blank'/> muhilneel: October 2014

Friday, October 31, 2014

Scrapbook Page Layout



A Vibrant & Glamorous moodboard by Rachael Funnell



Here is a Scrapbook page layout I have created for the Scrap Around The World mood board.

 

I was inspired by the butterflies, blue color in the mood board.



Linking this to

Scrap Around The World : October 2014 Challenge 18

Tuesday, October 28, 2014

யாதும் ஊரே ... யாவையும் கேளிர் ! - சிறுகதைக்கான விமர்சனம்

யாதும்  ஊரே 

’யா வை யு ம்’ கே ளி ர் !

சிறுகதைத்தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


அந்தக் கண்ணாம்பாக்கிழவி அந்த அனுமார் கோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட திண்ணைக்குக் குடிவந்து சுமார் அறுபது வருடங்கள் இருக்கும். கோடையோ, குளிரோ, காற்றோ, மழையோ இரவில் ஒரு சாக்குப்படுதாவுக்குள் முடங்கிக்கிடப்பாள். விடியற்காலம் எழுந்து தரையெல்லாம் பெருக்கி, சாணிதெளித்து மெழுகி, அழகாகக்கோலங்கள் போட்டு விடுவாள். 


 

பகலில் பூக்களும், துளசியும் யார்யாரோ பறித்துவந்து தருவதும், இவள் அவற்றை அழகாகத் தொடுத்துக் கோயிலுக்குக் கொடுப்பதும், வாடிக்கையாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருபவை.


எதிர்புறச்சந்தில் உள்ள பொதுக்கழிப்பிடம், குளியல் அறை முதலியவற்றில் இந்தக்கிழவிக்கு மட்டும் கட்டணம் ஏதுமின்றி இலவச அனுமதி உண்டு. கோயிலுக்கு நெருக்கமாகவே ஒரு சைவ உணவகம் உள்ளது. கையில் காசு ஏதும் கிடைத்தால் இரண்டு இட்லி வாங்கிக்கொள்வாள் இலவச சட்னி சாம்பாருடன். காசு இல்லாவிட்டால் பட்டினியுடன் கோயில் குழாயில் வரும் தண்ணீரை மட்டுமே அருந்தி மகிழவும் பழகிப்போனவளே.

பக்கத்து கிராமம் ஒன்றில் பிறந்து, ஏழ்மையில் ஊறி, பருவ வயதில் மற்றொரு கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு, தாய்மை அடைய வாய்ப்பில்லை என்ற காரணம் கூறிக் கணவனாலும் கைவிடப்பட்டவள். 

நிர்கதியாக அன்று கால்போன போக்கில் நடந்து வந்து, புலம் பெயர்ந்து, இந்த ஊரில் இங்குத்தனியே ஓர் அரசமரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரிடம், தன் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துவிட்டு, புடவைத்தலைப்பில் சுற்றி மறைத்து எடுத்து வந்திருந்த பூச்சி மருந்து பாட்டிலின் மூடியைத்திறந்து, பிள்ளையார் முன்பு வைத்துவிட்டு, கடைசியாக ஒருமுறை விழுந்து கும்பிட்டாள். 



அதே நேரம் மரத்திலிருந்து இறங்கிய குரங்குக்கூட்டம், ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் ஓடிப்பிடித்து சண்டையிட்டுக்கொண்டு, அந்த பாட்டிலில் இருந்த விஷத்தை அங்கிருந்த மண் தரையில் தட்டிக்கொட்டிவிட்டுச் சென்று விட்டன.



வாழத்தான் வழியில்லை என்று புலம் பெயர்ந்து இவ்விடம் வந்தவளுக்கு சாகவும் வழியில்லாமல் போனது. எல்லாம் ஏதோ தெய்வ சங்கல்ப்பம் என்று நினைத்துப் பேசாமல் அந்த மரத்தடியிலேயே தங்க ஆரம்பித்தாள்.

இவள் இந்த ஊருக்கு வந்த நேரம், வெயிலிலும், மழையிலும் தவித்து வந்த அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு, ஊர் மக்கள் ஒன்றுகூடி வசூல் செய்து, சிறியதாகக் கோயில் ஒன்று எழுப்பத் தீர்மானித்தனர். அன்றைய பால்ய வயதுக்காரியான கண்ணாம்பாளும் கோயில் கட்டட வேலைகளில்  தன்னால் ஆன சரீர ஒத்தாசைகளும், உதவிகளும் செய்து தந்து, அந்தப்பகுதி மக்களுக்குப் பரிச்சயம் ஆனாள்.

