blank'/> muhilneel: கருணையின் பலன்

Sunday, September 6, 2015

கருணையின் பலன்

மதியம் மூன்று மணிக்கு மேலாக துவங்கிய மழைச்சாரல், நேரம் ஆக ஆக வலுப்பெற்று, இப்போது இடி மின்னலுடன் சற்றும் தொய்வில்லாது, அடித்துப் பெய்து கொண்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கான அடையாளம் முற்றிலுமாக மாறிப் போய், எட்டு மணியைப் போல் எங்கும் இருள் கவிந்திருந்தது. அத்துனை நேரம் பெய்த மழையினால், குளிரும் சேர்ந்து கொள்ள, இன்னிசை கீதத்துடன் கொசுப் பட்டாளமும் வீட்டினை ஆக்கிரமிப்பு செய்ய தயாராகும் வேளையில், வீட்டின் கதவு, ஜன்னல்களை எல்லாம் முற்றிலுமாக அடைத்து மூடியபடி, மக்களும் தத்தம் வீடுகளுள் அடைபட்டுப் போயிருந்தனர்.

பார்வதி அம்மாளும் வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு, விளக்கேற்றி வைத்து விட்டு, தனக்கும், தன் கணவர், பிள்ளைகட்கும் சூடாக தேநீர் கலந்து குடித்தவாறு அமர்ந்திருந்தனர். தொலைக்காட்சியில் சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. அமைதியான சூழலில் குடும்பத்தினர், ஒருவரோடு ஒருவர் உரையாடியவாறு அமர்ந்திருந்தனர். வானொலிப் பெட்டியை உயிர்ப்பிக்க, செவிக்கு இனிமையான பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. எவரது சிந்தையையும், செயலையும் பாதிக்காது, உதடுகள் தன் போக்கில் பாடல் வரிகளை முணுமுணுக்க, செவிகளை இசை மழை நனைத்துக் கொண்டிருந்தது.

இசையில் இலயித்திருந்த பார்வதி அம்மாள், ஏதோ சிந்தை கலைந்தவராய் சுற்றும் முற்றும் பார்த்தார். வாசல் கதவிற்கும், ஜன்னல்களுக்கும் அருகில் சென்று எதையோ உன்னிப்பாக கவனித்தார். கதவிற்கு அருகில் நின்று கவனிக்கையில், யாரோ ஈனசுவரத்தில் முனகுவது போன்ற ஒலி கேட்கவும், கதவினை திறந்து பார்த்தார். வாசலில் எதுவும் தென்படவில்லை. ஆனால், எங்கிருந்தோ சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வாசலை விட்டிறங்கி சுற்றும்  முற்றும் பார்த்தவர், மாடிப் படிகளின் கீழ் இரண்டு நாய்க்குட்டிகள் குளிரில் நடுங்கியபடி, ஒன்றன் மேல் ஒன்றாய் உரசியவாறு இருந்ததைக் கண்டார்.

பிள்ளைகளிடம் புதிதாய் வந்திருக்கும் நாய்க் குட்டிகளைப் பற்றி கூற, அவர்களுக்கோ ஒரே சந்தோஷம். மூத்த பெண் எழிலியும், இளையவன் கணேசனுக்கும் எல்லையிலா மகிழ்ச்சி. வேகவேகமாக நாய்க்குட்டிகளுக்கு சாக்குப் பையும், ஓர் சிரட்டையில் பாலும் எடுத்து வந்தான் கணேசன்.

மாடிப்படிகளுக்கு கீழேயே சாக்குப் பையை விரித்து, நாய்க்குட்டிகளை தூக்கி கணேசன் அதில் அமர வைக்க, சிரட்டையில் சிறிதளவு பாலை ஊற்றி வைத்தாள் எழிலி. ஒன்றன் மேல் ஒன்று ஏறி விளையாடுவதும், சாக்குப் பையை கலைத்துப் போடுவதுமாய் இருந்தன நாய்க்குட்டிகள். எழிலியைக் கண்டதும் சற்றே பின்வாங்கிய நாய்க்குட்டிகள், அவள் அவ்விடத்தை விட்டு அகன்றதும், மெல்ல வந்து பாலை நாவால் நக்கிப் பார்த்தன. சிரட்டையிலிருந்து பாலைக் குடிக்கும் ஆவலில், அதை கீழே கொட்டி, நாவால் நக்கி குடித்து முடித்திட்டு, தங்கள் மேல் கொட்டியிருந்த பாலையும் தங்கள் நாவால் நக்கி, தங்களையும் சுத்தப் படுத்திக் கொண்டன இரு நாய்க்குட்டிகளும்.

இரவில் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்து விட, மழை மட்டும் தன் நித்திரையை தொலைத்திட்டது போன்று ஓய்வில்லாது பெய்து கொண்டே இருந்தது. சமயங்களில், தனியாக பெய்து கொண்டிருந்த மழைக்கு துணையாகிப் போனது போன்று இடியும், மின்னலும் அவ்வப்போது வந்து சென்றன. மழையின் இன்னிசைக்கு பக்க வாத்தியம் போல தவளைகள் கத்திக் கொண்டும், பூச்சிகள் கிரீச்சிட்டுக் கொண்டும் இருந்தன.

