blank'/> muhilneel: கணினியில் தமிழ் மொழி வளர்ச்சி

Tuesday, September 22, 2015

கணினியில் தமிழ் மொழி வளர்ச்சி



நமது ஆழ்மனத்தின் எண்ணங்கள், உள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் கனவுகள், ஆசைகள், கற்பனைகள் இவற்றை எல்லாம் பிறரிடம் பகிர்ந்து கொள்கையில், அவற்றின் சாரம் மாறாமல், தயக்கமோ, தடையோ ஏதுமில்லாது எடுத்துக் கூற ஓர் கருவியாக இருப்பது அவரவரது தாய் மொழி. என்ன தான் நாம் நமது பணி நிமித்தமாக, அந்நிய மொழியை கற்று, அதையே பயன்படுத்தி, நம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும், அந்நிய மொழியில் வார்த்தைகளை கோர்வையாக்கி, அதை நம் மனதுள் நிச்சயமாக நமது தாய் மொழியில் சொல்லி ஒத்திகை பார்த்துக் கொள்வோம். இப்போது, நமது எண்ணங்களை கருத்துக்களை எல்லாம் நமது தாய் மொழியிலேயே விளக்க விவரிக்க நல்லதோர் வாய்ப்பாக நம்மால் கணினியிலும் நமது தமிழ் மொழியை பயன்படுத்த முடிகிறது.  

கணினியில் தமிழ் மொழியை கருத்துப் பரிமாற்றத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள் யார் ? தமிழை சரளமாக பேசும் தமிழ் மக்கள் அனைவராலும் எளிதாக தமிழை கணினியில் பயன்படுத்த முடிகிறதா ? தமிழ் மொழியை கருத்துப் பரிமாற்றத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் படுத்துவோர், தமிழ் மொழி மீது ஈடுபாடும் ஆர்வமும், கணினியில் தமிழ் பயன்பாட்டினை பெரிதும் விரும்புவோர் மட்டுமே. இது தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்தும் ஓவ்வொருவரும் அவரவரது தனிப்பட்ட முயற்சியால் அறிந்து கொண்டு, செயல்படுத்தப்பட்டது ஆகும். இப்படி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாது, ஆனால், தமிழ் மொழியை மட்டுமே தங்களது கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன் படுத்தும் பலருக்கு கணினியில் அல்லது கைபேசிகளில் தமிழில் தட்டச்சு செய்வது எங்ஙனம் என்பது தெரிவதில்லை. இதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் ? தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தகவல் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இன்றளவும் தமிழில் மின்னஞ்சல் அனுப்பினாலோ, அல்லது மின்னஞ்சல் அரட்டையில் ( chat ) தமிழில் எழுதி உரையாடினாலோ, எப்படி முடிகிறது என்று ஆச்சர்யமாக கேட்பவர்கள் உண்டு. இதில் மகிழ்ச்சிகரமான செய்தி என்னவெனில், தமிழ் தட்டச்சிற்கான வழிமுறைகளை கேட்டறிந்து, அவற்றை பின்பற்றி, தாங்களும் மகிழ்வுடன் தமிழிலேயே தட்டச்சு செய்து,  உரையாடி,  நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவோரும் உண்டு. நாமும் பிறருக்கு புதியாய் ஒன்றை கற்க உதவி புரிந்துள்ளோம் என்ற மனநிறைவு கிடைக்கும்.

தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் முயற்சித்து பார்ப்பது, கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு (Google transliteration) முறை தான். அதில் முயற்சி செய்து பார்த்து விட்டு, மனதிற்கு திருப்தியும் நிறைவும் ஏற்பட்ட பின், மெல்ல மெல்ல தமிழ் தட்டச்சு மென்பொருட்களான, ஏ - கலப்பை (E- kalappai) , என் எஹெச் எம் ரைட்டர் (NHM Writer),  அழகி (Azhagi) போன்றவற்றை பயன்படுத்த முயற்சி எடுக்கின்றனர். ஆனால், அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பினும், அவர்தம் பணிக்கோ, அல்லது கல்வியறிவு வளர்ச்சிக்கோ முக்கியமானதாக இவை இருப்பதில்லை. அதனால், தமிழ் தட்டச்சினை யாரும் விரும்பி கற்றுக் கொள்வதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

தமிழை தங்களது முதல் பாடமாக கொண்டோர், தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட விரும்புவோர், தமிழில் முனைவர் பட்டப்படிப்பு பயில்வோர் என்று தமிழைச் சார்ந்து இருப்பவர்கள் கூட கணினித் தமிழ் குறித்து விரிவாக அறிந்திருப்பதில்லை. கணினித் தமிழில் ஆராய்ச்சி மேற்கொள்வோர், தமிழ் ஆவணங்களை எண்ணிமப் (Digitize/ Digital) படுத்தி உலகிலுள்ளோர் அனைவரும் பயன்படுத்தி மகிழ்வுற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர், தங்களது தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே தங்களது எண்ணங்களை, கருத்துக்களை, தங்களது மொழி பால் கொண்ட பற்றின் காரணமாக இலக்கியங்கள் படைத்து வெளியிடுவோர் என்று சொற்பமானவர்களே கணினியில் தமிழை பயன்படுத்துகின்றார்கள்.