அந்த அரசமரப்பிள்ளையாரைச்சுற்றி அந்த நாளில் மிகவும் கீழ்த்தட்டு மக்களே அதிகம் வசித்து வந்தனர். கைரிக்‌ஷா வண்டிகள், கைவண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், ஒருசில சைக்கிள் ரிக்‌ஷாக்கள், ஒரே ஒரு ஆட்டோ ரிக்‌ஷா, செருப்புத்தைக்கும் தொழிலாளிகள், ரோட்டோரத்தில் கடைபோடும் காய்கறிக்காரர்கள், ஆங்காங்கே டீக்கடைகள், சவரக்கடைகள், சலவைத் தொழிலாளிகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் கழுதைகள், தெரு நாய்கள் என அந்தப்பகுதியே ஒரு மாதிரியாக மிகவும் எளிமையாக ஆரவாரம் ஏதுமின்றிக் காட்சியளித்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள் நேர்மை, உண்மை, மனிதாபிமானம், பரோபகாரம், தர்ம சிந்தனை முதலியன நிறைந்திருந்த ஓர் அருமையான சூழலுடன் விளங்கியது அந்தப்பகுதி.

இன்றைய நாகரீகத்தின் பாதிப்புத் தலையெடுக்காத காலம் அது. கண்ணாம்பாளுக்கும் பருவ வயதானபடியால், அங்குள்ள சற்றே வசதிபடைத்த ஒருசில வீடுகளில், தன் உடலுழைப்பைக்கொடுத்து ஏதோ கொஞ்சமாக சம்பாதித்து, மிகவும் கெளரவத்துடனும் மானத்துடனும் தன் வயிற்றுப்பிழைப்பை கழித்து வந்தாள். 

பிள்ளையார் கோயில் பக்கத்திலேயே ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்துவந்த ஒரு கிழவியுடன் சிநேகம் வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் அங்கேயே அந்தக்கிழவிக்குத் துணையாகப் படுத்துக்கொண்டு காலம் தள்ளி வந்தாள்.

ஓரிரு வருடங்கள் இவ்வாறு போனபோது, ஒருநாள் அந்தப்பெரிய மரத்தில், குதித்துக்கும்மாளம் அடித்த குரங்குகளில் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்து பிள்ளையார் கோயில் வாசலுக்கு முன்புறம் தன் உயிரை விட்டுவிட்டது.

”தான் கொண்டுவந்திருந்த விஷபாட்டிலைத் தட்டிவிட்டு அன்று தன் உயிரைக்காப்பாற்றிய குரங்காக இருக்குமோ” என நினைத்த கண்ணாம்பாளுக்கு, கண்களில் கண்ணீர் வந்தது. இந்தக்குரங்கின் மரணம், அவள் மனதை மிகவும் பாதிப்பதாக இருந்தது.

அங்கிருந்த கைரிக்‌ஷாக்காரர்களும் மற்ற ஏழைத்தொழிலாளிகளுமாகச் சேர்ந்து, ஒரு வேட்டியை விரித்து, அதில் அந்த உயிர்நீத்த குரங்கைப்படுக்க வைத்து, சிறிய மலர்மாலை ஒன்று வாங்கிவந்து அதன் கழுத்தில் அணிவித்து, குங்குமத்தைக்குழைத்து அதன் நெற்றியில் நாமம் இட்டு, அதன் இறுதிக்கடனுக்குப் பணம் வசூல் செய்தனர். பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே ஒரு குழிவெட்டி, அந்தக் குரங்கைப்புதைத்து, புதைத்த இடத்தின் மேல், அந்தப்பிள்ளையாருக்கு சமமாக, ஓர் அனுமன் கோயிலும் எழுப்ப ஆரம்பித்தனர்.

தொடரும்

  

அனுமன் கோயில் கட்டப்படும்போதும், தன்னால் ஆன திருப்பணிகள் [சரீர ஒத்தாசைகள்]செய்து உதவிய கண்ணாம்பாளை, ஒரு காவலாளிபோல, அந்தக்கோயில் வளாகத்தினுள்ளேயே தங்கிக்கொள்ள அவ்வூர்ப் பொதுமக்கள் அனுமதி வழங்கினர்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஒருசில வசதி படைத்த பக்தர்கள், கண்ணாம்பாளுக்கும் உடுத்திக்கொள்ள புது வஸ்திரங்கள் வாங்கித்தந்து, இனிப்புகள் பலகாரங்கள் முதலியன தந்து உதவுவதுண்டு.  கண்ணாம்பா தானாக யாரையும் எதுவும் கேட்பது கிடையாது. கோயிலுக்கு தன்னால் முடிந்த சேவைகள் செய்வதிலேயே ஆத்ம திருப்தி அடைந்து வந்தாள்.

வாழவழியின்றி அகதியாக, அனாதையாக வந்தவளுக்கு, அந்தப்பிள்ளையார் மற்றும் அனுமார்சாமியின் கருணையினால், அவளும் மிகவும் பாதுகாப்பாக அந்தக் கோயிலிலேயே தங்கிக்கொள்ள ஒரு ஆதரவும், புகலிடமும் அளிக்கப்பட்டதில் அவளுக்கும் திருப்தியே.  

தங்க இடம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த அனுமாரும், பிள்ளையாரும் அவளைக் கைவிடாமல், பட்டினி போடாமல் காத்தும் வந்தனர். 

