blank'/> muhilneel: நல்லார் பொருட்டு பெய்யும் மழை

Wednesday, October 7, 2015

நல்லார் பொருட்டு பெய்யும் மழை



நகரின் முக்கியமான சாலையாக விளங்கும் அவினாசி சாலை, அந்த விடிகாலை வேளையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என்று பல்வேறு வாகனங்கள் சீறிக் கொண்டிருந்தன. அந்த ஆறு மணி வேளையிலேயே, பேருந்து நிறுத்தத்தில் குறைந்தது பத்து பேராவது பேருந்திற்காக நின்றிருந்தார்கள்.

நெடுஞ்சாலை ஆதலால், அச்சாலையில் இருக்கும் உணவகங்கள், மளிகை கடைகள், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள், அனைத்துமே திறக்கப்பட்டு அன்றைய வியாபாரத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அதே வரிசையிலேயே ஓர் பூங்கொத்து மற்றும் மலர் அலங்கார கடை. அதன் உரிமையாளர் சூர்யா.

கடையைத் திறந்து உள்ளே நுழைந்த சூர்யா, முந்தின நாள் விற்காமல் மீதமிருந்த ரோஜாப் பூங்கொத்துகளை தனியாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் கடையின் வாசலில் புது மலர்ச் செண்டுகளோடு கடைப் பையன் வண்டியில் வந்து சேர, மலர்க் கொத்துகள், அலங்கார மலர்கள் அனைத்தையும் அழகாக நேர்த்தியாக கடையில் அடுக்கி வைத்துவிட்டு, கடையிலிருந்த சாமி படங்களுக்கு புது மலர்ச் சரங்கள் சூடி, விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி வழிபட்ட பின் வியாபாரத்திற்காக கல்லாவில் அமர்ந்தார் சூர்யா.

ஓர்  இளம் ஜோடி வந்து பூங்கொத்துகளை பார்த்தபடி, பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஒன்றை எடுக்கவும், வைக்கவுமாய் இருந்தனர். அதே சமயத்தில் கடைக்குள் நுழைந்த ஓர் இளைஞர், வேக வேகமாக கையில் கிடைத்த ஓர் பூங்கொத்தை எடுத்துக் கொண்டு, அவசரமாக கட்டணத்தை செலுத்தி விட்டு, மீதி சில்லறைக் காசுகளை கூட வாங்க நேரமில்லாதவர் போல, விருட்டென வண்டியிலேறி கிளம்பிவிட்டார்.

கடையின் வாசலில், கதவின் ஓரம் ஓர் தயக்கத்துடன், சிறுமி ஒருத்தி வந்து நின்றாள். உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்று எண்ணியவாறு தயங்கி தயங்கி நின்ற அச்சிறுமி, கடையின் முன் யாரோ வீசிச் சென்றிருந்த குப்பைக் காகிதங்களை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு, அப்போது தான் கழுவியிருந்த தன் முகத்தினை, தன் பாவாடை கொண்டே துடைத்தவாறு நின்றிருந்தாள்.

" வா ஷீபா ! உள்ள வா ! " என்றழைத்தார் சூர்யா.


" அண்ணா ! இன்னைக்கு ஏதாவது பழைய பூ இருக்கா ? இருந்தா தாங்கண்ணா " என்றவாறு கடைக்குள் நுழைந்தாள் பத்து வயது சிறுமி ஷீபா.குப்பையை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு நின்றாள்.

" இருக்குப்பா. அதோ, உனக்காக தான் அங்க எடுத்து வச்சிருக்கேன். எடுத்துக்கோ ! " என்றார்.

முந்தின நாள் விற்காது போன மலர்களை எடுத்து பத்திரமாக நீர் நிரப்பிய பாத்திரம் ஒன்றில் போட்டுவிட்டு செல்வது சூர்யாவின் அன்றாட வழக்கம்.
அப்படி வைப்பதனால், வாடாது புதிது போலவே  மலர்கள்  இருக்கும். அந்த மலர்களை  மறுநாள்    ஷீபா விற்றுக் கொள்ள கொடுத்து விடுவார் சூர்யா.

