blank'/> muhilneel: November 2015

Friday, November 27, 2015

தனி மனிதனாகக் காமராசர்




1903 ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி குமாரசாமி - சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் காமராசர். இவருக்கு குலதெய்வத்தின்  பெயரான காமாட்சி என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயார் சிவகாமி அம்மையார் இவரை ராஜா என்று அன்புடன் அழைத்து வந்தார். காமாட்சி என்ற பெயரும் ராஜா என்கிற பெயரும் சேர்ந்து காமராஜ் என்ற பெயர் உருவானது. இவருக்கு ஓர் தங்கை உண்டு. அவரது பெயர் நாகம்மா.விருதுநகரில் வியாபாரியாக இருந்த குமாரசாமி அவர்கள், காமராசர் ஆறாம் வகுப்பு படிக்கையில் இயற்கை எய்தினார். அத்துடன், காமராசர் அவர்களின் கல்வியும் முடிவுக்கு வந்துவிட்டது.அதன் பின் வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனால், நாட்டு விடுதலை போராட்டத்தில் கொண்ட ஈடுபாட்டினால், உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, பின் காங்கிரசில் இணைந்து முழு நேர தேசத் தொண்டர் ஆனார்.

1954 ம் ஆண்டு முதல்வரானார் காமராசர். அவர் வகித்த முதலமைச்சர் பதவி  அவரது வாழ்க்கை நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை. காமராசர் தனது தாயார் சிவகாமி அம்மையாருக்கு மாதம் 120 ரூபாய் வழங்கி வந்தார். முதலமைச்சரின் இல்லம் என்பதால், அவரது இல்லத்திற்கு பலரும் வந்து செல்வர். அவர்களை உபசரிக்க 120 ரூபாய் போதவில்லை என்று சிவகாமி அம்மையார் 30 ரூபாய் கூடுதலாக கேட்க, வருபவர்களை எல்லாம் உபசரிக்க வேண்டாமெனவும், மேலும் தாயாரின் கையில் பணம் சற்று அதிகமாக இருந்தால், அவர் கோயில் குளம் என்று கிளம்பி விடுவார்கள் என்றும், தனியாக செல்வது அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்றும் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அவர் நினைத்திருந்தால், தன்னையோ, தன்  தாயாரையோ  காண்பதற்கு வீட்டிற்கு வருபவர்களை வெகு விமர்சையாக உபசரித்திருக்க முடியும். தனது அதிகாரத்தினை பயன்படுத்தி, வயதான தனது தாயாருடன் துணைக்கு ஒருவரை நியமித்து, அவரை தனது தாயாருக்கு கோயில் குளங்களை சுற்றிக் காண்பிக்க ஏற்பாடு செய்திருக்க முடியும். அல்லது, தானே தனது தாயாருடன் அரசு செலவிலேயே கோயில்களுக்கு சென்று வந்திருக்கலாம். ஆனால், அப்படி எல்லாம் செய்யாது, தனது சொந்த வாழ்விற்காக, தேவைகளுக்காக  தான் வகித்த பதவியை பயன்படுத்தாத கறை  படியா கரங்களுக்கு சொந்தக்காரர் காமராசர் அவர்கள்.

காமராசரது தாயார், வீட்டில் கழிவறை அமைக்க, வீட்டிற்கு அருகில் ரூபாய் மூவாயிரத்திற்கு வரும் இடமொன்றை வாங்க வேண்டுமென காமராசரின் நண்பர் முருக தனுஷ்கோடி அவர்களிடம் கேட்டார். இச்செய்தியை காமராசரிடம் அவர் சொன்னதும், அதற்கு காமராசர் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" என்று கோபமாக பேசி அனுப்பினார்.

அவர் சம்பாதித்த பணத்தைக் கூட, தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ மட்டும் வைத்துக் கொள்ளாது, மக்களின் நலனுக்காகவே செலவழித்தார். 

ஒரு சமயம் சிவகாமி அம்மையாருக்கு உடல் நிலை சரியில்லாது இருந்த தாயாரைக் காண விருதுநகர் வந்த காமராசர் அவர்கள், தனது தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க அவருடன் சிறிது காலம் தங்கி இருந்தார். சென்னைக்கு கிளம்பிய வேளையில், தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க, வீட்டில் உணவருந்தினார்.  அவருடன் இருந்த நெடுமாறன் அவர்கள் "நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எத்தனை காலம் இருக்கும் ? " என்று கேட்க, சற்றே யோசித்த காமராசர், 25 வருடங்கள் இருக்கும் என்றார். 

சென்னையில் கடைசி வரை வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார் காமராசர். அவரது காரின் ஓட்டுனருக்கு கூட, காமராசரே தான் சம்பளம் வழங்கினார். "எனது சம்பளத்தில் தான் டிரைவர்ஸ் அலவன்ஸ் தருகிறார்களே அதையும், இன்னும் கொஞ்சம் பணம் போட்டு நான் ஓட்டுனருக்கு சம்பளம் வழங்குகிறேன். " என்றார் காமராசர்.