அங்கிருந்த குருக்கள் அவர்களின் தயவால், ஒண்டிக்கட்டையான இவளின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை உத்தேசித்து, அவ்வப்போது அவள் வயிற்றைக் கழுவிக்கொள்ள தேங்காய் மூடிகள், வாழைப்பழங்கள், வடைகள், சர்க்கரைப்பொங்கல், சுண்டல், தயிர்சாதம், கொழுக்கட்டை என அவ்வப்போது எதாவது பிரஸாதமாக அவளுக்கும் கிடைத்து வந்தன.


  

  
   
  
தனக்குக்கிடைக்கும் இந்த தின்பண்டங்களைத் தான் மட்டுமே சாப்பிடாமல், தன் குழந்தைகள் போன்ற மாருதிக்கும், அனுமந்துவுக்கும் என ஒதுக்கித் திண்ணையின் ஒரு ஓரத்தில் மூடி வைத்திருப்பாள். 




இரவு நேரங்களில் எங்கேயோ போய்த்தங்கும் அந்த குறிப்பிட்ட இரு குரங்குகள் மட்டும், காலை சுமார் பத்து மணியளவில், கண்ணாம்பாக்கிழவியின் திண்ணைக்கு ஆஜராகி, உரிமையுடன் அந்த மூடி வைத்திருக்கும் திண்பண்டங்களைத் திறந்து எடுத்துச்சாப்பிட்டு விட்டு, திரும்பச்செல்லும் சமயம் கண்ணாம்பாளின் கைகளைத்தொட்டு (நன்றி தெரிவிப்பதுபோல) தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

காலம் மாறமாற காட்சிகளும் மாறுவதுபோல, இப்போது அந்தக்கோயிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் மிகவும் நாகரீகமாகப்போய்விட்டன. 

ஒரே குப்பை மேடாகத் தெரு நாய்களும், பன்றிகளும் கூட்டம் கூட்டமாகப்படுத்திருந்த இடங்களும், திறந்தவெளிக் கழிப்பிடமாக இருந்த அசிங்கமான ஒதுக்குப் புறப்பகுதிகளும், அவற்றைத்தாண்டி இருந்த விளை நிலங்களும், இன்று ப்ளாட் போடப்பட்டு, பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிப்போய்விட்டன.

மனைகளின் மதிப்பும் விலைகளும் பலமடங்கு அதிகமாகி விட்டன. வாகனங்களின் வருகை மிகவும் அதிகரித்து, அமைதியாக இருந்த அந்தப்பகுதி இப்போது ஒரே இரைச்சலாகவும், பரபரப்பாகவும் மாறி விட்டது. 

புதுப்புது மனிதர்கள் நடமாடத்தொடங்கி விட்டனர். ரோட்டிலிருந்த கைவண்டிகள், ரிக்‌ஷாக்கள், குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள் எல்லாம் காணாமல் போய், மோட்டர் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள், சிற்றுந்துகள், பேருந்துகள் என கணக்கிலடங்காமல் ஓடத்துவங்கின. 

ரோட்டில் இப்போது காலாறக் கைவீசி காற்று வாங்கியபடி நடக்க முடியவில்லை. எங்கும் ஒரே கூட்டமாக இருந்தது. பெரிய பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் என கடைகளாக இல்லாமல் கடல்களாகக் காட்சியளித்தன. பெரும்பாலான குடிசைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. ரோட்டோரக்கடைகளும், டீக்கடைகளும், சிறு வியாபாரிகளும் போன இடம் தெரியவில்லை.

மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்துபோனக் குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள்.  

இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது. 

சாலை விபத்தில் இறப்பவரைச்சுற்றி கூட்டம் போட்டு போக்குவரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது; போலீஸ்காரர்கள் வந்து போட்டோ படம் எடுத்து, உயிர் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வரை, யாரும் விபத்தில் அடிபட்டுக்கிடப்பவரைத் தொடக்கூடாது என்று ரொம்பவும் சட்டம் படித்தவர்கள் போல சொல்லித்திரியும் படிப்பறிவு பெற்றவர்களைப் பார்க்கும் கண்ணாம்பாளுக்கு மிகவும் வேதனையாக இருக்கும். 

“யார் பெற்ற பிள்ளையோ” என்று துடிதுடித்துப்போவாள் ... அது போன்ற விபத்துக்களைப் பார்க்கும்போது.

அங்கு கோயிலுக்குப் பக்கத்திலேயே உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தினமும் கோயிலுக்கு வந்து போவதுண்டு. குறிப்பாக தேர்வு எழுதப்போகும் போது இந்தக்கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டுப் போவதுடன், இந்தக்கண்ணாம்பாக் கிழவியையும் வணங்கி ஆசிபெற்றுச் செல்வது வழக்கம். 