இன்னொரு சாராரும் கணினியில் தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்கிறார்கள். யார் தெரியுமா ? DTP  (Desktop Publishing) நிறுவனங்களில் பணிபுரிவோர். தமிழில் ஆவணங்கள் தட்டச்சு செய்பவர்கள் இவர்கள். ஆங்கில ஆவணங்கள் தட்டச்சு செய்ய ஆகும் கட்டணத்தைவிட, தமிழில் ஆவணங்களை தட்டச்சு செய்ய ஆகும் கட்டணம் அதிகம். தமிழ் படிப்பு சோறு போடுமா ? என்று கேட்கும் பலருக்கு பதில் இதோ ! தமிழ் யாரையும் கைவிட்டு விடாது. தமிழ் தட்டச்சு முறை பலரது வருமானத்திற்கு வழி செய்கிறது. எதையும் விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் கற்றுக் கொள்ளும் முறையில் தான் இருக்கிறது, அதிலிருந்து நாம் பயனடைகிறோமா இல்லையா என்பது.

கணினியில் தமிழ் வளர்க்க பல அறிவியல் துறை சார்ந்த கலைச்சொற்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் மொழி வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். இது கணினி அறிவியலுக்கு மட்டுமன்றி, அனைத்து அறிவியல் துறைகளுக்கும் பொருந்தும். கணினி அறிவியல், மருத்துவம், பொறியியல் துறைகளை சேர்ந்த சொற்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். மொழி பெயர்த்து பத்திரமாக வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. அவற்றை நிச்சயம் அன்றாட பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் வேண்டும்.

கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் வேளையில், இன்னொரு முக்கியமான விடயம் குறித்தும் சொல்வது அவசியமாகிறது. அது என்னவெனில் எழுத்துப் பிழை. பிழையின்றி எழுதுவதிலும் பேசுவதிலும் தானே மொழியின் அழகு அடங்கியிருக்கிறது. டண்ணகர, றண்ணகர பிழைகள், லகர, ழகர, ளகர வேறுபாடு அறியாது, ஒன்றிற்கு ஒன்று மாற்றி எழுதி சொல்லும் பொருளும் பிழையாக இணையத்தில் பதிந்து வைத்திட்டால், நாளை அந்த ஆவணங்களை இணையத்தில் வாசிக்க தலைப்படுவோருக்கு தவறான வழிகாட்டுதலாக அவை அமைந்து விடக்கூடாது அல்லவா ?

ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக சொற் செயலிகளை (Word Processors) பயன்படுத்துகையில், அல்லது வலைப்பதிவுகள் (blog post) தட்டச்சு செய்கையில், நாம் ஏதேனும் சொல்லை பிழையாக தட்டச்சு செய்து விட்டால், அதற்கான சரியான சொல், அதைப் போன்றே ஒலிக்கும் வேறு சரியான சொற்கள் என்று நமக்கு பரிந்துரை (suggestions) வழங்குகின்றது , பிழையான சொற்களை சிகப்பு அடிக்கோட்டினால் குறிப்பிட்டு காட்டுகிறது. சில செயலிகளில் தானியங்கி திருத்தம் (Auto-correct)  வசதியும் உண்டு. தமிழ் தட்டச்சு செய்கையில், இது போன்று தானியங்கி திருத்தம் மற்றும் சொல் பரிந்துரை வசதிகள் உருவாக்கப் பட்டால், தமிழ் ஆவணங்கள் பிழையின்றி உருவாக்க பேருதவியாக இருக்கும். Google வழங்கும் blogger உதவி கொண்டு நாம் தமிழில் வலைப்பதிவுகள் உருவாக்கினால், வார்த்தைகளை தானியங்கு பரிந்துரைக்கும் (auto-suggest) வசதியும் உண்டு. அதைப் பயன்படுத்தியேனும் பிழையில்லா ஆவணங்களை இணையத்தில் உலவ விடலாமே. பிழை நிறைந்த ஆவணங்கள் மொழியின் வளர்ச்சிக்கு தடையாகத் தானே இருக்கும். இணையத்தில் தமிழ் தட்டச்சு செய்து ஆவணங்களை உருவாக்குவோர் யாவரும் இதனை நினைவில் கொள்ளுதல் அவசியம்.

