blank'/> muhilneel: தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை

Wednesday, March 4, 2015

தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை
ரூபன் &யாழ்பாவாணன் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய கதை.காணும் பொங்கல் பண்டிகை நாளான அன்று, கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. மக்கள் கடல் பெரிதா, ஆழிக்கடல் பெரிதா  என்றெண்ணுமளவுக்கு காணுமிடமெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்தக் கூட்டத்தினுள் சற்று நேரம் சுற்றித் திரிந்தால், தான் அன்று கொண்டு வந்திருந்த பலூன்கள் அனைத்தும் விற்று விடும். கொஞ்சமேனும் இலாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில், கடற்கரையை நோக்கி தனது சைக்கிளை வேகமாக மிதித்தான் பூபாலன்.

பூபாலன் ஒரு பலூன் வியாபாரி. பட்டப் படிப்பு முடித்திருந்தான். அவனது படிப்பிற்கேற்ற உத்யோகம் இன்னும் அவனுக்கு கிட்டவில்லை. ஆனாலும் மனம் தளராது முயன்று கொண்டிருந்தான்.  அவனது வருமானம் குடும்பத்திற்கு பயன்படுமா என்றால், பல வேளைகளில் இல்லை என்றே சொல்லலாம். அவனது தந்தை ஒரு அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிந்து வருகிறார். அவரது வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. தந்தைக்கு மேலும் கஷ்டம் கொடுக்கக் கூடாது எண்றெண்ணி, கிடைக்கும் சிறு சிறு வேலைகள் செய்து வந்தான். கடந்த சில நாட்களாக, நண்பர் ஒருவரின் உதவியோடு இந்த பலூன் வியாபாரம் செய்து வந்தான்.

கடற்கரையை வந்தடைந்தான் பூபாலன். வந்ததும், பலூன்களை  ஊதி சைக்கிளில் கட்டினான். சற்று நேரத்திற்கெல்லாம், சிறுவர் கூட்டம் பூபாலனை சூழ்ந்து கொண்டது. சிறுவர்கள் விரும்பியபடி அழகழகாக பல்வேறு வடிவங்களில் பலூன்கள் ஊதிக் கொடுத்தான். ஆப்பிள் பலூன், பூ பலூன், இதய வடிவ பலூன், என்று பல்வேறு வகையான பலூன்கள் சிறார்களை பூபாலனை நோக்கி இழுத்தது.

சிறுவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒருவராய், ஒவ்வொரு வண்ணத்தில் பலூன் கேட்டனர்.

"அண்ணா ! எனக்கு பச்சை கலர்ல ஆப்பிள் பலூன் " என்றாள் ஒரு சிறுமி.

"எனக்கு சாதா பலூன் ! மஞ்சள் கலர்ல வேணும் " என்று கேட்டான் ஒரு சிறுவன்.

" சார் !  புளூ கலர்ல எனக்கு பலூன் தாங்க ! " என்றான் ஒரு சிறுவன்.

சிறார் கேட்ட வகை வகையான பலூன்களை ஊதிக் கொடுத்தான் பூபாலன்.

சிறிது நேரம் கூட்டம் இல்லாததால், ஒரு காபி குடிக்கலாம் என்று எண்ணி, காபி விற்கும் ஒருவரை அழைத்து, காபி வாங்கிக் கொண்டான். அதை குடித்துக் கொண்டிருக்கையிலேயே, இருவர் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு அவ்வழியே வந்தனர். 

பூபாலன் வைத்திருந்த பலூன்களைக் கண்டதும், அந்த சிறுமி 

"அங்கிள் ! பலூன் வேணும். " என்றபடி அங்கேயே நின்று கொண்டது.

"அப்பறம் வாங்கலாம் பாப்பா. " என்றார் உடன் வந்த ஒருவர்.

"இல்ல ! இப்பவே வேணும். " என்றது அந்த குழந்தை.

"சரி ! வாங்கிக் குடு" என்றார் மற்றொருவர்.

அவர்களும் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு, பூபாலன் அருகே வந்தனர். சிறுமி, பலூன்களைக் கண்டு குதூகலித்தாள். அந்த இருவரும் பூபாலனை அவசரப் படுத்தினர். 

" சீக்கிரம் குடு பா !" என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர். 

அவர்களது பரபரப்பைக் கண்டதும் பூபாலனுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது.

பலூன் ஒவ்வொன்றாக எடுத்து ஊதுவான். அவை சரியில்லை என்று தூக்கி எறிந்தான். சில பலூன்களை வேண்டுமென்றே உடைத்தான்.

" வேற பலூன்காரர் கிட்ட வாங்கிக்கலாம் பாப்பா ! " என்று ஒருவன் குழந்தையை அங்கிருந்து கூட்டிச் செல்ல முற்பட்டான். ஆனால், குழந்தையோ,

" எனக்கு இவர் கிட்ட இருக்குற பலூன் தான் வேணும்" என்று சொல்லி அடம் பிடித்து நின்றது.

சில நிமிடங்களில், அங்கு ஆண் பெண் இருவர் பரபரப்புடன் " பாப்பா ! பாப்பா !"
என்றபடி ஓடி வந்தனர்.

அங்கு சிறுமியைக் கண்டதும் , " பாப்பாஆஆஆ ! " என்றபடி அந்த பெண் மயக்கமுற்று விழுந்துவிட்டார்.

அவர்கள் பின்னாலேயே சில போலீசாரும் வந்து விட்டனர்.

போலீசைக் கண்டதும்,  சிறுமியுடன் வந்த இருவரும் மெல்ல கூட்டத்தில் நழுவ பார்த்தனர். அவர்களை பிடித்துக் கொண்டான் பூபாலன். பூபாலனை தாக்கி விட்டு ஓட முற்பட்டனர் இருவரும். உடனே போலீசார் அவர்களை பிடித்தனர்.

பூபாலன் அதுவரை அங்கு நடந்ததையும், அவர்கள் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும், நேரம் கடத்த முயன்றதையும் சொன்னான். அவர்கள் சிறுவர் சிறுமியரை கடத்தும் கும்பலைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்களை பிடிக்க உதவியமைக்கு நன்றியையும் தெரிவித்துச் சென்றனர் போலீசார்.

இதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்தார் அந்த பெண்மணி. தன் மகளை ஆரத் தழுவியபடி,

" என் மகளை எனக்கு பத்திரமா காப்பாத்தி குடுத்திருக்கீங்க தம்பி ! ரொம்ப நன்றி பா ! " என்று நாதழுதழுக்க கூறினார்.

"உங்களுக்கு வேண்டிய உதவிய செய்யறேன் தம்பி. என்னைய வந்து பாருங்க"
என்று உடன் வந்திருந்த ஆண் கூறிவிட்டு, தனது விலாசம், தொலைபேசி எண் அடங்கிய ஓர் அட்டையை பூபாலனிடம் கொடுத்து விட்டு, தன் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, தன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.

சில நாட்களில், அவர் கொடுத்த விலாசத்திற்கு சென்றான் பூபாலன். அங்கு ஓர் பெரிய வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வந்தது.  அங்கு வாசலில் இருந்த காவலாளியிடம் அந்த அட்டையைக் காண்பித்ததும், உள்ளே அனுமதிக்கப்பட்டான் பூபாலன்.

அதன்பின், அவனது வாழ்க்கையின் தடம் நிச்சயம் மாறித்தானே போயிருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எவ்வளவு உண்மை !

குறிப்பு :

சிறுகதைப் போட்டியில் இக்கதைக்கு ஆறுதல் பரிசு கிட்டியுள்ளது.

சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015  

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment