blank'/> muhilneel: சூழ்நிலை - சிறுகதை விமர்சனம்

Thursday, October 23, 2014

சூழ்நிலை - சிறுகதை விமர்சனம்


சூ ழ் நி லை[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

காலை 10 மணி. பிஸினஸ் விஷயமாக சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது.

”குட்மார்னிங்... ஜெயா... சொல்லு”  என்றார் டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம்.

ஜெயாவுக்கு குரல் தடுமாறியது. அவள் அழுது கொண்டே பேசுவது இவருக்குப் புரிந்தது.

“அப்பா... தாத்தா சென்னையில் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டாராம். இப்போது தான் போன் வந்தது. அவரின் உடல் ‘ஜி.ஹெச்’ இல் உள்ளதாம்................


அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங் ஃப்ளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?” என்றாள்.

இதைக்கேட்ட மஹாலிங்கம் சற்று பலமாகச் சிரித்துக் கொண்டே, “அப்படியாம்மா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. நான் அவசியம் போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்” என்றார், சற்றும் தன் முகபாவணையில் வருத்தமோ அதிர்ச்சியோ ஏதும் இல்லாமல் ....... படு குஷியாக.


தன் அப்பாவின் இத்தகைய பேச்சு ஜெயாவுக்கு அதிர்ச்சியை அளித்தது. தன் தாயாரிடம் இந்த டெலிபோன் உரையாடலைப் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.

இதைக் கேள்விப்பட்ட மஹாலிங்கத்தின் மனைவி ஈஸ்வரிக்கு தன் கணவன் மீது கோபம் கோபமாக வந்தது.

“கோடீஸ்வரரான இவருக்கு எப்போதுமே எங்க பிறந்த வீட்டு மனுஷ்யாளைக் கண்டாலே ஒரு வித இளக்காரம் தான். மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு ...... இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன்” என்று தன் மகளிடம் கூறிவிட்டு, விமான டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடுகளைக் கவனிக்கலானாள்.

மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட மஹாலிங்கம், தன் தந்தை இறந்த துக்கத்தில் மூழ்கியிருக்கும் ஈஸ்வரியுடன் அதிகமாக மனம் விட்டு பேச முடியாமல் போனது. 

அகால மரணம் ஒன்று எதிர்பாராமல் நடந்து விட்ட அந்த வீடு இருக்கும் சூழ்நிலையிலும், பெரியவரின் மறைவால் அந்த வீட்டில் குழுமியிருக்கும் மனிதர்களின் துக்கமான மன நிலையிலும், எப்படி அவர்கள் மனம் விட்டு பேச முடியும் ?

ஈஸ்வரி ஒரு மூன்று வாரங்களாவது இங்கேயே (பிறந்த வீட்டிலேயே) இருந்து விட்டு, பிறகு டெல்லிக்கு புறப்பட்டு வரட்டும் என்று தன் மாமியாருக்கும் மனைவிக்கும் பொதுவாக காதில் விழுமாறு சொல்லி விட்டு, தான் மட்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 

பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால் அவரால் எந்த வீட்டிலும், எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாது. 

துக்க வீட்டுக்கு வந்து விட்டு ’போய் விட்டு வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. அதனால் டக்கென்று மஹாலிங்கம் புறப்பட்டு விட்டார். 

அவர் எப்போதுமே இப்படித்தான் என்று தெரிந்த ஈஸ்வரியும், அவர் மேல் இப்போது உள்ள கோபத்தில், அவருடன் முகம் கொடுத்தே பேசவில்லை.

இதற்கிடையில் தன் கணவனை இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி பெருமையாகப் பேசி பூரித்துப் போகும் தன் தாயிடமே கோபமாக வந்தது, ஈஸ்வரிக்கு.

அடுத்த ஒரு மாதமும் கோபத்தில், தன் கணவனுடன் தொலைபேசியில் கூட பேசுவதைத் தவிர்த்து விட்டாள் ஈஸ்வரி ...... அவ்வளவு கோபம் அவர் மீது.

ஒரு மாதம் கழித்து ஒரு வழியாக டெல்லிக்குத் திரும்பினாள் ஈஸ்வரி.

“வா, ஈஸ்வரி” என்று அன்புடன் தான் வரவேற்றார், தற்செயலாக அன்று வீட்டில் இருந்த மஹாலிங்கம். 

அன்புத் தந்தையை இழந்த துக்கத்துடன் திரும்பி வந்துள்ள தன் அம்மாவை ஓடிச்சென்று ஜெயாவும்,  ஆறுதலாக பற்றிக்கொண்டாள்.