அவ்வாறு தன்னிடம் வரும் ஒவ்வொரு குழந்தைகளையும் தொட்டுத்தடவி, “நல்லாப்படியுங்க, நிறைய மார்க் வாங்குங்க” என ஆசி கூறி வாழ்த்தி அனுப்பி வைப்பாள்.

கண்ணாம்பாளுக்கு, இப்போது சுமார் எண்பது வயது இருக்கும். நாளுக்கு நாள் உடம்பில் தெம்பு குறைந்து வருகிறது. தான் இதுவரை சேர்த்து வைத்துள்ள சொற்பத்தொகையில், அந்தப்பிள்ளையாருக்கு ஒரு அர்ச்சனையும், அந்த அனுமார்சாமிக்கு ஒரு வடைமாலையும் போட வேண்டும் என்ற தன்னுடைய வெகுநாள் ஆசையை அந்தக்கோயில் குருக்கள் ஐயாவிடம் கூறினாள்.  

“பேஷா, நாளைக்கே செய்து விடலாம், கண்ணாம்பா; உன்னால் முடிந்ததைக்கொடு போதும். மீதியை நான் போட்டு ஜோராகச் செய்து கொடுத்து விடுகிறேன்” என்றார் அந்தக்குருக்கள்.

தொடரும் 

   
”நாளை காலை பத்து மணிக்கு என் குழந்தைகள் மாருதியும், அனுமந்துவும் வரும் சமயம் பிரஸாதம் கிடைப்பது போலச் செய்துகொடுங்க சாமீ” என்று சொல்லித் தன் சுருக்குப்பையிலிருந்த பணத்தையெல்லாம் ஒரு மூங்கில் தட்டில் கொட்டி, அவரை விட்டே மொத்தம் எவ்வளவு தேறும் என்று பார்க்கச்சொன்னாள், அந்தக்கிழவி.

எண்ணிப்பார்த்தவர் “இரண்டாயிரத்து முன்னூற்று மூன்று ரூபாய் உள்ளது” என்றார்.  

தான் யாரிடமும் யாசகம் ஏதும் கேட்காதபோதும், கோயிலுக்கு வரும் பெரும்புள்ளிகள் சிலர் தன் மேல் அன்பு காட்டி அவர்களாகவே மனமுவந்து அளித்துச்சென்ற தொகை, பல வருடங்களாக சேர்ந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகியிருப்பது, கண்ணாம்பாளுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  

“அதிலிருந்து வடைமாலைக்கும், அர்ச்சனைக்குமாக ரூபாய் முன்னூற்று மூன்றை எடுத்துக்கொள்ளுங்கள்; மீதி இரண்டாயிரத்தைத் தாங்களே என் கடைசிகாலச் செலவுக்கு வைத்துக்கொண்டு, அனாதையான எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, ’கோவிந்தாக்கொள்ளி’ போட்டு, என்னை நல்லபடியாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுங்க” என்றாள் கண்ணாம்பாள் கிழவி.

“அதெல்லாம் ஒண்ணும் கவலையேபடாதே; பணத்தை வேண்டுமானால் நான் பத்திரமாக என்னிடம் வைத்துக்கொள்கிறேன்; எப்போதாவது செலவுக்குப்பணம் வேண்டுமானால் என்னிடம் தயங்காமல் கேட்டு வாங்கிக்கோ; பிள்ளையாருக்கும், அனுமாருக்கும் இவ்வளவு நாட்கள் இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்திருக்கும் நீ, நூறு வயசுவரை செளக்யமாய் இருப்பாய்; மனதை மட்டும் தளரவிடாமல் தைர்யமாய் வைத்துக்கொள்” என்றார் குருக்கள்.

மறுநாள் காலை பிள்ளையாருக்கு அர்ச்சனை, அனுமாருக்கு வடைமாலை எல்லாம் நல்லபடியாக முடிந்தது. மாருதியும், அனுமந்துவும் பூஜை வேளையில் கிழவியுடன் கலந்து கொண்டு, தேங்காய், பழங்கள், வடைகள் என ஆவலுடன் நிறையவே சாப்பிட்டுக்கொண்டிருந்தன. 


 


தான் பெற்ற குழந்தைகள் போல ரசித்து ருசித்து சாப்பிடும் அவற்றைப் பார்த்த கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி.
அப்போது குருக்களுக்கு தபால்காரர் கொடுத்துச்சென்ற பதிவுத்தபால் ஒன்றைப் பிரித்து, குருக்கள் உரக்கப்படிக்க, கிழவியும் அவர் அருகே நின்றபடி, அதிலிருந்த விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘போக்குவரத்துக்கும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தற்சமயம் மிகவும் இடையூறாக முச்சந்தியில் உள்ள அந்தக்கோயில்கள், ஆக்கிரமிப்புப்பகுதியில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டவை என்று, நகர முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்து விட்டதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் அந்தக் கோயில்களைத் தரை மட்டமாக இடிக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற்று விட்டதாகவும், இடித்தபின் போக்குவரத்துக்கான பாதை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெறும் என்றும், இது ஒரு தகவலுக்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ் என்று அறியவும்’ என்று எழுதப்பட்டிருந்த விஷயம், குருக்களால் வாசிக்கப்பட்டு, கண்ணாம்பாக்கிழவியால் காதில் வாங்கிக் கொள்ளப்பட்டது.