இணையத்தில் தமிழ் இலக்கணம், பழங்கால இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரை, கதை, கவிதை, கட்டுரை என்று தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் விரவிக் கிடக்கின்றன. தமிழ் எண்ணிம நூலகங்களில் பல ஆண்டுகளுக்கு முன் அச்சில் ஏற்றப்பட்ட நூல்களும் கூட கிடைக்கின்றன. அது மட்டுமல்லாது, தற்காலத்தில் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களால் அவர்தம் படைப்புகளை மின்னூலாக வெளியிட்டு அவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பும் கிட்டுகிறது. இதில் இன்னொரு வசதி என்னவெனில், தங்களது மின்னூல்களை ஆண்டிடாய்ட் (Android), கிண்டில் (Kindle) போன்ற சாதனங்களுக்கு  தரவிறக்க விரும்புவோரிடம் கட்டணம் வசூலிக்க விரும்பினாலும் வசூலித்துக் கொள்ளலாம். இது எழுத்தாளருக்கு வருவாய்க்கான வாய்ப்பாகவும் அமைகிறது. நமது மின்நூல்களை அமேசான்.காம் போன்ற வர்த்தக இணையதளங்களிலும் விற்பனை செய்யலாம். நூல்களை அச்சில் ஏற்ற ஆகும் செலவு, பதிப்பகத்தாரால் வெளியிட ஆகும் செலவு இவற்றை கருத்தில் கொண்டு பலரும் தற்போது தங்களது படைப்புகளை மின்னூலாக வெளியிடுகின்றனர். இப்படி வெளியிடும் நூல்கள் கண்டிப்பாக பல வாசகர்களை சென்றடையும். இதனால், புத்தகம் வெளியிடுவோருக்கும் செலவில்லை, வாசிப்போரும் இலவசமாகவே வாசித்து தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். வாசகர்களின் வரவேற்பினை பொறுத்து, நூலினை அச்சில் ஏற்றலாம்.

மேற்கூறியுள்ள கருத்துக்கள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு பயனுள்ளவையாய் இருக்கும் என்ற நோக்கில், என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பே ஆகும். கருத்துகள் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள கணினி புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி,  columbiabusinesstimes.com

உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

13 comments:

மகிழ்நிறை said...

அருமையான விரிவான கட்டுரை!! புதுகை விழாக்குழு சார்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி!

Tamizhmuhil Prakasam said...

தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.

மணிச்சுடர் said...

கணினித் தமிழ் வளர்ச்சிக்கான அக்கறையுடன் படைக்கப்பட்ட கட்டுரை அருமை. டண்ணகர,றன்னகர, லகர,ளகரப் பிறழ்வுகள் மட்டுமல்ல ஒற்றுப் பிழைகளிலும், பிறமொழி கலப்பிலும் நம்மவர்கள் கருத்தூன்றிப் படைத்தால் தமிழ் எல்லா நிலைகளிலும் உயரும்.... போட்டியில் வென்றிட வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி.
பாராட்டுக்கள்.

Tamizhmuhil Prakasam said...

@ Pavalar Pon.Karuppiah Ponniah

இளம் பிராயத்திலேயே கற்றுக் கொண்டு விட்டால் பின்னாளில் சிரமம் இருக்காது. இளம் பிராயத்தில் ஆங்கிலம் கற்க எடுக்கும் முயற்சியை, தமிழ் கற்க காட்டாது போவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ முனைவர் இரா.குணசீலன்

நன்றிகள் பல ஐயா.

Anninos Christoforou said...
This comment has been removed by a blog administrator.
தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

தெளிவான ஆக்கப்பூர்வமான சிந்தனை தோழி. பிழையின்றி எழுதுவது முக்கியமானது.
வாழ்த்துகள் தோழி

Tamizhmuhil Prakasam said...

@ கிரேஸ்
மனமார்ந்த நன்றிகள் தோழி.

Anninos Christoforou said...
This comment has been removed by a blog administrator.
அணில் said...

// இன்னொரு சாராரும் கணினியில் தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்கிறார்கள். யார் தெரியுமா ? DTP (Desktop Publishing) நிறுவனங்களில் பணிபுரிவோர்.