தன் வயது வந்த மகள் பக்கத்தில் இருக்கிறாளே என்றும் பாராமல் ஈஸ்வரி கோபமாக தன் கணவனிடம் வாய் சண்டையிட தயாராகி விட்டாள்.

“எங்கப்பா சாலை விபத்திலே செத்துப்போனது உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸந்தோஷமா? இது போல நீங்க ஜெயாவிடம் சொன்னது கொஞ்சமாவது நியாயமா? உங்களிடம் எவ்வளவு தான் பணமிருந்தாலும், எங்க அப்பாவை அந்தப் பணத்தால் திரும்ப வரவழைக்க முடியுமா? ” என சுடும் எண்ணெயில் போட்ட அப்பளமாகப் பொரிந்து தள்ளினாள், ஈஸ்வரி.

“வெரி... வெரி... ஸாரி ஈஸ்வரி, இது தான் உன் கோபத்திற்குக் காரணமா? .........

சென்னைக்குப் போன இடத்தில் என் நண்பர் ஒருவர் மூலம், நம்ம ஜெயாவுக்கு எல்லா விதத்திலும் நல்ல ஒரு பொருத்தமான மாப்பிள்ளை பையன் பார்த்து, ஜாதகமும் பொருந்தி, மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிக்கும் நேரம், நம் ஜெயாவிடமிருந்து, இந்த துக்கமான தகவல் வந்தது ...... 

நான் அங்கிருந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பிள்ளை வீட்டார் ஏதாவது அபசகுனமாக நினைக்காமல் இருக்கவும் தான், அவ்வாறு சொல்லும் படியும், சமாளிக்கும் படியும் ஆகி விட்டது .......

என்னிடம் உள்ள பணத்தாலும், செல்வாக்காலும் அவரின் உயிரைத் திரும்ப கொண்டு வர முடியாவிட்டாலும், அவருடைய உடலையாவது வெகு சீக்கரமாக ”ஜி.ஹெச்” லிருந்து வீட்டுக்குக் கொண்டு வர முடிந்தது .......

மேற்கொண்டு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளின் எல்லாச் செலவுகளுமே என்னுடையதாக இருக்கட்டும் என்று சொல்லி, உன் அம்மாவிடம் நிறைய பணமும் கொடுத்து வர முடிந்தது ......

இந்தப் பணம் கொடுத்த விஷயம் மட்டும் உன்னிடமோ, வேறு யாரிடமுமோ சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன் .......

எனக்கும் என் மாமனாரின் இந்த எதிர்பாராத விபத்திலும் மரணத்திலும் மிகவும் வருத்தம் தான். அவரின் விதி அது போல உள்ளபோது நம்மால் என்ன செய்ய முடியும்? ......

அமரரான உன் அப்பா ஆசீர்வாதத்தால் தான், இந்த ஒரு நல்ல இடம் கை கூடி வந்து, நம் ஜெயாவின் கல்யாணம் நல்லபடியாக ஜாம் ஜாம்ன்னு சீக்கிரம் முடியணும்!” என்று சொல்லி, தன் மனைவியின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார் மஹாலிங்கம்.

தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு, அவர் தக்க நேரத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி.

அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.

தாத்தாவின் திடீர் மரணம், ஒரு விதத்தில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள், மணப்பெண் ஜெயா.

  
oooooOoooooஎனது விமர்சனம்

மனதில் தோன்றும் உணர்வலைகள், அவை மகிழ்ச்சி அலைகளாக இருந்தாலும் சரி, துயரமானவையாக இருந்தாலும் சரி, நம் உணர்ச்சிகளை எப்போதுமே கட்டுக்குள் வைத்திருப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமானது இல்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நமது உணர்வுகள் அழுகையாகவோ, ஆத்திரமாகவோ, அளவிலா மகிழ்ச்சியினால் குதூகலமாகவோ, சட்டென்று தயக்கமேதும் இல்லாமல் பட்டென்று வெளிப்பட்டு விடுகின்றது. இது மனித இயல்பு.

இந்தக் கதையின் நாயகர் மஹாலிங்கம் பொறுமையும் நிதானமும் வாய்ந்தவராக சித்தரிக்கப் படுகிறார். இங்கு, அவர் தன் மாமனாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு பொறுமையாக நிதானமாக இருக்கிறாரே என்று நாம் எண்ணினால், அது தவறு. அந்தச் சூழலில், அவர் அளவு கடந்த மகிழ்ச்சி தரக் கூடிய செய்தியொன்றை கேட்டிருந்தாலும், பொறுமையுடனே இருந்திருப்பார். ஏனெனில், அவர்  ஈடுபட்டிருந்த பேச்சு வார்த்தை அப்படிப்பட்டதொன்றே ஆகும்.