நள்ளிரவுக்கு மேல், பார்வதி அம்மாளின் கணவர், அவரது வியாபார விஷயமாக வெளியூர் செல்ல கிளம்பினார். சாலையில், அவர்களது வீட்டுக்கு வெகு அருகாமையில்  ஒரு லாரி நின்றிருந்தது. அப்போதும் மழை பெய்து கொண்டு தான் இருந்தது. தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் செல்கையில், அந்த லாரிக்கு அருகில் நின்றிருந்த ஒருவர் " என்ன சார் ! வெளியூருக்கா ? " என்று கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் சென்று விட்டார்.

மழையின் ஓசை தவிர சாலையெங்கும் ஒரே நிசப்தம். அவ்வப்போது சாலையைக் கடக்கும் வாகனங்களைத் தவிர, வேறு ஒலி ஏதும் இல்லை. அருகில் புதிதாக ஓர் அடுக்குமாடிக் கட்டிடம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்த கட்டிடத்திற்கான கட்டுமானப் பொருட்கள் லாரிகளில் வந்திறங்கும். பகலில் லாரிகள் அவ்வழியே வந்தால் மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்குமென்பதால், இரவில் தான் கட்டுமானப் பொருட்கள் வந்திறங்கும்.

வீட்டிற்கு அருகில் நின்றிருந்த லாரியின் விளக்குகள் ஒளிர்வதும், அணைவதுமாக இருந்தது. அவ்வப்போது உறுமியவாறு சப்தம் அதிகமாவதும், குறைவதுமாய் இருக்க,  உறங்காது விழித்தபடி படுத்திருந்த பார்வதி அம்மாள், ஒருவேளை மழை பெய்ததில் மண்சாலை சேறும் சகதியும் ஆகிப் போனதோ, லாரி சேற்றில் சிக்கிக் கொண்டதோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டார்.  நாய்க் குட்டிகளும் விளக்கின் ஒளியைக் கண்டு குரைத்துக் கொண்டே இருந்தன.

சற்று நேரத்தில், நாய்களின் குரைப்பு அதிகமானது. நாய்க் குட்டிகளின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார் பார்வதி அம்மாள். ஜன்னல் கதவினை திறந்து மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தவர் அதிர்ந்து போனார். வாசலுக்கருகில் இருவர் நின்றிருந்தனர். நாய்க் குட்டிகளை நோக்கி கைகளை ஆட்டியபடி இருந்தனர். சற்றே உற்றுப் பார்க்கையில், நாய்க் குட்டிகளுக்கு உண்ண ஏதோ போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களைக் கண்டதும் பயந்தவர், மனதுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவராய், வேகமாக " யாரது ? " என்று சப்தம் போட்டார்.

நின்றிருந்த இருவரும் சற்றே கலக்கமடைந்தவர்களாய், சுற்றும் முற்றும் பார்த்தனர். ஆனால், அவ்விடத்தை விட்டு அகலவில்லை. இதைக் கண்டதும் இன்னும் பயந்து போனார் பார்வதி அம்மாள். உறங்கும் பிள்ளைகளை துணைக்கு எழுப்பலாம் என்றெண்ணியவர், அவர்களை வீணாக பயமுறுத்துவானேன் என்று தானே சமாளித்து விட எண்ணினார்.

" ஹலோ ! போலீஸ் கன்ட்ரோல் ரூம் ? சார் ! ஒரு திருட்டு கும்பல் எங்கள் வீட்டை சுற்றி இருக்கு சார் ! கொஞ்சம் சீக்கிரமா வாங்க சார் ! என்று உரக்க கூறினார் பார்வதி அம்மாள். உடனே, "தட ! தட !" என்று காலடி ஓசையும், அதைத் தொடர்ந்து, லாரி அங்கிருந்து கிளம்பிச் செல்லும் ஓசையும்.

அப்போதும் நாய்க் குட்டிகள் குரைத்துக் கொண்டே இருந்தன. நல்ல சமயத்தில் நாய்க் குட்டிகள் குரைத்து, விழிப்பினை ஏற்படுத்தியமையால், ஓர் கொள்ளைச் சம்பவத்தில் இருந்து ஒரு குடும்பம் காப்பாற்றப் பட்டது. மழைக்காக ஒதுங்கிய குட்டிகளுக்கு உணவளித்து, அவற்றின் மீது காட்டிய கருணைக்கு பிரதிபலனாய், அவை அக்குடும்பம்பத்தையே ஓர் பெரும் இக் கட்டி லிருந்து காப்பாற்றி விட்டன.

அன்று பெய்த மழைக்கு அவர்களது வீட்டில் நாய்க்குட்டிகள் தஞ்சமடைந்தது தெய்வ சங்கல்பமே என்று முழுமையாக நம்பினார் பார்வதி அம்மாள்.



பின்குறிப்பு :
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்திய சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கதை.

2 comments:

G.M Balasubramaniam said...

அழகிய சிறுகதை பாராட்டுக்கள்.

Tamizhmuhil Prakasam said...

நன்றி ஐயா.

Post a Comment