தனக்குத்தெரிந்தே, தன் பார்வையில், அந்த நாளில் கட்டப்பட்டதும், ஆதரவற்ற அனாதையான தனக்கு இன்று வரை ஒரு பாதுகாப்பு அளித்து வருவதுமான அந்தக்கோயில்கள், இடிக்கப்படப்போகின்றன என்ற செய்தி, அந்தக்கிழவிக்குத் தலையில் இடி விழுந்தது போல ஆனது. 

அப்படியே மனம் இடிந்துபோய் மயங்கிக்கீழே சரிந்து விட்டாள். அவள் உயிர் அப்போதே தெய்வ சந்நிதியில் பிரிந்து போனது.




இதைக்கண்ட மாருதியும் அனுமந்துவும் கதறி அழுதன.

கோயில் கதவுகள் சாத்தப்பட்டன. அன்றைய பூஜைகள் அத்துடன் நிறுத்தப்பட்டன. 

கிழவியின் இறுதி யாத்திரைக்கு அவள் விருப்பப்படியே அந்தக்குருக்கள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.

கண்ணாம்பாள் கிழவியின் திடீர் மறைவுச்செய்தி காட்டுத் தீபோல அந்தப்பகுதி மக்களுக்குப்பரவியது.  

அருகில் இருந்த ஆரம்பப்பள்ளியில், கோயில் கிழவியின் மறைவுக்கு இரங்கல் கூட்டமொன்று நடைபெற்றது. அதன்பிறகு அன்று முழுவதும் பள்ளிக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. 


அந்தக்கிழவி அனாதை இல்லையென்பதுபோல அந்தப்பகுதி மக்களும், ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளும், திரளாகக்கூடியது மட்டுமின்றி, அனுமந்துவும் மாருதியும் மரத்திலிருந்த தங்கள் குரங்குப் பட்டாளத்தையே கூட்டி வந்து, கிழவியின் இறுதி ஊர்வலத்தில், சுடுகாடு வரை பின் தொடர்ந்து வந்தது, அந்தப்பகுதி மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.

 
oooooOooooo


எனது விமர்சனம் 


யாதும் ஊரே... யாவரும் கேளிர்  என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு. யாதும் ஊரே யாவையும் கேளிர் என்று கதைக்கு தலைப்பிட்டு, ஆசிரியர் உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும், ஓரறிவு ஜீவராசி துவங்கி, ஆறறிவு ஜீவராசி வரை, அனைத்திற்கும் ஒன்றோடொன்று ஏதேனும் ஓர் வகையில் பிணைப்பு உண்டென்பதை நமக்கு விளக்குகிறார்.

நமக்கு மிகவும் பரிச்சயமான சூழல்,  பரிச்சயமான மனிதர்கள், நம்முடன் நாளும் அன்பாய் அனுசரணையாய் பழகும் வாயிலா ஜீவன்கள் போன்றே கோயில் பூசாரி, கண்ணாம்பா பாட்டி, ஆஞ்சநேயரின் மறு அவதாரங்களான மாருதி, அனுமந்து இவர்களனைவரும் நம் கண் முன் உலா வருகிறார்கள். நம்மிடையே நிகழும் ஓர் நிகழ்வு போன்றே இக்கதை நம் மனதுள் ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது.

தன் படைப்பில் உருவான உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்து காப்பாற்றி விடுகிறவன் இறைவன் என்பது எவ்வளவு உண்மை.

தாய்மையடைய வாய்ப்பில்லாது போனதால் நிர்கதியாக விடப்பட்டவர் , சாகத் துணிந்த நேரத்தில், கடவுளின் சந்நிதானத்தில் வைத்து வணங்கி விட்டு குடிக்க வைத்திருந்த விஷத்தினை குரங்குகள் தட்டி விட்டது தெய்வ சங்கல்பம்.

அதே தெய்வத்திற்கு ஆலயம் எழுப்பும் பணியில், உதவி செய்ய கிடைத்த வாய்ப்பு, இராம பிரானுக்கு அணிற்பிள்ளை செய்த உதவி போன்றதாயினும், அதனால் அவருக்கு  கிடைத்தது வருமானமும், புண்ணியமும்.

மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்த குரங்கு தனக்குதவிய குரங்காக இருக்குமோ என்றெண்ணி  பாட்டி தவிக்கையில், அந்த தவிப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது. அதன் நினைவாக எழுப்பப்பட்ட அனுமார் கோயிலே புகலிடமாகவும், அன்றாட கோயில் பிரசாதமே உணவாகவும் கிடைக்க வயதான பாட்டிக்கு  இறைவன் வழி செய்து விடுகிறான்.