அவர் செய்யும் உதவிக்காக, கடையை கூட்டி சுத்தம் செய்து வைப்பது, பக்கத்து கடையிலிருந்து டீ, காபி, வடை வாங்கிவருவது போன்ற சிறு சிறு உதவிகளை செய்வாள் ஷீபா.

" அண்ணா ! கொஞ்சம் தண்ணி குடிச்சக்கறேன் " என்றவள், சூர்யாவின் பதிலுக்காக காத்திராமல், மண் பானையிலிருந்து இரண்டு பெரிய தம்ளர் நிறைய தண்ணீரை எடுத்து மடமடவென குடித்துவிட்டு, ரோஜா மலர்களை கைகளில் எடுத்துக் கொண்டு, " வரேன் அண்ணா ! " என்றவாறு கடையை விட்டு வெளியேறினாள்.

சாலையை நோக்கி வந்தவள், சாலையை ஒட்டி இருக்கும் மண் பாதையில் ஒதுங்கி நின்று கொண்டாள். போக்குவரத்து அடையாள விளக்கு சிவப்பாவதைக் கண்டதும், வேகமாக வந்தாள். வந்தவள், நின்றிருந்த ஒவ்வொரு கார்களின் ஜன்னலுக்கு அருகிலும் சென்று தன் கையிலிருந்த ரோஜா மலர்களைக் காட்டியவாறு, " ஒரு பூ அஞ்சு ரூபாய் தாங்க. வாங்கிக்கோங்க " என்றாள்.

சிலர், பட்டென்று தலையை திருப்பிக் கொண்டனர். ஒரு சிலர், காரின் கண்ணாடியை இறக்கி விலையை விசாரித்து விட்டு, பட்டென்று கண்ணாடியை ஏற்றிக் கொண்டனர். சமயங்களில், காரில் பெண்களோ, சிறுமியரோ இருந்தால், அவர்கள் விரும்பினால், ஒன்றிரண்டு ரோஜா மலர்கள் விற்பனை ஆகும். வாடிக்கை பூ வியாபாரிகள் விற்கும் விலையை விட மலிவாக கிடைப்பதால், வாங்கிக் கொள்வார்கள்.

வாங்கியதும், சொன்ன விலையை கையில் கொடுத்துச் செல்பவர்கள் ஒரு சிலர். சொன்ன விலையை விட குறைத்து, பேரம் பேசி வாங்கிச் செல்பவர்கள் சிலர். இன்னும் சிலரோ, காசை காரின் ஜன்னல் வழியாக விட்டெறிந்து விட்டுச் செல்வார்கள். சமயங்களில், காசே கொடுக்காமல், பச்சை விளக்கு விழுந்ததும், விருட்டென கிளம்பிச் செல்பவர்களும் உண்டு.

 ஓர் கருப்பு நிற கார், சிவப்பு குறியீட்டிற்காக நின்றது. அருகில் சென்ற ஷீபா, மலர்களை காட்டியபடி காரின் ஜன்னலருகில் நின்றிருந்தாள். காரின் பின்னிருக்கையில், இரு சிறுமிகள் பள்ளி சீருடையில், அழகாக இரட்டை பின்னல் போட்டு அமர்ந்திருந்தனர்.

ஓட்டுனர் இருக்கையில் ஒரு ஆணும், அவரது  அருகிருக்கும் இருக்கையில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். காரின் கண்ணாடியை இறக்கிய அப்பெண், " மூணு ரோஸ் குடு பாப்பா " என்றவாறு மூன்று அழகான ரோஜா பூக்களை பார்த்து எடுத்துக் கொண்டார். காசைக் கொடுப்பதற்காக, தனது சிறிய கைப்பையை திறந்து ஒரு பூவிற்கு ஐந்து ரூபாய் வீதம் , மூன்று ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து கொடுக்க எத்தனித்த வேளையில், போக்குவரத்து குறியீடு பச்சை ஆகிவிட்டது.