" பதறிய காரியம் சிதறிப் போகும் " என்ற பழமொழிக்கேற்ப, அவர் செய்தியைக் கேட்டதும் பதறித் துடித்திருந்தால், அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அந்தப் பதற்றம் பற்றிக் கொள்ள, அந்தச் சூழ்நிலையில், அதுவே ஓர் சகுனத் தடையாக ஆகிப் போயிருக்கக் கூடும். இதனால், பின்னாளில் நடக்க இருக்கும் நற்காரியத்திற்கு பெரும் தடைக் கல்லாகவும், இரு மனம் இணையும் திருமணத்திற்கு தடையாகவும் ஆகிப் போயிருக்கும். இங்கு, அவர் பொறுமையைக் கையாண்டதால், அவ்விடத்தில் நற்காரியம் கைகூடி வந்தது. 

தனது செல்வாக்கின் மூலம், அரசு மருத்துவமனையிலிருந்து மாமனாரின் பிரேதத்தை பெற்றது, இறுதிச் சடங்கிற்கு செலவிற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தது, இச்செயல்கள் அனைத்தும் அம்மனிதரின் பெருந்தன்மை குணத்தையே  உணர்த்துகின்றன. பணம் மிகப் படைத்தவர், தனது பண பலம், செல்வாக்கினை  காட்ட இச்செயல்களை செய்திருக்கிறார் என்று நாம் எண்ணினால், அது தவறு.  செல்வந்தராக இல்லாது போயிருந்தாலும், அந்தச் சூழலில், ஒரு சகமனிதருக்கு செய்யும் கடமையாக நிச்சயம் தன்னாலான உதவிகளை நிச்சயம் மஹாலிங்கம் செய்திருப்பார்.

அந்தச் சூழலில், தான் செய்த உதவி, தன் மனைவி மகளுக்குக் கூட தெரியாது வைத்திருக்க  நினைத்த எண்ணம், "வலக்கை கொடுப்பது, இடக்கைக்கு தெரியாது " என்ற உயர்ந்த தயாள குணத்தைக் காட்டுகிறது.

தந்தையை இழந்த சோகத்தில் வந்த மனைவி, ஒரு மாத காலத்திற்கு முன் கணவர் எவ்விதமான சூழலில் அத்தகைய வார்த்தைகளை சொல்லியிருப்பாரோ, என்று இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் ஒரு நொடியும் சிந்தியாது, அவரிடமும் கேட்டு தெளிவடைந்து கொள்ளாது, வந்ததும் வராததுமாய், அவர் மீது ஆத்திரம் கொள்ள, அந்தச் சுழ்நிலையிலும் சிறிதும் கோபம் கொள்ளாது, மனைவியின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு, அவரிடம் பொறுமையாக  விளக்கிய விதம் சிறப்பு. மஹாலிங்கம் நம் மனதில்,  மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

" தன் மாமானாரது ஆசியினாலேயே, தங்களது மகளுக்கு நல்லதொரு வரன் அமையப் பெற்றிருக்கிறது " என்று அவர் சொன்ன வார்த்தைகளில், அவரது மனைவியின் கோபங்கள் அனைத்தும் ஐஸ் கட்டிகளாய் உருகி ஓடிப் போயிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

புதுப் பெண் ஜெயாவிற்கு வாழ்வில் அனைத்து நலன்களும் வளங்களும் கூடிவர இறைவன் அருள்புரிவாராக.


நல்லதொரு வாய்ப்பளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர், வணக்கம்.

தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க சுவையாகவும் உள்ளது.

தங்களின் தளத்தினைப் பின்தொடரும் வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

தாங்கள் என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றி எழுதியிருந்த தங்களின் ’நேயர் கடிதம்’ என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ளது.

இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/10/10.html

இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

அன்புடன் கோபு [VGK]

ooooooooooooooooooooooooooo

Tamizhmuhil Prakasam said...

மதிப்பிற்குரிய ஐயா,

தங்களது வருகைக்கும் அன்பான பாராட்டுதல்கட்கும் வாழ்த்துகட்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

எனது நேயர் கடிதத்தினை வெளியிட்டு சிறப்பித்தமைக்கு என் நன்றிகள் பல ஐயா.

Post a Comment