இது எனது அனுபவ உண்மை. பதினேழு வருடங்களுக்கு முன் பள்ளி விடுமுறை நாட்களில் கணினி பயிற்சி பெற காரைக்கால் பாரதி கம்ப்யூட்டர் சென்ட்டரில் (ஆங்கிலத்தில் வைத்திருந்த பெயரை தமிழில் எழுதியிருக்கிறேன், தமிழறிஞர்கள் மன்னிக்கவும்) எனது நண்பர் சேர்த்து விட்டார். அது ஒரு DTP நிறுவனம். ms office, page maker, coral draw அத்தனையும் எனக்கு புதுமை. அச்சுக் கோர்ப்பில் அழகாக இருக்கும் செந்தமிழ் எழுத்துருக்களை அப்போது பயன்படுத்துவோம். கணினியில் தமிழ் பயன்படுத்தும் போதெல்லாம் ஆச்சர்யத்துடன் பார்ப்பேன். ஆங்கிலத்தில் வரும் வேலைகளை பிழையின்றி தட்டச்சு செய்து கொடுத்து விடுவேன். ஆனால் ஆங்கிலத்தைவிட தமிழுக்குதான் நிறைய வேலைகள் வரும். அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் மனுக்களை தமிழில் தட்டச்சு செய்து கொடுப்போம். அதில்தான் எங்களுக்கு லாபமும் அதிகம். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ப்ரிண்ட் எடுக்க ஒரு பக்கத்திற்கு 20 ரூபாய் என்றால், தமிழுக்கு 30 ரூபாய் வாங்குவோம். தமிழில் பாமினி முறையில் (தமிழ் தட்டச்சு a/ய s/ள d/ன f/க ப..) தட்டச்சு செய்வார்கள். அதில் ஒருவர் ஒருநாள் வரவில்லையென்றால் வேலைகள் அப்படியே தேங்கி விடும். ஒருமுறை மிகுந்த சிரமப்பட்டு ஐந்து பக்க கட்டுரையை தமிழில் அடித்துக் கொடுத்தேன். அதை பக்கத்திலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தமிழாசிரியர் ஒருவர் உச்சி முகர்ந்து பாராட்டி ஆசி வழங்கிவிட்டு சென்றார். அதன் பிறகு ஏழு வருடம் கழித்து அதே நிறுவனத்திற்கு சென்று NHM Writer நிறுவி, ஆங்கிலம் மட்டும் தட்டச்சு செய்ய தெரிந்தவர்களுக்கு ஒலியியல் முறையில் தமிழ் தட்டச்சு செய்ய சொல்லிக் கொடுத்தது நெகிழ்ச்சியான தருனமாக இருந்தது.

கூடதல் குறிப்பு:
எனை கணினிப் பயிற்சியில் சேர்த்து விட்ட நண்பர் தற்போது ஒரு அரசு பள்ளியில் தொடக்கக்கல்வி ஆசிரியராக இருக்கிறார். அவர் எனக்கு கணினியைக் கற்றுக் கொடுத்தார். பின்னாளில் நான் அவருக்கு கணினியிலும் இணையத்திலும் ஒருங்குறிதத் தமிழ் பயன்படுத்த கற்றுக் கொடுத்தேன். அவர் தனது மாணவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுத்து விட்டார். அவர் பணியாற்றும் பள்ளிக்கு சென்றபோது கணினியை இலகுவாக கையாளும் மாணவர்களை பார்த்து அசந்து விட்டேன். புதுவையில் மேற்படிப்பு படிக்கும் போது அண்ணா பல்கலையில் கணித்தமிழில் முனைவர் பட்டயத்திற்கு ஆராய்ச்சி செய்து வந்த எனது பேராசிரியருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். அப்போதுதான் நிரல்களில் (புரோகிராம்) தமிழ் பயன்படுத்த கற்றுக் கொண்டேன். கணித்தமிழ் குறித்து நான் அரிச்சுவடிகளை தெரிந்து கொண்ட தளம் tamilnation.org. தொழில்முறையாக DTPயில் தமிழ் பயன்படுத்த ஆரம்பித்தது எவ்வளவு பயன் தந்திருக்கிறது என்பதை இக்கட்டுரையில் பதிவிடுவது பொருத்தமாக இருக்குமென கருதுகிறேன்.

அணில் said...

//...அதன் பிறகு ஏழு வருடம் கழித்து அதே நிறுவனத்திற்கு. :)
பல வருடங்களுக்கு பின் என திருத்திப் படிக்கவும். தற்பெருமை பேசப் போய் மானம் போகிறது. 10 வருடங்களுக்கு முன் ஏது NHM writer என நீங்களாவது யோசிக்க வேண்டாமா?

தாசெ said...

பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ழமவழ

Post a Comment