வேகவேகமாக காசைக் கொடுக்கிறேன் என்று ஷீபாவின் கையில்,  தன் ஒரு கையால் மூன்று ஐந்து ரூபாய் நாணயங்களையும், மற்றொரு கையில் கைப்பையையும் வைத்தவாறு கொடுத்துக் கொண்டிருந்தார். பச்சை விளக்கு விழுந்து விட்டதால், அவசரப்பட்ட அப்பெண், ரூபாய் நாணயங்களோடு தனது கைப்பையையும் சாலையில் தவற விட்டு விட்டார். இறங்கி எடுக்கவும் வழியில்லை. பின்னால் நின்றிருந்த வாகனங்களும் " பாம் ! பாம் ! " என்று ஒலியெழுப்ப, வேகமாக வண்டியைக் கிளப்பிச் சென்று விட்டார் அந்த ஆண். போக்குவரத்தும் அதிகமாக இருக்க, ஷீபாவும் சாலையை விட்டு இறங்கி ஓரமாக நின்று கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் சிவப்புக் குறியீடு விழ, இப்போது அவ்வளவாக பெரிய வாகனங்கள் கார், பேருந்து என இல்லாமல், இரு சக்கர வாகனங்களே சாலையில் நின்றிருந்தன. அவற்றின் இடையில் புகுந்து, சிதறியிருந்த ரூபாய் நாணயங்களையும், சில்லறைக் காசுகளையும், கீழே விழுந்து கிடந்த சில அட்டைகளையும், வாகனங்கள் ஏறியதில், நசிந்து போய் கிடந்த கைப்பையையும் எடுத்துக் கொண்டு சாலையின் ஓரம் ஓடி வந்தாள்.

சூர்யாவின் கடை நோக்கி சென்றவள், மேசை மீது சில்லரைக் காசுகளையும், கைப்பையையும் வைத்து விட்டு, மூச்சிறைத்தவாறு அமர்ந்து கொண்டாள்.

"என்னாச்சு ஷீபா ? " என்ற சூர்யாவிடம், சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, " அண்ணா ! ஒரு கார்ல போனவங்க, அவங்களோட கைப்பையை தவற விட்டுட்டாங்க " என்றாள்.

" சரி. இங்க டேபிள் மேல வெச்சிடு. யாராவது தேடி வந்தா குடுத்துடலாம் " என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்க சென்று விட்டார் சூர்யா.

மதியம் உணவு வேளையின் போது, ஒரு பெண்மணி கடைக்கு எதிர்புறம் இருந்த சாலையின் அருகில் எதையோ தேடியபடி வந்தார். அவரை அடையாளம் கண்டு  கொண்ட ஷீபா, வேகமாக அவரிடம் ஓடிச் சென்றாள்.

" நீ காலையில எனக்கு பூ வித்த பொண்ணு தானே ? " என்றார் அப்பெண்மணி.

" ஆமாங்க. உங்க பர்ஸ் பத்திரமா இருக்கு. வாங்க " என்றவாறு சூர்யாவின் கடை நோக்கி விறுவிறுவென்று சென்றாள் ஷீபா.

சற்றே தயங்கியவாறு ஷீபாவின் பின் சென்றார் அப்பெண். நகரில் நடக்கும் பல திருட்டு, கொள்ளை, கொலைகட்கு சிறுவர் சிறுமியரை பகடையாக பயன்படுத்தும் செய்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்பதால், அவர் ஒருவித பயத்துடனே ஷீபாவின் பின் சென்றார்.

கடைக்குள் நுழைந்ததும் " அண்ணா ! இவங்க தான் கைப்பையை தவற விட்டவங்க " என்றாள் ஷீபா.

" இந்தாங்க மேடம். உங்க பை. எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க" என்றவாறு கைப்பையை கொடுத்தார் சூர்யா.

பையை திறந்து பார்த்தவர், " எல்லாம் சரியா இருக்குங்க. ரொம்ப நன்றி " என்றவாறு வேகமாக சென்று விட்டார். சென்றவர், அருகிருந்த தானியங்கி பணம் எடுக்கும் எந்திரத்திற்கு சென்றார்.