காமராசர் அவர்களின் மரணத் தருவாயில், சென்னையில் அவரது வீட்டில் இருந்தது வெறும் 67 ரூபாய் மட்டுமே. தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அவர் பொருளேதும் விட்டுச் செல்லவில்லை. பெருமையையும் புண்ணியத்தையுமே விட்டுச் சென்றுள்ளார்.

 காமராசரைப் பொறுத்தவரை அடுத்த மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் வழிபாடு. இல்லாதோர், இயலாதோருக்கு தன்னாலான உதவிகளை செய்வது தான் பிரார்த்தனை. இதில் நாம் சரியாக இருந்தால், தெய்வம் இருப்பின் நம்மை வாழ்த்தும். 

காமராசர் கோயிலகளுக்கு செல்கையில், கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். பரிவட்டம் கட்டினால் மறுக்க மாட்டார். விபூதி பூசி விட்டாலும் ஏற்றுக் கொள்வார். தீப ஆராதனையையும் தொட்டுக் கொள்வார். ஆனால், கோயிலை விட்டு வெளியே வந்ததும், அவற்றை உடனிருப்பவர்களிடம் கொடுத்து விடுவார். இதை காண்பவர்கள் ஆச்சர்யத்துடன், தெய்வ நம்பிக்கை இல்லாத நீங்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறீர்களே என்று கேட்டால், அதற்கு அவர், கோயிலில் செய்யும் மரியாதையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை மறுத்தால், அதை நமக்கு செய்யும் குருக்கள், அறங்காவலர், பொது மக்கள் மனம் கஷ்டப்படும். அப்படி கஷ்டப்படுத்த கூடாது என்று தான் ஏற்றுக் கொள்கிறேனே தவிர அதை தவிர வேறெதுவும் இல்லை என்பார். மனிதரை மதிக்கும் பாங்கு, தன்னால் எவரது மனதும் புண்பட்டு விடக் கூடாது எனும் உயர் எண்ணம், போன்ற நல்லெண்ணங்களின் உருவே காமராசர்.

முதலமைச்சர் என்ற ஆரவாரம் சற்றும் இல்லாது, சாதாரணமான மனிதராகவே இருந்தார் காமராசர். முதல் முறை அவருக்காக சைரன் ஒலியுடன் கூடிய பாதுகாப்பு கார் கூட வேண்டாமென்று தடுத்து விட்டார். அவரை தேடி இரண்டு முறை பிரதமர் வாய்ப்பு வந்த போதும், அதை மறுத்து லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார் காமராசர். இதனால், இவர் கிங் மேக்கர் என்று அழைக்கப் படுகிறார்.

கல்வித் துறையில் சாதனை புரிந்தமைக்காக காமராசர் அவர்களை தேடி டாக்டர் பட்டம் வந்த போதும், அதை மறுத்து விட்டார். நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், மேதைகள் இருக்கையில் தனக்கு பட்டம் எதற்கு என்று மறுத்து விட்டார். 

காமராசருக்கு கோபம் வந்தால் திட்டி தீர்த்திடுவார். ஆனால், அந்த கோபம் அடுத்த நொடியே பனி போல் விலகிடும். தனது பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராசர் அவர்களுக்கு தோளில் துண்டு அணிவிக்கப் பட்டது. அது முதல் காமராசர் அவர்கள் தோளில் துண்டு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கதர் துண்டுகள் அணிவித்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில், அந்த துண்டுகளை பால மந்திர் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கி விடுவார்.

காமராசரின் தங்கை பேரன் கனகவேல் அவர்கள் மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பிக்கையில், காமராசரின் பெயரை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டு கோபம் கொண்ட காமராசர், கோபித்துக் கொண்டார். " என் பெயரை எதற்காக குறிப்பிட்டிருக்கிறாய் ? " என்று கேட்டதும் கனகவேல் அவர்கள், " மெட்ராஸ் முகவரி கேட்டாங்க தாத்தா. அதான் உங்க பேரை கொடுத்துட்டேன். நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணினால் நான் டாக்டர் ஆகிடுவேன் " என்று சொல்ல, " கனகவேலு, அரசாங்கத்துல இருந்து குழு அமைச்சு டாக்டர், இஞ்சினியரிங் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பாங்க. நீ இன்டர்வியூல நல்லா பதில் சொன்னா, உனக்கு கிடைக்கும். அப்படி கிடைக்கலைன்னா, கோயம்புத்தூர்ல விவசாய படிப்புல சேர்ந்து படி" என்று சொல்லி அனுப்பி விட்டார். தனது அதிகாரத்தை தன் உறவுகள் பயன்படுத்த மறுத்து பேசிய தலைவர் எங்கே ? இன்றைய தலைவர்கள் எங்கே ?


இவர் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை அன்றோ ! ஆனால், அன்றவர் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி இலவசமாய் வழங்கிய கல்வி இன்று வியாபாரப் பொருளாய் ஆகிப் போனது தான் வேதனையிலும் வேதனை.


குறிப்பு :

இக்கட்டுரை தமிழ்க் குடில் அறக்கட்டளை நடத்திய பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின கட்டுரைப் போட்டிக்காக எழுதப் பட்டது.