதரப்பட்ட துறைகளிலும் ஆர்வம் கொள்கிறார்கள். அவர்கள் காட்டும் ஆர்வமும், எடுத்துக் கொள்ளும் முயற்சியும், பயிற்சியும் அவர்களை மிளிரச் செய்கிறது.


இன்றைய பெண்கள் அனைவருமே, ஏதோ ஒரு வகையில் தனித் திறமை வாய்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். அடுப்பூத மட்டுமே அறிந்திருக்க வேண்டியவர்கள் பெண்கள் என்னும் காலம் மலையேறினாலும், இன்னும் பல மனிதர்களின் மனங்களில், பெண்ணானவளின் இருப்பிடம், பொழுது போக்கிடம், அனைத்துமே அடுப்படி தான் அல்லது அவளது நான்கு சுவற்றுக்குள் தான் என்ற எண்ணம் ஊறிப் போய் இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால்,   பல பெண்கள் குடும்பம், பணி என்று இரண்டு வண்டிகளை  இழுக்கிறார்கள். குடும்பச் சூழல், பொருளாதார தேவைகள், உயர்ந்து வரும் விலைவாசி என்று பலவகையான காரணங்களால்  பெண்களும் உத்தியோகம் பார்ப்பதென்பது அவசியமாகிறது. குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை ஈடுகட்ட உத்தியோகம் பார்க்கும் பெண்ணிற்கு, சிற்சில உதவிகள், வீட்டுப் பணிகளில் ஒத்தாசை செய்வது பிழையில்லையே ?
சமையல், துணி துவைத்தல், குழந்தை பராமரிப்பு எல்லாம் பெண்ணுக்கு மட்டுமே உரிய வேலைகள் என்று எழுதப்படாத சட்டம் ஏதுமில்லையே ? இவற்றை ஆண்களும் அறிந்து கொள்வதில் பிழையேதுமில்லையே ?

ஒருகாலத்தில் பொக்கிஷங்களாய் எண்ணி, பாதுகாக்கப்பட்ட பெண்கள், பின்னர் அடிமைகளாய் சித்தரிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல, பல போராட்டங்களுக்குப் பின் கல்வி, வேலை வாய்ப்பு என்று முன்னேறி வந்தனர்...வருகின்றனர். இவ்வேளையில், மீண்டும் பெண்களை, பொத்திப் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப் படுகிறார்கள். இதனால், பழங்கால நிலை, குறைந்த கல்வி, இளவயது திருமணம் போன்றவை மீண்டும் சமூகத்தில் பழக்கத்திற்கு வருகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன ?

ஆணோ, பெண்ணோ, அவர்தம் கண்ணியத்தை காத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் வரை, அவர்தம் சுதந்திரத்திற்கு எவ்வித பங்கமும் வரப்போவதில்லை.  மது அருந்துதல், புகை பிடித்தல் தான் பெண் சுதந்திரமும் முன்னேற்றம் ஆகுமா ? மதுவும் புகையும் எவராயினும் உடல் நலத்திற்கு கேடே ! இதை உணராமல், அவர்கள் செய்கிறார்கள், நாமும் செய்தால் தவறா என்று கேள்வி எழுப்புவது அறியாமையின் உச்சமே.

ஆடை என்பது எதற்காக அணிகிறோம் ? நம் மானத்தை காப்பது ஆடை. ஆடை என்பது நமக்கு மதிப்பளிப்பதாய் இருக்க வேண்டும்.  அதை விடுத்து, நம்மை ஒரு காட்சிப் பொருளாய் ஆக்கி விடக் கூடாது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடக்க வேண்டும். பெண் சுதந்திரம், முன்னேற்றம்  என்ற போர்வையில், நாகரிகம் என்று அரைகுறை ஆபாச ஆடைகளினால் நிகழும் கேடுகள் எத்தனையோ . நம் வசதிக்காகவும், சவுகரியத்திற்காகவும் அணியப்படும் ஆடைகள், நம் மானம் காப்பவையாகவும் இருக்க வேண்டும். மானம் பறிபோன பின், ஆத்திரமும் கோபமும் கொண்டு போராடுவதில் பயன் என்ன ?

எதிர்வரும் சந்ததியர், பெண்களை கண்ணியமாகவும், மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று விரும்பினால், இன்று முதல், இந்நொடி முதல், நம்மிலிருந்து, நம் குடும்பத்திலிருந்து தொடங்குவோம். பெண்களின் கருத்துக்கு மதிப்பளிப்போம். மதிப்பளிப்பது, இரண்டாம் பட்சமாக கூட இருக்கட்டும், முதலில் அவர்கள் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்தேனும் கேட்போம்.பெண் முன்னேற்றமும், பெண் சுதந்திரமும் நிச்சயம் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.


குறிப்பு:

ப்ரதிலிபி நடத்திய  யாதுமாகி நின்றாள்    மகளிர் தின சிறப்பு போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை.

No comments:

Post a Comment