சற்று நேரத்தில், மீண்டும் சூர்யாவின் கடைக்கு வந்த அப்பெண், " ரொம்ப நன்றிங்க. இந்த காலத்துல ஒரு ஏ.டி.எம் கார்டு கிடைச்சா, அதை தவறா பயன்படுத்த எத்தனையோ சந்தர்ப்பமும் வழியும் இருந்தும், நீங்க நியாயமா நடந்துக்கிட்டது பெருமையா இருக்குங்க. நான் உங்களை சந்தேகப்பட்டேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என்னுடைய முன்னாள் அனுபவங்கள் தான் என்னைய இப்போ சரி பார்க்க வைச்சது. இப்படி நான் 20,000 ரூபாய் தொலைச்ச அனுபவமும் உண்டு. ரொம்ப நன்றிங்க " என்றார்.

" நான் தப்பா எல்லாம் எடுத்துக்கலைங்க. நீங்க சரி பாத்துக்கிட்டது தான் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. உங்களோட இந்த பாராட்டெல்லாம் இந்த பொண்ணு ஷீபாவுக்கு தாங்க சேரணும். இந்த பொண்ணு தான் ரோட்டுல விழுந்ததை பத்திரமா கொண்டு வந்து என் கிட்ட ஒப்படைச்சது. அதை நீங்க கேட்ட போது நான் கொடுத்துட்டேன். அவ்வளவு தாங்க " என்றார் சூர்யா.

மலரேந்தி நின்றிருந்த வாடி வதங்கிய மலரை உச்சி முகர்ந்த அப்பெண், ஆதரவற்று நிற்கும் ஷீபாவிற்கு தான் ஆதரவாய் இருந்து, கல்வி அளித்து, அவள் வாழ்வில் மேம்பட வழிகோலுவதாய் உறுதியளித்துவிட்டு, ஷீபாவை உடனழைத்துச் சென்றார். அருகிருக்கும் காவல் நிலையத்திற்கு நேரே சென்ற அவர், ஷீபாவை பற்றியும் தன்னைப் பற்றியும் விபரம் கூறினார்.  அவர்கள், ஷீபாவை அருகிருக்கும் அரசினர் காப்பகத்தில் அவளை ஒப்படைப்பதாகவும், அவளுக்கு உதவுவதோ, கல்வி அளிப்பதோ, தத்தெடுப்பதோ எதுவாயினும், அங்கு வந்து  சட்டப்படி செய்து கொள்ள வேண்டுமெனவும் சொல்லி அனுப்பினர்.

ஷீபாவிற்கு நல்வாழ்வளிப்பதில் தீர்க்கமாய் இருந்த அவர் ஷீபாவிற்கு நம்பிக்கை அளித்து, அவளை விரைவில் தன்னுடனே அழைத்துப் போவதாக சொல்லி விட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார். ஏக்கம் பொதிந்த கண்களுடன் சாலையில் ஓடித் திரிந்த சிறுமி, கண்களில் மகிழ்ச்சி வெள்ளம் ஒளியெனப் பாய, ஒளிமயமான எதிர் காலத்தை நோக்கி செல்கிறாள்.

அதுவரை, பளீரென சுட்டெரித்துக் கொண்டிருந்த வானம், மேகப் போர்வை போர்த்திக் கொண்டு, மழை முத்துக்களை மண்ணில் வாரி இறைத்தது.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்க் மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.

                                  - ஔவையார், மூதுரை.


குறிப்பு: இச்சிறுகதை பதாகை சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

6 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான கதை தோழி
வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகானதோர் கதையை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். நிஜமாக நடந்த சம்பவமோ என நினைத்துப்படித்து வந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

Tamizhmuhil Prakasam said...

@ கிரேஸ்

மனமார்ந்த நன்றிகள் தோழி.

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

இளமதி said...

வாழ்த்துக்கள் சகோதரி!

மின் இலக்கியப் போட்டி முடிவுகள்!

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்←

போட்டியில் வெற்றி பெற்றமைக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

Tamizhmuhil Prakasam said...

@ இளமதி

போட்டி முரிவுகள் குறித்து அறியத் தந்து, அன்பான வாழ்த்தினையும் வழங்கிய தங்களது மேலான அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.

Post a Comment