தான் படைத்து உலகில் உலவ விட்ட உயிர்களைக் காத்து, அவர்கள் வாழ வழிவகை செய்பவனும் இறைவனே. பாட்டிக்கு வாழ்வாதாரமாக கோயில் திருப்பணியை கொடுத்து காப்பாற்றுகிறான். பாட்டியின் வாயிலாக வானரங்களின் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்கிறான் இறைவன்.

பாட்டிக்கு பிள்ளை இல்லாத குறையை தீர்க்க, அனுமந்து, மாருதி என்ற வானரங்களின் பேரன்பை  வாரி வழங்குகிறார். அவற்றிற்கு அன்றாடம் உணவளித்து, தன் பிள்ளைக்கு உணவூட்டியதைப் போல் பாட்டி பெருமகிழ்ச்சி அடைய வழிவகை செய்கிறார். அவற்றின் அன்பு மற்றும் நன்றிப் பெருக்கும் பாட்டிக்கு பிள்ளைப் பாசமாக கிடைக்க வரமருளுகிறார் இறைவன். இங்கு நினைவுக்கு வருவது என்னவெனில்,

" அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் "

எனும் திருவள்ளுவரின் கூற்றே ஆகும்.
"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

என்னும் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, கண்ணாம்பா பாட்டி தான் வாழும் காலம் வரை தன்னாலான அனைத்து உதவிகளையும் தன்னலம் கருதாது, உயிர்களிடத்து பேதம் பாராட்டாது செய்து வந்தாள்.

எதிர்காலத்தில் நிகழ இருப்பவைகளை முன்னமே அறியும் தீர்க்க தரிசியை போல், தன் மரணம் நெருங்கும் காலம் குறித்து கண்ணாம்பா பாட்டி முன்னமே அறிந்திருப்பார் போலும். தன்னால் எவருக்கும் எவ்விதமான இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்று எண்ணி தன் இறுதி வழிக்குறிய செலவிற்கும் தயாராக முன்னமே பணம் கொடுத்து வைத்திருக்கிறார். ஆனால், அவ்வளவு சீக்கிரம் மரணம் அவரைத் தழுவிக் கொள்ளும் என்பது அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

பேரிடியாய் கோயில் இடிபாடு செய்தி கண்ணாம்பா பாட்டியை தாக்க, இத்தனை காலம் தனக்கு ஆதரவாய் பல்வேறு ஜீவன்களையும், பல மனிதர்களின் உறவுகளையும், உதவிகளையும், பாட்டிக்கு வாழ்வாகவே ஆகிப் போயிருந்த கோயில், அந்த உயர்ந்த ஆன்மாவை தாங்கிக் கொள்ளும் அன்புக் கரமாகவே ஆகிப் போயிருந்தது.

அன்பே உருவான கண்ணாம்பா பாட்டி மீது மரணம் பேரன்பு கொண்டுவிட்டதோ ?  தான் நேசித்த உயிர்கள், தன்னைப் பற்றி பலகாலம் கழித்து அறிந்து கொள்ளும் மனிதர்கள் அனைவரையும்  கண்ணீர் கடலில் ஆழ்த்திவிடுகிறார் கண்ணாம்பா பாட்டி.

நல்ல மனம் படைத்த ஜீவனை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளித்த ஆசிரியருக்கும் நன்றிகள்.

Sunday, October 26, 2014

தாயுமானவள் - சிறுகதைக்கான விமர்சனம்


’தாயுமானவள் ’

சிறுகதைத்தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-





திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச் சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீய்ச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.   

  

 


ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 


வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள அரசமரப் பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டும், இனிய சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் முதலியன தயாரிக்கப்பட்டும் ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 


வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள், கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! 

 


 



 


முனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி ஒரே மழலைகள்கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, புடலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம். 


முனியாண்டியின் உள்ளத்தில் ஓர் உவகை.    இன்று எப்படியும் மாரியம்மன் அருளால் முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி. கடந்த மூன்று வருடங்களாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப்போகிறது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.
காலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை முனியாண்டிக்கு. நாக்கு வரண்டு விட்டது.  நீர் மோரை ஒரு குவளையில் வாங்கி ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, பலூன்களை ஊதுவதும், ஊதியவற்றைக் கயிறு போட்டுக்கட்டுவதும், கேட்பவர்களுக்குக் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து வியாபாரம் செய்வதும், காசை வாங்கி ஜோல்னாப்பையில் போடுவதும் என அவனின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.

இத்தகையத்  தேர்திருவிழாக்களில், முனியாண்டியைச் சுற்றி எப்போதும் குழந்தைகளின் கூட்டம்.  ஆனாலும் தனக்கென இதுவரை ஒரு வாரிசு உருவாகவில்லையே என்ற ஏக்கம் உண்டு முனியாண்டிக்கு. திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஏழு ஆண்டுகள் உருண்டோடிப் போய் விட்டன.

மரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகளுக்குப்போய், சம்பாதித்து வரும் அன்பான அனுசரணையான மனைவி தான்.  முனியாண்டியும் மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகளே. கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்துண்டு, கடன் ஏதும் இல்லாமல் காலம் தள்ளிவரும் ஜோடிகளே. காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை.  
திடீரென்று அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும், தங்கள் காதைப்பொத்திக்கொண்டு, பலூன்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்.


 



போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். முனியாண்டியும் ரோட்டின் ஒரு ஓரத்திற்குத் தள்ளப்படுகிறான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட்பட்டென வெடித்துச் சிதறுகின்றன. 
தேரில் அம்மன் தெருமுனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக்கும்பிட முண்டியடித்து வருகின்றனர். 
அர்ச்சனை சாமான்களுடன் அலைமோதும் பக்தர்கள் முன்னுரிமை எடுத்துக்கொண்டு தேரின் நடுவே நெருங்க, கையில் அதை அப்படியே வாங்கி தேங்காயை மட்டும் தன் கை அரிவாளால் ஒரே போடு போட்டு குருக்கள் அவர்களிடம் எம்பியபடி அனுப்பி வைக்க ஒருசிலர் தேரில் தொங்கிக்கொண்டிருந்தனர். கட்டிக்கட்டியாக சூடம் அம்மனுக்குக் கொளுத்திய வண்ணமாக இருந்தனர். மிக முக்கியமான தெரு முனையானதால் தேர் நகரவே மிகவும் தாமதம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. 
வியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த மாரியம்மனுக்கே வெளிச்சம்.  
”பலூன்காரரே! இந்தப்பாப்பாவைக்கொஞ்சம் பார்த்துக்கோ! பத்தே நிமிடத்தில் தேரிலுள்ள அம்மனைச்சற்று அருகில் சென்று கும்பிட்டுவிட்டு ஓடியாறேன்”  என்று மின்னல் வேகத்தில் சொல்லிச்சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப்பதியவில்லை முனியாண்டிக்கு.

குழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.

நல்ல அழுக்கேறிய ஒரு ஆடை [கெளன்] ; கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள்; காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள்; காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.



  


”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.
”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே! எப்படி இப்போ வருவாங்க? என்றது அந்தப்பெண்குழந்தை.
அதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.
”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.
”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.
”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.
”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்” என்றது அந்தப்பெண் குழந்தை.
சுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது. 
தேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.
சுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
சூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.
“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.
முனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது? என்ற கவலையையும் அளித்தது.
அம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.
குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.




தன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி. 
ஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.
ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.
மதியம் மூன்று மணி. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி,  “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்”  நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.

 

  


மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.
அங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் தொன்னையில் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன. 
தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.  
குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.  அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். 




  

குழந்தையின் அருகே உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த்துண்டு ஒன்று தெரித்துத் தட்டி எழுப்பியது. அங்கிருந்த குழாய் நீரில் தன் முகத்தைக்கழுவிய முனியாண்டி, குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாராகிய மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாகச் சுற்றி வந்து, அப்போது தான் தேரில் நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கி விட்டு, தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.

தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கெளன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.


சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்துள்ளத் தன் கணவனை, தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ “அ..ய்..ய்..யா.....தோசை ! மம்மி .... மம்மி ....  ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா?”  எனச்சொல்லி வெட்கம் கலந்த ஆசையுடன், தன் பிஞ்சு விரல்களைக் குவித்தபடி தன் கையை நீட்டியது.    

குழந்தையை ஒருவித வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்திக்கொண்ட மரகதம், தோசையை அதற்கு ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச்சொல்ல கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.


ஆசையுடன் தோசை சாப்பிட்டு முடித்த குழந்தையை பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்தபின், மேற்கொண்டு இந்தக்குழந்தையை நாம் என்ன செய்வது என இருவரும் நெடுநேரம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்துப் பேசிக்கொண்டிருந்ததில், நள்ளிரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

காலையில் எழுந்த குழந்தைக்கு உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.

“காஃபி, டீ ... ஏதாவது வாங்கி வரட்டா? உனக்கு என்னடாக் கண்ணு வேணும்? ஏன் அழுவறே? என்று பரிவுடன் பரிதவித்துப்போய்க் கேட்டனர். 

”எனக்கு ஒண்ணும் வேணாம். என்னயத்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கொண்டுபோய் விடப்போறீங்களே! நேத்து ராத்திரி நீங்க பேசிட்டு இருந்தீங்களே! நான் உங்க கூடவே இருக்கேனே .... ப்ளீஸ் ... என்னய நீங்க எங்கேயும் கொண்டுபோய் விட்டுடாதீங்க .... ப்ளீஸ் ... ப்ளீஸ்” எனக்கெஞ்ச ஆரம்பித்தக் குழந்தையின் மேனியும் நடுங்கிக்கொண்டிருந்தது.


குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்.
குழந்தைத்தலைக்கு எண்ணெய் தடவி, படிய தலைவாரி, ரிப்பன் கட்டி, புதுச்சொக்கா போட்டு விட்டாள், மரகதம்.

திருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி, ”செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, அந்த டாக்டரம்மா நம்மிடம் கேட்டிருந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்து விட்டது தாயீ!” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்?” என வினவினான்.


”இதோ பாருய்யா, மச்சான்! அந்த வாணப்பட்டரை மகமாயீ, மாரியாத்தாளே இந்தப்பச்சப்புள்ளைய, நமக்கே நமக்குத்தான் சொந்தம்னு இந்தத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இப்போ இன்னொரு குழந்தை எதுக்குய்யா வேணும்?; 
இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.

திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை ஆசையுடன் அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.  

  

  



oooooOooooo
 
 
 
எனது விமர்சனம்


பத்து ஆண்டுகளுக்கு முன் கண்டு களித்து இன்புற்று, இனி  அதுபோன்ற  இனிய  அனுபவங்கள் வாழ்வில் கிடைக்குமா என்று எண்ணி ஏங்கும்  வேளையில்,  கோயில் திருவிழாவிற்கு சென்று வந்தது போன்ற இனிய அனுபவத்தை  இக்கதை ஏற்படுத்திக் கொடுத்து மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது.
நீர்ப் பந்தல், பானக பந்தல், மோர்ப் பந்தல், அக்கினிச் சட்டி, கரும்புள்ளி - செம்புள்ளி, வேப்பிலை காப்புகள், தேரோட்டம்   என்று ஒரு கோயில்  திருவிழா சூழலை கண்முன் நிறுத்தி நம்மையும் பக்திப் பரவசத்திலும் மன மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விடுகிறார் ஆசிரியர்.

கோயில் திருவிழாவோ, திருமண விழாவோ அங்கு பலூன்களுக்கு முக்கிய இடம் உண்டு. வண்ண மயமாய், பல்வேறு வடிவங்களில், மழலைப் பட்டாளங்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும். இக்கதையில், மழலைப் பட்டாளங்களை கவர்ந்திழுக்கும் பாத்திரத்தில் முனியாண்டி. ஆனால், முனியாண்டி-மரகதம் தம்பதியினருக்கோ, பிள்ளைப் பேறு இன்னும் வாய்க்கவில்லை.

இறைவனின் திருவிளையாடல் தான் என்னே ! அவனுக்காக நடக்கும் விழாவில், முனியாண்டி- மரகதம் தம்பதியனரின் வாழ்வை வளமாக்க, அழகாக்க கோபால் - ராஜி தம்பதியினரின் மகள் விஜியை எங்கோ நாகப்பட்டினத்தில் இருந்து சுனாமி என்னும் ஆழிப்பேரலையை காரணமாகக் கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் முனியாண்டி - மரகதம் தம்பதியரின் வாழ்வில் இணைக்கிறார்.


பெற்றால் தான் பிள்ளையா என்ன ? அன்னை தந்தையை இழந்து அல்லலுறும் குழந்தையை, காவலரிடம் ஒப்படைத்து விட்டால் ஒரு வித மனநிறைவு ஏற்படலாம். ஆனால், பின்னர் அதன் நிலையை எண்ணி எண்ணி கவலையுற்று, கயவர்கள் கைகளில் சிக்கிக் கொள்ளுமோ, என்னானதோ, ஏதானதோ என்றெண்ணி வருந்துவதைக் காட்டிலும் தாங்களே ஆதரவளித்து காப்பாற்ற எண்ணுவது சிறப்பு. 
தாயுமானவ சுவாமியின் அருளால் ஒரே நாளில் தாயுமானவள் ஆகி விட்டாள் மரகதம். அவர்களிடம் தஞ்சமடைந்த பிள்ளை விஜிக்காக தங்களுக்கென்று பிள்ளை ஒன்று வேண்டி வைத்தியத்திற்கு வைத்திருந்த பணம் தனை செலவு செய்கின்றனர். அந்த பிள்ளை விஜி, மரகதத்திற்கு மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து தாய் என்கிற ஸ்தானத்திற்கு உயர்த்தி விடுகிறாள். விஜியின் அதிர்ஷ்டத்தில், அந்தத் தம்பதியருக்கு மேலும் பிள்ளைச் செல்வம் பெருகட்டும். விஜிக்கும் சகோதர உறவுகள் எனும் நிறைவான செல்வம் கிட்டட்டும்.
தன்னலம் கருதாது அன்பினை வாரி வழங்கினால், அந்த அன்பே நமக்கு பல செல்வங்களையும் கொடுக்கும். அன்பே எந்நாளும் உலகில் நிலைக்கட்டும். அன்பே உலகை ஆளட்டும்.


நல்லதோர் வாய்ப்பினை வழங்கிய 
திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.